வியாழன், 24 செப்டம்பர், 2026

கருந்திட்டைக்குடி சிவன் பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

கருந்திட்டைக்குடி சிவன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

சீலர் மருவுகருந் திட்டைக் குடிச்சிவனென்

பாலருமைப் பாடல் பகரென்றான் – ஞாலமுற்தற்

காமாறுசற் றின்றருள்செய் வானாகில் வம்பிலே

மாந்துநாட் கழியேனி யான்.

பதிகம்

(கலித்துறை)

உன்னடி யார்சிலர் நாவினின் றெனைத்துதி யோதுகென்றாய்

பொன்னசை யாதிய வேடனை மூன்றையும் போக்கியாள்வாய்

பன்னக மதிபுனல் கொன்றையுஞ் சடைக்கணி பான்மையுள்ளாள்

கன்னலம் பொழின்மலி கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(1)

நாவல னிவனெனப் பால்சொலத் திரிதரு நாயினேனை

யாவனமுற் றியற்றுமெய்ச் சித்தனென் றிருந்தகை யமையவாள்வாய்

தாவறுந் திருவருட் கடலமு தெனத்திகழ் கங்கராதண்

காவலி மியைதரு கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(2)

அருணை யினீயுநின் மனைவியுங் கிழவடி வாகித்தோன்றில்

பொருணலம் பெறுபொடி நல்கிய பயனென்று பொலியச்செய்வாய்

தருணநன் கறிந்தொரு பார்ப்பனச் சேய்க்க ருடம்பிரானே

கருணையங் கடலெனக் கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(3)

பத்திநன் னெறிச்சென் றுன்பங்கயப் பூம்பதம் பரவுவேற்குச்

சித்தியு முத்தியு நல்கினல் லாலருட் சீர்மெய்யாமே

புத்திர சோகமுந் தீரதர் வசிட்டனைப் போற்றியாண்டாய்

கத்திகைக் கவின்பெறு கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(4)

சஞ்சல வாரிதித் திரைகறி னிடைமிகத் தளருநாயேற்

கஞ்சலென் றொருவிசை விடையினிற் சேவைதந் தருளொணாதோ

செஞ்சர ணத்தெழி லன்னமுஞ் சங்கமுந் தேனும்வாழ்பல

கஞ்சமென மலர்வயற் கருத்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(5)

சேவின்ப பசுவினங் கன்றின் மலறிடச் செற்றுத்தின்னும்

பாவிக டாமுநல் லுணவுணச் செயுந்திறல் பாலித்தாள்வாய்

கோவிலெங் கணுமுதற் பூசைகொள் வானறர்க் குலவுசீர்கால்

காவிரி நீருடைக் கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(6)

சுந்தரன் றுதிக்கநாள் சொன்னமு நெல்லுநற் றோகைமாருந்

தந்தனை யான்விழை தருபய னல்கிடிற் றாழ்ச்சியாமோ

வந்தரத் தமரர்தம் மாமொடு யவதற் காலம்வைத்த

கந்தரத் திறையவர் கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(7)

பாரணங் கின்சுமை தீர்க்கவந் தார்களிற் பார்த்தனவேண்டிற்

கூரண வுங்கணை நல்கிய வாடல் சொல்கூலிதந்தா

ணாரண னுடன்வருங் கையைப் பாதியினா ளுஞ்சேர்த்த

காரண னேயெழிற் கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(8)

அரியயன் றொழுந்தகை தோய்வது வோவட லானைச்சென்னிப்

பெரியனைக் குமரனைப் பெறுநல மோபெரும் பீடுகொல்லாய்

திரிபுர முங்கொடுந்  தானவர் கூட்டமுந் தேவர்தெம்புங்

கரிதர நகைத்தவர் கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(9)

நால்வருக் கருளினை நல்வட லூரனை ஞாலமெச்சும்

பால்வழி தருதுதி கொண்டுங்கொன்  றாயிதோர் பாவமன்றோ

மால்வரை போற்றிகழ் முயலகன் மேனியும் வானும்வாய்ந்த

காலவனப் புடையவர் கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதலே.

(10)

அயிலையொப் பாம்விழிப் பார்ப்பதி கேள்வனை யன்பர்போற்றக்

கயிலை யிற்பிறங் கருந்திட்டைக் குடிவளர் கண்ணுதனால்

பயிலருந் திருப்புகழ் பாவலன் பகர்தரு பாடல்கற்போர்

வெயிலவன் றனைநிகர் கீர்த்தியொ டிகபர மேவுவாறே.

(11)

 

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக