வியாழன், 24 செப்டம்பர், 2026

திருவாமாத்தூர் யமகவந்தாதி

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருவாமாத்தூர் யமகவந்தாதி

பாயிரம்

கட்டளைக் கலித்துறை

தெய்வீகம்

1.         மூவா யிரங்கவி முன்கேட் டதன்பயன் முற்றச்செய்யாத்

தேவாய மாதைப் பிரான்விழை யாமை தெரித்துமின்சொற்

பாவா லியமகவந் தாதியொன் றோதப் படுத்துகின்றா

ணாவாணி யென்பதன் சாட்சியென் னெஞ்சும்விண் ணாடருமே.

(1)

தேற்றம்

2.         சிவனுமை யோடு விடைமீது வானிற் றிகழ்வதுண்டே

லவன்வளர் மாதையைப் போற்றுமென் வேட்கை யனைத்துமெய்து

மெவளவு பேறுந் தருகில னேன்முன் னிறைஞ்சியமெய்த்

தவர்பலர் சித்தியு முத்தியுந் தோய்கை சரதமன்றே.

(2)

ஞாயம்

3.         மலவிரு ணீக்கி யருள்வானென் றாசித்து மாதையில்வெண்

ணிலவணி வானைத் துதிக்கலுற் றேனவ னேசிக்கிலா

னிலவிதழ் மங்கையர் மால்வெறுத் தாலுமிக் கேறலெண்ணிக்

கலவியிற் கல்வி யிழியா நிமித்தங் கழறுவதே.

(3)

வினா

4.         தான்றூது சென்றதுந் தன்மனை யன்னஞ் சமைத்திட்டது

மீன்றூறு தீர்மக்கள் பாவல ராற்கொள் ளிசைப்பெருக்கு

மேன்றூ ளளவு நினையாதென் பாட லிகழ்கின்றையோ

வான்றூயர் போற்றெழி லாமாதைக் கோயிலிள் வாழ்சிவனே.

(4)

காப்பு

5.         மாதையந் தாதிரி வெய்தாது தேற்றுநன் மாசறுகம்

மாதையந் தாதி  தழியாதி சேர்சடை வானவன்வாழ்

மாதையந் தாதி வழங்குவ தோர்வெண் மருப்புடைக்கைம்

மாதையந் தாதின தாதிய கோள்கண் மறுக்கரிதே.

(5)

பாயிர முற்றிற்று.

 

நூல்

6.         மலையாய வில்லிடை மாலாய வாளியை வைத்தவெண்டோண்

மலையாய வில்லியங் கச்செய் பொல்லானை மடித்தவன்

மலையாய வில்லிற்கொண் டோன்மாதை மாநகர் வாய்ந்தபுகழ்

மலையாய வில்லிக் குடநேர் மனத்தினர் வல்லரன்றே.

(1)

7.         வல்லவ னம்பரன் முத்தாம் பிகைதுணை மாமுலையாம்

வல்லவ னம்பரன் பாட்டாசைக் கள்வன்பொய் வஞ்சகநு

வல்லவ னம்பரன் புங்கைக்கொள் வோனிற மாற்றரிய

வல்லவ னம்பரன் மாதையி லாண்டென்னை வைத்தனனே.

(2)

8.         வைத்த பரசு மறியும் புனைந்தகை வள்ளறன்சே

வைத்த பரசுப மெய்தாது காப்பவன் மாலறத்து

வைத்த பரசுக மீவானென் னாவிடை மல்கிமிக

வைத்த பரசு தொழின்மாதை யூரில் வயங்கினற்றே.

(3)

9.         வயவீர பத்திர னாத்தக்கற் செற்றருண் மாதைப்பிரான்

வயவீர பத்திர மாற்கரி யானென வாழ்த்தல்கைக்கும்

வயவீர பத்தி ரவரவ மீதலின் மாற்றிப்பல்செவ்

வயவீர பத்திர மிட்டேனு மன்பில் வணங்குமினே.

(4)

10.       வணங்கத் தலைதந்த வாறோதி னானன்று வாய்ந்துவந்த

வணங்கத் தலைவின்றி யானுங் குலாவுற வைக்குதியெண்

வணங்கத் தலையிக ழேல்பம்பை சூழ்தரு மாதையின்வாழ்

வணங்கத் தலையமில் லாய்நீசொன் மாற்ற மறக்கிலனே.

(5)

11.       மறவாத வித்தை முதலாய தீவினை மாறவுன்னை

மறவாத வித்தை விழைவேனை வீணின் மடித்தொழியேன்

மறவாத வித்தை யனையா யருச்சுனன் மாட்டமர்செய்

மறவாத வித்தை யரார்சேரு மாதை வரோதயனே.

(6)

12.       வரந்தர வாவென் றுனைநாடி யேத்தி வணங்குமெய்த்த

வரந்தர வாசர் முதலோர்க ளென்னை மதிப்பதென்ற

வரந்தர வாழ்வெனைச் சேர்வதென் றோதுதி மாதைபுக்க

வரந்தர வாண னிராவணன் பேறும் வழங்கினனே.

(7)

13.       இனஞ்சன மாதர வாமென்னு மூடரு மென்னையெள்ள

லினஞ்சன மாதியர் தம்பகை யோடற வீர்திகட

லினஞ்சன மாநுகர்ந் தாய்மாதை வாழழ கேசபக்க

லினஞ்சன மாது மகாரொடு பூசித் திடுந்தெய்வமே.

(8)

14.       இடுகவித் தாரக ராம்புன்மைத் தேவரை யெண்ணலர்சொல்

லிடுகவித் தாரணி வாய்மாதை யூரி னிறைவவரு

ளிடுகவித் தார கவிநால்வர் தம்மொ டெனைக்கொள்கத

விடுகவித் தாரணி யின்வேட்கை தானு மிலாதுசெய்யே.

(9)

15.       இலவச மாவொன்று நீதர வேட்டில னென்கவிக

ளிலவச மாயன்று சொல்லிய வாறின்ன மேன்செய்கில்லா

யிலவச மான்மழுக் கையாய்தென் மாதை யெழிற்றளியா

மிலவச மாதிகொல் வேள்விப்பொல் லார்சிந்தைக் கெட்டலனே.

(10)

16.       எட்டான மூர்த்தல மெங்கும் விடாதுற்று மியாவையுமா

யெட்டான மூர்த்தங்க ளாயுந்தென் மாதை யிடைமுளைத்து

மெட்டான மூர்த்த நடனஞ்செய் யாம லிளைக்கின்மின்னா

ரெட்டான மூர்த்தரல் லாத்தேவ ரியாவரு மெய்துவரே.

(11)

17.       எய்தவில் லானையைங் கோலோடட் டானறத் தின்பெருஞ்சீ

ரெய்தவில் லானையர் சூழ்தரு மாதைக் கிறைநடத்தி

லெய்தவில் லானைக்கு மாற்கும் பெருநல மீந்தவனோ

ரெய்தவில் லானையன் னார்பல ரோடுபின் னேகலென்னே.

(12)

18.       ஏக வகண்ட பரத்துவ னீயென் றினிதுணர்ந்தே

னேக வகண்டத்தர் தம்மோடு மாய வெனைவிட்டிடே

லேக வகண்டங்கள் வேட்டார்க்கு மங்ஙன மீந்தசிவ

னேக வகண்டமு மானாய்தென் மாதை யிடத்தண்ணலே.

(13)

19.       இடங்கரை யன்று மகவீயச் செய்தவ னீடிலம்பை

யிடங்கரை யன்றுக டீர்மாதை யூர்ச்சிவ னேற்பவெல்லா

மிடங்கரை யன்றுன்ப நோய்தீர்த் தெமைக்கொள்ளி லெய்த்தஞ்சியோ

லிடங்கரை யன்றுஞ்சல் கூற்றவன் வேண்மைய லீகலரே.

(14)

20.       ஈகையி னாசை யளவறக் கொண்டிங் கிளைக்குமென்னை

யீகையி னாசையெ னிந்தையொ டெய்தச்செய் யேல்விழைவ

வீகையி னாசைவர் வாழ்மாதை யாளு மிறைவமல

ரீகையி னாசை தொறுமன்பர்க் கூட்டு மிசையண்ணலே.

(15)

21.       இசையத் தகுந்தவை யெல்லாம் விரைவிலெற் கீந்துவென்றி

            யிசையத் தகுந்தவை வேல்கொணின் சேயிற்கொ ளெண்ணுநர்பா

            லிசையத் தகுந்தவை சேராத்தென் மாதை யிடத்தரவே

            ழிசையத் தகுந்தவை கானீட்ட லேற்றரு ளிட்டத்தனே.

(16)

22.       இட்டம் பலவகைப் பேற்றினுங் கொண்டுழன் றேனருண்மே

லிட்டம் பலவகைம் மைதோய்ந் திடாவண்ண மியாவையும்நீ

யிட்டம் பலவகைப் பூசைகொள் வாய்சடை யிற்புனைதெ

விட்டம் பலவகைச் சீர்தோய்தென் மாதைக் கிறையவனே.

(17)

23.       இறையள வாயினு நின்னருட் பேறின்றி யெய்த்துவர்நீ

            ரிறையள வாய்ப்புதற் போல்வாடி னேன்பல்க ணேய்ந்துவிண்வா

            ழிறையள வாசிக்குஞ் சீர்மாதை யாய்பண்ட னீடழிய

            விறையள வாவொழி யாய்விடை மீதிவ ரேற்றத்தனே.

(18)

24.       ஏற்றணி யார்கொடிச் சீர்மாதை மாணுவ லென்னைநள்ளா

யேற்றணி யார்கொடி யாரேனை யோர்நனி யெய்ப்பரிச்சொ

லேற்றணி யார்கொ டிருத்தோளப் பாவைந் தெழுத்தினுரு

வேற்றணி யார்கொடிக் கற்கஞ்சி டாதரு ளின்பத்தனே.

(19)

25.       இன்பக் குவடு புரைவானை நல்லற மியாவுஞ்செய்கை

            யின்பக் குவடுவள் பாகப் பிரானைமிக் கெண்ணகவ

            யின்பக் குவடுத் தவிர்ப்பானை மாதை யினிற்றுதிசெய்

            யின்பக் குவடுகன் சேயா தியரெ னிகலெய்துமே.

(20)

26.       இகலவ ரஞ்ச வுறவோர் மகிழ வியற்றிடும்பே

ரிகலவ ரஞ்சடக் கென்றருள் வாய்நல் லிரசிதம

லிகலவ ரஞ்சக் கெனுமாது பாக விமப்பெருக்க

மிகலவ ரஞ்சன்ன வானன மாதையி லேய்ந்தவனே.

(21)

27.       தவராச ராச னெனமாதைக் கோயிலிற் றங்குபுவாழ்ந்

தவராச ராசர மீன்றமுத் தாம்பிகை தன்கணவா

தவராச ராசம்பந் தத்தாற் றணந்திகற் றாக்கியமா

தவராச ராசஞ் சலப்பிணி தீர்த்தெனைத் தாங்குதியே.

(22)

28.       தாங்காத பாரத் தலைமாலை பூண்டவ சங்கணிந்த

            தாங்காத பாரழத் தீயோர் பெருகித் தருமமழிந்

            தாங்காத பார மடர்ந்தன மாதையிற் சார்ந்ததொண்டர்

            தாங்காத பாரதம் போல்போர்வென் றார்க்குஞ் சயமருளே.

(23)

29.       சயமத னாந்தக மாதிபொல் லார்க்குந் தரத்தகுநிச்

            சயமத னாந்தக மாதைப் பதியின் றலைவசமு

            சயமத னாந்தகர்த் தாள்குரு வாகித் தயையறுநெஞ்

            சயமத னாந்தக வெய்திடற் காநிலை தந்தருளே.

(24)

30.       தந்தவெள் ளானை யிடபத்தொ டூர்தரு சங்கரவி

            தந்தவெள் ளானை முதலோர்க்கஞ் சாருணர் தற்பரமோ

            தந்தவெள் ளானைய மாதைப் பதியினிற் சார்ந்தும்வினை

            தந்தவெள் ளானைகின் றேன்புகழ்ப் பேறு தருதியின்னே.

(25)

31.       தருக்கனந் தம்பொருந் திக்கொடு வேள்வித் தழல்வளர்த்த

            தருக்கனந் தம்புரிந் தாள்சிவ னேவிண் டலத்துறுமைந்

            தருக்கனந் தம்பண்பிற் றோய்வார்தென் மாதையிற் றாழெனக்கத்

            தருக்கனந் தம்புனை கையான் வியக்குந் தகுதிநல்கே.

(26)

32.       தகுவரை யட்ட நகையானைக் குன்றருந் தண்ணிமந்தோய்ந்

            தகுவரை யட்டனி கெஞ்சவொல் கானைச் சரதவிதி

            தகுவரை யட்டசித் துஞ்செயக் காட்டுந் தலைவனைம

            தகுவரை யட்டகைச் சேலேறு மாதையிற் சார்கைநன்றே.

(27)

33.       சாரங் கனிந்த கனிபோலு நின்றுதி சாற்றுநரைச்

            சாரங் கனிந்தனை யாகச்செய் தென்னைத் தளர்த்தல்வென்றிச்

            சாரங் கனிந்த வுலகி லிராம தனுக்கொடுப

            சாரங் கனிந்தன் னவனாச்செய் மாதைச் சதாசிவனே.

(28)

34.       சதமக னாணவஞ் செற்றானைப் போலுந் தவர்பெருநே

            சதமக னாணங்கக் கூற்றையட் டாய்முத்தித் தானவிர

            சதமக னாணர வாஞ்சிலை மாதைத் தலங்கொடுவாழ்

            சதமக னாணம்பு வார்க்கரு ணீர்மை தனைவிளக்கே.

(29)

35.       தனையர வாம்பொறி யாற்றளர்ந் தேனைந் தருக்கொள்விண்ண

            தனையர வாழ்க்கையுங் கைப்பவெண் சித்தியுந் தந்தருள்வாய்

            தனையர வாமிக்கு ளாய்மாதை வாழ்சிவ சங்கரநிந்

            தனையர வாதனை தீர்க்கவல் லாய்சச்சி தானந்தனே.

(30)

36.       தானந் தருமம் பொறையா தியகுண சாரமருந்

            தானந் தருமம் புயத்தானு மாயனுஞ் சாற்றவொண்ணா

            தானந் தருமம் பொலிமாதைக் காவலன் றாடுதிக்கை

            தானந் தருமம் பலபேறும் வேண்டுதுந் தாழ்வறவே.

(31)

37.       தாழைக் கனியன்ன மாமூடர் தங்களைச் சந்ததமுந்

            தாழைக் கனியன்ன வின்றாலுந் தாங்குந் தயாபரன்கார்

            தாழைக் கனியன்ன மன்னாண் மணாளன் றலத்துயர்ந்த

            தாழைக் கனியன்ன லான்போற்று மாதைத் தளியிடமே.

(32)

38.       தளியலங் கார மலிமாதை யூர தரித்திடும

            தளியலங் காரக மேனியப் பாவெனுட் டான்சில்வ

            தளியலங் கார முலையாளொ டெய்துஞ் சரதம்பொய்ப்பத்

            தளியலங் காரந் தகன்செய் திடாமனின் றாளருளே.

(33)

39.       தாளணி யாகமந் தேறி யிமயத் தடத்திலுதித்

            தாளணி யாகத் தமுதுண்டுய் வானென்முற் சந்ததம்வந்

            தாளணி யாக வரவணிந் தாயரி தானறியாத்

            தாளணி யாகவின் குன்றாத மாதைத் தலத்தையனே.

(34)

40.       ஐயம் புகுந்தம்வில் வாளாதி கொள்ளு மவர்க்குமஞ்சே

            னையம் புகுந்தருந் தத்துணிந் தேனென்னை யாதரிப்பா

            யையம் புகுந்தகண் ணார்க்கருண் மாதை யழகவினை

            யையம் புகுந்தணப் பாய்கவு மாரி யமர்பங்கனே.

(35)

41.       அமரரை யாண்டவு ணர்க்கும் வேட்கைநல் கண்ணலுமை

            யமரரை யாண்டவத் தோர்புகழ் மாதை யழகனரா

            வமரரை யாண்டத ளும்புனைந் தோன்கை யயில்கொடொன்னா

            ரமரை யாண்டலை யான்சீர்சற் றென்றற் கருளினன்றே.

(36)

42.       அருளந் தணர்மலி மாதையி லன்ப ரவாமுழுது

            மருளந் தணப்பரி யானாநின் றாய்பிற ராலறியா

            வருளந் தணலனை யார்விழை யாத வழகபெரி

            யருளந் தணவு நிலையீந் தெனையினி தாண்டுகொள்ளே.

(37)

43.       ஆண்டனந் தந்தரப் பூசைசெய் தானிக லட்டுரையா

            லாண்டனந் தந்தரச் சென்றாய்தென் மாதை யமர்சிவனே

            யாண்டனந் தந்தர வாஞ்சினந் தோய்மன்ன ரஞ்சவென்னை

            யாண்டனந் தந்தர விந்தமுள் ளான்கை யலுப்பொழியே.

(38)

44.       அலுத்த மனத்தைக் களிகூரத் தேற்றி யறமிலதா

            யலுத்த மனத்தைய லார்ச்செறு பேறு மளித்தருள்வா

            யலுத்த மனத்தை விளையாத்தென் மாதையி னாத்தியணி

            யலுத்த மனத்தையன் றாழ்சர ணாம்புய வற்புதனே.

(39)

45.       அற்புத வத்தகு பஞ்சாக் கரத்தை யறைகிலன்செல்

            லற்புத வத்தகுற் றந்தோய்ந் துளேனென்னை யாள்குவையோ

            வற்புத வத்த குடிலாஞ் சடிலநன் கஞ்சனல்கு

            மற்புத வத்தகுன் றாவள மாதைக் கழகியனே.

(40)

46.       அழலன்ன வாகனன் றோயச்செய் சேய்நல்கு மண்ணல்கெடா

            வழலன்ன வாகன்றென் மாதையிற் சற்றின் னருள்புரிந்தா

            லழலன்ன வாவெள்ளத் தாழேனொன் னார்களுக் கச்சமுறே

            னழலன்ன வாங்கிசத் துஞ்சீர்கொ ளாற்ற லடைகுவனே.

(41)

47.       அடையல ராதிய கொண்டுனைப் பூசிக்கு மாசையுற்றே

            னடையல ராவெனச் சீறலிற் சோர்வ தறிகிலையோ

            வடையல ராள்புர மூன்றுஞ்சுட் டாயிமை யார்க்கெளியா

            யடையல ரார்க்கொண் புகழீயு மாதைமன் னாமரனே.

(42)

48.       ஆமனத் தார்வ முறக்கோ டளித்தவ னந்தணரி

            லாமனத் தார்வழி பாடுகொள் வோனகி லாண்டஞ்செய்தோ

            ராமனத் தார்வந்து போற்றிய மாதை யழகன்வம்ப

            னாமனத் தார்வழங் கத்துணி வானஞ்ச லஞ்சனெஞ்சே.

(43)

49.       அஞ்சனக் கண்ட முறச்சினந் தோன்கட லாலமுண்ட

            வஞ்சனக் கண்ட னணிமாதை யூர னவிர்வதன

            மஞ்சனக் கண்டல ரூர்ச்செகுத் தோனென்னை யாண்டுகொண்டா

            லஞ்சனக் கண்டவத் தோர்குழுக் கூடிச்சித் தாடிடுமே.

(44)

50.       ஆடர வப்பணி பூணும் பிரான்மனை யாயவுமை

            யாடர வப்பணி யுஞ்சடை யான்முறுக் கார்மருப்பி

            னாடர வப்பணி யுந்தவ மாக்குந னம்பொன்மின்னை

            யாடர வப்பணி னான்மாதை யேநமக் காந்தகைத்தே.

(45)

51.       ஆந்தரங் கண்டுற ழச்செய்திட் டானையட் டானனைய

            ராந்தரங் கண்டு சிலர்க்கருள் கூருமம் மான்பலச

            லாந்தரங் கண்டுயில் கார்வெஃகு மாதை யழகன்வச

            னாந்தரங் கண்டுந் தொறும்வெருள் வானொத் தவிர்வதென்னே.

(46)

52.       அவியா விளக்குப் புரைவானைப் புற்றின்னு மாட்டிறைச்சி

            யவியா விளக்குழு வார்க்கிரங் கானைக்கல் லாமெனெஞ்சை

            யவியா விளக்கு மருளானை மாதை யரனைநம்பி

            யவியா விளக்கும் புகழோர்ந்துய்ந் தாரண்ட ராதியரே.

(47)

53.       ஆதிரை யானை யணிமாதை யூரி லடைந்துபணி

            யாதிரை யானைந்து நாட்கழிப் பீருங்க ளாயுள்சத

            மாதிரை யானை யிவர்வார்க்குந் தோய்வதன் றாவியம

            னாதிரை யானையந் தோதா விடினு மறிவதுவே.

(48)

54.       அறிவா கரம்பெறு வார்க்கின்ப மியாவு மருளவல்லா

            யறிவா கரன்றன்முன் மாய்ந்தாங்கு மாயை யறச்செறுவா

            யறிவா கரங்கங்கொள் வாய்மாதை வாழ்வுறு மத்தவென்மா

            லறிவா கரத்த மிகச்சிந்த வீழ்ந்துய்ந்து மாய்ந்துளனே.

(49)

55.       ஆயப் படாத மறையார்க்கு மாதை யழகமனை

            யாயப் படாதகிச் செஞ்சடை யாயென்னை யாண்டுமுன்னில்

            லாயப் படாதறு கட்கூற்றுக் கஞ்ச லறிகிலையோ

            வாயப் படாதரன் சீர்வேட்டு நெஞ்ச மலைகின்றதே.

(50)

56.       அலையங்க மாலை முதலாம்பல் பூண்புனை யண்ணலைக்கா

            ரலையங்க மாலைய ராதருண் மாதை யழகனைக்கை

            யலையங்க மாலையத் தார்வாழ்வு மென்ன வறிதிநெஞ்சே

            யலையங்க மாலைந்து வாதனை தோய்த லறவெய்துமே.

(51)

57.       அறத்தா னையர வுதைத்தானைச் சிந்தை யகமுழுது

            மறத்தா னையன்சென்னி கொய்தகை யானை யனங்கனிவ

            ரறத்தா னையஞ்சுமுக் கண்ணானைமாதை யதிற்றுதித்தா

            லறத்தா னையஞ்செய் மறைச்சென்னி ஞானம்வந் தார்தகுமே.

(52)

58.       ஆரணச் சென்னி தயத்துஞ்சில் கால்வந் தவிர்பெருமா

            னாரணச் சென்னி முதலோர்க்கும் பேறளித் தாருலவா

            வாரணச் சென்னி நிகர்மாதை யூரர்பொய் யாம்பரியா

            லாரணச் சென்னிகழ்த் தச்செல் வினோத மதிசயமே.

(53)

59.       திசையா முகனைத் திருமாலைச் சூலச் சிரங்கொளும்

            திசையா முகனை தொடைசோர்ந்த பாடலுஞ் சேர்த்தணிய

            திசையா முகனையும் போற்றிய மாதையின் றேசிகவா

            திசையா முகனைவுந் தீர்தவப் பேறுறச் செய்தருளே.

(54)

60.       செய்ய சடில திவாகர மாதைச் சிவாவகந்தோய்

            செய்ய சடில திவாகரஞ் சப்பொரு சித்தசனஞ்

            செய்ய சடில திவாகரத் தோடுயச் சேர்த்தெனையாட்

            செய்ய சடில திவாகரன் மேலென்சொற் சீர்பெறவே.

(55)

61.       சீரா வளித்த குலவேந்தர் காணத்தன் றேகத்தொன்றுஞ்

            சீரா வளித்தவன் வெள்கீகை வேண்டெனைத் தேற்றல்விட்டுச்

            சீரா வளித்தகை தோய்ந்தார்மு னேங்குறச் செய்தனன்றோ

            சீரா வளித்தகைக் கூட்டார்ந்த மாதைச் சிவசித்தனே.

(56)

62.       சிவசங்க ராபம்பை சூழ்மாதை யூர்வரு சீரியரா

            சிவசங்க ராணவந் தீர்நிலை காட்டுமெய்த் தேசிகவஞ்

            சிவசங்க ராவு மணிந்தாய் தொழுமெனைச் சீற்றிகழேல்

            சிவசங்க ராய்வருஞ் சந்தமொ ரெட்டுந் தெரித்தனையே.

(57)

63.       தெரியல ராக வளந்தோயு மாதைச் சிவாபலவாந்

            தெரியல ராவென் புடனணிந் தாய்தமிழ்ச் சீர்சிறிதுந்

            தெரியல ரான்மிக வாடாத வாறெனைத் தேற்றலென்றோ

            தெரியல ராயிரஞ் சூழ்தலி னெஞ்சந் திகைக்கின்றதே.

(58)

64.       திகையானை யெட்டுமொல் கப்பொரு தோர்வெண் சிலம்புகொள

            திகையானை யெட்டுணை யேனுமெண் ணாதட்ட சேவகனை

            திகையானை யெட்டுளத் தாதிதன் மாதையிற் செய்கடமை

            திகையானை யெட்டுன்ப நோய்முற்று மாறிடத் தீர்கிலனே.

(59)

65.       தீராத காதலைங் கோதையர் நல்கத் தியங்கெனைநத்

            தீராத காதலை யந்தோற்ற மென்றறிந் தேனன்பிற்காத்

            தீராத காதலை நீத்தாடென் மாதையிற் சித்தர்மன்னாந்

            தீராத காதலை மேற்பிறை சூடித் திகழ்பவனே.

(60)

66.       திகந்தந் துதித்த புகழ்மாதை யானருட் சீரன்பர்க்க

            திகந்தந் துதித்தத்தெய் யென்றாடு வான்றண் சிலம்பருள்சத்

            திகந்தந் துதித்தக வோனென்னை யாளுந் தினம்வரின்வா

            திகந்தந் துதித்தநெற் போன்றிகல் குன்றச் செயிப்பதுண்டே.

(61)

67.       செயம்பொலி யக்கமும் வெண்ணீறும் பூண்டு செறிந்தசெந்நெற்

            செயம்பொலி யந்தண் வளமாதை யீசனைச் சிந்தித்தன்பு

            செயம்பொ லியகைம் மதன்போர்செய் யானயன் றீவிதிதுய்ச்

            செயம்பொ லியமன் கொலானம்பு வாயென்றன் சிற்றுநெஞ்சே.

(62)

68.       சிற்றர மன்ன விழியார்க் குருகிச் செகமிகழெச்

            சிற்றர மன்னர் முதலோரைக் கெஞ்சித் திரிந்தெனெஞ்சொஞ்

            சிற்றர மன்னனி யார்மாதை யூர சிலம்பிறைநச்

            சிற்றர மன்னணிக் கொங்கையின் பாலொர் சிறிதருளே.

(63)

69.       சிறிய வராக மருப்பணிந் தானைவெந் தீவினைமா

            சிறிய வராகப் பெருமானை மாதைச் சிவனைநம்புஞ்

            சிறிய வராகம வேதப் பகையறத் தேர்வர்பொய்வி

            சிறிய வராகத் தழுந்தாது முத்தியிற் சேர்குவரே.

(64)

70.       சேரலர் மாயன் முதலோரிட் டேத்துந்தொல் சித்தர்களஞ்

            சேரலர் மாயமற் செற்றார்தென் மாதையின் செல்வரந்நாள்

            சேரலர் மாய மறநாவ லூரர் சினேகமிட்டார்

            சேரலர் மாயச் செறுமாண்மை யீந்தெனைத் தேற்றினன்றே.

(65)

71.       தேற்றா னனையவிழ் பூவாற்றன் பூசை செயச்செய்தினி

தேற்றா னனையது போல்சிந்தை நல்கித் தெளிக்கும்வித்துத்

தேற்றா னனைய ரொடுகூட்டி யுட்கொளுந் தெய்வங்கொற்றத்

தேற்றா னனையத் தமிழ்மாதை காக்குந் திருக்கையனே.

(66)

72.       திருக்கயி லாயமுத் தாம்பிகை தோள்புணர் செய்யனையோ

            திருக்கயி லாயன் மனைவேட்கை தீர்ந்தவர் தேவைநம்பித்

            திருக்கயி லாய மகாராதிப் பற்றறத் தேர்ந்தவர்க்குத்

            திருக்கயி லாய மலைமாதை யூரிற் சிறந்ததன்றே.

(67)

73.       சிறந்த விவேக மகாமாயைக் கஞ்சித் தியங்குகின்றேன்

            சிறந்த விவேக மெனும்புணை யீந்தருள் செப்புபன்மா

            சிறந்த விவேகலிங் கத்துற்று மாதையின் சீர்புரந்தாய்

            சிறந்த விவேகழ லஞ்சருட் பேரணி சித்திக்கவே.

(68)

74.       சித்திக்கு முத்திக்கு மாசித்து மாதவஞ் செய்தகவீர்

            சித்திக்கு முத்திக்குட் பட்டதன் றேயரன் சீர்மிகப்பே

            சித்திக்கு முத்திக்கு ழாம்போற்று மாதையிற் சேர்மினறஞ்

            சித்திக்கு முத்திக் குகனிற்கொள் வாண்மலைச் சேயிழையே.

(69)

75.       சேய கமலத் திருவைகு மாதைச் சிவன்விழியாற்

            சேய கமலத் திருவை குலையச் செயும்பரமன்

            சேய கமலத் திருவைகுன் றாதருள் சித்தன்வெண்மைச்

            சேய கமலத் திருவைகு வார்க்குஞ் செறிப்பவனே.

(70)

76.       பவசா கரத்தைக் கடத்துந்தொன் மாதைமெய்ப் பத்தர்தஞ்செ

            பவசா கரத்தையர் மாயாது காத்துப் பரிந்தருள்வை

            பவசா கரத்தைய லார்க்கிறை நீறு படும்படிபார்ப்

            பவசா கரத்தைக் குறியாற் றணந்து பதமருளே.

(71)

77.       பதந்தர வாவென் றுனைக்கூவி யுய்ந்த பரம்பரைவேட்

            பதந்தர வாழ்வன்று கொல்லோவெற் றுன்பப் படுத்துவதேன்

            பதந்தர வார்திசை யும்போற்று மாதைப் பரவரைச்சா

            பதந்தர வாமுற்று மீந்தருள் பேரருட் பான்மையனே.

(72)

78.       பானந் தணிந்த செவியான்றென் மாதைப் பரனமுத

            பானந் தணிந்தண்ட ரேங்கவொட் டான்மெய்ப் பயன்றரச்சோம்

            பானந் தணிந்தவிர் செஞ்சடை யான்பணப் பாந்தள்விருப்

            பானந் தணிந்தனை தீர்புகழ் தோய்தரப் பார்க்கினன்றே.

(73)

79.       பாரா தவரைத்தன் பண்பின ராக்குநன் பல்கதிர்வெப்

            பாரா தவரையன் மாலா தியர்பணி பாதத்தம்மான்

            பாரா தவரையர் மாய்பயன் மாதைப் பதியிலிச்சிப்

            பாரா தவரையில் வாளாதி கட்கும் பலநல்குமே.

(74)

80.       பலவகை யாயதெய் வங்களும் நீயெனப் பற்றெனையம்

            பலவகை யாய மயலாதி சூழ்தரப் பண்ணலென்மென்

            பலவகை யார்புரி பூசையு மேற்றவிர் பாதவைந்தம்

            பலவகை யானனன் போற்றிய மாதைப் பரம்பரனே.

(75)

81.       பரமசி வாமுக்கண் மாதேவ மாதைப் பதியாவம்

            பரமசி வாரணத் தோடுவெள் ளேறிவர் பண்ணவநின்

            பரமசி வாக்கியப் பேறளித் தென்னைப் பரிந்தருளியான்

            பரமசி வாயினர்க் கோரிலக் காகிப் பதைத்துளனே.

(76)

82.       பதத்தா மரைவிழைந் தைந்தெழுத் தோதுநர்ப் பற்றுமொரு

            பதத்தா மரையனை யாரெள்ளல் வேட்கும் பகவசிவ

            பதத்தா மரையுரு வாமாதை வாழுமை பாகதமிழ்ப்

            பதத்தா மரைவரென் றெற்சேர்த் துலகம் பகரச்செய்யே.

(77)

83.       பகரவொண் ணாதன வாஞ்செயல் வாய்ந்த பரத்துவசு

            பகரவொண் ணாதனன் மாதையில் வாழ்சிவன் பத்தியுண்மைப்

            பகரவொண் ணாதன தாத்தந்து மியான்செய் படிற்றுவெம்பா

            பகரவொண் ணாதனம் வேட்டுஞ்சில் பாடல்கள் பாடினனே.

(78)

84.       பாடியின் மாலை பலசூட்டி னேனின்னும் பாடல்விடேன்

            பாடியின் மாலை நிகர்வாழ்வெற் கிங்கெய்தப் பாலிகதுப்

            பாடியின் மாலைந் தொழிலாற்கொண் டங்கத்திற் பாதியிட்ட

            பாடியின் மாலை மிளிர்வீதி மாதைப் பதியண்ணலே.

(79)

85.       பதிபசு பாச நிலைதேறி மாதையிற் பத்திசெய்தப்

            பதிபசு பாச மருப்பெய்த நல்கற் பகர்ந்துளன்மூப்

            பதிபசு பாசங் கராவிரண் டாயிரம் பாரமருப்

            பதிபசு பாச மிவர்வாற்றந் தாயெனைப் பாலித்திடே.

(80)

86.       பாலிக்கு மாயனைத் தாயதொல் கங்கையென் பம்பைசுற்றிப்

            பாலிக்கு மாயனை யாண்டதென் மாதைப் பரமன்விழிப்

            பாலிக்கு மாயனைக் கொன்றுவை வேற்படைப் பாலற்றந்து

            பாலிக்கு மாயனை யச்சொல்லி யானதி பத்துய்த்ததே.

(81)

87.       பத்தா னனத்தனைத் தாள்விர லாலடர் பண்பினனா

            பத்தா னனத்தனை யஞ்செய்ய வாண்டவன் பாழிவெள்ளி

            பத்தா னனத்தனை யர்வீர்ந்த மாதைப் பதியெனுஞ்சு

            பத்தா னனத்தனை ஞாயந் தெரித்தும் பயந்துளனே.

(82)

88.       பயந்த மகவுடற் கூறுசெய் தானன்னர் பத்தியெண்ணிப்

            பயந்த மகவுறு திக்குமொர் பேறுறப் பாலிப்பையோ

            பயந்த மகவுரி பார்ப்பனச் சேய்க்கிடப் பண்ணினையே

            பயந்த மகவுரஞ் செற்றாய்தென் மாதைப் பழங்கள்வனே.

(83)

89.       கள்ளக் கருணைசெய் தாள்வார்தென் மாதைக் கடவுளரெங்

            கள்ளக் கருணையிற் கண்ணுமை கேள்வர் கரியனயன்

            கள்ளக் கருணைவெற் பானார்தொண் டெய்தினர் காய்வினைத்தீங்

            கள்ளக் கருணைய மாட்டாரென் பாருண்மை கண்டவரே.

(84)

90.       கண்ட கனாவின் பயனியாது மின்றிக் கழிவுறிற்கற்

            கண்ட கனாவி யறமென் றிடும்வன் கலியஞ்சுமோ

            கண்ட கனாவின் புறச்சேவித் தேத்தினற் காத்தெமனாங்

            கண்ட கனாவியுண் டாய்மாதை மேயகங் காதரனே.

(85)

91.       காதக ரஞ்சச் செயலே கருதிக் கதறுமென்னைக்

            காதக ரஞ்சரி யுஞ்குழ லார்த்தொழக் கைவிட்டிடேல்

            காதக ரஞ்சனத் தானவ ரஞ்சுகங் காளவல்வி

            காதக ரஞ்சதித் தாய்மாதை மாநகர்க் கண்ணுதலே.

(86)

92.       கண்ணக லம்புவி யுண்டுமிழ்ந் தானம்பிக் கைதொழுமுக்

            கண்ணக லம்பு விடமயின் றாய்சமர் கற்றுச்செய்வோர்

            கண்ணக லம்புவிற் குன்றுவந் தாய்நிற் கழறுமெம்மைக்

            கண்ணக லம்பு வினர்போற்றுன் மாதைக் கவின்பதியே.

(87)

93.       கவியலங் கார மலிமாதை யூர்த்தனிக் காவலமி

            கவியலங் காரக மேனியத் தாவென் கருத்தின்விளக்

            கவியலங் காரன்ன வீகைசெய் வான்மிகக் காதலித்தேன்

            கவியலங் கார சுரராற்செய் தாங்கு கலிமொய்த்ததே.

(88)

94.       கலிக்கா மனைய கவிநாவ லூரற் கறுவியிகழ்

            கலிக்கா மனையும் புரந்தாய்மிக் கேத்துமெற் கைவிடலி

            கலிக்கா மனைங்கணை பெய்தான்றென் மாதையின் கண்ணந்தநாள்

            கலிக்கா மனைக்களித் தான்மெச்சும் வாழ்வுறக் காத்தருளே.

(89)

95.       காத்தகை யானைக் கொடியாதி கொண்டு கனகநகர்

            காத்தகை யானைய ரெய்தரும் பேறிக் கணத்தளித்தொல்

            காத்தகை யானைய மில்லா துறச்செய்தி கற்றவர்வெஃ

            காத்தகை யானையச் சொல்லார்தம் மாதைமுக் கட்பரனே.

(90)

96.       கட்டந் தவிரதப் பொய்ச்சொன்மின் னார்முலைக் காதனல்குங்

            கட்டந் தவிரருட் பேறுதந் தாண்மலர்க் கான்சடிலங்

            கட்டந் தவிரகர் சூழ்மாதை யூர்முதற் காரணசெங்

            கட்டந் தவிரசி தக்குன்ற நேர்திண் களிற்றினனே.

(91)

97.       களிக்கடங் காதசை வார்மாவிற் காரிருட் கைக்கொள்பொல்லான்

            களிக்கடங் காதனல் கச்சிறு மாதர் கலவிநுகர்

            களிக்கடங் காத பரானந்த மீந்தருள் கண்டத்துற்றோங்

            களிக்கடங் காதவர் சூழ்மாதை வாழ்ந்தண்டர்க் காப்பவனே.

(92)

98.       காப்பவ னாகத் துயில்கூ ரரியுங் களித்தணிவெண்

            காப்பவ னாகத மாதிய மூன்றுடைக் கத்தவன்னிக்

            காப்பவ னாகலி தீர்மாதை நாத கடுவுணவங்

            காப்பவ னாகவி பாடலின் கூலி கனிந்தருளே.

(93)

99.       கனியக் கனியக் கவியாற் றுதித்துக் கருதலரக்

            கனியக் கனியமத் துந்தாழ்ச்சி யாங்கொல் கருப்புவின்மூர்க்

            கனியக் கனிய நெறியுய்த் திடாதெனைக் காத்தியணி

            கனியக் கனியதி தீர்ப்பாய்தென் மாதைக் கலாதரனே.

(94)

100.     கலையணி யத்தனை யுந்தேர் முனிவர் கருதமதிக்

            கலையணி யத்தனை மாதைப் பதிநடுக் காணுபுவெஃ

            கலையணி யத்தனைய கூத்தைப் போற்றலை கள்ளநெஞ்சே

            கலையணி யத்தனை யத்தாழ்த்துந் தாளின் கதிபெறவே.

(95)

101.     கதியாசை யாதிபன் றன்மகள் காந்த கறையில்விடைக்

            கதியாசை யாவினு முய்க்கு மகாரத காதணிசங்

            கதியாசை யாழ்த்துநின் மாதையின் மாட்சி கருதெனெஞ்சின்

            கதியாசை யாமதன் மேற்சித்தி யாசை கவற்றியதே.

(96)

102.     வற்றாத பம்பை நதியுந் தமிழுணர் மாதையிற்சி

            வற்றாத பம்பையொ டெந்நேர மெண்ணி மனத்தினலை

            வற்றாத பம்பையன் பெற்றமை கூறிடில் வன்றுயர்க

            வற்றாத பப்பையந் தோடுஞ்சித் தோரெட்டும் வந்துறுமே.

(97)

103.     வந்தனஞ் செய்யகந் தோறுந் துயில்வள மாதைப்பிரான்

            வந்தனஞ் செய்யத் துணிந்தேற் கஞ்சாது மலயமலை

            வந்தனஞ் செய்யமர் செய்கின்ற தேன்கடன் மாட்டிலன்று

            வந்தனஞ் செய்யருள் செய்யவ னாலுய்ந்த வானவரே.

(98)

104.     வானகத் தையர் குலமஞ் சரக்கன் வருந்துறத்தாள்

            வானகத் தைய மறவொறுத் தானணி மாதையில்வாழ்

            வானகத் தையன் மணவாள னென்னைப்புன் மாந்தர்பல

            வானகத் தையனை விட்டின்ன லீந்து மயக்கல்வம்பே.

(99)

105.     மயக்க மறம்பெருக் குஞ்சீர்முத் தாம்பிகை வாமத்தில்

            மயக்க மறன்மகட் டாங்கநம் மாதை வயிற்குலவு

            மயக்க மறபுவெண் ணீறணிந் தைம்பொறி மாட்சிகண்டு

            மயக்க மறத்தெளிந் தோர்கணெஞ் சம்பொன் மலையொக்குமே.

(100)

முற்றிற்று.

 

நூற்பயன்

106.     யமகவந் தாதிப் பகையாவு மஞ்சுமிக் கெய்துநல்லி

            யமமகவந் தாதிறுஞ் சித்திமுத் தித்தவ மேறுநல்கி

            யமகவந் தாதிடு வார்க்கருண் மாதை யிறைவனணி

            யமகவந் தாதிக் கவிநூறு நன்குணர்ந் தேத்திடினே.

(101)

தெய்வீகம்

107.     வேண்டாந் துதியென்ற மாதைப் பிரானருள் வேட்டடியே

            னாண்டாலுங் கைவிடுத் தாலுநன் றென்றிவந் தாதிசொன்னே

            னீண்டார்வ முற்றன மென்னுங் குறிப்பொன் றியங்குவித்தான்

            றூண்டா விளக்கன்ன சாட்சியென் னெஞ்சுஞ் சுரர்முற்றுமே.

(102)

தெய்வமே துணை.



 

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக