வியாழன், 24 செப்டம்பர், 2026

பழனி பன்னிரு பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

பழனி பன்னிரு பதிகம்

காப்பு

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

கழனியுங் குறிஞ்சிக் காடுங் கலந்துறுங் கவினார் சாரற்

பழனிமா மலைச்செவ் வேன்மேற் பன்னிரு பதிகம் பாட

விழனிகர் புன்மைத் தன்மை மையவர் விரும்ப மாட்டாத்

தழனிறத் தொருவெண் கோட்டுத் தந்திமா முகன்காப் பாமே.

 

(1. கண் விழித்தருளே பதிகம்)

(கலித்துறை)

திருமடந்தை மணாள னாதியர் சிந்தை யின்புறவே

பெருமலைப் பழனா புரிப்பதி பேணும் பெட்பினெந்தா

யருமறைத் தனிஞான தத்துவ மடைந்த மேலவரைக்

கரும வாதி கணிந்தியர் தருட்டிண் விழித்தருளே.

(1)

குவலயத் தலையாகும் பழனிக் குன்றி னன்றறிக்கும்

பவளக் குவடு போலநில வும்பன் னிருபுயனே

யவலை நினைத்திட் டுரலை யிடிக்குமாத் திரங்கொளெனைக்

கவலைக் கடலிற் றள்ளிடா தினிக்கண் விழித்தருளே.

(2)

புலியிற்செங் கைநன்னீர் கொண்டன் பொடுபோந்து பூசைசெய்யும்

வலியனா தியரறியப் பழனி மலையில் வாழ்முருகா

குலிசப் பண்ணவ னாதியோர் குதுகூல மெய்திடவே

கலியப் பையலைக் கருவுவா ருயக்கண் விழித்தருளே.

(3)

அமல தத்துவ ஞான நிலையிலைய மெய்தரமே

விமலனுக் கருள்செய்து பழனி வெற்பின் மேயரனே

முமலவர் தனைதீர்ந் துய்வா னுனைமுன் னிடுந்தமியேன்

கமல நான்முகன் கைப்படா வணங்கண் விழித்தருளே.

(4)

வீசிய திரைக்கங் கைப்பொன் னகர்புத ரமர்திருந்தும்

பாசியணியுங் குறத்தி தோள்புணர் பழனிப் பண்ணவனே

யாசிவிருப்பி னீசர் புன்குடை யதனுட் பட்டுழலுங்

காசினித் துயர்முழு துந்தீர்த் தரக்கண் விழித்தருளே.

(5)

செங்கைகுவித் துப்பழனி வெற்பினைத் தினமும் போற்றுமெனக்

கங்கைவெண் பொடிவழி மெய்த்தொண்ட ரொடாடு மாசைதந்தாய்

மங்கைமார் களுநிந்திக் கின்றதின் மாழகல் போய்மகிழ்வான்

கங்கை வந்துகற் கிணற்றிற் றோன்றிடக்கண் விழித்தருளே.

(6)

மாது மைக்கொடு மைந்தனா மெனவந்து தென்பழனிக்

கோது தீர்மலைக் குவட்டின் மேவியகோ மளக்குகனே

தீது முற்றினு மேலதா மெனத்தெளிந் துளாரிகழுங்

காது புன்றொழில் வேருடன் கெடக்கண் விழித்தருளே.

(7)

அலகில் சீர்ப்பழ னாபுரிக் கிரியாட லோவரமே

யிலகுகாழி யிற்பனவ னாகியன் றிகமுய் யப்புரந்தாய்

பலகதைத் திறங்கூறி யின்புறும் பிரம தக்குறும்போர்

கலக முற்றுமின் னேயறும் படிகண் விழித்தருளே.

(8)

சூர னாதிய தகுவரைச் செறுந்துங்க வேற்படையோ

டீரமிக்கவர் போற்றப் பழனி யிடத்தில் வாழிறைவர்

நாரதாதிய ரறியக் கனவி னனவிற் சொற்றுளவாங்

காரணங்க ளெல்லாம் பலிப்பு றக்கண் விழித்தருளே.

(9)

பூவகத் தயன்மாயன் மால்விடைப் புனித னாமெனவாழ்

மூவரும் புகழ்பழனி வெற்புறை முருகப் புத்தேளே

சீவகொலை யும்புலையுந் தீர்தரச் செய்வ தேகருதுங்

காவலர்க் கதிசய முண்டா கிடக்கண் விழித்தருளே.

(10)

அருணைப்பைங் கிளியெனவென் றன்னைநன் கறைந்துமா ரவநல்குந்

தருணமோ ரகிலன் போலப் பழனித்தடங் குவட்டுறைவாய்

பொருண்மயக் கறப்போக்கி யானந்த போத வாழ்வளிக்குங்

கருணைத் தேசிக னாகிமுன் னின்றுகண் விழித்தருளே.

(11)

முற்றிற்று.

 

(2. சித்திமிகச் செய்தருளே பதிகம்)

வாசன னாதிய ராய வானவரெல் லாம்பரவப்

பேசருஞ் சீர்ப்பழனி மலைப்பெருங் கோயில் மரவானே

நீசர் கருங்குடை மாற்றிநெடு நாளைத் துயரருந்துந்

தேச முற்றுங் களிகூரச் சித்திமிகச் செய்தருளே.

(1)

அருளுடைய மெய்யடி யார்க்கா னந்த மீந்தருளிப்

பொருளுதவுந் தென்பழனிப் பொருப்பி னில்வாழ் புண்ணியனே

யிருளுதூற் புண்னெறி யோரிறு மாப்பெல் லாமொழித்துத்

தெருளு நான்மறை யோங்கச் சித்திமிகச் செய்தருளே.

(2)

கவந்த நடம்பயில் வெம்போர்க் களந்தொறுங் கவின்றபுக

ழுவந்துப் பழனாபுரி வெற்புற் றொளிரெம் முடையானே

நவந்தரு பேதமுந் தானாய் நண்ண லார்புரநிறச்

சிவந்த பிரான்களி கூரச் சித்திமிகச் செய்தருளே.

(3)

ஆத வனுஞ்சந் திரனு மக்கி னியுமாய்விழி

நாத னருண்மக வாகிநளிர் பழனிக் கிரியாள்வாய்

பூதலமு மீதலுமும் போற்றி சைக்கும் புகழ்வாய்ந்த

சீதரன் கண்டளி கூருஞ் சித்தமிகச் செய்தருளே.

(4)

அங்கணி லத்தினரி யாருமறிய வருமெய் யருணாடிய

பங்க முறுமெனை வேட்ட பழனிமலைக் குமரேசா

புங்க வருமா னிடரும் புண்படச்செய் வார்க்கறுவிச்

செங்க மலத்தான் வியக்குஞ் சித்திமிகச் செய்தருளே.

(5)

கருவேழ மலிசா ரற்கவின் பழனி மலைமேவி

யொருவேளை பணிவார்க் குமுவப் புதவு முரவோனே

பெருவேலை யுடைப்பா ரிற்பே ராண்மைத் தவமுஞற்றுந்

திருவேடத் தொண்டர் மகிழ சித்திமிகச் செய்தருளே.

(6)

கார்முத லியவாஞ் சைக்கடற் சுழிப்பட் டயரார்தம்

மீர்மளந் தருட்பே றீந்தெழிற் பழனி கிரியாள்வாய்

பாரணங் குமன்நொந் துபதைப தைக்குந் துயர்மாறிச்

சீரனந் தம்பெற் றகான சித்திமிகச் செய்தருளே.

(7)

அன்பர் களிற்சீ காழியந் தணன்போ லவர்ரறியத்

தென்பழனி மாமலை மேற்றிருக் கைவே லொடுநின்றாய்

மன்பதையி னாணா மன்மரை யாதி யவற்றூனுந்

தின்பவ ரெல்லா மழியச் சித்திமிகச் செய்தருளே.

(8)

சூராதி யவர்ச்செகுத் தசுடர் நெடுவேற் படையேந்தி

வீராதி வீரர் தொழவியன் பழனிக் கிரிமேயா

யாராதித் துள்ள மெலிந்தல மருமிச் சிறியேன்பாற்

சீரா டிக்கொள வேண்டாஞ் சித்திமிகச் செய்தருளே.

(9)

நாவகத் தெல்லா நடிக்கு நங்கைமண வாளன்முதன்

மூவர் களும்புகழ் பழனிமுரு கோனா முனியோனே

பூவகத்து வான கத்துப் புயங்கபா தலத்தகத்துச்

சீவர்க ளெல்லா மகிழுஞ் சித்திமிகச் செய்தருளே.

(10)

பாசாங்கு காரி கையாள் பலர்ம யங்குமடியார்

மாசானர்ப் பழனி மலைக்கர சாகு மயில்வேளே

யீசான மீறாய் வெண்டிசைப் பால னருமெண்ணெண்

டேசா திபரு மறியச் சித்திமிகச் செய்தருளே.

(11)

முற்றிற்று.

ஆகப் பதிகம் 2க்குக் கவி 22.

 

(என்னைக் கைக்கொண்டருள்வாய் பதிகம்)

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

ஒன்றும் போதா நாயே னென்றன்

            றொருபொய் சொன்ன முனிவோனுக்

கன்றுன் றாதை பிறவா வீடீந்

            தருள்செய் துள்ளா னன்றேயோ

கன்றும் பசுவுங் களிகூர் சாரற்

            கவினார் பழனிக் கிரிவேலா

வென்று நீயே தஞ்ச மென்று

            மென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(1)

வள்ளிக் கொடிதன் முலையொப் பதுநின்

            மதுரக் கவியென் றுரைசெய்தும்

வெள்ளிக் கினியார் களிகண் டடியேன்

            மெலியச் செய்தாய் முறையேயோ

புள்ளித் தோகைப் பரிமீ தேறும்

            புனிதர் பழனிப் புலவோனே

யெய்ளித் தள்ளா தின்னே முன்னின்

            றென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(2)

ஞானப் பழனிக் கிரிமீ துனையே

            நாடித் துதிசெய் திருநாயேன்

மீனக் கொடிபோ னவரிவிற் கணையான்

            மெலியச் செயலும் விதிதானோ

வானத் தலைவர்க் கிடையூ றெய்தா

            வண்ணங் காக்கும் வடிவேலா

வீனத் தொழிலோர்க் கெமனா மாறிங்

            கென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(3)

பொன்னங் குவடு கயிலைக் கிரியும்

            புரையும் பழனிச் சிலைமீதே

தன்னந் தனியோர் தடியுங் கொடுவாழ்

            சகுணத் தலைமைக் குகவேளே

முன்னங் கிளியாய் நின்கைத் தலைவாழ்

            முறையோ தியுநான் முயல்கின்றே

னின்னம் பிறவிக் கடலிற் றள்ளா

            தென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(4)

ஆலக் கனலுண் டருளும் பெருமா

            னழலார் விழியிற் சிசுவாகிச்

சீலக் கருணைத் தவர்சூழ் பழனித்

            திருமா மலைவாழ் செவ்வேளே

காலக் கொடிதுங் கருமத் தொடர்புங்

            கழியக் கருதிக் கவல்கின்றே

னேலக் குழலார் வலையிற் பிணியா

            தென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(5)

கமைகூர் சிந்தைப் புலவோர் பரவுங்

            கவினார் பழனிக் கல்வரைமே

லுமையாற் வடிவாம் வடிவே லொடுநின்

            றோவா வாடலு ஞற்றொருவர்

சமையாச் சாரக் குழியிற் பட்டுத்

            தளரா நொந்துன றாள்வேட்டே

னிமையா தார்கண் டால்கும் படிநீ

            யென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(6)

கயலுங் கனயும் புரையுங் கண்ணார்

            காமக் கவலைக் கடன்மூழ்கிப்

பயமிஞ் சியநெஞ் சுடையார் தேறாப்

            பழனிக் கிரியிற் பண்ணவனே

வயமொன் றியநின் சேவற் கொடியே

            வாழக் கருதி மாழ்குற்றே

னியமன் றூதர் தொடரா வண்ண

            மென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(7)

கொச்சை நகர்வே தியனே ரொருவர்

            கொதிநீ ருலகத் திடைதோன்றப்

பிச்சை முனிவோர் குழுமப் பொல்லார்

            பீடற் றிடவே விழைகின்றேன்

கெச்சை மலிதென் பழனிக் கிரியிற்

            றினம்வாழ் பெருமைச் செவ்வேலா

விச்சை வழியே விளையா டிடநீ

            யென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(8)

சூரப் பெயர்வல் லவுணின் றனைவேல்

            சுடர்வேற் பெருமை நனிநாடி

வீரத் தகையுற் றிடுநா னந்தோ

            வீணே மடிவுற் றிடலாமோ

கீரற் கருள்வாய் பழனா புரிவண்

            கிரியுச் சியினிற் கிளர்வேலா

வீரக் கருணை விழியா னாடி

            யென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(9)

அரனா தியரா மூவரு மாகி

            யாவினன் குடியில் மரவானே

பரநீ யென்றே நன்கு தெளிந்தும்

            பரமார் தம்மிற் பாழ்பட்டேன்

சிரமா றுள்ளா னடியவ னென்னச்

            செப்பியும் வீணே தீயோர்பா

லிரவா தீகைத் தொழில்செயு மாறே

            யென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(10)

இக்குவில் வேளும் பதுமமு ளானோ

டேமனு மஞ்சுந் திறமெண்ணித்

திக்குணர் வண்மைப் பழனி மலைச்சீர்

            சிந்தனை செய்வார்க் கெளியோனே

யக்குடன் வெண்ணீ றணிவது முதலா

            மங்க மனேகங் கொழுவாழு

மெக்குர வருநீ யேயென லறிவே

            னென்னைக் கைக்கொண் டருள்வாயே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 3க்குக் கவி 33.

 

(4. தண்டபாணி மூர்த்தி பதிகம்)

(கலித்துறை)

ஒருவருக்கு மெய்திடா வுலோக வாஞ்சை கோடியுற்

றருவவர் தருக்கு மொஞ்சி யஞ்சி யெஞ்சலாகுமோ

பருவமிக்க தொண்டர் மன்னுப் பழனி யம்பதிக்கணே

சருவ சித்தும் வல்லனான் தாண்ட பாணிமூர்த்தியே.

(1)

சித்தி யால ணுத்துணைச் சிறப்பு மின்றெனும்பொலா

ருத்தி லாத மென்னொ டிங்குரைத் தெரிக்கலாகுமோ

பத்தி ஞான மிக்குளார் பணிந்திறைஞ் சுபழனியிற்

சத்தி வேலூர்த் தணிந்த தண்ட பாணிமூர்த்தியே.

(2)

இகபரங் கடந்த பேறி யைந்தி டக்குறித்தநா

னகமறிந்த சஞ்சலத் தழுங்க லிட்டு ளாயையோ

புகழ்ம லிந்த பழனியிற் புகுந்த தொண்டரின்புறச்

சகச ஞான சித்திநல்கு தண்ட பாணிமூர்த்தியே.

(3)

அகள யோக சித்தியோ டகண்ட போதஞானமுந்

திகழ நாடு மென்னைநீ தியங்க விட்டதென்கொலோ

விகழொ ணாத பழனி வெற்பிடத் தினிற்குமேகனாஞ்

சகள நிட்களங் குலாவு தண்ட பாணிமூர்த்தியே.

(4)

அரதனக் குவட்டொ டொக்கு மாகமோடு தோகைமேற்

கரதலத்து வேல்கொடென் கனாவில் வந்த தில்லையோ

விரதசீல ராவினன் குடிக்கண் மேவில வீறுசால்

சரத பூரணஞ் சொல்கின்ற தண்ட பாணிமூர்த்தியே.

(5)

அஞ்சனக் கண்மாத ராசையா லழுங்கு மென்னைநின்

கஞ்ச நாண்ம லர்ப்பதங் கலந்து கொள்ளினமோ

பஞ்ச மற்றசீர் நிலாவு பழனி யிற்பணிந்துளார்

சஞ்சலந் தவிர்க்க வல்ல தண்ட பாணிமூர்த்தியே.

(6)

வண்ட றாதநீ பமன்ன மதுர வண்டமிழ்ச்சொனார்

கொண்ட பேற னைத்துநீ கொடுத்திடக் கொள்வேன்கொலோ

புண்டரீக வாவி யாவி னன்குடி பொருப்பின்மேற்

சண்ட வேக மயில்கடாவு தண்ட பாணிமூர்த்தியே.

(7)

கண்ப ராவு தோகை யிறகலின் றெனைப்புரத்தியேன்

மண்பெ ணாடகப் பிணக்கம் வந்தெனெஞ் சைவாட்டுமோ

விண்புகழ்ந்த வாவினன் குடிக்க ணின்றும் வெள்ளநீர்ச்

சண்பையிற் புகுந்து மீண்ட தண்ட பாணிமூர்த்தியே.

(8)

சூர சேனை யாவையுந் துணித்த வேலணைத்ததோ

ளீரமெய்து மென்ற னெஞ்சு மிங்ஙனஞ் சலென்கொலோ

கோர மோவு மாவினன் குடிக்கு கரகொழுந்தமிழ்ச்

சார நாவலோர் பராவு தண்ட பாணிமூர்த்தியே.

(9)

சித்தை நாடி நெஞ்சகந் தியங்கு கின்றவென்சிரத்

தத்தை வீடு ழந்த பாதமன்று வைத்ததையமோ

வித்தை வாணி கொண்கன் மால்விடைப் பிரான்வியக்குமோர்

தத்தை விண்ட பாடல் கொண்டதண்ட பாணிமூர்த்தியே.

(10)

மற்க டக்குணம் பொருந்து மவன்ம னத்துவஞ்சனா

மெற்கு நியுரைத் தவற்றுளி யாது மெய்ம்மையில்லையோ

தெற்க னஞ்சு பழனியிற் றினஞ்சிவன் பராவுசீர்ச்

சற்கு ருத்துவம் புனைந்த தண்ட பாணிமூர்த்தியே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 4க்குக் கவி 44.

 

(5. பழனித் தெய்வம் பதிகம்)

(கலி விருத்தம்)

சுத்ததத் துவத்தினர் தொழும்பு வேண்டுமேற்

சித்தர்தங் குழுவினிற் சேரச் செய்யையோ

முத்தமிழ்த் தீங்கவி மொழியு மொய்ம்புடைப்

பத்தர்பற் பலர்வரும் பழனித் தெய்வமே.

(1)

அந்தரர் வாழ்வையும் சுத்த மென்றெணுஞ்

செந்தகை யளித்தெனைத் திருத்தியாட் கொள்வாய்

மந்தமா ருதப்பெரு வரையில் வந்தவிர்

பைந்தமிழ்ச் சீர்குலாம் பழனித் தெய்வமே.

(2)

கெருவநோய் மலிதலிற் கீழ்மை யெய்தனைச்

சருவதந் திரத்தினர் தம்மிற் சேர்ப்பையோ

வருவ வாதிகளும் வந்தானற் தொண்டுசெய்

பருவத மொன்றுடைப் பழனித் தெய்வமே.

(3)

வெங்கயத் துடனொரு வெற்புஞ் செற்றுமீள

செங்கைவேற் படைப்பணி செயுமெற் சீற்றிடேல்

கொங்கை மங்கையர் குழாங்கூடி யாடுசீர்ப்

பங்கய வாவிசூழ் பழனித் தெய்வமே.

(4)

கன்னியர் மயற்பெருங் கடலை நீந்திநின்

றன்னிருப் பங்கயச் சரணஞ் சார்வனோ

வன்னிய முடனந நியமு மாநிகழ்

பன்னிரு வரும்பணி பழனித் தெய்வமே.

(5)

குணிலெனக் கன்றெறி கொண்டல் விண்ணனோ

திணிபெறக் கருதெனைத் தியக்க லாகுமோ

கணிமர மெனக்கருங் கானி னின்றவர்

யணிலமூர் புணல்வயற் பழனித் தெய்வமே.

(6)

மாரத ரனைவரும் வணங்கிப் போற்றிடப்

பூரத னோதிறம் பொருத்தியாட் கொள்வாய்

வாரதி வாகரன் மானு மேனியாய்

பாரதி வரிபடும் பழனித் தெய்வமே.

(7)

காழியூர்க் கவுணியக் காளை யன்னார்

லாழியூர்த் தீயர்முற் றழிய வேண்டுமால்

வீழிவாய்க் குறமகள் வேட்கை வேலையாய்

பாழிமால் களிறுலாம் பழனித் தெய்வமே.

(8)

மாவறச் செகுத்தநின் வலிமை நாடுமென்

னாவலா யிரமு நன்கருள் வேண்டுமால்

காவடர் மதுரையூர்க் கழகத் துற்றதோர்

பாவலன் பழிச்சிய பழனித் தெய்வமே.

(9)

புரமெரித் தான்முதற் புலவர் மூவர்கொள்

வரமெனக் கீயினின் மகிமை குன்றுமோ

கரமதிற் றண்டொடு கதிர்ச்செவ் வேல்கொளும்

மரமசற் குருத்துவப் பழனித் தெய்வமே.

(10)

அற்பதே வதைகளை யநுட்டிப் பார்களு

மெற்பழித் தெதிர்க்குமா றென்செய் கின்றையோ

சிற்பரை பால கர்திரு வுருக்கொளும்

பற்பல குருவுமாம் பழனித் தெய்வமே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 5க்குக் கவி 55.

 

 

(6. பழனி மாலைக் குருபரன் பதிகம்)

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

வன்னிரு தரினுங் கொடியவர் தாமே

            மாநில முழுமை யும்வளைந்து

துன்னிருங் கலியற் குவகை நல்கிடுந்

            தீதுலையுந் நாளெந்த நாள்சொல்லா

யென்னிரு கண்ணே கண்ணினுண் மணியே

            யிருக்கி னுச்சியிற் றளிப்பொருளே

பன்னிரு புயத்தோ ருருவமு மெடுப்பாய்

            பழனி மாலைக் குருபரனே.

(1)

கழையின் மென்முளைபோற் கவின்றரு தோளார்

            கலவியிற் பட்டு ளங்கலங்கி

விழைவின் முழுதுந் தருந்திரு வருட்சீர்

            வேட்டுமிங் குழல வேன்விட்டாய்

தழையிடு வார்க்குங் கதியளித் தொருவெண்

            டலையிலேற் றருந்து நன்முதலாம்

பழையநாட் பரதேசி கள்குழத் தொருவர்

            பழனி மாமலைக் குருபரனே.

(2)

அலகை கட்பொரு ளாக்கு றித்துயிர்ப்

            பலியிட் டாடுநாக முழுதழித்திவ்

வுலகைநல் லருட்கே யாட்படத் திருத்து

மொருவனைக் காணு மாறுரையா

யிலகையிற் படைக்கை வேட்டுவக் குமரா

            வெழின்மது ராபு ரிச்சங்கப்

பலகையிற் புலவர் பலர்க்கொரு தலைவர்

            பழனி மாமலைக் குருபரனே.

(3)

சந்தமுந் தளையும் பிறழதார்ப் பாட

            றமிழ்கொடு பலபல பகர்ந்து

மிந்தவா தனைதீர்ந் தின்புறத் தடுத்தாண்

            டிலையிதெ னியாரொ டீண்டிசைப்பே

னந்தாங் கத்தன் பணுத்துணை யிலனா

            வலகையாற் பயந்த வனறைந்த

பைந்தமிழ ழாற்றுப் படைபுனை கிழவர்

            பழனி மாமலைக் குருபரனே.

(4)

நீலலோ சனைத்தார் பலர்நடம் பயிலு

            நெடுந்தரு நீழலி னாளுஞ்

சாலலோ சனங்கொண் டுறைபவர்க் கமையா

ததனிப் பெருந்திற லெனக்கருள்வா

யாலலோ சனத்தா ளிடமுற விடைமே

            லம்பரத் தமர ரோடுலவும்

பாலலோ சனத்தார் பயந்தருள் புதல்வர்

            பழனி மாமலைக் குருபரனே.

(5)

அதுவிதென் றிகலும தக்குறும் புடையா

            ரனைவரு மஞ்சு றத்தமியேன்

பொதுநிலைப் பெருஞ்சற் குருத்துவம் புனையப்

            புணர்த்தவும் வல்லை யோவறியேன்

மதுமலை ரிதழித் தொடைப்பிரான் புதல்வர்

            மறைமுதற் பொருள்சொ லாமையினாற்

பதுமநான் முகத்தோ னலறிடப் புடைத்தாய்

            பழனி மாமலைக் குருபரனே.

(6)

இத்தரை மகள்கோ வெனக்க தறிடு

நாளியா தெவணா பினுமெமக்கென

முத்தரி யாமென்பார் தமதுபொய்க் களிப்பு

            முழுமையுங் குலையு நாளென்றோ

புத்தமு தருந்து மால்களிற் றுடனோர்

            போர்த்தகாப் பரியு மூர்ந்துவப்பாய்

பைத்தபரம் பனையிற் றுயின்றமான் மருகா

            பழனி மாமலைக் குருபரனே.

(7)

காழிமா நகரிக் கவுணிய னந்நாள்

            கரிய சாரணர்க் கழுவிட்டாங்

காரிசூ ழுலகத் தொருவ னிந்நாள்

            வந்தயலவர்ச் செகுக்கு மாறருள்வாய்

கோழிகே தனத்தோ மாருதங் கடவக்

            குலவிய குமர நாயகனே

பாழிவெங் களிற்றோ டொருமலை தடிந்தாய்

            பழனி மாமலைக் குருபரனே.

(8)

மாமரத் துருக்கொண் டலைகட னடுவே

            வளர்ந்தசூரச் செகுத்து வானவர்தங்

சாமரூர்க் காப்புமி யைந்தநீ யெம்மேற்

            கருணை யோர்துளி தெறிக்கிலையே

தீமனக் கெடும்புங் கெருவமும் புறவுஞ்

            சிறிது நீங்கவுந் தவஞ்செய்யாப்

பாமரர் தொழினும் பயன்பெறக் கொடுப்பாய்

            பழனி மாமலைக் குருபரனே.

(9)

அகருவாய்ந் திருண்ட குழலியர் மோக

            மாதிய தீமை தோய்ந்ததனா

லிகழ்வொருங் குடையே னெனினுநீ யென்பர்

            லியம்பிய யாவும் வீண்போமோ

சகமமைத் தளித்துத் தொடைபவர் தவத்தாற்

            சரவணத் தடத்து ருச்சமைந்தாய்

பலகவ னடுக்கண் டிறைஞ்சுவார்க் கெளியாள்

            பழனி மாமலைக் குருபரனே.

(10)

அன்னவர் கனத்தோன் மேற்பழி சுமத்தி

            யசுரரிற் சிலர்சொ னூனம்பிப்

பொன்னக ரினர்க்கென் றயங்கொல் வேள்வியினோர்

            புலையறப் போக்கு மாண்பருள்வாய்

தென்னனா டுய்யப் புனலருண் மலயச்

            சிலம்பிறை முதலி னோர்தேறப்

பன்னரும் பெருமைப் பிரவணந் தெரிந்தாய்

            பழனி மாலைக் குருபரனே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 6க்குக் கவி 66.

 

(7. புனித வேலவன் பதிகம்)

(கலித்துறை)

கருணை நீடி யென்கன வினிற்பல விசைகவின்றிட

டருணைப் பைங்கிளி யெனமிகச் சொல்லு மெய்யன்றோ

தருண மங்கைய ராடுசீர் பழனி வான்சயிலப்

பொருண லம்பெறு கோயில்வாழ் புனித வேலவனே.

(1)

உருவ கோடி யுமவற் றினுக்குள் ளினுமூலவர்

வருவ வத்துவு நீயெனத் தெளிந்த பண்பவமோ

திருவி னாற்பெருங் கலவியாற் றவத்தி னாற்செயத்தாற்

பொருவி றென்பழ னாபுரிப் புனித வேலவனே.

(2)

வார ணாசியி லரக்கர் செய்தீங் கறமாய்த்தற்

கார ணாகமத் தவத்தரு ளியாவர் வேட்டவரோ

கார ணாசரு ணாகரர் வெங்க ணுங்கலந்த

பூர ணாதிருப் பழனியிற் புனித வேலவனே.

(3)

சங்கு தூங்கிய செவியுடைச் சிவனுட னறனித்தன்

றங்கு பேசியப் பொருளெனக் களிக்க வொண்ணாதோ

கொங்கு லாங்கடம் பாரமுங் குரவ முங்கொள்வாய்

பொங்கு தீந்தமிழ் பழனியிற் புனித வேலவனே.

(4)

நல்ல வூழுடை யாரென நானு நின்றுதியே

சொல்லல் வேட்டு ளன்றுடித் தலமரும் படிசுழற்றேல்

கல்லல் வாதுடைக் கயவ ராதிய ரெனக்காணும்

புல்லர் நாடரும் பழனியிற் புனித வேலவனே.

(5)

கற்ப முண்டுவிண் வழிசெல் வார்கனத் தொருவருமென

முற்படர் தொளித்து லவுவ தென்னை யோமொழிவாய்

சிற்ப ரர்மலைக் குகைதொறு நாட கஞ்செய்யும்

பொற்ப னேவய லூருடைப் புனித வேலவனே.

(6)

மாங்கனிப் பெருங்கல கமித்த கைத்தென் மதியாத

தீங்கர் போன்றுளே னருட்கடற் றிவலை யொன்றருள்வாய்

கோங்க வர்முலைக் குமரிய ரிருவர் கைவருடும்

பூங்க ழற்குகர் பழனியூர்ப் புனித வேலவனே.

(7)

ஏழிசைத் தமிழ்க்கவி களாலி யாவு முன்னியற்றுங்

காழி யூரனிற் கவின்றலாற் கதிபெ றேன்கண்டா

யாழியா லடலிந் திரன்முடி புவிக்களித்த

பூழியர் புகழப் பழனியூர்ப் புனித வேலவனே.

(8)

பெரிய மாமரம் பிளந்த நின்புகழ் மிகப்பேசு

மரிய பேறுபெற் றிருக்கு நானஞ் சுறத்தகுமோ

கரிமு கத்தினற் கிளையவர் கதிர மதிசராசர்ப்

புரிசை சூழ்பழ னாபுரிப் பழனி வேலவனே.

(9)

அயனமு னர்நிகழ் மூவரும் பரவு நின்னருள்போற்

றியல்வல ரருடனென் னையுஞ் சேர்ப்ப தென்றியம்பாய்

கயல்கு லாம்விழிக் குறமகள் குழலெனக் காணும்

புயலாம் பொழிற்ப ழனியிற் பழனி வேலவனே.

(10)

விதுநி லாஞ்சடைப் பண்ணவன் றில்லை யில்விளம்பு

மதுமெய் யாந்தின மறிகிலேன் விரைந்தினி தறையாய்

மதுர வாசக் குளுத்தூ வச்சுப் பிரமணியாம்

பொதுவ னேவய லூர்மலைப் புனித வேலவனே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 7க்குக் கவி 77.

 

(8. பழனிக் குகன் பதிகம்)

(கலி விருத்தம்)

கொல்லோ மெனவே கடறிக் களிகூர

நல்லோர் புடையே நடுவைத் தருள்வாய்

கல்லோ லமறா தகடற் புரையும்

பல்லோர் புகழ்தென் பழனிக் குகனே.

(1)

ஆணா தியர்மூ வருமா குமுனைக்

காணார் கலகங் கலிழப் புரிவாய்

வேணார் மலிவீ ணையில் வல்லபெரும்

பாணார் வருதென் பழனிக் குகனே.

(2)

இங்கே யடியேன் விழைவிக் கணமே

சங்க தமறத் தருதற் கிசைவாய்

கொங்கோ மலியக் குளிர்நீர் தருசெம்

யுங்கே ருகதென் பழனிக் குகனே.

(3)

அவனா யவளாய் துவர யினைநிற்

குவமா னமுரைக் கும்விதந் தெரியான்

சிவபா லகனே சிறியே முயலவெம்

பவநா சத்தென் பழனிக் குகனே.

(4)

அத்தத் தயிலோ டுனைநா டடிமைக்

கெத்தத் துமுறா நலமென் றருள்வாய்

புத்தற் புதமும் புலிவா கனமும்

பத்தர் கருடென் பழனிக் குகனே.

(5)

நாரா யணணா தியர்நன் குணர்மெய்ப்

பேரா தரமென் றுபெறத் தருவாய்

கூரார் தனிவேல் வலிகூ றுதமிழ்ப்

சீரார் தருதென் பழனிக் குகனே.

(6)

இக்கோன் மலரா னனியெய்த் தவெனக்

சக்கோ னுறுமா ரவமளித் தருள்வாய்

தக்கோ ருணர்சண் முகவர் தசமாந்

திக்கோர் புகழ்தென் பழனிக் குகனே.

(7)

விழியா யிரமே யவன்வீ றடுமோர்

செழியா திபனிற் றிகழ்பே றருள்வாய்

கழியா டல்செய் காழிநகர்ப் பனவர்

பழியார் மகிழ்தென் பழனிக் குகனே.

(8)

மாமர மரமாய் வகிர்ந்த வயிற

கேமா மலரிட் டவெனைக் கழியேல்

காமா ரிதருஞ் சிறுகான் முளையே

தேமா மலிதென் பழனிக் குகனே.

(9)

திரிமூர்த் திகள்பெற் றசெருக் கறவே

பரிதா பமடைந் ததுபாழ் படுமோ

கரியா டுகவன் சிகியென் றளமுப்

பரியூர் பவதென் பழனிக் குகனே.

(10)

எங்கே யுமியைந் தகுருத் துபநின்

பங்கே யெனநம் பியபுண் பெளிதோ

கங்கே துவரே கதிரே புரையுஞ்

செங்கே முறுதென் பழனிக் குகனே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 8க்குக் கவி 88.

 

(9. பழனிக் குருநாதன் பதிகம்)

(கலி விருத்தம்)

அற்றமே ராந்தெனை யாதரிக் கின்றிலாய்

பற்றலர் ரிகழப் பதைத்தே னையோ

கற்ற மேலவர் காதலித் தேத்துசீர்க்

கொற்ற மரர்பழ னிக்குரு நாதனே.

(1)

காதி யுண்ணுங் கயவரைக் காய்ந்தரு

ணீதி நாட்ட நினைப்பது பாவமோ

வேதி யன்கத றும்படி வென்றவர்

கோதில் சீர்ப்பழ னிக்குரு நாதனே.

(2)

அடியர் கூட்டத் தனந்த முவப்புறும்

படிவி ரும்பெனைப் பார்த்தரு ளாய்கொலோ

விடிந டுங்கவி டுந்தொனிச் சேவலங்

கொடிகு லாம்பழ னிக்குரு நாதனே.

(3)

அஞ்சல் விண்டெனை யாண்டதற் குன்றிருக்

கஞ்ச நாண்மலர்க் கைகரி யல்லவோ

மிஞ்ச மும்மத நீர்விடும் வெண்ணிறக்

குஞ்ச ராபழ னிக்குரு நாதனே.

(4)

நன்று தீதுணர் ஞானமில் லாரிடஞ்

சென்று கைவிரி யாதெனைத் தேற்றுவாய்

மன்று ளாடிய வள்ளல் கைவில்லுறழ்

குன்று ளாய்பழ னிக்குரு நாதனே.

(5)

பேறு நல்கும் பெருஞ்சம யத்தொகை

யாறு நின்முக மாமென லையமோ

வீறு தீர்கதி யின்ப முணர்ந்துளார்

கூறு தென்பழ னிக்குரு நாதனே.

(6)

நன்றி யின்றிய நானுயு மாறுநீ

யன்றி யம்பல சத்திய மாங்கொலோ

தின்றிடற் கெனச்சிந்தை செய்தொன் றையுங்

கொண்றி டார்பழ னிக்குரு நாதனே.

(7)

பிறைகொள் வேணிப் பிரான்பிர மாபுரத்

திறைவனோ புகழி யார்க்கருள் வாய்கொலோ

மறைமுழக் கமும்வண் டமிழோ சையுங்

குறைவு றாப்பழ னிக்குரு நாதனே.

(8)

செக்கர் போலுநின் சீருருச் சிந்தியேற்

கக்கனா விலறைந் ததென்றீ வையோ

மிக்க வானவர் வேதனை தீரவெங்

கொக்க டும்பழ னிக்குரு நாதனே.

(9)

வேதன மாலா னாமவர் மேயசீ

ராத ரத்தடி யார்க்கரு ளாய்கொலோ

காத ளாவிய கடச்சி தோய்புரு

கூதர் சூழ்பழ னிக்குரு நாதனே.

(10)

அரத னக்குவ டாமெனத் தோன்றியென்

விரத மெய்ப்பயன் வெஃகியவர் நல்காய்

மரக தக்கிரி யேநிகர் மாமயிற்

குரக தாபழ னிக்குரு நாதனே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 9க்குக் கவி 99.

 

 

(10. குலவுதிருப் பழனியூர்ப் பதிகம்)

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

அந்தரத்துத் தேவர்களு முனிவோருந் துதிசெயுநா

            ளமல நாதன்

செந்தழற்கட் பொறியாதித் திருவுருக்கொண் டருண்முருகோன்

            சிறக்குங் கோயில்

சந்தனக்குன் றுடையபிரான் ளுவபலமா மெனப்பிறந்து

            தழைப்ப தான

பைந்தமிழ்ப்பா வலரளவில் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(1)

வாசமலர்க் குழலுடையா ளுடனறுவர் தருமமுது

            மகிழ்ந்துண் டாடித்

தேசனந்தங் கோடியெனச் செம்பொன்கரத் தருநிழலிற்

            றிகழ்வான் கோயில்

பூசனையாற் சிறப்பெய்திப் புனிதர்களிற் றலைவராய்ப்

            பொல்லா தாய

பாசமல மறக்களைந்தோர் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(2)

வெங்குலிச வேலேந்தி வெற்பினத்தின் சிறையரிந்த

            வீரன் றேவி

கொங்கமலர்க் குழல்களையா தணித்தாலி நூல்புரந்த

            குமரன் கோயில்

செங்குருதி யாரோடச் செருச்செயும்வேற் படைப்பூசைத்

            திறத்தோர் தேறும்

பங்குனியுத் திரநாளிற் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(3)

போராண்ட லையினுருவம் பொறித்தகலைக் கொடித்தாங்கும்

            புயத்தைப் போற்றும்

பேராண்டைக் கதவடைத்துத் திறக்கும்வலி யருள்கருணைப்

            பெருமாள் கோயில்

லோராண்டுக் கொருபகுதி யாறிலொன்றே கொண்டுசெங்கோ

            லோச்சி யிந்தப்

பாராண்ட நீதிமன்னர் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(4)

வேற்தாமே தஞ்சமெனக் கருதியெழுத் தாறுமிக

            விளம்பி யன்பர்

னோற்கலல்லா ரனைவருக்கு நுண்ணியதா ரகப்பொருட்சீர்

            நுவல்வான் கோயில்

காற்கலப்பாற் றொனிப்பதன்றிக் கற்கலப்பா லுங்கதறக்

            கடைந்த நாள்வெண்

பாற்கடலிற் பிறந்தமின்னார் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(5)

கிண்ணமுலைக் குஞ்சரிதன் னிடபாலிற் பிரியாது

            கிளரப் பெற்றும்

வண்ணமுகில் பொருமேனி வனசரமான் பதந்தொழப்போய்

            வருவான் கோயில்

விண்ணடுவிற் பொன்னதனாற் சமைந்தநகர்த் தருநிழற்கீழ்

            விரும்பி வைகும்

பண்ணவரா தியகணத்தோர் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(6)

மாரதரு மதிர்தரும னறிமற்றோ ரணுகரும்போர்

வயிற்கொண் டாடுந்

தீரதயி ரியத்திலக்கத் தொன்பதுவீ ரரும்பணியுஞ்

            செவ்வேள் கோயி

னாரதனைக் காசிபனை யகத்தியனை யாதியர்க்கோர்

            நற்றா யாய

பாரதிநேர் பழம்புலவர் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(7)

அரிதிலரிதாய் சித்தியாயிரஞ் செய்தமண ரன்னாரக்

            கலக்க ணீந்து

பெரிதிறைவற் போற்றிசைத்த பிரமபுரத் தொருவனுருப்

            பெற்றான் கோயில்

விரிதிரைநீர்க் கடலாடைப் பூதலமூ மீதலமும்

            விளங்குஞ் சோதிப்

பரிதியுங்திங் களுமனையார் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(8)

நாரணனு நான்முகனு நரகமுற்றார் களும்பிறரு

            நடுங்கத் தாக்குஞ்

சூரகுல மாய்வென்ற துங்கவைபேற் படைநிலவுந்

            தோளான் கோயில்

வாரணக் கோடிறுத்தொரு மாமனையும் வதைத்ததிசை

            புனைந்தமா யனேபோற்

பாரணங்குக் கிதஞ்செய்வார் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(9)

செங்கனக்க கிரியனைய முலைமடவா ரெண்ணிலரைத்

            திருடிச் சேர்ந்தும்

புங்கவர்க்கு மாதவர்க்குந் தலைவனென மலைதொறும்போய்

            பொலிவான் கோயி

லங்கணிலம் படைத்தளித்துத் தொடைத்தன்முத லாயதொழி

            லனந்தஞ் செய்யும்

பங்கயன்மா லானபோல்வார் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(10)

அரகரமா தேவசம்போ சங்கரவென் றேத்துசைவ

ராதி யோராம்

வரமத்த தோறுவர்கட் டுமொருபொதுத் தேசிகனாஞ்சேய்

            வாழுங் கோயில்

தரமலராற் சின்மயமுத் திரைகாட்டிச் சித்திமுத்தி

            கணத்தி னல்கும்

பரமகுருத் தவமுடையார் பலர்போற்றக் குலவுதிருப்

            பழனி யூரே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 10க்குக் கவி 110.

 

(11. பழனிமலை மீதுகண்டு பணிதல் பதிகம்)

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

சிவனுதற்கண் மணியாவன் றுதித்துள் ளானைத்

            தீநீர்கான் மூன்றும்வௌவத் திகழ்ந்திட் டானைத்

தவளநிறச் சேவலம்புட் கொடிகொள் வானைச்

            சண்முகமா யொருமுகமாத் தழைக்கின் றானைக்

கவளமத களிற்றுடனா ரேவான் றன்னைக்

            கண்மூன்றே முகந்தோறுங் காட்டு வானைப்

பவளநெடுங் குவடனைய வடிவத் தானைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(1)

பெருகிரண்டா யிரவெள்ளம் பூத்த தானைப்

            பிறப்பிறப்புந் தவிர்க்கவல்ல பெருமை யானைக்

கருவமலி புன்புலவர்க் கிரங்கா தானைக்

            கார்த்திகைப்பெண் ணாரறுவர் கையுற் றானைத்

திருகுமருப் பாட்டினக மடக்கி னானைத்

            தேவர்தம் மூர்ப்பழையபடி சிறப்பித் தானைப்

பருவதங்க டொறுந்தினம்போய் நடிக்குங் கோவைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(2)

சாதுசங்கம் விரும்புநர்க்கே யருள்செய் வானைச்

            சரவணப்பூம் பொய்கைநடுத் தழைத்திட் டானைக்

காதுகொலைத் தீயருள்ளங் கருதா தானைக்

            கவுமார சமயநெறிக் காவ லானை

மூதுணர்ந்தோர் மனவெளிவிட் டகலா தானை

            முப்பத்து முக்கோடி தேவர் போற்றும்

பாதுகைத்தாட் குமரகுரு பரக்கோ மானைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(3)

ஆண்டலைக்கே தனங்குலவு மடற்றோ ளானை

            யணிமரவும் பிறவுமன்பர்க் களிப்பான் றன்னை

நீண்டபிரான் மருகோனைக் கருணை குன்றா

            நிறைநீலி கைத்தலத்தி னீங்கா தானைக்

காண்டமொரு மூன்றினுக்கு மணித்தா னானைக்

            கமலவிரிஞ் சனைப்புடைத்துக் கனன்றிட் டானைப்

பாண்டரங்க னம்பகத்தாற் பயந்த சேயைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(4)

கன்னியர்பற் பலருருக மனங்கொள் வானைக்

            காரணகா ரியமிரண்டுங் கழறு வானைத்

தன்னிகர்சீர்க் கலபமயிற் பரியூர் வானைச்

            சயிலமெங்குங் குறிச்சியெங்குந் தனிசெல் வானைப்

பொன்னிலத்துள் ளார்பலர்க்குந் தாய்போல் வானைப்

            புகழவல்லார் வேட்டவல பொருளீ வானைப்

பன்னிரண்டு மதத்தோர்க்கும் பொதுவா வானைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(5)

கேட்டனவெல் லாம்வழங்க வல்லான் றன்னைக்

            கேயூர்ந்தொ றுமுலவுங் கிளியுள் ளானைச்

சேட்டனோடோர் கனிநிமித்தம் பகைசெய் தானைத்

            தினைப்புனத்தி லருகிலது தீர்ந்துய்ந் தானைப்

பேட்டன்நேர் வாணிமின்பாற் கலைசொல் வானைப்

            பெருமையினுஞ் சிறுமையினும் பிறிதில் லானைப்

பாட்டனந்தம் புனைதருபன் னிருதோ ளானைப்

பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.   

(6)

தேடருஞ்சத் தாதியமுப் பொருளு மாகிச்

            சிந்திப்பார் சிந்தனைபோற் றிகழ்கின் றானை

யாகடப்பூம் பொய்கைநடுப் புலவர் செய்யு

            மருங்கலகந் தீர்தாப்போ யதுசெய் தானை

யேடவிழ்தா மரைமுதற்பைங் குவளை யீறா

            மெனநிகழைம் பகழிகளுக் கிளையா தானைப்

பாடலம்பொற் கடம்புகுரா மலியுஞ் சோலைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(7)

காழிநகர் கவுணியச்சே யாகிச் செண்டாற்

            கனகவெற்பை மொத்துதிண்டோட் காளை யாகி

யேழிசைமுத் தமிழ்மதுரைச் செட்டி யாகி

            யாவையுமா யாதொன்று மாகா தானைக்

கோழிமயில் கிளிவளர்க்கும் பண்பாற் கானக்

            குறக்குலத்தோர் களிகூரக் குலவி னானைப்

பாழிதயத் தோருணராக் குமரன் றன்னைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(8)

வீரமாகா ளிகுன்றப்பு டைத்த திண்கை

            விறல்வீர வாகுவன்னார் வேட்கை யானைச்

சூரமரச் சேனைமுற்றுந் துகள்செய் தானைச்

            சுரர்சேனைத் தலைமைதருஞ் சுடர்வே லானா

யீரநாண்ம லர்க்கடம்புஞ் செச்சைக் கொத்து

            மிலங்குகழிற் கூதளமுமணிந் திருவான் றன்னைப்

பாரகாவி யப்புலவர்க் கொருகோ மானைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(9)

அதுவிதென வந்திடுவார்க் கமையா தானை

            யாகம்வே தப்பொதுவாய் விரகின் றானை

விதுமனைமார் களிலறுவர்க் கொவ்வோர் சேயாய்

            வெள்ளநீர்ச்ச ரவணத்தின் மேவி னானை

மதுரமொழி யாலுலகங் குளிர்விப் பானை

            வனசரமான் றருந்தினைமா வாஞ்சை யானைப்

பதுமன்முதன் மூவர்களுந் தொழநின் றானைப்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(10)

கலகமதக் குறும்பரெல்லா மடங்க வென்று

            கருணையில்லா ரனைவரையுங் கனல்போற் காய்ந்து

புலமையங்க மாய்சங்கப் பலகை யேறிப்

            பொதுவெளியிற் கலப்பதற்காப் புலரா நிற்பீ

ரலகிறெய்வக் கூட்டமுந்தா னான தன்றி

            யருட்குரவர்க் கிறைவனுமா மமல வேளைப்

பலமலைக டொறுஞ்சேவிப் பதனை யெண்ணிற்

            பழனிமலை மீதுகண்டு பணித னன்றே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 11க்குக் கவி 121.

 

(12. சொன்னசொற் பயன்றொகுத் தருள்வாய் பதிகம்)

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

கதிக்கோர் வித்தனையாய் திருப்பழனிக் காவலர்பல

கன்மலைக் காரர்

நிதிக்குமாதர்க்கு நிலத்திற்கு மெனதுநெஞ் சவரவினு

நின்னருட் செயலே

துதிக்கின்றே னெனுள்வந்து நீயன்நாள் சொன்னசொற்பயன்

றொகுத்தருள் வாயே.

(1)

அண்டகோடிக ளனைத்துமுண்டு மிழுமான றவாய்முகில

            னையமான் மருகா

புண்டரீக னைப்புடைத்த கைக்குமரா புனிதமார்பழ

            னாபுரிப் புலவர்

தண்டனிட்டு னைத்துதிசெய னமறவேன்றி னமுநின்னருட்

            டிருவுருக் கருதுந்

தொண்டராணை நீவந்து வந்தென்பாற் சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(2)

வேதவித்தக முனிவர்பற் பலரும்விபு தர்கூட்டமும்

            விரவிய பழனிச்

சீதளக்கிரி யுச்சியினா ளுந்திருக்கை வேலொடு

            திகழ்தரு முருகா

வாதவற்பிணித் தானுடற்றுணித் திட்டவிரந்த வாட்படையணி

தருதிணி தோட

தேனைத்த னித்தேவி யுஞ்சிலகாற் சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(3)

ஏதுவாஞ்சை வந்துதிப்பி னுங்களிகூர்ந் திடுவதாகு

            மென்னிதய நன்கறியப்

பாதுகைப்பதஞ் சூட்டியமுனி வர்பழனி மாமலைப்

            பதியில் வானவனே

சாதுசங்க முந்தருகிலை நொந்துதவிக் கின்றேனினி

            தாங்கிடே னீயிச்

சூதுசெய்வ துமுறைமை யன்றந்தோ சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(4)

சனகனாதி யநால்வருக் கன்றோர்சற் குருத்துவன்ற

            னித்தகல் லாற்கீ

ழனகரூப மாத்தோன்று முன்னுலகை யாண்டவர்திரு

            வாதனன் குடியாய்

பனகமேறிய நாடகம யின்மேற்ப ழையநாட்பர

            தேசியில் வந்து

துனலரும் பதநல்கு வதாமுன் சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(5)

அகளசார மெஞ்ஞான மெய்தினரே யறியத்தக்கதோர்

            ரானந்த மயமாய்ப்

பகர்மாத வமுனிவரன் வடிவாய்ப்பழ னிக்குன்றினின்

            மேயவெம் பரனே

யிகழவெலா முறுமென்மன வெளியூடெண் ணில்போதுவந்

            தியற்றமிழ்ப் புலமைச்

சுகமெனாவி ளித்தாயி ரங்கதைகள் சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(6)

காயசித்தி யுங்குளிகை யாதியுங்க ருதுசித்தாந்

தங்களும் வணங்க

நேயமிக்க வர்விருப்பெ லாமுதவி நிகரிலாவினன்

            குடியினின் றோனே

காய்க்ககொடும் புலையர்தம் பகையாற்க ருத்துநொந்துணைக்

            கருதுகின் றேன்பாற்

றூயசெந்தி லாதிய பலதலத்திற் சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(7)

பொய்த்தநெஞ்சி லர்விழைதரு வேணுபுரத் தோர்வேதியன்

            புத்திர னாகிக்

கைத்தபுன்கு ணச்சாரணர் பலரைக்கழு விட்டாய்பழ

            னாபுரிக் கந்தா

சித்தனேக மும்வழங்கிமெய் யடியாரதி ரறினாடொறுந்

            திகழதர் விளக்கிச்

சுத்தத்தத் துவத்துய்ப்ப வன்போன்றே சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(8)

கட்டமும்பா ரதியர்த விர்ந்துய்யக் கடலின்மரமிசை

            கனன்றவன் சுழற்றி

விட்டவே லொடுதண்டணிந் தெழிலாவி னன்குடிக்கிரி

            மேயவித் தகனே

சிட்டரி யாரையும் பாதுகாத் தகிலந்திடுக் குறத்தகுதீத்

            தொழிலி யற்றுந்

துட்டர்வோ றச்செகுத்தல் வேட்டுளனீ சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(9)

பங்கயர்த னப்பிரம னுமாலும்ப ணிலவார்குழைப்

            பண்ணவன் றானுந்

தங்கணா யகனெனத்தி ருப்பழனிச் சயிலமேல்வளர்

            தண்டபா ணியனே

தங்கமுண்பன் விழைப்பவர் தாமுங்கரு ணைநீர்பெறக்

            காதலிப் பேன்பாற்

றுங்கவே லொடுவந்து நீயருளாற் சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(10)

தவளநீறு போர்த்துள்ள செங்கனலிற் றயங்குவாய்பசுந்

            தமிழ்த்திருப் பழனிக்

குவடுளாய்மலர்த் தாடலைசூட் டிக்கொடிய னேனையாட்

            கொண்ட தேசிகனே

கவலைவா ரியற்றளவுறு மென்பாற்க வுரிபூண்முலைக்

            கலசமுண் டுவக்குந்

துவர்குலாங்கனி வாய்திறந்தன்பாற் சொன்னசொற்பயன்

            றொகுத்தருள் வாயே.

(11)

முற்றிற்று. ஆகப் பதிகம் 12க்குக் கவி132.

 

நூற்பயன்

(கலி விருத்தம்)

நன்னிலைப் பழனியின் ஞாங்கர் வீரனைப்

பொன்னிகர் திருப்புகழ் புலவன் பாடிய

பன்னிரு பதிகமாம் பனுவல் போற்றுந்

ரன்னிய மற்றமெய் யருள்கொள் வார்களே.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக