செவ்வாய், 13 அக்டோபர், 2026

காளப்ப நாயக்கன் பாளையம் குட்டியப்பசாமி பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

காளப்ப நாயக்கன் பாளையம் குட்டியப்பசாமி பதிகம்

(எழுசீர் சந்த விருத்தம்)

கற்ப கத்தை வொத்த ருள்செய்

            கருணை கொண்ட விழிகளும்

விற்ப னத்த வர்க்கு வப்பு

            மிக்க ளிக்கும் நற்கையும்,

பொற்பு மிக்க நற்ப தங்கள்     

            பொலிய வந்து காட்சிதா

குற்ற மற்ற வர்க்க ருள்செய்

            குட்டி யப்ப சாமியே.                                                  

(1)

தந்தை யோடு தாயர் மாதர்

            சாற்றுஞ் சுற்றம் மற்றுளோர்

வந்த மைந்த நன்மை தீமை

            மற்று முள்ள யாவையும்

எந்தை கந்த வேள்ப தங்கள்

            என்ன எண்ணு மென்னுளே

குந்த கத்தை நீக்கி யாட்கொள்

            குட்டி யப்ப சாமியே.                          

 (2)

நன்றை ஞால மொன்றி வாழ

            நாடும் நற்ற வம்செய்தே

குன்ற வில்லி யீசர் தாள்கள்

            கூர்ந்து கூர்ந்து கண்டிடும்

ஒன்றை யோது கற்கி முனிவர்

            உண்மை நாம மேற்றதாம்

குன்றை யொட்டிக் கோயில் கொண்ட

            குட்டி யப்ப சாமியே.                                      

 (3)

தேட்டம் மிக்க தொண்ட ரேம்தி

            னம்தி னம்ப ணிந்தனம்

நாட்டம் மேவு ஞான வாழ்வு

            நாங்கள் கொள்ள நல்குவாய்

ஆட்ட மோடு பாட்டு மோதும்

            அணிகொள் மருத மலைசெலுங்

கூட்டம் வந்து பரவு கின்ற

            குட்டி யப்ப சாமியே.                          

 (4)

காட்டில் வாழும் மிருக மொப்பர்

            கண்ட காட்சி பெரிதெனும்

நாட்டில் வாழும் நரர்க ளுள்ளம்

            நன்மை கொண்டு தீநெறி

ஒட்டி வாழ எண்ணு மெண்ணம்

            ஒளிர வென்று திருவருள்

கூட்டி யாள்வை யோசொ லாய்நற்

            குட்டி யப்ப சாமியே.                          

 (5)

பாட வைத்த பின்பு மன்பு

            பதிய வைத்தி லாய்மிக

நாட வைத்தி லாய்ப தத்தை

            நாளும் நெக்கு மிக்கவே         

தேட வைத்தி லாயுன் சேவை

            தெரிய வைத்தி லாயருள்

கூட வைத்தி லாயி தென்ன

            குட்டி யப்ப சாமியே.                                      

 (6)

வந்த மைந்த பிறவி தன்னில்

            மன்னு முன்ற னன்பனாய்ப்

பந்த மற்ற குப்ப நாயக்கன்

            பாளை யத்தில் வாழ்ந்திடும்

சந்தம் மேவு கிட்டி ணப்ப

            சாமி செய்த கோவிலில்

கொந்த லர்ந்த மாலை சூடு

            குட்டி யப்ப சாமியே.                                      

 (7)

தாயில் மிக்க கருணை கொண்ட

            சாமி யுன்றன் கோயிலின்

வாயில் வந்து பணிசெய் கின்ற

            மைந்தர் மாதர் கட்கெலாம்

ஓயி லின்ப முதவு கற்கி

            ஓங்க லின்தென் பாரிசம்

கோயில் கொண்டி லங்கு கின்ற

            குட்டி யப்ப சாமியே.                                      

 (8)

சென்ற கால மோடு பின்னர்

            சேரு கின்ற காலமும்

நின்ற கால மும்தெ ரிந்து

            நித்த நித்த மோதிடும்

நன்றை நல்கு வாய்கா ளப்ப

            நாயக்கன் பாளை யத்தினில்

கொன்ற ருந்தி டார்கள் போற்று

            குட்டி யப்ப சாமியே.                                      

(9)

அண்டர் போற்று சிரவை யிற்கௌ

            மார நன்ம டாலயத்

தொண்ட னான கிட்டி ணப்ப

            தூய சீல மேலவன்

கண்ட தன்பொ ருட்கொ டாற்று

            கற்ற ளிக்கண் ணுற்றருள்

கொண்டி லங்க கோலம் மேவு

            குட்டி யப்ப சாமியே.                          

(10)

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

வாழிகா ளப்ப வளநகர் மக்களெலாம்

வாழிதவக் குட்டியப்ப வள்ளலருள் - வாழியவே

கோவிற் பணிசெய்வோர் கும்பிடுவோர் வம்பலரால்

மேவிப்பூ சிப்போர் மிகுந்து.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக