வியாழன், 24 செப்டம்பர், 2026

திருப்புகலூர்ச் செவ்வேள் பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருப்புகலூர்ச் செவ்வேள் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

திருப்புகலூர்ச் செவ்வேளே தேவர் மகளைப்

பொருப்புடையார் பெண்ணைப் புணரும் – விருப்புடையர்

யென்னைத் தொடர்ந்தாண்டு மேன்பலரைப் போற்றவிட்டார்

யுன்னைத்தா னோவே னுணர்.

 

பதிகம்

(கட்டளைக் கலித்துறை)

பங்கயத் தோனென் றலையிற் பழுது விதித்தாலுமுன்

தங்கழற் றாளழிக்கு மென்வடி யர்சிலர் சொல்லவம்போ

மங்கள கோலா கலக்கார் மயிலூர்ந்து வானில்வருஞ்

செங்கன கக்கிரி போல்வாய் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(1)

பாதகமி யாவையு நீக்கிப் பார்மகிழச் செய்யினன்றி

மாதவப் பேறாய் முத்தி வழங்கிடினு மருவேன்கா

ணேதமுற் றியயர் வெய்துமி மையார்கேட் டின்பமுறச்

சீதரன் மெச்சிய வீரர் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(2)

அப்பனன் றோர்பாவ லனுக்கா டகமாம் பலசெங்கன்

மெய்ப்பரி சாமெனக்கொ டுத்தான் விரைந்தெனக்கியா தருள்கின்றாய்

பொய்ப்பகட் டுப்பாழ்ங் கவிசொல்புன் புலவ ரொருக்காலுஞ்

செப்ப ரியவள் மோங்குந் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(3)

காயக நெஞ்சுடைப் பொல்லார் கடும்பகைமுற் றிலின்வாடிப்

பேய னெனத்திரி வேனைப் பேணும்வலி பெற்றிலையோ

மாய வினைத்தா ரகனை மயக்கமிகச் செயும்பான்மைத்

தீய மலையொடு செற்றாய் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(4)

ஓர்முத னீயெனத் தேறி யோயாம லுள்ளபடி

யூர்முழுக் கப்பகர் வேனுக் குரனளிக்க வொண்ணாதோ

நீர்முளைத்த முண்டகத் தோனிகழ்த் துநெறி யிருமூன்றுஞ்

சீர்முகங் களெனக் கொண்டாய் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(5)

கைக்களி றொன்றோர் கனவிற் கனன்றுறுக் குமந்நாளின்

மெய்க்கரு ணைகாட் டியதும் வெறுப்பொய்யாய் விடலாமோ

மைக்கண் மடமா னனைய வணிகமகண் முதலோர்முற

சிக்க மயிற்பரி யூர்ந்தாய் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(6)

பாவலங் கல்பல பாடி பாடிமிகப் பரவமெனை

நாவலந் தீவின ரேனு நன்கறியப் புரியாயோ

பூலஞ் செய்திட லோர்வாய் பொருவீரர் பலர்போற்றுஞ்

சேவலஞ் சேதனத் தெந்தாய் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(7)

போகாந் தகரா நெடும்பு ணரியின்மூழ் குற்றாலு

மேகாங் கப்பொரு ணீயென் றியானுணர்ந்த தில்லைகொல்லோ

வாகாப் புன்குணந் தோய்ந்த வமமணரைக் கழுவேற்றச்

சீகா ழிமக வானாய் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(8)

பாரணங் கின்றுயர் தீர்ப்பான் பச்சைமா யவன்போலு

நீரணை யமுயல் வேனை நிர்ப்படையச் செயலேனோ

சூரனைக் கொன்றும் பரபெருந் துயரொழித்த சுடர்வேலா

தீரகு ணத்தின றேத்துந் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(9)

கிரிதோறு நடமா டிக்கிளர் தருதாளொ ருக்காலுந்

தரியாப் புன்றலை யோரிற் றளர்வேனை விடலாமோ

பெரியோர்க் கின்னுயி ராய்பிர ணவச்சீரு ணர்வார்க்குத்

திரிமூர்த் திகளு மாவாய் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(10)

பாசிய ணிக்குறத் தாய்சொற் பலிதமுறப் பெற்றதனாற்

காசினி யின்றுயரி யாவுங் களைதருநா ளுதியாதோ

வாசின் மறையா கமத்தி னருநெறியாவை யுங்காப்பத்

தேசிக ரியாவரு மாவாய் திருப்புகலூர்ச் செவ்வேளே.

(11)

தகருட னானையு மேறுஞ் சமரசப்பண் புடையானைச்

சிகரி தொறுநடிப் பானைத் திருப்புகலூர்ச் செவ்வேளைப்

புகர்மொழி கொள்வார்க் கெமனே போன்றதிருப் புகழ்க்காரன்

பகர்பதி கந்துதிக் கின்றோர் பலபயனும் பெறுவாரே.

(12)

முற்றிற்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக