வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருப்புகலூர்ச் சித்தர் பஞ்சரத்தினக்
கோவை
காப்பு
(நேரிசை
வெண்பா)
யக்கர் பிரான்போற் றுமெழிலார்தி ருப்புகலூர்
முக்கணருக் கான மொழிதேடிச் – செக்கர்நிறப்
பஞ்சரத்தி னக்கோவை பாடுவேன் பற்றுதுணை
குஞ்சரத்தி னோடு குகன்.
நூல்
(நேரிசை வெண்பா)
பொன்போன்ற மேனிப் புனிதர் புகலூரி
லன்போர்க் கிரங்கு மருட்கடலே – யென்போல்வார்
பாடலைக் கைக்கொண்டு பரிசளித்தாற் பாவமென்றோ
நாடலைநன் கெண்ணுதியிந் நாள்.
(1)
(கட்டளைக் கலித்துறை)
நாளத் தனைவம்பிற் போக்கிவிட்டேன் செங்கை ஞாங்கரணி
வேளத் தனைப்புக லூரிப்பெரு மானைமுன் வெற்பளித்த
காளத் தனைமண வாளனைப் போற்றிக் களிக்கையின்றித்
தாளத் தனைய முலைச்சிறு மாதர் தமைநினைத்தே.
(2)
(கலி விருத்தம்)
தமையளத்தற் கறியாதார் தண்புகலூர்க் கோயிலிடை
யமையனைய தோளியொடு
மமர்ந்திருக்கு மம்மானா
ரிமையசையு மத்தனைபோ தெனையருளா லெண்ணுவரேல்
சுமையைநிக ரூனுடம்புஞ் சொரூபமாதாத் தோன்றுமன்றே.
(3)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
அன்று சுந்தர னுண்மகிழ் வதுகருதா
வம்பொ
னெஞ்ச லறவரு ளினையதனா
லென்று மம்புவி யில்வரு புலவரைநீ
ரிண்டை
தங்கு முடிவிறை வளர்புகலூர்
நன்று நன்று கவிபக ருதிரெனவோர்
நந்த லின்றிய
பதிக மெழுதினனா
னின்று ணர்ந்துபல நுவல்கை யெய்தினனீ
யென்செய்
கின்றனை கொலறி கிலனரனே.
(4)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அரவினும் வெளுத்த வங்கமா லையினும்
பரவுமென் பனுவல் பழுதெனத் தகுமோ
வங்ஙனந் தானென் றறைகுதி யாயி
னெங்ஙன மெனக்கேட் டிழாதுணை விடேன்காண்
முன்னநீ யணிந்த முதிர்தமிழ்ப் பெருக்க
மின்னண முளவென் றிகமுழு தறியு
மாதலிற் பொதியை யகத்திய னனைய
மாதவர் தம்பால் வழக்கிடப் போது
மியானிவண் சொல்லா லிளியுனக் கின்றே
கூனிய முதுகாள் கொடைவுண வேட்டு
மண்சுமந் ததுவு மகவுடை வணிகப்
பெண்சலிப் போவப் பெருந்திறல் வழுதி
யவையிடை குயவர்க் கள்ளவல் வழக்கிட்
டீர்த்தது மறியா ரிலையிலை யீர்ந்தோற்
போர்த்தளி கூரும் புகலூர்ச் சிவனே.
(5)
(நேரிசை வெண்பா)
சிவனே திருப்புகலூர்ச் சித்தனே யென்னைத்
தவநேச மில்லார் தலைவ – னிவனேயென்
றாயவிட வேண்டா மமரரெல்லா மஞ்சவருந்
தீயவிட முண்டதெண்ணிச் சேர்.
(6)
(கட்டளைக் கலித்துறை)
சேரனன் னார்க்கொரு சீட்டேனு நல்கு திசெம்பொனிச்சைக்
காரரொப் பாகிக் கழிவுபட் டேனின் கனற்கண்மைந்தன்
பாரறி யக்கற் கிணறுதொட் டேங்கப் படுத்துகின்றா
னாரணன் போற்றும் புகலூர்ப் பரவுமை நாயகனே.
(7)
(கலி விருத்தம்)
நாயனைய சிறுநெஞ்சா னலங்குலைந்து நாரியர்தம்
வாயதரச் சுவைநாடி வருந்தவென்னை விடலாரோ
வாயபொருண் முழுமையுமா யவையொன்று மாகானே
தீயவர்க ளேத்தரிய திருப்புகலூர்ச் செங்குன்றே.
(8)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
செங்குன் றூரிடை பகர்மொழி நினையீர்
தென்பொன்
றீனர்முன் யாதுய ரொழியீ
ரெங்கும் போகுமென் மனமிசை மிதியீ
ரின்பம்
சேர்வதே வண்மினி தருள்வீர்
சங்கும் காதினி லணிதகை யுடையீர்
தண்பைஞ்
சோலையொ டிலகிய புகலூர்
தங்குஞ் சீரியர் தவமென மிளிர்வீர்
சண்டன்
சாவுற வடுகழ லினரே.
(9)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கழகப் புலவோர் கணம்முன் னேகிக்
குழன்மணத் தியற்கை கூற வல்ல
நும்புகழ் பகர்வே னுடங்கத் தகுமோ
தெம்புறு மாறோர் சிறிதருள் புரிவீர்
வானநாட் டகத்தோர் மாழ்கப் புவியிற்
போனக மிரந்தும் புலவனுக் களித்தீ
ரென்னகங் களிகூர்ந் திடச்செயீ ராயிற்
பன்னக ரினரும் பழிப்ப ரந்தோ
விகலூர் முற்று மெரியெழ நகைத்துப்
புகலூர் மேய புராணபுங் கவனே.
(10)
(நேரிசை வெண்பா)
புங்கரனை வர்க்கும் புகலாம் புகலூரிற்
சங்கரனைத் திங்கட் சடையானைத் – தக்க
நெடுமாற்ற தாக்கொடுக்கும் நித்தியனை நத்தித்
தடுமாற்றந் தீரத் தகும்.
(11)
(கட்டளைக் கலித்துறை)
தீரத்த னாகித் தவம்புரி யாமற் றினமுமெண்ணி
லூரத்தந் தேடி யுழன்றேனந் தோவெனக் கொண்புகலூர்ச்
சீரத்த னேநின் றிருவருட் செல்வங்கள் சென்னியின்ன
னீரத்த னைநல்க வேண்டுங்கண் டாயிந்த நேரத்திலே.
(12)
(கலி விருத்தம்)
நேரார்தம் மிகல்கருதி நிதந்தளருந் தமியேனைக்
கூராழி மாயனெனக் குலவிடச்செய் திடல்வேண்டு
மாராதித் திடுஞ்சேய்க்கா வந்தகன்ற னுயிருண்டாய்
தேராளர் மலிவீதித் திருப்புகலூ ருடையானே.
(13)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
யானுனக் கினியவா றொழுகு நீரிலே
னேனுமித் ததியிலா ளல்கட னாகுமா
லானுவப் படையுமா றுசெய நாடினே
னாதலிற்
சிவசி வாவிதென் பாவமோ
ஊனுணக் கொலைசெய் வார்களி னுமீனனோ
வோதவர்க்
குவகை யீதன்முறை யாகுமோ
பானுவொத் தகுழையா ளிலகு பாகனே
பார்மதித்
தவள மேயபுக லூரனே.
(14)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஊர்தொறு மிரண்துண் டுடையத ளாக
நீர்தலைக் கொண்டு நிலவன்மெய் யாயி
னன்றுபோற் றிசைத்த வருந்தமிழ்ப் புலவன்
கன்றுறா வண்ணம் கனகச் செங்க
வெங்ஙனங் கொடுத்தா னென்னவை யுறுவார்க்
சிங்ஙனந் தானென் றெனக்களித் துணர்த்தாய்
வானநாட் டவரு மகிதலத் தினரும்
பானலங் கண்ணார் பலரொடு தினமும்
வந்து வந்து வழிபட வரங்க
டந்துதந் தருளித் தண்பணைப் புகலூர்
மாட்டு நின்று மலிதமிழ்ப் பனுவல்
கேட்டுமிக் குவப்பாற் கிளர்கிழ வோனே.
(15)
(நேரிசை வெண்பா)
கிழவனெனப் பல்கால் கிளத்துநனென் றெள்ளேன்
மழமடவார் நெஞ்சுருக வந்த – வழகினையுஞ்
சொல்கின்றேன் கண்டாய் துகளில்புக லூர்துதிக்கச்
செல்கின்றார் நெஞ்சிற் சிவா.
(16)
(கட்டளைக் கலித்துறை)
சிவனேமுக் கண்ணுடைத் தேவே யருந்தமிழ்ச் சீர்ப்புகலூ
ரவனேநின் மைந்தற் கடிமைசெய் தேன்மிக் கருள்செய்திடா
திவணேங்க விட்டன னின்பால்வந் தேன்நின் னிதயமென்னோ
தவநேய மில்லவர் நிந்தைவெந் தீச்சொற் சகிக்கிலனே.
(17)
(கலி விருத்தம்)
சகிக்கரிய வினைத்துயரிற் றளைப்பட்டுத் தவிக்கின்றேன்
முகிற்பரியா னடைவருஞ்சீர் முன்னியவா றருள்செய்வா
யகிப்பணிமிக் கணிவானே யறமலிதென் புகலூரா
திகிற்படுமா னினம்முற்றுஞ் சிந்தையுவப் புறுமாறே.
(18)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
மாறாத துன்ப மென்று புவியோர்தாம்
வாயால்
விளம்ப வந்த மிடியானோய்
நீறாயெ ரிந்தொ ழிந்து விடுமாறே
நீதானி
ரங்கி யென்றே னெதிராவா
யாறான னன்பி றந்த விழியானே
யாழாழி
நஞ்ச முண்ட புகழோனே
பேறாளர் வந்தி றைஞ்சு புகலூரா
பேய்பாட
லும்பு னைந்து மகிழ்வானே.
(19)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மகிழ மாலிகை மாரன் றானிலும்
நெகிழுமன் பின்றி நிற்கொலக் கருதித்
தழல்வளர்த் திருந்த தக்கன் றனிலுங்
கழகத் திகழ்தரு கவிஞன் றனிலும்
பொல்லே னல்லேன் போற்றிநின் றிரந்தேன்
வல்லே னன்ன வளர்முலை மடவார்
மோகக் கடலிடை மூழ்கா தருளிப்
பாகத் துறுமவள் பால்குடித் துய்ந்த
பால னென்னப் பரமதங் களையுஞ்
சீல நல்கித் திரும்பா வீட்டிற்
றொண்டர்பற் பலரொடு தோய்தர வருளா
யண்டர்சூழ் புகலூ ரமர்பெரு மானே.
(20)
(நேரிசை வெண்பா)
மானணிந்த கையா வளங்கொள்புக லூர்வரதா
வானனந்தங் கூடி யழுகின்ற – வீன
முனக்கிலையோ வுன்னாழி
யுற்றற்கு மின்றோ
வெனக்கிலையென் றோதறியேனி யான்.
(21)
(கட்டளைக் கலித்துறை)
யானிந்த வாறுது திக்கின்ற பாடற் கிரங்குகில்லா
யேனிந்த ஞாலத்தி லந்நாள்சில் லோர்கவி யேற்றுக்கொண்டாய்
வானிந் தவிர்முகத் தென்றாய் கருணையு மாறியதோ
கூனிந் தணிசடை யாய்புக லூர்வளர் கொற்றவனே.
(22)
(கலி விருத்தம்)
கொற்றவர்கள் பற்பலருங் கொலைஞர்களா கியநாளிந்
நற்றறையி லுடலெடுத்து நான்வருந்த விடலேனோ
புற்றலையா யிகல்கொன்ற புகழ்முனிவற் கெளியானே
செற்றமலி விடையூர்வாய் திருப்புகலூ ரிருப்போனே.
(23)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
இருப்பு நெஞ்சமு ளேனெண் னவீணினி
லிசைத்த
வன்றிரு வாசக நூலினை
விருப்பு டன்கையி னாவரை நீயவன்
மிகக்க
ரைந்தழு நீரறி யாய்கொல்வ
னெருப்பி னுங்கொடி தாமன தேனெனு
நிசத்தை
விண்டன னேனெனை யாள்கிலை
பொருப்பெ னுஞ்சிலை யாதி மயேசுர
புகழ்ப்பெ
ருங்கட னேர்புக லூரனே.
(24)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
புகலிக் கிறைவன் போற்றிய பதிக
நிகரில யென்றே நிகழ்த்துவர் நிலத்தோ
ராயினு மவற்றூ டம்மைப்பால் குடித்த
வாயினை யென்போர் மடந்தை யாகச்
செய்த செயலைத் திரும்பாக் கதியாங்
கெய்தினர்க் கெல்லா மீந்த வாறறைப்
பழிச்சுமாண் பின்றெனப் பகர்க்கைக் கஞ்சேன்
மொழித்தொடை யனைத்து முண்டக மலர்த்தாட்
கணிந்து வேண்டுவ வனைத்துமீந் தருள்வாய்
பணிந்தவர் வினைகள்
பாறப் பார்த்துத்
தென்றிருப் புகலூர்ச் செழும்பொற் கோயிலில்
வென்றிவெள் ளிடைக்கொடி விளக்கும் வேதியனே.
(25)
(நேரிசை வெண்பா)
வேதியரிற் பற்பலர்போய் மென்றகையான் கன்றருந்துந்
தீதினரைப் போற்றுமிந்தத் தீநாளின் – மேதினிப்பாற்
றோன்றவென்ன பாவந் துணிந்துமுன்னாட் செந்தேனோ
வான்றபுக லூரா வறை.
(26)
(கட்டளைக் கலித்துறை)
அறைகழற் றாளெடுத் தாடும் பிரானுக் கணிப்புகலூ
ரிறைவனுக் குத்தொண்டு செய்யகில் லீரி ருளென்னவிரு
பிறையெயிற் றந்தகன் கைவலை வீசிப் பிடிக்கவந்தாற்
பறையடிக் குஞ்சிந்தை யாலெண்ணு மாறொ ருபற்றுமின்றே.
(27)
(கலி விருத்தம்)
இன்றைக்கே விடைப்பரியி லென்னெதிர வந்தெல்லோரு
நன்றைத்தோய் தருமாறு நடத்திடற்கும் வல்லையன்றோ
கொன்றைத்தார்ச் சடையானே குமரிவள ரிடப்பாகா
வென்றைச்சா டியவீரா வெழிற்புகலூ ரெம்மானே.
(28)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
எம்மைநீ யடிமை கொண்டதுபொ யாமலே
யின்னல்
வாரிவடி யும்படிக லாபிநே
ரம்மை யோடுவிடை யின்கண்வர வேணுமா
லன்ன வூணில்விர
தஞ்செயலி நாள்கொலோ
மும்மை மாமதிளெ ரிந்தநகை வாயனே
முன்னு
வார்வினைக ளைந்தபுக லூரிலோர்
செம்மை யாளன்வனை யும்பதிக மோதுமா
செய்ம்ம
னோரதம தன்றியிலை நாடினே.
(29)
(நிலைமண்டி ஆசிரியப்பா)
நாடி நாடி நலமிக விழைந்து
பாடிப் பாடிப் பரதவிக் கின்றே
னின்ன தருணெறி நினைவினி லடங்கா
தின்னலுஞ் சுகமு மிடையிடை விளைத்த
தவற்றிற் றுயரே யதிக மாதலிற்
றுவக்கிய தவமுந் தோமற முடியாத்
தேடணை மூன்று மிகலின வன்றிப்
பாடலு மொருபாற் பணைத்தெழு கின்றன
நரைவரக் கண்டு நடுங்கிய தன்றித்
திரையினை யெண்ணித் திடுக்கமிக் குற்றேன்
பல்லுயிர்த் திரளும் படைத்தநீ யெனது
நல்லுரைக் கிரங்கா ஞான மென்னோ
வெவ்விதத் தேனு மினிப்பிறப் பெய்தாச்
செவ்விய பதத்திற் சேர்ப்பதுன் பரங்காண்
முக்கனிச் சாறு முறைமுறை பாயத்
தக்க தண்பனைத் தடந்தா மரையிற்
சங்குமிழ் மணியைத் தஞ்சினை யென்னப்
பொங்குபே ரன்பாற் பொன்னஞ் சிறையா
லோதிமம் புரத்த லோவாப் புகலூர்
நீதிவேந் தென்ன நிலவுசங் கரனே.
(30)
(நேரிசை வெண்பா)
சங்கணிந்த கைம்மடவார் தந்நிறையெல் லாந்தணந்து
பங்கமுற வென்றோ பவனிவந்தான் – செங்கண்
ணரிபூட்கை வல்லியதோ லார்த்தபுக லூரான்
விரிப்பூட்டுந் தார்விடையின் மேல்.
(31)
(கட்டளைக் கலித்துறை)
மேலாய தாய்சொற் கடங்குகில்லாண் முற்றும்வெட் கம்விட்டாள்
பாலார்ந்த வன்னமுங் கைத்ததென் றாளென்ன பாவமந்தோ
சேலார் விழிச்சிவை பங்காளர் தம்மைத் திருப்புகலூர்க்
கோலா கலத்தெரு வீதியிற் கண்ட கொடையிடையே.
(32)
(கலி விருத்தம்)
கொடியமதன் விடுங்கணையிற் குலைவுறுமக் கோதைக்காக்
கடிகமழும் பசுங்கொன்றைக் கண்ணியரு ளிடல்வேண்டு
முடிமதியச் சூடொழிய முறைப்படிசே ரவும்வேண்டும்
பொடியணியு மேனியராப் புகலூர்வாழ் புண்ணியரே.
(33)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
புண்ணி யந்தெரியு மாட ராமவர்
பொய்மை
யின்றியமி னார்மய லாய்மிக
நண்ணி வந்தணைகு வாயென வோதினு
நன்னர்
நெஞ்சமில ராயிகழ் வார்கள்கொல்
பண்ணி யைந்தமொழி மோகினி மாதெதிர்
பன்னி
யின்றியவர் போல்விழ லோரதிரொர்
கண்ணி லங்கியுடை யீர்புக லூரிடை
கண்ணி
யங்கொடுகு லாவிய நாதரே.
(34)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாதங் கடந்து நான்மறை மிசைவாழ்
பாதங் குலவும் பழம்புக லூரான்
போற்றுநர்க் கெல்லாம் பொற்பெருஞ் செங்கன்
மாற்றுரைக் கரிதா வழங்குகின் றானென்
றெண்ணி யென்னை யிகமலி வகுளைக்
கண்ணி யன்கைக் கணைக்கிலங் காக்கிச்
சென்ற கேள்வர் திரும்பிடி னன்றிக்
குன்ற நேர்முலைக் குறும்படங் காவே.
(35)
(நேரிசை வெண்பா)
அடங்காட்டு வார்புரங்க ளட்டார் புகலூ
ரிடங்காட்டு மான்போர்வார் யார்க்கும் – விடங்காட்டுங்
கண்படைத்த நான்முகன்கை காலன் களிகூரு
நண்பதென வெண்ணுகின்றே னான்.
(36)
(கட்டளைக் கலித்துறை)
நானந்த மங்கையைக் கண்டிந்த மட்டு நடந்துவந்தேன்
றேனந்தண் கொன்றைச் சடைப்புக லூரர் திருவருளாற்
றானந்த வர்சென்று பார்த்தாலென் மாற்றஞ் சரதமதா
மூனந்த வேற்படைச் செவ்வேளொப் பாயென் னுயிர்நண்பனே.
(37)
(கலி விருத்தம்)
நண்ணார்தம் புரமூன்று நாமசமுற நக்கபிரான்
கண்ணான்முன் மதவேளைக் காய்ந்தவன்றென் புகலூரில்
விண்ணாணச் சொன்மடவார் விழிவேல்பட் டுளநெஞ்சார்
தண்ணார்மென் முலையழுந்தத் தழுவினன்றிப் பிழையாரே.
(38)
(பத்துசீர் ஆசிரிய விருத்தம்)
பிழையி தென்று நினையே லெனது தோழனே
பிரமை
தந்த மடவாள் விழிமு னேர்கிலாள்
கழைம தன்க ரியநீ லமெறி யாமுனே
கலவி யின்ப
மயில்சீர் கருதி லாதிநாள்
பழைய தொண்டன் விடுதூ தர்புக லூரினீள்
பனையி
லொன்று மடலே துணைய லாதுவே
றுழையி லொன்று மிலைநீ யறியி லோதுவா
யொளிபெ
ருங்கு றளெனூ லுமிது கூறுமே.
(39)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கூறொரு மடவாள் கொள்ள நல்கி
யாறொளிர் சடைமீ தணியு மம்மான்
றென்புக லூரிற் றினமெழுந் தருளி
யன்புடை யவர்வேட் டவைமுழு தளிக்கை
கேட்டிலை கொல்லோ கிளிமொழிப் பாவை
மாட்டிவ ரிருகான் மலரடி நோவச்
சென்றவண் டிருத்தச் செலுத்திய புலவன்
றன்றமிழ்ப் பதிகந் தனையுணர்ந் திலையோ
பக்கனின் றரையன் பஃறர முறுக்க
வொக்கலு முறவு மொருங்குநெட் டுயிர்ப்ப
நற்றவ முனிவோர் நக்குமிக் கிகழ
மற்ற மானிடர் மறுகெலாங் குழுமப்
பனைமட லூர்தற் பகர்ந்தனை யிதுநல்
வினையெனப் பகரேன் வெண்ணீ றணிந்து
கண்டிகை பூண்டு கமழ்மல ரிலைநனி
கொண்டினை தவர்தாள் குறிக்கொடு வணங்கிற்
பொறிமகள் கலைமகள் புலோமிசை யாதிய
கிறிபடாப் பருவங் கிளர்சிலர்க் கருதினுங்
நல்குவ ரன்றே நான்மறைத் திரளும்
பல்குர வோரும் பகர்வதிப் பரிசே.
(40)
(நேரிசை வெண்பா)
பரிசை நரியினைச்செய் பான்மைநச்சி லேன்காண்
கிரியை வளைத்திடவுங் கேளேன் – பெரிய
புகலூர்ப் பெருமானே பொன்விருப்பா லென்னை
நகலூர்செய் யாமைநட்டே னான்.
(41)
(கட்டளைக் கலித்துறை)
நானிலத் திற்றினந் தென்புக லூரன்ன நற்றலந்தோ
றானியின் மெய்யடி யாருடன் போற்று மவரளித்த
பானிறக் கள்வன் முடிப்பான்கொ லோவன்றிப் பாழும்பிணமா
மேனிவிட்டே கிப்பிறக்கச் செய்வான் கொல்சொல் வெண்திருவே.
(42)
(கலி விருத்தம்)
வெண்டிருநீ றணியாதார் விரும்புமொரு குரவனையும்
பண்டிழுத்துப் பணிகொடு பருகியருள் புகலூரா
வண்டினரு முழுநீற்றோ ராவதுசெய் வேன்றுயரங்
கண்டிருக்கத் தகுங்கொல்லோ கருணையினுக் கழகன்றே.
(43)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
அழகிய மங்கையர் கொங்கையின் மாலா
லடிமை
படுந்துயர் கண்டிலை யோவேன்
மழகளி றென்றொளிர் கந்தனை நேர்சீர்
வரவரு
ளென்றுது ணிந்துசொ றீயேன்
விழலென வம்புப டும்படி பாரேன்
விதுவணி
யுஞ்சடை யும்பலர் சேர்நீர்
பழமைய தன்றுகொ றென்புக லூரா
பரவெளி
யெங்கும் நிறைந்தொளிர் வானே.
(44)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வானிலிந் திரனா வதிதரும் மாண்பும்
பானிறத் தினள்மென் பணைமுலைப் புணர்ப்புஞ்
செந்தா மரையாள் சேர்க்கையும் பிறவுங்
கந்தா நெடுநாட் கனவென லறிந்தே
னெவ்வுல கமுநின் னிடமெனத் தெளிந்தே
னிவ்வுல கத்தே யெய்துமிவ் வுடலோ
டெப்பயன் களுந்துய்த் தினிப்பிறப் பெய்தா
மெய்ப்பர வெளியில் விரவுமா றருளாய்
தொண்டர்தந் நிமித்தந் துகளிலோ ருருக்கொண்
டண்டர்சூழ் புகலூ ரமர்ந்தவா ரமுதே.
(45)
(நேரிசை வெண்பா)
ஆரமுதே கண்ணே யரசேயென் றேத்துமன்பர்
சீரனந்தங் கேட்டுந் திருந்தாமற் – போனெந்தை
யன்னமனம் நாணுகில்லேற் கியாதுபய னீவாயோ
வன்னவயற் றென்புகலூ ரா.
(46)
(கட்டளைக் கலித்துறை)
ஊரா ரிகழவுறவோர் வருந்த வுழலு மென்னைப்
பாரா திருக்கத் தகுமோவந் நாள்பல பத்தருக்குந்
தாராள மாகக் கருணைசெய் தாயெனைத் தள்ளிவிடேல்
பாராய தேருகந் தாய்புக லூரிற் பரம்பரனே.
(47)
(கலி விருத்தம்)
பரவுபெரு வாக்களித்தாய் பலநூலின் முடிவாய்
வுரமிதெனத் தெளிவித்தா யுவகையின்றி யுழல்கின்றே
னிரவொழியக் கடல்போலு மிகலொழிய வென்றருள்வா
யரவணிசெஞ் சடைக்குன்றே யணிப்புகலூ ரகலானே.
(48)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
அகளமென் றநிலை யறிகில னொருவா
றறியினுங்
கருதும் வலியில னதனா
லிகலுறுந் தவள விடைமிசை யுமையா
ளிடமிலங்
கநடு வெனதுயி ருயிர்நேர்
குகனிருந் திடநன் னவினில் விழிநேர்
குலவிநெஞ்
சில்விழை வனமுழு தருள்வாய்
சகலமந் திரமும் வழிபடு புகலூர்
தனிலிலிங்
கவடி வொடுதிகழ் சிவமே.
(49)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சிவன்றிரு வுருவே சிந்தைசெய் மனமு
மவன்புகழ் வினவற் கயராச் செவியும்
நிகரின்மெய் யடியார் நெட்டிதழ் மலர்த்தாண்
முகர்வதே நாளு முயலுநன் மூக்கும்
பைந்தமிழ் நால்வர் பழிச்சிய புகலூர்
செந்தகை யாதிய சேவைசெய் கண்ணும்
போற்றும் மாண்பே பொலிதரு நாவும்
நீற்று மலைபோ னிலவுநல்
லுடலும்
விருப்பொடூ னயில்வார் வீறடு பகையுங்
கருப்பையிற் புகுதாக் கதியி னாசையு
மிடம்படு ஞாலத் தெய்தா வெரிதீப்
புடம்புகா வடியாப் பொடியாப் பொன்னே.
(50)
நூற்பயன்
(கலி விருத்தம்)
செஞ்சரத்தி னக்கோவை தேவரொல்க வாய்திறந்த
வஞ்சரத்தி னக்கோவை வாசியினார் வான்புகலூர்த்
தஞ்சரத்தி னக்கோவைச் சாற்றுநனோ டீன்றகண்ணார்
பஞ்சரத்தி னக்கோவை பத்திதருஞ் சத்தியமே.
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக