வியாழன், 24 செப்டம்பர், 2026

நடேசனைப் பாழினிற் கொல்லாதே பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

நடேசனைப் பாழினிற் கொல்லாதே பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

காழிதயந் தோய்ந்துபசுக் காப்பு விரும்பெனையும்

பாழினிற்கொல் லாதே பரமேயென் – றாழியைமுன்

னுண்டுவிட்டோன் றண்டமிழா லோதுமெனக் குற்றதுணை

தொண்டுவிட்டி டார்தாட் டுகள்.

 

(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பெருமுக்கன் மலையருகி லொருதவசி தில்லைப் 

பிஞ்ஞகன்கை யாலெழுதப் பெற்றதமிழ் வேதத்

தருமைக்கோ ராணையிட்டு மண்ணிடைபுக் குள்ளா

            னவனெழுந்து வரினலதுன் னருள்வலிமெய் யாமோ

தருமத்துஞ் சத்தியத்தும் விருப்பமுற்று மில்லாத்

            தன்மைபோற் பலகொடுமை சகத்தினிற்செய் பரமே

பருமத்தா லடித்தார்க்கு மின்பமருள் வான்போற்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(1)

செங்கனக மன்றிடத்தி லழுதழுது கெஞ்சித்

            தெருத்தோறு மிரந்தருந்திச் செழுந்தமிழ்ப்பா சுரங்க

ளங்கடியே னாயிரஞ்சொல் லிடற்கொருகா ரணமா

            மருந்தவன்மாய்ந் தானவிர்ந்தால லதுனருட் கழகோ

சங்கரனா தியகடவு ளார்பலரு மாகித்

            தட்டாத முழுவெளியாத் தயங்குபரம் பொருளே

பைங்கன்றோ டீனர்வதைத் தருந்திடல்கண் டிரங்கிப்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(2)

கடல்சூழு முலகினிற்பற் பலகொடுமை விளைக்குங்

            கலிபுருடற் கஞ்சாத காரணங்கள் கருதும்

வடலூரா னிருட்டறையிற் புகுந்துமறைந் திட்டான்

            வந்தாலே நின்னருட்சீர் வயங்குமெனல் வம்போ

வடல்வேழ முதற்கொடு சிற்றெறும்பீறா முயிர்க

            ளத்தனையுந்தம் முருவமாக் கொளுஞ்சிற் பரமே

படல்சாத்து முல்லைநிலக் கொட்டிலிடை பெருகும்

            பசுக்காப்பு விரும்மெனையும் பாழினிற்கொல் லாதே.

(3)

குருபரதா சனைப்பொருவில் சரவணதா சனைநங்

            குணமறிந்து பணிபுரிந்த குழந்தைநடே சனைநேர்

திருவருட்பே ராசையினோ ரனைவர்களுந் தங்கள்

            சீருருவோ டெழினலதுன் செயற்கொருமாண் புளதோ

வருவருத்த புன்சமயத் தாசிரியர் சிலரு

            மதிசயமா யிரம்புரிய வருள்கொடுத்த பரமே

பருவமழைப் புனலொடுபைம் புல்லருந்தி வாழும்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(4)

வாயுமக னாமநுமன் போலொருவ னிந்த

            மகிதலத்தி னிடைதோன்றி வல்லரக்கர் முதலோர்

தீயுள்விழும் பூளையென வெரிந்தழியத் தாக்கிச்

            சீரியர்கெல் லாமுவகை செயச்செயனின் கடன்காண்

காயுமொளிப் பரிதி மதியாதிய கோளினமாக்

            கணிதநூலி னர்பகர்க்க வின்றருதற் பரமே

பாயுமடற் புலிமுதலாம் பகைமுழுது நீக்கும்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(5)

காழிநகர்ச் சம்பந்தப் பிள்ளைமுத னால்வர்

            களுமுடலொன் றினிற்புகுந்த கணக்கெனவோர் பெரியோ

னாழியுல கினிற்றோன்றி யருட்பெருங்கூத் தனந்த

            மாற்றிடினல் லாலுனையிங் காரறிவா ரையாய்

வீழியிதழ்க் கவுரியொடுங் கந்தனொடும் வெள்ளை

            விடைப்பரியிற் சிலர்மனத்துள் விளங்கியமெய்ப் பரமே

பாழிமதக் களிறனையார் பலர்பகைமேற் கொண்டு

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(6)

கஞ்சமலர்ப் பிரமனது மறைநான்குங் கூறுங்

            கவின்சமய மோராறுங் காத்தருளி யப்பா

லஞ்சநடைப் பாரதியைச் செயித்தழைத்து வந்தோ

            னனையனொரு வனைவிளக்கற் காந்ததியீ தறிவாய்

நெஞ்சறிய வாயிரத்தெட் டிதழ்க்கமல பீட

            நீத்துநிரு வாணியென நேர்வருசிற் பரமே

பஞ்சமலிந் தருக்கனொளி மழுங்கியவிந் நாளிற்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(7)

சிர்மலிதென் குருகைநகர்ச் சடகோபன் முதலாத்

            திகழ்பதின்மர் தாமுமொரே திருவுருக்கொண் டாற்போ

னார்மதுரத் தமிழ்மாரி பொழிந்தளவி லடங்கா

            நலம்விளைக்கு மொருவனையிந் நாடானின் கடனாங்

கார்மழைசங் காழியங்கை யொடுதிகழ்ந்தாற் போலக்

            கனவினுமெட் டெழுத்துரைப்பார் காணவரு பரமே

பார்மகள்கோ வெனவலறிப் பெரிதுதள ராமற்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(8)

வெட்டுறுமோ ரிரண்டுமரங் களுந்தழைத்துப் பல்லோர்

            வியப்புறத்தீங் கனிசொரியும் விதம்புரியுந் தமிழ்பாக்

கொட்டுமொரு பாட்டியைப்போ லருள்வாக்குப் பெற்றோர்

            குவலயத்திந் நாள்விளங்கக் கொடுக்கினன்றா மந்தோ

பிட்டுலடை மோதகமா தியவனந்தம் படைத்துப்

            பேணுவார் மனவெளியிற் பெருங்களிறாம் பரமே

பட்டுடுத்துப் பொற்பணிபூண் டுலவுகின்றோர் நகைக்கப்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(9)

புங்கவர்பற் பலர்போற்றப் பொதியைநெடு வரைமேற்

            பொலிதருமா தவமுனிவன் போலுமொரு புனித

னிங்கவிர்ந்து தமிழ்ப்பயிருந் தவப்பயிருங் குன்றா

            வேற்றமுறப் புரிவதனுக் கிதுத்தியாங் கண்டாய்

துங்கமர கதமயின்மேல் வேற்படையொன் றேந்தித்

            துதிக்கின்றோர் மனந்தோறுந் துலங்குறுந்தொல் பரமே

பங்கமில்வே தாகமங்கட் காருயிரே போலும்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(10)

எத்திசையி லுள்ளவெந்தச் சமயத்தோ னாவா

            னெவனேனு மெய்யருட்பே றெய்தியக மகிழ்ந்து

சத்திவடி வேல்வாண்முற் பகர்படைகொண் டேனுந்

            தசையருந்தாத் தகைமனிதர் தமக்கிடச்செய் தருள்வாய்

நித்தியதத் துவமெனும்பே ரகண்டமய மாகி

            நிசமொழிச்சற் குருவாகியு நிகழ்ந்தபரா பரமே

பத்திசித்தி முத்தியெனு மூன்றினுக்குந் துணையாம்

            பசுக்காப்பு விரும்பெனையும் பாழினிற்கொல் லாதே.

(11)

சுத்தநிரா மயமாநிட் களப்பொருளு மாகித்

            தோற்றுபல சகளமுமாத் துலங்குபர மதன்பா

லித்தரையிற் பத்தர்பல ரொவ்வொருவ ராத்த

            மிட்டமநு பவியாம லிறப்பதுகண் டஞ்சி

வித்தகப்பே ராசையெனுங் கடலினிடை நீந்தி

            விளையாடுந் திருப்புகழோன் விளம்புமிந்தப் பதிக

நந்தவல்லா ரெவரேனு மவர்பெருமை யென்னா

            னவிலரிது நாவாணி நன்கறிவா ளன்றே.

(12)

முற்றிற்று.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக