வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருவரங்கத் திருமகளந்தாதி
காப்பு
(நேரிசை
வெண்பா)
மருமமதிற் சந்ததமு மாயன்வைத்துக் காக்குந்
திருமகளுக் கந்தாதி செப்பக் – குருமரபிற்
பட்டார் குழாமிகழாப் பன்னிரண்டாழ் வார்பதமுங்
கட்டாய மானபெருங் காப்பு.
நூல்
(கட்டளைக் கலித்துறை)
திருமக ளேதிருப் பாற்கட லுடன்று தேவர்தொழ
வருமக ளேயுல கெல்லாமு மென்றென்றும் வாழவைக்கு
மொருமக ளேநெடு மாலுரத் தேயுற் றுரம்பெரிது
தருமக ளேதமி யேன்றலை மீதுநின் றாளைவையே.
(1)
தாளையென் சென்னியின் மேனீவைத் தால்வெந் தரணிமுதற்
கோளைவன் றீவினைப் பேயோடு வென்று குலாவுவன்காண்
வாளையொப் பாம்விழி
யானெடு மாலை மயக்கியப்பால்
வேளைநல் கிப்ப லுலகோரும் வாழச்செய் மின்கொடியே.
(2)
மின்கொடி யன்ன விடையா ரனேகர் மிகவிகழும்
வன்கொடி தேனுந் தவிர்க்கின் றிலாயென் றுவாழ்விப்பையோ
மென்கொடி றுண்ணத் திருமாலுக் கீந்து வியன்பொலிசீர்ப்
பொன்கொடிப் பூதலத் தோர்தம்மை யாளும் பொறியணங்கே.
(3)
பொறியர விற்றுயில் கூரும் பிரானருட் புந்திகவர்ந்
தெறிகதிர்த் தாமரைப் பூமீது வாழுமொ ரேந்திழையே
மறியறுத் துண்கின்ற பொல்லார்க்குஞ் செம்பொம் வழக்கிடுநீ
யறிவினிற் குந்தமி யேற்கிரங் காமை யதிசயமே.
(4)
சயமக ளிந்திரர் பல்லோர் வணங்குபொற் றாட்டிருவோர்
கயமுயக் காத்தவன் றன்னுயிர் போலுங் கமலையிந்த
வியனுல கூடெனைச் சோதிக்கின் றாளது விட்டொழித்தா
லயமுறழ் சிந்தையர் தம்பாற்கை யேற்ப தறுமுற்றமே.
(5)
முற்றற் பவளச் சிலைபோன் முகுந்தன்றன் மொய்ம்பில்வளர்
கொற்றத் திருமடந் தாயடி யேன்கலிக் கோடையிடை
பற்றற்ற மேலவர் தங்கோலத் தோடு பகைக்கைநன்றோ
சற்றற் புதக்கரு ணைக்கட லாட்டத் தயைசெய்தியே.
(6)
செய்யதண் டாமரைப் பூமேல் வசிக்குந் திருமடந்தாய்
வையக நீசர்கைப் பட்டத னாலுண் மகிழ்கின்றையோ
மையணி வண்ணப் பெருமான்ற னாணையிவ் வம்பொழித்தியா
முய்யநின் றண்ணருள் வாரிதி யாட்டற் குளங்கொண்டிடே.
(7)
உளங்கொண்ட பேரரு ளெத்தனை தேவ ருறச்செயினுந்
தளங்கொண்ட தாமரை யாளரு ளின்றெனிற் சஞ்சலமே
களங்கொண்ட நஞ்சன்முதலாய் தெய்வக் கணங்க்ளுமவ்
வளங்கொண் டலாத்தினம் புண்பட்ட வாம்பல வாறுளவே.
(8)
பலவா றுலகுக் கிதஞ்செய்ய நாடுமென் பான்மைநச்சி
யுலவாக் கருணை புரியா திருக்கை யுசிதங்கொலோ
நிலவார் சடைப்பெரு மான்றங்கை யாய்ப்பெரு நீலவண்ணன்
கலவா மகிழ்மனை யாயவன் மார்பிற் கவின்றபொன்னே.
(9)
பொன்னு மணியும் புவியாள்செங் கோலுமென் பூந்துகிலு
மின்னு மகுட முதலாய பூணும் வியனழகு
மன்னும்வல் வீரமும் வாகையு மாதிய வாழ்வனைத்து
நன்னுதற் செந்திரு மங்கைதன் னாட்டங் கணல்குபவே.
(10)
நல்குர வஞ்சி நளிர்கடல் சூழிந்த நானிலத்தோர்க்
கொல்குமென் னைக்க கனத்தாரும் போற்றிசைத் துன்னச்செய்வாய்
பல்குரு வாயர சாய்ப்புவி காக்கும் பகவனுரு
கல்குலம் போருகப் பாவாய்நின் றண்ணருட் காக்கமுண்டே.
(11)
ஆக்கமென் றுள்ளன வெல்லாம் பொருந்து மருமபொருளாய்ச்
சேக்கம லர்தனத் துற்றாய்விண் ணாடர் தினம்பணியுந்
தாக்கணங் கேயென் றமிழ்மாலை கொண்டன்று சாற்றியசொற்
காக்கவுந் தாமதஞ் செய்கின்றை யேயென்ன காரணமே.
(12)
காரணங் கோடுவெண் பானேர ணங்குங் கருதியசெஞ்
சீரணங் கேயென் கலிநோய்முற் றிக்கணந் தீர்த்தருளோர்
வாரணங் காப்பத் தனிபோய்த் தவள வளைமுழக்கு
நாரணன் றொட்டநின் மங்கலங் கோடி நலம்பெறுமே.
(13)
நலந்தந்த நாரணன் பன்னியென் றியாரு நவிலமல
ரிலந்தந்த வாழ்வுடைப் பாவாயைந் தேவரு மேத்தெடுக்கும்
பொலந்தந்த மென்கழற் பூவையென் றோருமென் புன்கலிதீர்த்
தலந்தந்த வொன்னல ரெல்லா நடுங்க வருளுநல்கே.
(14)
அருளும் பொருளுநின் னாடலென் றோர்ந்து மகிலத்துள்ளே
யிருளுந்து பாழ்மிடிப் பேயால் வருந்தெற் கிரங்கலென்றோ
சுருளுங் கருங்குழற் றோகாய்விண் ணாடர் தொழமுனிவர்
தெருளுந் திருநெடு மாலுரத் தேவளர் செந்திருவே.
(15)
செந்திரு வேநின் னருள்போற்றி நின்றுஞ் செகத்திலுள்ளார்
தந்திரு வேட்டுந் தயங்குகின் றேனெனைத் தாங்கலென்றோ
சந்திர னோடு மமுதோடும்
பாற்கட றன்னில்வந்த
விந்திரை யென்னப் பலர்கூறு ஞான மிலங்குறவே.
(16)
இலங்குந் திருவருளே தஞ்சமா மென்றியம்பு முண்மை
துலங்கும்படி யெனைக் காத்தருள் வாய்பல சுரகணமுங்
கலங்கும் படிபொருந் தானவ ராண்மை கழியவெல்லும்
பலங்குன் றிடாநெடு மாலகன் மார்பிற் பழகணங்கே.
(17)
பழங்க ணனேகத்திற் பட்டுழன் றியான்பல் பருப்பதத்திற்
கிழங்குண்ட மாதவர் தாமுந் தரப்பெருங் கீர்த்திநட்டேன்
வழங்குந் திறமை யுனக்கில்லை யோவளை வாயில்வைத்து
முழங்குந் திருநெடு மாற்குயி ரேநிகர் மொய்குழலே.
(18)
மொய்குழற் பாவைய ரோடுவந் துன்மகன் மூரியம்பு
பெய்குதற் காற்றுகில் லேன்றனைப் பாழ்மிடிப் பேயுந்தொட்டாற்
செய்குவ தென்னை யறிகின் றிலேனருட் சீரருள்வாய்
வைகுல வைம்படை யான்றன்னை யாண்ட மலர்மகளே.
(19)
மலரிற் பிறந்து நெடுமா லுரத்தில் வசிக்குமின்னே
யலகற்ற பேறு விழைவேற்கல வண்ணமருள் செய்திட்டா
லுலகிற்கு நன்மையுண் டுன்றனக் கும்புக ழுண்டுகண்டாய்
பலமிக்க தானவ னல்லேனன் மானிடப் பாலகனே.
(20)
பாலன்ன மேனிக் கலைமக ளார்வம் படைத்துமுன்றன்
சேலன்ன கண்ணரு ளெய்தாமை யான்மிகச் சீரழிந்தேன்
மாலன்ன தெய்வமற் றில்லாமை யோர்ந்தவன் மார்பில்வைகு
நூலன்ன சிற்றிடைப் பாவாய்சற் றேயின்று நோக்குதியே.
(21)
நோக்கஞ் சிறிதுமென் மேல்வைத் திலாய்மிக நொந்தனைத்துங்
காக்கவல் லாற்கருள் செய்தநின் கட்கடைக் காதலுற்றே
னூக்கமு மெய்யுணர் வுங்கொடுத் தாண்டிவ் வுலகறிபே
ராக்கமுந் தந்தருள் வாய்செய்ய தாமரை யாரணங்கே.
(22)
ஆரணங் கூப்பிடி லெட்டா தொளித்திட் டரும்புனத்தோர்
வாரணங் காத்திடச் சென்றா னுரத்தின் மருவுபெருஞ்
சீரணங் கேதமி யேன்றன்னை வெள்ளிச் சிலம்பில்வைகுங்
காரணங் காளிறை போல்வாழு மாறு கடாட்சித்திடே.
(23)
கடங்கொண்ட நீரிரு குஞ்சர மாட்டக் கமலமல
ரிடங்கொண்டு வாழுமொ ரேந்திழை யேசெல்வ மியாவுநின்பொற்
றடங்கொண்ட சென்னியி னார்சொந்த மேயெனச் சாற்றுமண்மைத்
திடங்கொண்ட வென்னைக் கருதாதெங் கியார்க்கிதஞ் செய்குதியே.
(24)
செய்யபொன் மேனித் திருவேசெந் தாமரைச் சீர்மகளே
கையகத் துஞ்செழுந் தாமரை யேந்துங் கனங்குழையே
வையமுற் றோர்குடைக் கீழ்வைத் துளாரை மறந்தனையே
லையமிங் கேற்பினு மெய்தாம லேங்கி யலைகுவரே.
(25)
அலைகடற் பள்ளிகொண் டோன்கைக ளாலெடுத் தன்றணிந்த
விலையினின் மங்கலஞ் சான்றாவென் றன்னை வெறுத்துவிடேல்
புலையுடைப் புல்லியர் தம்பாலு மேற்றுப் புழுங்குறுமிந்
நிலையொழித் தேற்பவர் வேட்கைநல் கார்வ நிறைவருளே.
(26)
நிறைகின்ற பூரண னாநெடு மாலக னெஞ்சகத்தி
லுறைகின்ற நீயென்ற னுண்மையு ளியாது முணர்கிலையோ
வறைகின்ற பாடல்கட் கென்றோர் பரிசு மருள்கிலையே
மறைகின்ற நுண்ணிடைச் செம்பொன்வெற் பாங்கஞ்ச மாமகளே.
(27)
மாமறை நீதி முழுதுந் தணந்திம் மகிலத்திற்
காம வினோத மதேமுயல் வாரிற் கடைப்பட்டெய்த்தே
னீமகிழ்ந் தென்னைத் தொடர்ந்தாளச் சற்று நினைத்தருள்செந்
தாமரைப் பூம்பொகுட் டின்றலை மேய தனியணங்கே.
(28)
தனியே யிரந்து திரிவார்தம் மீதுசெந் தாமரையாள்
பனிநீலக் கண்ணருட் பார்வைசற் றெய்திற் படைப்பெருக்குங்
குனிவார் சிலைமன்னர் கொண்டாடும் வீரமுங் கோதொழிந்த
முனிவோர்சொல் லாசியு மாதிய சீர்வந்து மொய்த்திடுமே.
(29)
மொய்யாரசெந் தாமரைப் பூமேற் குடிகொள்ளு முத்தநகைச்
செய்யாளை யன்றிமற் றோர்தெய்வ மின்றிச் செகத்தினிடை
நெய்யார்வெந் தீயிற் கொடிதாய பாழ்த்த நிர்ப்பொழித்து
மெய்யாய செல்வப் பெருக்கூ டுவப்ப விடுப்பதற்கே.
(30)
பதங்களெல் லாமும் பிறப்போ டிறப்பில் பரத்துவமு
மிதங்கண்மற் றியாவுநன் காராயில் வேறில்லை யெட்டெழுத்தா
னிதங்களி கூர்பெரு மானெஞ்சின் மேவிநிரு தர்தம்மெற்
கதங்களுஞ் செய்யும் பெருந்தேவி யார்திருக் கண்ணருளே.
(31)
கண்ணகன் ஞாலங் களிகூரு மாறு கருதுமென
தெண்ணமொன் றேனு முடியா தொழியி லிளப்பமன்றோ
விண்ணவர் கூட்டங் களிகூரப் பாற்றிரு வேலைகடைந்
துண்ணமு தீந்த பெருமான்றன் மார்பத் துறைபவட்கே.
(32)
பவனன்றன் மைந்தன் முதலாஞ்சில் வீரரும் பங்கயக்கண்
ணவனுஞ் சிவனுமொப் பாந்தேவர் தாமு மறைந்தசொற்க
ளிவணொன்று மெய்ப்படக் காண்கின் றிலேன்மல ரேய்ந்திருக்குந்
தவளங் குலாநகைச் செந்திரு நோக்கந் தராமையினே.
(33)
தரையிற் புதைத்த பொருள்கரி யாகத் தயங்குநரு
மரையிற் றரிக்கத் துணியு மிலாதிங் கலைபவருங்
கரையற்ற துன்பக் கடலூ டமிழ்ந்து கலங்குநருந்
திரையிற் பிறந்துயர் சீமாட்டி கண்ணருள் சேர்ந்திலரே.
(34)
சேரீயஞ் செம்பிரும் பாதியிற் பொன்செயுஞ் சீரியரும்
பாரீரங் கடற்பல தீவுட னாண்டுயர் பான்மையருஞ்
சூரீரந்து பெற்ற செயத்தா லளவறத் துள்ளுநரும்
வாரீரக் கொங்கைத் திருமாது கண்ணருள் வாய்ந்தவரே.
(35)
வாயச மோநரி யோபூனை யோவென்னும் வஞ்சகர்க்கு
மேயபல் சீரு மொருக்காற் கொடுக்கு மிறைவியிட
மாயவன் மார்புந் துளசியு மியானை வதனமுதற்
றூயவ ரில்லமும் வில்வமுந் தீபமுஞ் சொன்னமுமே.
(36)
சொன்னங் கொடுப்பதொன் றேதிரு மாதருட் டோற்றமென்னுஞ்
சின்ன மதிப்புல வீர்நன்மை யாவுமச் செல்விபங்கே
கன்னலின் சொல்லவள் சேய்மனை யாட்டி கனிந்தருள்வ
தின்னலெல் லாமவண் முன்பிறந் தாள்பங் கெனச்சொன்மினே.
(37)
எனக்குன் கடைக்கண் ணருள்வாரி யின்றுளி யின்றருளி
லுனக்கும் புகழுண் டுலகிற்கு நன்மையுண் டுன்கணவன்
றனக்குங் களிப்புண்டு சத்திய மேயென்சொற் றள்ளிவிடேல்
கனக்குந் துணைமுலை யோதிமம் போலுங் கமலமின்னே.
(38)
கமலா தனத்தனின் சேய்நெடு மானின் கணவனரன்
சமமான சோதரன் மற்றோரெல் லாந்தொழத் தக்கதொண்ட
ரெமதீன வன்கலி தீர்த்தாள் வதிற்றடை யாதுளதோ
வமலேநன் றாமவை குன்றா ததாமெய் யருட்செல்வியே.
(39)
மெய்யனல் லென்றவ னல்லேன் சரதவிரத னல்லேன்
பையர விற்றுயில் கூர்பெரு மானெழும் பான்மைசொன்னா
யையமில் சீர்ச்சட கோபனு மாங்குரைத் தான்கண்டடிலே
னுய்யவென் றாண்டருள் வாய்பது மாதனத் துத்தமியே.
(40)
உத்தமச் சற்குரு சேவையெய் தாதிங் குழலுமெனக்
கித்தனை யாசை கொடுத்திட்ட தார்சற் றியம்புகண்டாய்
மத்தக வேழம் புரந்த பிரானை மனத்திலுன்னிப்
பத்தமுற் றார்களை யெந்நாளுங் காக்கும் பதுமமின்னே.
(41)
பதுமம் புனைந்த பதுமக்கை யாற்பொற் பரிசருளின்
மதுவுண்ட பேய்க்குரங் கன்னா ரிகழ்ச்சியின் மாழ்குவனோ
விதுவொன்று சென்னிப் பிரானாக் கயிலையின் மேவுமுண்மை
யதுகண் டுளார்க்கெளி யாய்செம்பொன் மேனி யணங்கரசே.
(42)
அணங்கர சிந்திரை யம்பிகைக் கின்ப மருளிறைவி
கணங்களெல் லாந்தொழுந் காலுடை யாளெனைக் கண்டுகொண்டா
லிணங்கலர் சேனைக் கெமனாகு வேனடுத்தேத்தி யன்பால்
வணங்கவல் லார்க்கன்னை யாவே னிதேயென்றன் வண்குணமே.
(43)
குணநீடும் பாண்டவர்க் காத்தானைப் போலும்பல் கோடிசித்தர்
மணமார் துழாயணிப் பைங்கொண்ட லூடென்றும் வாழவைத்தாய்
நிணம்வேட்டுக் கன்றுங்கொல் கின்றார்ப் பகைக்குமென் னெஞ்சழித்தோர்
பிணமாயித் தேகம் விழச்செய் திடேன்மலர்ப் பெய்வளையே.
(44)
பெய்யுங் கனமுகி லோரேழு மொல்கப் பிறங்கலெடுத்
துய்யும் படிபல பசுக்காத்த நாதனின் றூன்விழைந்து
கொய்யும் புலையர்க் கரசாளு மார்வங் கொடுத்ததென்னோ
நெய்யுந்து செங்கம லப்பொகுட் டேவளர் நேரிழையே.
(45)
நேரா ரனேக ரிரத்தக் கடலிடை நீந்துபெரும்
போராடு மார்வந்த ரியாவரென் றாற்பசும் பொற்புமலி
நாரா யணன்பத மேதஞ்ச மாமென நாடுமன்பாற்
சீரார்செம் பொற்றிரு
மாதரு ணோக்குறுஞ் சிற்சிலரே.
(46)
சிற்பர தத்துவ ஞானமும் பார்மகள் சீர்பெறற்காப்
பற்பல மன்னர் குடிகேடு செய்கின்ற பண்புமெண்ணில்
கற்பொரு கொங்கைக் கலவியும் வேட்டுழல் காதலுள்ளீ
ரற்புத நாரணன் மார்பிலுற் றாளை யடுத்துய்மினே.
(47)
அடுத்திரைஞ் சும்புல வோர்பெற்று வாழ்வுற வம்புயப்பூ
நடுத்திகழ் செய்யவ ணல்காத தொன்றில்லை நாகமிசை
படுத்தியங் குந்திரு மாலுந்தி யாய மதும முன்னாள்
கொடுத்திட வந்தவன் கைசெய்த வாமண்ட கோடியுள்ளே.
(48)
உள்ளக் கமலத்தில் வந்துவந் தாடு முனதருளிவ்
வெள்ளக் கமலப் புவியோர்முற் சற்றுவிளங்க லென்னோ
கள்ளக் கமலனைப் பெற்றானெந் நாளுங் கலந்துவகை
கொள்ளக் கமல மலர்மேற் குலாவிய கோல்வளையே.
(49)
கோல வுருவுஞ் சமைந்தகல் பார்துயர் கொய்தநெடு
மாலடி யாரடி மைத்திற மேமிக வௌவுமென்னைச்
சால மனந்தள ரக்கண் டுளாயென்று தாங்கிக்கொள்வா
யாலமு நீலமும் போலவி ருண்கண் ணணித்திருவே.
(50)
அணித்தாகு நின்னரு ளென்றுவப் பாகு மறிவடையப்
பணித்தாய்சில் கால்பயன் பாலித்து மாற்றினை பாவமன்றோ
லெணித்தாழ் வுறாநல மென்றருள்வா யென்று மெம்பெருமான்
மணித்தாம மார்பைவிட் டோவாது வாழு மடவன்னமே.
(51)
அன்னமொப் பாய மருமக ளார்வ மடைந்தவர்க்குக்
கின்னஞ்செய் வாயெனப் பல்லோ ருலகிற் கிளத்திடும்பொய்ச்
சொன்னம் பிலேனவ ளாயது நீயென் றுணிவடைந்தே
னின்னமுஞ் சோதனை செய்யேல் கமலத் திருந்தவளே.
(52)
இருந்ததையொப் பாமுரு வாய்ந்தவெஞ் சாரண ரீடழித்த
வருந்தவன் சொல்வழிச் சென்றறி யேன்றுதிக் காசைகொண்டாய்
கருந்தன மேனுந் தருகின் றிலாய்தண் கருணையின்றோ
மருந்தத னோடுவெண் பாற்கட லூடன்று வந்தபொன்னே.
(53)
வந்தனஞ் செய்பவர் குற்றேவ லுஞ்செய்யு மாயனது
பைந்தகை மார்பிற் குடியேறி வாழும் பதுமமகள்
சொந்தமெவ் வாயுரை தந்தா ளினேகலிந் துன்பமறு
மந்தரத் தோர்நிலத் தோர்பிலத் தோரெ னனைவர்க்குமே.
(54)
அனைவரும் போற்று நெடுமாலு நீயு மடற்கருடன்
றனையெழில் வாகன மாக்கொண்டெ னுள்வருஞ் சத்தியத்தைப்
பினையுள்ள பேரறி யத்தக்க வாறருள் பெய்வதென்றோ
மனையெனத் தாமரைப் பூவையெல் லாங்கொள்ளு மாணிக்கமே.
(55)
மாணிக்க மேனி யுடனுன்னை நாடி மலர்சொரிந்து
பேணிக்கை கூப்பும் பயனிந்த வாறிங்கு பெற்றிருந்து
மாணிக் கனக முளார்தங்க ளாண்மைக்கண் டஞ்சிமுக
நாணிக் கவிழ்தர லாமோபொன் போலு நளினமின்னே.
(56)
நளினந் தொறும்வளர் நங்காய்நின் கொண்கனென் னற்றமிழ்க்காப்
புளினம் பொலியல்லிக் கேணியிற் றந்த புதியகைச்சீட்
டொளிர்கின்ற சத்திய மாகாவிட் டாலந்த வூறுனக்கே
களிறுண்ட வெள்ளிற் கனிபோன்றுள் ளேனிலை கண்டருளே.
(57)
கண்டங் கரியன் முழுதுங் கரியன் கடகரிய
னண்டங் கடந்தவ னாதிய தேவ ரனைவருநின்
றொண்டன்பி னாலுய்ந்து ளாரேயென் றோருமென் றுன்பொழித்தா
ளொண்டங்க மேனித் திருவேயெச்சீரு முடையவளே.
(58)
உடைமணிச் சேயுரு வாத்திரு மாலிவ் வுலகில்வந்தாற்
பெடைமறிய் சாயல் வடிவாகித் தானும் பிறக்கவொல்காள்
படைமலர்த் திண்கரத் தங்கச வேளைப் பயந்தபண்பாற்
கடையுகத் தீனரு மெள்ளாத சீர்கொள் கனகமின்னே.
(59)
கனகம் பொருளல வென்பாரை வன்சினக் காலன்வௌவு
மனக மதேயென் றுளார்சித்த ராய்விண்ணி லாடல்செய்வார்
தனதனைத் தோழமைக் கொண்டானென் பாம்பணிச் சம்புவுமென்
மனதறி மாமல ராளரு ளிவலவா மாந்தரன்றே.
(60)
மாந்தரிற் சிற்சில ரைத்திரு மாலென்றும் வண்புலவர்
தீந்தமிழ்ப் பாடல்க ளாற்செப்பு மாறுஞ் செயத்தக்கநீ
பாந்தளிற் றீய மிடியாலெற் றுன்பப் படத்தனன்றோ
வேந்தலர்ப் பீடத் துளாயண்ட கோடிமுற் றீன்றவளே.
(61)
ஈன்றா ளிகழவுஞ் செய்கின்ற பாழ்மிடி யிற்கயங்கு
நான்றானிற் போற்றத் துணிந்தேன் கொலோவுன்ற னல்லருளுட்
டோன்றாது நின்றெனைத் தூண்டிய தோவுண்மை சொற்றருள்வாய்
போன்றா ரிலாத்திரு மாலுரத் தேவளர் பூங்கிள்ளையே.
(62)
பூங்கணை மாரனைப் பெற்றாய் சகல புவனத்தினு
மோங்கருட் கார்முகி னெஞ்சங் கவர்ந்திட் டுயர்ச்சியுற்றாய்
வேங்கனற் போலுமென் பாழ்மிடி தீர்க்கும் விறலில்லையோ
மாங்கலி யத்திரு நூல்சாட்சி யாச்சொன் மலர்த்தையலே.
(63)
மலரா தனத்திருந் தாணெடு மாற்கருள் வாழ்க்கைநல்கிப்
பலகோடி யண்டமுங் காப்பா ளவளைப் பழிச்சுகின்றேன்
சிலர்வாயிற் சென்றிர வாதளித் தாலத் திருத்திகொண்டு
புலவேர் களைந்து பிறவாத வீட்டில்ப் புகுவனன்றே.
(64)
வனத்தொடு மாநக ருஞ்சம மான வாதனைபோ
யினத்தொடு வாழும் பெருங்களிப் பெய்து மிகலழியுங்
கனத்தொடு நேரு நெடியோனை யாண்டு கமலமுற்றுந்
தனத்தொடு வாழ்மயில் போன்றொளிர் வாளருள் சார்ந்திடினே.
(65)
சாரணர் புத்தர் முதலோரும் போற்றத் தரணியுண்ட
நாரணன் மார்பத் திருக்கின்ற பாவை நளினக்கையே
காரண நன்மைக்குந் தீமைக்கு மென்னக் கழறவல்லார்
பூரண ஞானமுற் றோர்மற்றை யோர்சிறு புந்தியரே.
(66)
புந்திக் கலக்க மலிந்துன்னை நாடிப் புலம்புகின்றேன்
சிந்திக்க வல்லனல் லேனென்னை யின்னமுஞ் சீரழியே
னிந்திக்கத் தக்கவ ரும்புக ழார்வ நிறைவருள்வாய்
வந்திக்க வல்ல குறுமா முனிபின் வருந்திருவே.
(67)
வருந்திட நீடுங் கலிமுற்றுந் தீரநின் மைந்தன்சொல்லாற்
றிருந்திய நான்மறைத் தேவரெல் லார்க்குஞ் செயமுரைத்தேன்
பொருந்திய பேறுதந் தாரில ராலுனைப் போற்ற லுற்றேன்
மருந்திணைச் சொற்றிரு வேநீயு மங்ஙன வஞ்சியலே.
(68)
வஞ்சிமன கன்னட தேயா திபன்சின் மடாதிபரைக்
கெஞ்சியு மென்றனக் கெய்தாத செம்பொன்பல கீழவர்பான்
மிஞ்சிடச் செய்யுங் கொடுமையெல் லாமென்று விட்டொழிப்பாய்
நஞ்சினுந் தேவ ரமுதினுஞ் சீர்த்தகண் ணாரணியே.
(69)
நாரணி நாரணன் பன்னியென் றோர்வரு நாவலர்தம்
பேரணி தானும் பெரிதோங்கும் பாரிற் பிறந்தெய்த்துளே
னீரணி சென்னியன் கைம்மண்டை யோட்டுண்டி நீக்கியருட்
சீரணி வெள்ளிவெற் பிற்குடி யேறச்செய் செய்யவளே.
(70)
செய்யதண் டாமரைப் பூவுடை யாளருள் செய்யப்பெறா
வையரு மிந்திரன் றானும் பிரமனு மைந்துபடைக்
கையனு மீசனு மாதியர் தாம்பட்ட கட்டமெல்லாம்
பொய்யறக் காட்டும் பராசரன் சேய்சொற் புராணங்களே.
(71)
புராதன நான்மறைக் கெட்டாது வாழ்பரி பூரணனை
நிராதர னென்றுரைப் பாரெண் ணிலார்சற்று நெஞ்சஞ்சிடா
திராநிகர் கூந்தற் றிருமாது சம்பந்த மெய்தியதாற்
சராசர மீன்றுள ளென்றுரைப் பேனெச்சொற் சத்தியமே.
(72)
சத்தி யனந்தமுந் தானாகி நின்ற சலசவல்லி
சித்தியு முத்தியும் வேண்டிய பேர்க்கருள் செய்யுந்தெய்வம்
பத்தியின் மிக்குயர் பாண்டவர் தூதனைப் பாடுமன்பர்
நத்திய வாறுசெய் யாதிருந் தாற்கெடு நான்மறையே.
(73)
நான்மறை யீற்றினிற் பாம்பின் றலையி னடித்தருளுங்
கான்மலர்க் கார்முகி லன்னானை நாடிக் கசிபவர்க்கு
மான்மழுச் செங்கைச் சிவனாதி யர்மெச்சு மாண்பருளுந்
தேன்மலர்ப் பீடப் பிராட்டிய வேபல செல்வமுமே.
(74)
செல்வச் செருக்கர் மனைவாயி றோறுந் திரிந்தலுத்துச்
சொல்வக் கணைப்பொய்ப் புலவோர்க ளான்மிகத் துன்புற்றுளே
னெல்வட்ட மென்னத் தினஞ்சேவை நல்கி யினிதருள்வாய்
வில்வத் தருநிழ லின்றலை மேய வியன்றிருவே.
(75)
வியப்பாரு முத்தமிழ்ப் பாவெகு வாக விளம்புமென்னை
நயப்பா ரிலாமையி னாணுகின் றேன்றுங்க நான்மருப்புக்
கயப்பான்மை யோரு நடுங்குறு மாறு கனகநல்காய்
செயப்பாவை யேதிரு மாலென்று மோவருஞ் சீரணங்கே.
(76)
சீரணஞ் செய்யு மிடிநோயிற் பட்டுத் தியங்குகின்றீ
ராரணஞ் சொல்லும் பலகோடி தெய்வமு மாதரித்துக்
காரண காரிய மோராது வீணிற் கலங்கன்மினோ
நாரணன் றேவியை நெஞ்சகப் பூவிடை நாடுமினே.
(77)
நாடு நகரு மதிக்கின்ற பேறு நளினமலர்த்
தோடுஞ் சுரும்புந் துணையாக வாழுஞ் சுரிகுழலைப்
பாடு மவரும் பணிகின் றவரும் பழுதில்செம்பொற்
கோடுறழ் நெஞ்சகத் தாலெண்ணு வாருங் கொளத்தக்கதே.
(78)
தங்கம் வியாகர ணம்பர தம்புரை சாத்திரந்தேர்
மிக்கவர் தம்மையு மெண்ணாக் குரோத விரோதியருங்
கைக்களி றொன்றளித் தான்மனை யாட்டிதன் கண்ணருளாற்
செக்கள வம்பொனுற் றார்தமைப் போற்றுவர் தெண்டனிட்டே.
(79)
இட்டுண்டு வாழ்கைமிக் கேற்றமென் றேமறை யாவுஞ்சொல்லு
மட்டுண்டு தம்முயிர் மட்டளிப் பார்க்கும்பொ னாதரமாற்
கட்டுண் டுரலொ டுழன்றான்மன் னாம்படி கண்டருளி
மட்டுண்ட தாமரை மேல்வசிப் பாளை வழுத்தனன்றே.
(80)
வழுவற்ற செந்தமிழ்ப் பாட லனேகம் வழங்குமவர்
குழுவிற்கும் வேட்கைபொன் மேலன்றி வேறில்லை கோக்கலுழ
னெழுதுற்ற கேதனத் தெம்பெரு மான்மனை யீகையதாற்
றொழுதிட் டவளைப் பலவாறு நாளுந் துதிக்கைநன்றே.
(81)
துதிக்கைக் கரியிரண் டாட்டுநன் னீர்நசைத் தோகையன்னாள்
விதிக்கைப் பிரமனை யீன்றான்ற னெஞ்சத்தின் மேவுமின்னாண்
மதிக்கைக் கடலமு தத்தோ டுதித்த வனிதையென்னுட்
கெதிக்கைத் துயரொழித் தாளினல் லான்மித்து கீழ்ப்படுமே.
(82)
கீழோரைக் கெஞ்சி யலையாத வாறு கிருபைசெய்திட்
டாழோத வாரியிற் பொல்லாரை வெல்லு மடலுநல்கா
யேழோடொ ரக்கர முள்ளா னுரத்தி லிருந்துகொண்டே
வீழோர்மை யாள ரிலந்தோறுஞ் சென்றும் விளங்கன்னையே.
(83)
அன்னையென் றெவ்வுல குந்தரு வான்சொ லமுதழியாப்
பொன்னையொப் பாந்திரு மேனிப் பிராட்டி புகழ்ப்பெருக்கந்
தன்னைமெய் யன்பருக் கீவாளென் பாற்சொல் சரதமொன்றுண்
டென்னை யதென்செய்யு மோவறி யேனென் னினத்தினரே.
(84)
இனமாய மாதவர்க் கும்புல வோர்க்கு மிரப்பவர்க்குந்
தனமா தியபொரு ளெல்லாங் கொடுக்குந் தகைவி ழைந்தேன்
கனமான மேனியம் மான்மனை யாட்டி கடைக்கண்களென்
மனமா மலர்த்தொட்ட வாறெனைத் தீட்டிலவ் வாழ்வெய்துமே.
(85)
வாழ்வு வரினு மனைதோ றிரந்துண்டு மாழ்குபெருந்
தாழ்வு வரினுந் தமியேன் மறக்குந் தகுதியவோ
வாழ்வுறுஞ் சிந்தைப் புலவோர்பல் லோர்தொழு மாளரியும்
வீழ்வுறுஞ் செம்பொற் றிருமாது காட்டுணை மென்மலரே.
(86)
மென்மதம் வன்மத மாமிரு கூறும் விரும்புவது
தன்மமெல் லாஞ்செயத் தக்கது வேதந் தனிற்பிரியுங்
கன்மமுன் னாகுமுக் காண்டரு நாளுங் கருதுவது
பொன்மலர்ப் பாவை யருளால் விளையும் பொருட்குவையே.
(87)
பொருளல் லவரையும் போற்றிடச் செய்யுமம் பொன்னெனவே
தெருளுமுன் னூற்றலை செப்பிடக் கேட்டுஞ் செருக்கதனா
விருளுநெஞ் சத்தின ரேத்தெடுக் கார்புவி யேழுமுண்டோன்
மருளறத் தாக்கும் விழியா டனாது மலிபுகழே.
(88)
மலியுங் கருணை திருமாது நீக்கலும் வானவர்சீ
ரொலிதங்கு பாற்கடற் புக்கது நல்கலு முற்றதுங்கேட்
டலியன்றி யாணன்றிப் பெண்ணன்றி யன்னவை யாய்நிகழ்மா
னலிவின் றியநடு மார்பினை யேமிக நண்ணுதுமே.
(89)
நண்ணலர் சேனை நலங்குலைப் பார்செங்கை ஞாங்கரினு
முண்ண லுடுத்தல்பல் லோர்க்கிடு வார்தம துள்ளத்தினும்
வெண்ணகைப் பாவையர் மங்கல மியாவினும் வேதத்தினும்
பண்ணவர் போற்றுந் திருமாது கண்ணருட் பார்வையுண்டே.
(90)
உண்டற்கு வேண்டு மவையுமெய் தாதிங் குழல்பவரைத்
தொண்டர்க்கொர் தூதனு மாநெடு மால்புணர் தொன்மனைவி
கண்டற் புதக்கரு ணைக்கட லாட்டிடற் கண்ணிமையா
வண்டர்க்கும் மேல்வ ராய்த்திகழ் வாரென்சொ லன்றிதுவே.
(91)
அன்றைக்கென் சொற்பனத் தேவந்து கூறிய வற்புதச்சொல்
லொன்றைக் கருதி மிகமகிழ்ந் தேன்பய னுண்கிலனீ
யென்றைக் கினியருள் வாய்சிறி தேனுமின் றீயின்னருங்
கொன்றைச் சடைத்தம்பி ரான்றங்கை யாநிகழ் கோமளமே.
(92)
கோமளச் செந்திரு மங்கைநல் லாள்சினைக் கொண்டல்வெட்குஞ்
சாமள மேனிப் பிரான்மனை யீட்டென் றனதுநிலைக்
காமள விற்றயை செய்கின் றிலாளயர்ந் தேனையகோ
தாமள வாத்தவத் தீருயற் காமொர்சொற் சாற்றுமினே.
(93)
சாற்றணி யாலயந் தோறு நிலாவற்குந் தாரணியின்
மேற்றவத் தோர்குழுக் கூடிக் குலாவற்கும் வேறெவைக்கு
மாற்றனல் குங்கடைக் கண்ணாள்செந் தாமரை யாளெனவே
தேற்றவல் லாரை யிகழ்வார் பலருஞ் சிதடர்களே.
(94)
சிதனடி யாரிற் சிலர்க்குங் கருணை செயுங்கமலை
புதனிகர் பாவலர் பல்லோர் வருந்துறப் புண்செய்கின்றா
ளிதமருள் வாளென நானம்பி யேயினி தேத்துகின்றேன்
மதலையர் தம்மிடை கூட்டிக்கொண் டானன்று மாநிலமே.
(95)
மாநில மங்கை தனக்கினி யாட்கு மலர்மகட்கு
வேனில் விழாமதற் பெற்றாட்குத் தண்பொலி வெண்கடலிற்
பானில வோடு முதித்தாட்குப் பாடல் பகருமவ
ரானியில் பேறடை வாரென்று தேற லரிதரிதே.
(96)
அரிமா முகங்களொ ராயிரத் தோடுற் றரிகனக
னெரிநாணுஞ் செங்குடர் மாலையிட் டாட லிடும்பொழுது
முரியானென் றோர்ந்தணைத் தின்புறும் பாவை யென்னோர்கலிப்பேய்
பெரிதாமென் றஞ்சுங் கொலோபு வீர்கண்டு பேசுமினே.
(97)
பேசுஞ் சதுமறைத் தெய்வ மெலாமென் பெருங்கலித்தீ
வீசுஞ் சுவாலைகண் டஞ்சி யொதுங்கி வெதும்பினநீ
யேசும் பழிப்படைந் தாலடி யேனிவ ணெங்ஙனுய்வேன்
மாசுண்ட நெஞ்ச ருணராத சீர்த்திரு மாதரசே.
(98)
அரச நிழலைத் தொழும்புலைப் புத்த ரருவருக்கும்
விரச மதத்தரும் வாழவைத் தாயெற்கை விட்டுவிடேல்
சிரசதின் மெய்யடி யார்பதந் தூண்மிகச் சேர்த்துளன்காண்
சரச குணத்திரு மாலரு னாய்த னிப்பொன்மினே.
(99)
தனிப்புறு யோக முயன்றா தரித்துத் தழைமலர்பெய்
தினிப்புறு தோத்திர முஞ்செய்ய வல்லவர்க் கெத்திசையுந்
தொன்புறு சீர்த்திநல் கிக்கலி யாதிய துன்பொழித்துச்
செனிப்புறு கன்மமுந் தீர்ப்பாள் கமலத் திருமகளே.
(100)
நூற்பயன்
(நேரிசை வெண்பா)
செப்பு மருமைத் திருமகளந் தாதிமுற்றுந்
தப்புவரா மற்றுதிக்கத் தக்கவர்க்கு – முப்புவனத்
துள்ளவரும் போற்று முயர்வுண்டா யோர்காலு
மெள்ளரிய வீடுமெய்து மே.
வாழி விருத்தம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
பார்வாழி வான்வாழி பழுதில்சது
மறைவாழி
பதின்மர் செஞ்சொற்
சீர்வாழி திருவரங்கத் தலம்வாழி
யரவணையிற்
றிருமால் வாழி
பேர்வாழி யெட்டெழுத்தும் வாழியவற்
றொன்றேனும்
பிடித்தோர் வாழி
நார்வாழி தவம்வாழி நன்மையெல்லா
மிகவாழி
நாளும் தானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக