வியாழன், 24 செப்டம்பர், 2026

நடேசன் அருள் வேண்டு பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

நடேசன் அருள் வேண்டு பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

ஆதிப் பொருட்பா லருளீண் டருளென்னச்

சோதித் தமிழ்க்கவியாற் சொல்வதற்கு – வாதிக்கு

மாய வுலக மனிதரறி யாதுளவென்

றூயமனச் சாட்சி துணை.

 

(கொச்சகக் கலிப்பா)

விழிகாண்ப தன்றிமன வெளியினினும் வெயிற்சுடர்வந்

தொழியாத பேருவகை யுதவியதுண் டாதலினாற்

பழியாத மேன்மைபெறும் பரஞ்சுடரே யெந்நாளு

மழியாத நின்னாணை யருளெனக்கீண் டருள்வாயே.

(1)

வடிகுலர் மூவிலைவேல் வயங்குகரத் தான்சிலகா

னெடியமால் விடைமீதென் னெஞ்சகத்தி னிகழ்ந்தனனாற்

படியும்வா னகமுமிகப் பரவுபுகழ்ப் பரமேநின்

னடிமையா மென்னாணை யருளெனக்கீண் டருள்வாயே.

(2)

மின்படுசிற் றிடைக்குயில்போல் விளங்குபரா பரையென்னுட்

டன்பரிசு பலகாட்டிச் சாற்றியசொற் சிறிதுளவால்

வன்பர்பலர் வாழ்வுறவும் வழங்கியவான் பரமேமெய்

யன்பர்குழத் தினதானை யருளெனக்கீண் டருள்வாயே.

(3)

திறத்தகுவ ரிகலாழிச் சீதரனென் சிந்தையினும்

புறத்தும்விளை யாடல்சில புரிந்ததுண்டு பொய்யன்றான்

மறத்துநம னீறாம்பல் வானவரு மாம்பரமே

யறத்தொகுதி மிசையானை யருளெனக்கீண் டருள்வாயே.

(4)

நசைபடுசிற் றுண்டிமிக நல்கின்மகிழ் நால்வாய்வந்

திசையுமொழி சிலகூறி யெனைத்தேற்றி யதுமெய்யாற்

றிசையிலுறு பலசமயச் சீராட்டுங் கொளும்பரமே

யசைவறுசத் தியத்தாணை யருளெனக்கீண் டருள்வாயே.

(5)

முருகவிழ்செங் கடம்பணியு முந்நான்கு புயத்தொருவன்

றிருவருணைக் கிளியென்னச் செப்பன்முதற் பலவுண்டான்

மருமலர்ப்பூ சனைசெய்வார் மனக்கமலம் வாழ்பரமே

யருமறையா கமத்தாணை யருளெனக்கீண் டருள்வாயே.

(6)

இளப்பமுழு தறக்களைந்திட் டின்புறுதன் மிகநாடிச்

சளப்படுமென் மனவெளியிற் றனியலியாந் தற்பரமே

தளப்பதும மலரோன்கை தன்னிலின்னம் புகத்தள்ளே

லளப்பறுநின் கண்ணாணை யருளெனக்கீண் டருள்வாயே.

(7)

பஞ்சவகைப் பொறியாகிப் பழுதறுநன் மனமாகித்

தஞ்சமெனத் தொழுவார்க்குச் சற்குருவு மாம்பரமே

நெஞ்சகத்திற் பலமூர்த்தி நிசவடிவத் தொடுதோன்றி

யஞ்சலென்ற கையாணை யருளெனக்கீண் டருள்வாயே.

(8)

பங்கமிகப் பருத்தேங்கும் பாவியேன்வடி வொடும்வந்

திங்கடியேன் மகிழும்வகை யியம்பியதா மென்பரமே

துங்கமறை யாகமங்க டுலங்குமெழிற் சிலம்பாய

வங்கமலப் பதத்தாணை யருளெனக்கீண் டருள்வாயே.

(9)

சவையனந்தத் தேற்றநல்கிச் சரதமறி யாச்சிலரால்

வசையுமுறச் செய்துதவம் வளர்க்கின்ற வண்பரமே

கவையுறுநெஞ் சுடையார்தாங் கருதியவா காண்டருநின்

னவையவங்கண் முழுதாணை யருளெனக்கீண் டருள்வாயே.

(10)

காணமுநற் கல்வியுமெய்க் காட்சியுமா மூவகையும்

பேணியன்பர்க் கீந்தாண்டு பிறப்பறுக்கும் பெரும்பரமே

மாணுறுபல்கோடி யண்டம்வகுத் தளித்துத்தொ டைத்திடுநின்

னாணையின்மேற் றிருவானை யருளெனக்கீண் டருள்வாயே.

(11)

துஞ்சாம லெஞ்ஞான்றுந் துலங்குபரத் தினைக்கூவி

யஞ்சாம லாணையுமிட் டருலெனக்கீண் டருளென்னச்

செஞ்சாலி வாடிநகர்த் திருப்புகழோன் செப்புமிவை

நஞ்சாய துயர்நீக்கி நலம்பெரிது நல்குபவே.

(12)

முற்றிற்று.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக