வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
தென்பேறு சிவபெருமான் பதிகம்
(காப்பு)
(நேரிசை வெண்பா)
செல்வம் பெருகித் திகழ்கின்ற தென்பேற்றில்
வில்வம் புனைந்துறையும் வேதியனே – நல்வரங்க
ளெல்லவர்க்கு மீந்தருளு மீசனே யென்னையு
வெல்லவர்தம் மூடிக்க வை.
(பதிகம்)
(கலித்துறை)
இந்துலவுஞ் சடையுங்கழை யாவளை யிலகுந் திருக்காதும்
வெந்துகுளிர்ந் தெரிந்துள்ள முக்கண்முதல் வியனுங் கருதேனோ
பைந்துணருந் தழையுஞ் சொரிவுரா பிழைபார்த் தருள்வானே
செந்துவர் வாயுமை பங்கினனே யெழிற்றென் பேறுடையானே.
(1)
கார்மருவுங் குழலார் விழியென்றுள் கணையால் வெருள்வேனுன்
பேர்மலிவிற் சிறிதோ திடுமெய்ப் புகழ்பெறு நாளுதியாதோ
பார்மகள்கேள்வன் வணங்கிடக் கண்டருள்பாலித் திருவோனே
சீர்மலர் வாவிமிகும் பொழில்சூழ் தருதென் பேறுடையானே.
(2)
முத்தமிழிற் கவிபாடி யணிந்துணை முன்னாள் வழிபட்டோ
ரத்தனை பேறுபெறத் தமியே னிவணலமந் திடலாமோ
மத்தமெருக் கறுகம்புலி யாதிய மருவுஞ் சடையோனே
சித்தர்தமக் காசா னவனே யருட்டென் பேறுடையானே.
(3)
காயக நெஞ்சமுடைக் கொடியோர் மனைக்கடை வாயில்கடோறும்
போயலையா துணைநின் னடியாரொடு புகழுந் தவநல்கா
யேயவொரைந் தெழுத்தும் பகர்வார்களை யென்றும் பிரியாதாய்
சீயம்வெருக் கொளவென்று யாவாய் திருத்தென் பேறுடையானே.
(4)
கூறரி தாகிய நின்புகழே பகர்கொள்கைக் குரியார்தம்
பேறடையக் கருதுந் தமியேனொடு பேசா விதமியாதோ
வாறணியுஞ் சடையா ரமுதே புலியதளா டரையோனே
சீறர வப்பணி கொண்டவனே பெருந்தென் பேறுடையானே.
(5)
பொய்வழியிற் செலவிட்டெனை நாடோறும் புண்ணா கிடவாட்டு
மைவகர் தமக்கிளை யாவண் நின்றிருவரு ளாழியிலாழ்த்தாய்
மைவரு சோலையும்வாவியுஞ் சூழ்தர வளையைக் கயல்பாயுஞ்
செயவாம் பிற்றின மோதிமங் கண்டுயிரென் பேறுடையானே.
(6)
பூவெழுதுஞ் சிறுகோடுறு மால்விடைப் புனிதன் பரமென்றும்
பாவெழுதும் பரியோரொடு நான்மிகப் பழகப் பெறுவேனோ
கோவெழுதுந் தனத்தார் மயலில்லவர் கோவே மலர்கொள்ளுந்
தேவெழுதுஞ் சதுமா மறையோ லிடுந்தென் பேறுடையானே.
(7)
ஓர்விழியுள்ள வானனவர் சொன்மொழி யொப்பா வுணர்வுற்றும்
பார்விலையா மொழிமங்கையர் தம்மயல் படரச் செயலாமோ
போர்விடை யூர்பவனே சிவனே நெடும்பொன் வில்லணிகையால்
தேர்விசையற் கருள்செய் தவனே யணித்தென் பேறுடையானே.
(8)
பொன்னை நிகர்த்த புகர்களிறோ டயில்புனை வேளெனுமைந்த
ரென்னை யணைத்தெமக் கோர்துணை நீயெனயானும் பெறுவேனோ
புன்னைமலர்த் தொடையன மகளால் வலைபுனையும் புயமுற்றாய்
தென்னை யெனப்பல வாழைக ணீடியதென் பேறுடையானே.
(9)
சாரணரைக் கழுவிட் டவனாதிய சதுரர்க் கருள்செய்த
காரண நாடிவருந்திடு மென்னது கவியும் புனைவாயோ
பூரணனே யருட்புண்ணி யனேமிகப் பொலிவெண் பொடிபோர்த்தாய்
சீரண மில்லவனே யானே யுயர்தென் பேறுடையானே.
(10)
வெண்ணிறச் செங்கண் விடைக்கொடி யாளணைமிளிர் கொன்றையுநீருந்
தண்ணிலவுஞ் சடையிற் புனைந்தாடிய தலைவன் றனைநாளுந்
திண்ணியர் மேயதென் பேறுடைய யீசனைத்திரு நெல்லையில்வந்தோ
னண்ணிய விப்பதிகம் பகர்வாரெதிர் நமனா ரணுகாரே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக