வியாழன், 24 செப்டம்பர், 2026

நடேசன் இறந்தபின் பாடிய பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

நடேசன் இறந்தபின் பாடிய பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

எத்திசையும் போற்றிசைப்ப வேகமா யேழ்வகையாய்ச்

சித்திமுத்தி நல்குமொரு தெய்வமே – பத்தியினைச்

சோதனைசெய் யாதே துடித்துச் சுழலுமன

வாதனை தீரக்கருணை வை.

 

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

தேவர் தானவர் மானிடர் விலங்கு

            சிறைய வூர்வன செலத்தின வன்றித்

தாவ ரங்களு மறிதர விண்ணிற்

            றழைத்து நாட்செயுந் தபனனாம் பரமே

யோவ றப்பெரு கொளிகறுத் துலக

            மொருங்கு புண்பட வுலவுமிந் நாளிற்

பாவர் தாமுநிந் தனைசெய வருத்தும்

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(1)

விழிக்குங் கட்பொறி வொன்றினாற் புவியு

            மேலை வானமும் வேவுறக் கணத்தி

லொழிக்கு மாண்புமுற் றொருவிடைப் பரிமே

            லும்பர் மேல்வரு மொருவனாம் பரமே

கழிக்கு மாயையிற் சிலபயன் விழைந்தேன்

            காட்டி மெய்யருட் கடலில் விடாமற்

பழிக்கு மாறுபற் பலவிளைக் கின்றாய்

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(2)

கண்டு நேர்மொழிக் கவுரியா தியராய்க்

            காண்ப யாவையுங் கணத்தி லீன்றருளித்

தொண்டு செய்பவர்க் கினியபே றளிக்குந்

            தூய தாம்பர மேதொடு கடனீ

ருண்டு விட்டவன் முதலினர் கூட்டத்

            துறவும் வாஞ்சை கொளுர முடையேனைப்

பண்டு செய்வினைப் பயனெனப் படுத்தும்

            பத்தி சோதனை பண்பொழிந் தருளே.

(3)

ஏக மாகியெட் டெழுந்தி னின்றாடி

            யிமைப்பி லார்முத லெவரையும் புரந்து

சோக நோய்தொலைத் தருளொரு தொழிலைத்

            துணைக்கொண் மாயனாந் தொல்பரம் பொருளே

நீக னாவில்வந் துரைத்துள மொழியு

            நிசப்படா மையி னெட்டுயிர்க் கின்றேன்

பாக சாதன னாதியர் நடுங்கும்

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(4)

விக்கி னந்தவிர்த் திடுதலே தொழிலா

            வேழ மாமுக மிளிர்தரத் தோன்றிச்

செக்கி னோரமுந் திகழ்பரம் பொருளே

            சிறிய னேன்மிகச் சீரழி கின்றே

னுக்கி ரத்தவ முயலவொட் டாது

            முலைக்கும் பாழ்ங்கலி யொன்றிய விதத்தாற்

பக்கி போற்பிறந் தலைவுறச் செய்யும்

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(5)

கந்த னாகிமுன் னென்னுள்வந் தப்பாற்

            கழறு மியாவுமாக் கவின்றரு பரமே

செந்த தமிழ்க்கவி வேட்டமை போன்றே

            சிலசெய் தாயிநாள் சிறிதும் வெஃகாதென்

சுந்த ரத்தொடு தோன்றிய வொருவற்

            றொல்லை ஞாலமேற் றுஞ்சுறச் செய்தாய்

பந்த வாதனைச் சிறுவரெள் ளிடற்காம்

            பத்தி சோதனை பண்பொழிந் தருளே.

(6)

என்ன பக்குவத் தியாவரெவ் வண்ண

            மெண்ணினா லுமாங் கிலங்கருட் பரமே

கன்ன லஞ்செழும் பாகுறழ் சொல்லார்

            காம நோயினுங் கடியதாம் பொல்லாப்

பொன்ன வாமுழு தறத்தணக் குதியேற்

            போத மாதவம் புரிந்துனைப் புணர்வேன்

பன்னகத் தின்வாய்த் தேரையிற் படுத்தும்

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(7)

கோறைப் பட்டுயிர் வருந்தலுஞ் சகியாக்

            குணத்தி னோர்மனக் கோயில்வாழ் பரமே

சூறைக் கால்படு கடல்பொரு வினைநோய்த்

            தொடர்ச்சி தீர்தரத் தொழுதெழு மென்னை

மாறைத் தண்டமிழ்ச் சுவையுணர் வாரு

            மனத்திற் றோன்றிய வாறிகழ்ந் திடவோர்

பாறைக் கூபம தானனி வருத்தும்

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(8)

கொசுக்கண் மெல்லிமை கொட்டலு மறிந்து

            கோடி கோடியாக் குலவுமூ துலகு

நசுக்கி யப்புறந் தரத்தகு பரமே

            நானுன் பாற்றின நவிலல் கேட்டிலையோ

விசுக்கொ ராயிர முறத்தளர் கின்றே

            னினியென் றாற்சகித் திடமுடி யாதே

பசுக்கள் வாழ்வுறக் கருதுமென் பாற்செய்

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(9)

பொதுவும் பல்வகைச் சிறப்புமா நிகழும்

            பூர ணப்பர மாமொரு பொருளே

மதுர வண்டமிழ் பொழிவட லூரான்

            மாறி லாத்திரு வாசகஞ் சுமந்தோ

னதுல னாமெழிற் குருபர தாச

            னாதியோ ரைமீட் டழைப்பது விழைந்தேன்

பதும னேமுத லோரும்வெல் லரிதாம்

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(10)

அதல மார்தரு நாகஞ் சுவர்க்க

            மாதியாம் பதமனைத் தும்வாழ் பரமே

முதலை யுண்டசேய் வரன்முதற் கலைகண்

            முற்று மெய்யென முன்னிமிக் குழைத்தேன்

கதறு காலிகாத் தவன்முதற் சிலர்போற்

            காண்ட ராதெமன் கைப்படப் புரியேல்

பதகர்  தாமு நக்கிகழ் தரத்தொடுத்த

            பத்தி சோதனைப் பண்பொழிந் தருளே.

(11)

தூய தொண்டுநற் கல்வியு முரித்துந்

            தோய்ந்த மானிடச் சொருப நடேசன்

மாய வெஞ்சுரத் தாலிறந் திடலு

            மண்ணி னூடவன் வாளுடற் பெயுங்கா

லேய வோதிய சிலமொழி கருதி

            யேழ்வகைப் படுமி யற்றிருப் புகழோன்

பாய மெய்ப்பரத் துடன்சொலல் பகந்தாற்

            பத்தி சோதனைப் படுதுயர் கெடுமே.

(12)

முற்றிற்று.

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக