வியாழன், 24 செப்டம்பர், 2026

நடேசன் சுரநோய் தீரப் பாடிய பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

நடேசன் சுரநோய் தீரப் பாடிய பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

பாம்பு விடத்தாற் பருவரலெய் தாதளித்த

தாம்புகழுக் கீன மணுகாம – லியாம்புகலு

மிந்த நடேச னிருஞ்சுரநோய் தீர்த்தருள்வாய்

செந்தகைய வேற்கையமு தே.

 

(கொச்சகக் கலிப்பா)

திருமலத்தாய் கருப்பத்திற் சேர்ந்துளநாள் சீரருள்வந்

தருமைமிகு மியற்பகையென் றறைந்தநிசம் பொய்யாமன்

முருகவிழ்செங் கடம்பணிதோண் முருகையா முதிர்சுரத்தா

லிருவிழியு மருளாவாழ் விந்தநடே சனுக்கருளே.

(1)

கிரிதோறு நடம்புரிந்து கேகயப்புட் பரியூர்வா

யரிதாய திருவாக்கன் றளித்ததுபொய்த் தழியாமல்

விரிநீர்ப்பா ருலகத்தோர் வெகுநாள்சொற் றுவப்பெய்த

வெரிபோலுஞ் சுரந்தீர்சீ ரிந்தநடே சனுக்கருளே.

(2)

கன்னல்வில்லான் மனநாணுங் கவின்றிகழ்சண் முகநாதா

பன்னகத்தின் விடந்தோய்நாள் பதைத்திறவா தாண்டுள்நீ

யின்னல்கொடுஞ் சுரநோயா லிடத்தகுங்கொ லிக்கணமே

யென்னதுசுந் தரத்துடன்றோன் றிந்தநடே சனுக்கருளே.

(3)

வேழமகள் வேடமகள் விரும்புமொரு மணவாளா

வாழமுறுங் கவிகளுந்தேர்ந் தநுதினம்போற் றிலன்கொல்லோ

பாழறையி லோலமிடும் பலமதத்தோர் களுமென்னை

யேழனஞ்செய் யாதவண்ண மிந்தநடே சனுக்கருளே.

(4)

குளமுறழ்சொற் றமிழ்வாஞ்சைக் குமரகுரு பரமுருகா

வளவில்பணி நின்பூசைக் காற்றியதெல் லாமவமோ

தளமலிபூ வினன்கைவிதித் தகைகுறைந்தே யிருந்தாலு

மிளமையிற்செத் தொழியாவாழ் விந்தநடே சனுக்கருளே.

(5)

மனக்காதற் படியடியார் மகிழ்வுறச்செய் குகவேளே

தனக்காத லால்வீரைத் தனிநகரில் வருநாளி

லுனக்கான சோதனைசெய் துலகிகழ வருத்தாதே

யெனக்கார்வ முறநீயின் றிந்தநடே சனுக்கருளே.

(6)

செக்கர்பொரு மழமேனிச் சிவகுருதே சிகமுருகா

நக்கவருக் கொல்குமென்னை நலங்குலையப் படுத்தாதே

கைக்கணுறுங் கிள்ளையெனக் கழறிமுத்த மிடன்மெய்யே

லிக்கணமே நல்லசுக மிந்தநடே சனுக்கருளே.

(7)

சம்பந்தப் பிள்ளையிற்போய்ச் சமணரைவென் றுயர்வானே

கும்பங்க ளொல்குமுலைக் கோதையர்மால் கொண்டுறினு

நம்பன்பிற் பழுதுண்டோ நமன்றூதர் நணுகாமே

யெம்பங்கின் கருணையிற் சற்றிந்நடே சனுக்கருளே.

(8)

வீரவேற் படையேவி வேலையின்மா வறவென்றாய்

தீரமொடு சிலகான்முன் செய்துதிகேட் டருளினையாற்

பாரணங்குக் கிதநாடிப் பாடுபடு மென்பானிற்

கீரமுள தேசிறிதின் றிந்தநடே சனுக்கருளே.

(9)

முன்னான மூவர்களு மொழிதருசீர் முருகோனே

பன்னாளும் பணிசெய்த பயன்முழுது நழுவாம

லின்னாச்செய் சுரமுதலா மெந்நோயு மிசையாம

லென்னாணை யருட்டுளிசற் றிந்தநடே சனுக்கருளே.

(10)

அறமாருஞ் சமயத்தோ ரனைவருக்குங் குருவாயுங்

குறமான்சொற் பணிபுரிந்து கூத்தாடுங் குமரேசா

துறவாலு முறவாலுந் தொண்டுசெயத் துணிந்துற்றா

னிறவாமற் பிணிக்குலந்தீர்த் திந்தநடே சனுக்கருளே.

(11)

தீங்குறழ்வெஞ் சுரநோயாற் சிந்தையொடு தேகமயர்ந்

தேங்குதறீர்ந் துயவேண்டி யிந்தநடே சனுக்கருளென்

றோங்குநெடு வேலானுக் குரியதிருப் புகழ்க்கார

னீங்குரைத்த பதிகத்தா லிடர்பலவுங் கெடத்தகுமே.

(12)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக