வியாழன், 24 செப்டம்பர், 2026

அரசாட்சி

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

அரசாட்சி

காப்பு

(நேரிசை வெண்பா)

வரசாட்சி யாநிறைந்த வானவனைப் போற்றி

யரசாட்சி நூலொன் றமைக்குஞ் – சரசாட்சி

யாகிக் கமலத் தயனா மவரையெல்லா

மோகிக்கச் செய்வாண் முகம்.

நூல்

ஆழி வளையுமுல தத்தனையுந் தன்குடைக்கீழ்

வாழியற்கை யெண்ணி மகிழாமல் – வீழியிதழ்

மங்கைகொண்க னாண்மை மதித்தாங் கிறைக்கஞ்சி

யங்கை குவிப்போ னரசு.

(1)

அரசன் மகனரச னாவா னுலகின்

றிரமறியான் றானாகத் தேறி – வரமதனால்

வல்லபத்தா லாள்வான் மதித்தறிவான் மற்றவனும்

நல்லவர்ச்சேர்த் தாலறிய லாம்.

(2)

தன்சே வர்க்குத் தரணியஞ்சு மாறிறைவ

னின்சேவை பெற்றார்க்கு மெய்துவான் – மிச்சேர்க்கை

யாதியவும் நீத்திட் டருந்தவஞ்செய் வார்க்குமஞ்சு

நீதிமற வான்முதன்மன் னே.

(3)

காட்டிற் கிழங்கயில்வான் காதலன்றன் கைப்பரசால்

வீட்டிடமுன் மாய்ந்தபல வேந்தரையும் – நாட்டிற்

குயமதலை யாலிறந்த கொற்ற வனையு

மயலறச்சிந் தித்திருப்போன் மன்.

(4)

மேதினியோர் சொன்மொழியின் மெய்யறிந்து பொய்யகற்றி

நீதி முறையி னிறுவறியா – னேதிலர

சின்றிமுழு தாண்டுறினு மெண்ணறிய பல்பிறப்பிற்

பன்றியினுந் தாழ்வாய்ப் படும்.

(5)

பொய்யுரைப்பா ரொல்கப் புரிந்த விதம்புகல்வான்

மெய்யுணர்த்துந் தெய்வவருண் மேவாதான் – செய்யு

மரசுரிமை யின்பயனை யாராய்ந் தறியி

னரகமுற்றுஞ் சொற்கமென்ன லாம்.

(6)

அம்பான் மனையிழந்த வந்தணனோ டோர்வழுதி

கம்பார் குழையான் கருணையா – னம்பாரு

நம்புந் திருக்கூத்தோர் நாய்கனில்லிற் கண்டவிதம்

வம்புரையென் னான்சிறந்த மன்.

(7)

தயரதன்சே யாதிமன்னர் தாமும் வசிட்டப்

பெயர்முனிவ னாதியர்சொற் பேணி – யுயர்தருசீர்ச்

செங்கோ னடாத்தும்விதந் தேறாத தீவேந்தர்

வெங்கோல்கண் டஞ்சுநில மின்.

(8)

எல்லாருங் கொன்றருந்தா வேற்ற முறத்திருத்தும்

வல்லாண்மை வேந்தன் மதியன்னா – னல்லாத

மன்ன ருடுவினத்தை மானுவா ரிந்தவுண்மை

சொன்னவரா ரென்னினுநந் தோள்.

(9)

ஆலால முண்டா னருள்வேடத் தொண்டர்களைக்

கோலா கலத்தமிழ்ப்பாக் கூறுநரைத் – தோலாத

வீரத் தொழிலோரை வேண்டாத வேந்தர்பெறும்

பேரற்றுப் போமுலகிற் பின்.

(10)

வேதியரை யாவரினு மேம்படவைய் யாதுமற்றைச்

சாதி யவர்றொழிலிற் சாரவிட்டு – நீதி

செலுத்துகின்ற மன்னர் சிலநாளிற் றம்மில்

வலுத்தவர்கை வாட்கிரையா வார்.

(11)

புற்கொய்தற் கஞ்சும் புனித மறையோருஞ்

சொற்கவிச்சை மீமாஞ்சன் சொல்லாற்கொண் – டற்களந்தோன்

பாகமென்று மூனைப் பகிர்கின்ற பார்ப்பாரு

மேகமெனக் கொள்ளா னிறை.

(12)

தன்னரசை நல்கிடினுஞ் சற்றும்விரும் பாதுமறை

பன்னனமுத லாயறொழிற் பாராட்டு – நன்னலமே

வீழிதயத் தந்தணனை மேழியுங்கொள் வேதியனோ

டாழிதயத் தேந்தன்மதி யான்.

(13)

குற்றத்தை விட்டுக் குலத்தளவிற் றண்டங்கள்

சொற்ற பலநூற் றுணைக்கொண்ட – கொற்றவர்க

ளெல்லாருந் தங்க ளினத்தோ டழிந்தவுண்மை

நல்லா னறிந்து நகும்.

(14)

சுத்தமின்றி வேள்விகளாற் சொர்க்க முறலாமென்

றித்தறையி லாடுமுத லேழைமையா – லெய்த்த

மனிதர்வரை வெந்துதின்ற மன்னரெல்லோன் கண்ட

பனியெனப்போ யேற்றார் பழி.

(15)

தான்மற்றோர் வேந்தன் றனைப்பணிய நாணானும்

வான்மட்டுங் கீர்த்தி வளரானு – மான்மச்ச

மன்ன விழியார்க்கே யாயுண்முற்றுந் தோற்பானு

மன்னர்களிற் றாழ்ந்த மகர்.

(16)

இங்குள்ள மாத ரிகலோர்கைப் பட்டாலு

மங்குள்ளா ரின்பநல மாமென்று – பொங்கு

மதிவீரத் தாற்பொரும்பே ராற்றலுடை மன்னன்

விதிர்வாளே வாள்வேலே வேல்.

(17)

தன்னா லிறந்தார் தளைப்பட்டார் தம்மனைமார்

பின்னாசையா லுயிரைப்பேணினா – லன்னாரைக்

கொண்டுவந்து தன்றோட் குறிப்பார் பணிபுரிதற்

கண்டுவக்கை வேந்தன் களி.

(18)

தன்றோள் கருதித் தளராத தையனல்லார்

மென் றோட் புணர்ச்சி விரும்பானே – குன்றோ

டுறழுந் தருமம்விளைத் தும்பர்களும் போற்றற்

பெறவல்ல மன்னர் பிரான்.

(19)

தோல்வி யுற்றுந் தன்படையாற் றுண்டுபட மாட்டாமற்

கால்விலங்கிற் பட்டபல காவலரை – மால்விளைக்குங்

கண்ணார் புதல்வரொடு காங்குங் கருணையுள்ளான்

விண்ணாடர் போற்றிசைக்கும் வேந்து.

(20)

தற்கடங்குஞ் சிற்றரசர் தந்தலையாற் கொண்டுதரும்

பொற்கணத்தி னாட்டமட்டும் போதாது – நற்கருணை

யாதி வழுவா தவர்நடக்கை காண்கின்ற

நீதியினும் வேண்டு நினைப்பு.

(21)

சிறறரசர் தங்குடையைச் சீரியதென் றெண்ணும்வண்ண

முற்றரச னீதி முறைபிறழ்ந்தாற் – பற்றகன்ற

மேலோரா லேனும் விழிபொருத்த வேவிரும்பு

மாலோரா லேனு மறும்.

(22)

பன்னகத்தின் சென்னி பரிக்கின்ற பார்முழுதுந்

தன்னதெனக் கொள்ளுந் தனிக்கவிகை – மன்னனுக்கும்

வைவலிவாள் வீரமுதல் வண்மையெல்லாங் கைவரினுந்

தெய்வசித்தி வேண்டுமெனச் செப்பு.

(23)

தெய்வவரு ளுற்றுந் திறற்சூர னாதியவர்

நைவடைந்த வாறு நவின்றிட்டாற் – பொய்வழக்கென்

றெள்ளாது முற்று மிறுமாப்பிழந் துணர்ந்து

கொள்ளார்வத் தோனிணையில் கோன்.

(24)

தக்கனெனு மன்னன் றதீசி முதலோர்சொல்

லொக்க மறுத்திட் டொருநொடியிற் – றொக்கவர்க

டம்மாண் மையுமழியத் தன்றலையு மாறியவா

றிம்மா நிலமறிந்த தே.

(25)

ஐயிரண்டு சென்னி யரக்க னகிலத்தோர்

மையியைந்த கூந்தன் மடநல்லாண் – மெய்யிலிச்சை

கொண்டதனாற் றன்பெருமை குன்றியழிந் தானெனுஞ்சொற்

கண்டறிகை மன்னர் கடன்.

(26)

யானே பரமென் றியம்பு மிரணியப்பேர்க்

கோனேர் மடங்கல் குதித்தவன்றன் – னூனேர்

பிளந்துதிர முண்டுமைந்தற் பேணும் பெருமை

யளந்தறிய வேண்டு மரசு.

(27)

உலகளிக்கு மன்னவரா லுண்டாயப் பலவா

றிலகு மவையினத்தி லியாதுங் – குலமகள்வாய்

கூகூ வெனவலறக் கூறைகளைந் திட்டதுபோன்

றாகூன மெய்தியதின் றால்.

(28)

ஆற்று மணற்பெருக்க மன்னமன்ன ரிற்பலரு

மூற்று நெறியே யுஞற்றினார் – போற்று

மதலையைத்தேர்க் காலிலிட்ட மன்னனெனப் பாருக்

கிதமியற்றி னார்சிலர்தா மே.

(29)

பாருலகின் மானிடர்செய் பாவபுண்ணிய யத்திலெல்லாஞ்

சாருமொவ்வோர் பங்கென்னுந் தன்மையா – லியாரு

மறியாத வேடத்தோ டாயினுஞ் சென்றுண்மைக்

குறிகாண்பா னீதியுடைக் கோன்.

(30)

எத்தகவோர் தற்காண்டற் கெண்ணிவந்தா ராயிடினு

மத்தருணங் காட்சி யருள்வானே – யித்தறைக்கோர்

மன்னானே மென்ன மகிழாதிவ் வாழ்க்கையினா

லென்னாங்கொல் லென்றிடைவோ னே.

(31)

அணியும் புகழ்வேட் டரண்மனையின் முன்பின்

மணியொன்று கட்டுவிக்கு மன்னர் – துணிவுந்

தயையு மடவார்போற் றம்மை மறைப்பார்க்

கியையா திகழ்ச்சியுண்டா மே.

(32)

வாயின் மணியொலித்தால் வந்து வழக்கறுத்துக்

கோயில் புகத்தகுஞ்செங் கோல்வேந்தன் – றாயி

லுலகளிக்கு நாளி லொருகுறையு மின்றி

யிலகு முயிரனைத்து மே.

(33)

மெய்யே பெருகி விளங்குதற்கு மேதினியில்

பொய்யேமேன் மேலும் பொலிதற்கு – மையேழுஞ்

சீரறிந்து பெய்தற்குஞ் செய்தபயிர் தீதற்குங்

காரணதன் காயின்மன்னே காண்.

(34)

வேந்தன் சினஞ்செய்யில் வேறுதுணை யில்லையென

வாய்ந்துரைத்தா ளௌவை யதுவன்றி – வாய்தவுல

கெல்லாமுங் கோனோக்கு மென்றுரைத்தார் வள்ளுவனார்

வல்லா லறிவார் வகை.

(35)

மன்னன் கொடுங்கோல் வழிநின்றான் மாறிலருண்

முன்னவன்றன் னீதி முறையும்பொய்த் – தின்ன

லுலகின் மலிவா யுணர்வுடையார்க் கெல்லா

மலகின் றியமெலிவுண் டாம்.

(36)

தொண்டர்களை முற்றத் துறந்தோரைப் பாவலரைத்

தெண்டனிடற் குள்ளமொல்குந் தீவேந்தன் – மண்டலத்தைச்

சூழ்ந்தகட லன்னபடைத் தோற்றமொடு போர்க்களத்தில்

வீழ்ந்திறக்கை முக்காலு மெய்.

(37)

கோலத் தமிழோட்டக் கூத்தனிரு தாள்களையுஞ்

சாலத் தலைமேற் றரித்ததனால் – சீலமலி

பொன்னகர்க்குப் போயும் புகழ்ச்சியுட லால்வளவ

னின்னம் விளங்குகின்றா னே.

(38)

எந்த நலமரசற் கில்லா விடினுமிறை

தந்த வுலகென்றுந் தான்பிழைத்தா – லிந்தக்

கணமேமற் றோர்வேந்தைக் கற்பிப்பா னென்று

முணர்வாற் றெளிதரல்வேண் டும்.

(39)

தன்னைப் பணியுமவர் தங்களுக்கோர் கூற்றாகா

தன்னையெனத் தாங்கு மருள்வாய்ந்த – மன்னைப்

புவியிலுளா ரியாருமொன்றாய்ப் போர்பொரினும் வென்றிட்

டவிர்தரச்சூழ் கின்ற தறம்.

(40)

சத்தியத்துக் கஞ்சுந் தனியமைச்ச னல்லான்சொல்

லுத்தி வழிசெங்கோ லோச்சினான் – முத்திவழி

தூர்வதன்றிப் பாருலகுந் துன்பக் கடற்பெருக்கா

லார்வதன்வாய்ப் பட்டதற்கொப் பாம்.

(41)

அன்றோர் வழுதி யமைச்சமைந்த வார்வத்தா

லென்றோ டுறழுமற மெய்தியப்பான் – முன்றோன்று

மீசன் றனையடிக்கு மேற்றமும்பெற் றெங்குமவன்

வாசமுற்ற தோர்ந்தான் மதித்து.

(42)

கரமிருப தெய்திக் கடல்சூழ வாழ்ந்தோ

னரவக் கொடியமைந்தோ னாதிப் – புரவலர்கண்

மந்திரிசொற் றீங்கான் மடிந்தவிதம் வார்புவிக்கு

மிந்திரனூர்க் குந்தெரியு மே.

(43)

தன்சென்னி பாரிற் றவழாமுன் றான்வணங்கு

மன்சென்று மற்றோர் வயவேந்தற் – கின்சொன்

மொழியச் சகியா முரணுடையான் றானே

பழியிறந்த சேனா பதி.

(44)

அன்னிய மன்ன னளிக்கும் பொருணசையாற்

றன்னிறைக்கு வஞ்சந் தளகர்த்த – னுன்னி

லவனான் மடிவுற் றவகீர்த்தி யெய்திப்

பவமார் நரகிற் படும்.

(45)

மன்ன னொருவனைமுன் வஞ்சித்த மாபாவி

தன்னரசிற் காமாறு சாற்றிடினும் – பின்னவனைப்

பாரறியக் கொல்லல் பழியன் றிதுபழுதில்

கூரறிவார் வேந்தர் குணம்.

(46)

வேற்றரச னீதி விலக்கஞ்சி வீடணன்போற்

றோற்றறிஞன் றன்னைச் சுமக்கலா – மாற்றலெண்ணிற்

சிங்கமுகன் கும்பகன்னன் சீரார் விகன்னனன்னார்

தங்க ணிலைக்கிழிந்தோன் றான்.

(47)

வீடண னிராவணன்றன் வேட்கைவிட்டுப் போமன்று

காடடைந்து மாதவத்தைக் கைக்கொண்டா – னாடனைத்தும்

வேண்டிடினு மெய்தும் வியனிலங்கை மட்டிலிச்சித்

தாண்டியல்கை நீதி யல.

(48)

சிற்றரசர் தம்மவையிற் சேவிப்பா ராதியவர்

மற்றவர்பொன் வேண்டி வழக்கோரஞ்- சொற்றவிதங்

கண்டறியான் கண்டுங் கருதா னனையமன்னர்க்

குண்டளற்றி னின்ன லொருங்கு.

(49)

பொன்றருவார் குற்றம் புதைக்கின்ற புன்குணத்தோன்

றன்றலைவி யோடுதித்தோன் றானெனினு – மன்றவன்கை

கொய்துவிட மாட்டாக் கொடுங்கோ லரசனென்று

மெய்து நரகி னிடம்.

(50)

எல்லாச் சமையத்து மீச னிருந்தாலு

நல்லாற்றிற் சேர்ப்போ னவையெய்தான் – மல்லாடிக்

கொல்லா நெறியோரைக் கொல்வழியிற் கூட்டுமன்னன்

பொல்லா நரகிற் புகும்.

(51)

சமயப் பகுப்பின் றரமறியா மன்ன

னமையவொன்றை மேற்படுத்த லாகா – திமையவரை

யன்ன குரவன் நெறியத்தனையு மாமெனத்தேர்ந்

தின்னலின்றிக் காப்ப திசை.

(52)

தன்சமய மல்லாச் சமயத் தொருகுரவ

னென்சமயங் கொள்ளென் றெதிர்தோன்றி – வன்செயல்கள்

வேண்டுவன் செய்யின்மன் னன்வெஃகலாம் வேற்றுயிர்கட்

கீண்டுறுகண் செய்யா தெனில்.

(53)

கொன்று புலாலருந்துங் கோதுபடும் புன்சமயத்

தொன்றுங் குரவனரு ளுற்றாலும் – ஒன்றுதன்னைச்

சேரென் றிடினுமன்னன் சேனையொடு மெய்ந்தழிகை

சீரென் றுணர்வார் சிலர்.

(54)

கொல்லா நெறியின் குரவ ரிருதிறத்தார்

வல்லாண்மை பேசி வழக்கிட்டான் – மல்லார்தோட்

கூன்வழுதி யென்னவருள் குன்றாதார் பங்கினிற்கை

தான்வழுத்தீர் மன்னனற் கை.

(55)

பொன்விரும்பித் தன்னெறியிற் புக்குமகிழ் பூரியரை

பன்விரகுள் ளானேன் மதித்திடான் – பின்விளங்கும்

வேந்துநெறி வௌவி விரைந்திதனை விட்டதனிற்

பேர்ந்துவக்கு மாறெண் ணுபு.

(56)

ஏடனைகண் மூன்று மிகழ்ந்திட் டினிப்பிறவா

வீடளிக்குந் தொன்னெறியை மெய்யருளாற் – றேடறிஞர்

தன்னை மதியாத தன்கையறிந்து சார்ந்தொழுகு

மன்னைவெஃகு மிப்பார் மகள்.

(57)

வட்டிக்கும் வட்டியிட்டு வல்வழக்குப் பேசும்வஞ்சச்

செட்டிகட்கா மாறரசு செய்யுங்கோன் – வெட்டியுல

கீரேழும் வெல்லு மியல்புடையா னானாலும்

பாரேச வீனப் படும்.

(58)

கொள்ளின் மலிவுங் கொடுக்கிற் குறைவுமுற

நள்ளிப் பரதவிக்கு நாயகர்தாங் – கள்ளியற்கை

தோயவேட ரொல்கத் துணியுந் தொழிலினள்

வாய்வேந் தகிலத் தணி.

(59)

மண்டுபுகழ்க் கீனம் வருமென்றொல் காதுமன்னன்

கொண்டுவிற்கும் புன்றொழிற்கைக் கொள்வானேற் – றிண்டுமிண்ட

ரஞ்சார் பொருளே யரசரம் நீதிமிஞ்சும்

பஞ்சாயு தற்காம் பழி.

(60)

ஆட்டின் றிரள்கட் கடற்புலிகட் காவல்வைக்குங்

கேட்டினிணை யாய்ந்து கிளத்துங்கா – னாட்டிற்

கரசாக வாணிபஞ்செய் தாதாயம் பார்க்குங்

கரவாளர் தங்களைவைக் கை.

(61)

கள்ளுந் தொழில்வணிகர் காவல்வ ராயிடினு

மெள்ளுஞ்சொற் கொல்கா ரிகத்துள்ளார் – கொள்ளு

மிடிநீங்கப் பாடுபட்டு வேல்வழுதி யென்ன

மடியாப் புகழ்ச்சிமரு வார்.

(62)

ஏதில் வணிக ரிறையா யிரங்கினர்போற்

றீதிலற மொன்றொருக்காற் செய்தாலு - மூதியம்பார்த்

தேதேனு மோர்விதத்தி லெண்மடங்கு பொன்கவாவா

ரீதே யவர்தம் மியல்பு.

(63)

வணிகரினுஞ் சரதம்வண்மை யன்னவர் யந்த

திணிபெறுநெஞ் சாளர் சிலருண் – டணிமகுட

மன்ன ரவர்களையு மற்றவரிற் சேர்த்துவிட்டா

லின்னன் மிகவினையு மே.

(64)

இந்த வுலகிற் கினியதுணை மேகமென்று

மந்த முகில்பொழிதற் கான்துணை – சந்ததமு

நீதிமன்னன் கையி னிலவுசெங்கோ லென்றுமெடுத்

தோதிடு நூல்கோடி யுள்.

(65)

பாரி லுயிரும் பயிரும் பதைபதைப்ப

மாரிகுன்றிப் பஞ்ச மலியுநர் - ணேரிற்

றனதுபிழை யென்றுணர்ந்து சஞ்சலத்திற் றாழா

மனதுடைய வேந்தன் மரை.

(66)

மாதமொன்றின் மூன்று மழைபெய் துலகமுற்று

மேதமின்றி வாழு நலமெண்ணாமற் – போதப்

பொருளீட்ட லாதியபல் போகம் விழைவா

னிருளீட்டு நெஞ்சத் திறை.

(67)

உரிய பொருளை யுலகருய்தற் கீந்தார்

கிரியனைய மெய்ப்புகழ்ச்சி கேட்டும் – வரியமைத்துத்

தன்னிறைக்கு மேற்கொள்ளச் சற்றுமன மொல்காத

மன்னிகழ்காற் பெய்யா மழை.

(68)

மழையாற் பயிர்விளைத்து மாநிலத்தோர்க் கெல்லாம்

பிழைதீ ருணவுநல்கும் பெற்றி – தழைவோரே

தங்கோற் றுணையாந் தகையுணரா மன்னரெல்லாம்

வெங்கோலா ரென்றுரைக்கை மெய்.

(69)

கொற்றவரின் மற்றோர் குலவேந்தன் றன்குடைக்கீ

ழுற்றனவெல் லாங்கொளுநா ளுண்டென்னச் – சுற்றத்தா

ருய்வதற்காம் பூமி யுழுந்தொழிலுங் கொள்வோனே

பொய்வழியிற் சற்றும் புகான்.

(70)

தானும் புகலிற்ற லைக்குடியா மென்றுணர்ந்து

கோனு மவர்தொழிற்கைக் கொள்வானேல் – வானுந்திப்

பெய்யுமுகிற் றன்மை பிறங்கும் பிழைமுயலான்

பையுலக நிந்தை படா.

(71)

ஆறுபங்கி லொன்றேகொண் டாளாத நீதிபற்றி

வேறு விதமா விழைவானேற் – கூறுமன்னன்

றானும் பிழைப்படுவான் றன்குடியுஞ் சீரழியும்

வானும்பெய் யாது மழை.

(72)

செங்கோ லரசுறுங்காற் சீரியவ ரியாவர்க்கும்

பொங்கோகை யுண்டாதல் போலவே – வெங்கோலா

ராளுங்காற் றீயோ ரனைவர்க்கு மார்வமிக

நீளுமென்றான் மாறுசொல்வா னேன்.

(73)

தென்புலத்தா ராதியவர்ச் செய்யதமிழ் வேதத்தின்

மன்புலமை வள்ளுவனார் வாய்வகுக்கு – மைம்புலத்தார்க்

கானபணி செய்யார்மேல் நத்தகன்போற் சீறுமன்னன்

றானகிலத் திற்கொருநற் றாய்.

(74)

சீரார் பிதிர்முதலாந் தெய்வங் களைச்சிறிது

மாரா தியாம லறஞ்செய்யா – தோராறு

வண்சுவையோ டுண்ணாது வைத்திருப்போர் பொன்கவர்வோன்

விண்சுமக்கு மன்புகழ்ச்சீர் வேந்து.

(75)

தெய்வங்கண் மீதுபழி செப்பியூன் றின்னுநரைக்

கொய்வதற்குள் ளஞ்சாக் குலவேந்தன் – மெய்வலிமை

குன்றா தவன்யந்தக் கூட்டமொடு கோதினிலை

நின்றாருங் காப்பார் நிதம்.

(76)

மன்னவனு மூனருந்து மாபாவி யாங்காலத்

தன்னவனும் விதித்த வந்தணனுந் – தன்னவளை

நல்கறியுங் கொல்லா நமனு நலம்பெரிது

மல்கினராற் கொள்வார் வசை.

(77)

சாலு மகிமைத் தவவேடத் தொண்டரது

மேலுண்மை நாட்ட மிகக்கொண்டு – பாலுறழு

நெஞ்சார்க் கினியபணி நித்தமுஞ்செய் கின்றபண்பி

லெஞ்சாமை வேண்டு மிறைக்கு.

(78)

அற்றாறைத் தேறேலென் றன்றுதிரு வள்ளுவனார்

சொற்றா ரெனினுந் துணிந்தவன்பாற் – கற்றானற்

மேலோர்க் குதவுதலும் வெந்தொழிலோர்ச் சீறுதலுங்

கோலோர்க் கியைந்தாற் குணம்.

(79)

அஞ்சலெழிற் செங்கோ லரசே யறவோர்நேர்

வஞ்சகரு முண்டு வகுக்கின்றே – னெஞ்சகத்தோ

டெப்பொழுதுங் கொன்றருந்த லீனமெனச் சொல்வோரே

தப்பொருங்கு தீரமெய்த் தவர்.

(80)

கன்னடதே யத்திற் கருணை வசவண்ண

ரென்ன வொருவரிருந் தின்புற்றா – ரன்னவர்தாந்

தொண்டர்பணி செய்தவிதந் தொல்லுலகஞ் சொல்லுமன்னர்

கண்டறிந்து கொள்ளல் கடன்.

(81)

தீய்ந்தபயிர்க் கும்வித்துச் சிந்தாத செய்யினுக்கும்

வாய்ந்த பகுதிகொள்ளு மன்னவரை – யாய்ந்தனன்கை

செய்யத் துணிந்தவுடன் சென்னிமுன்கொய் தானவற்றைக்

கொய்யத் துணிந்திலதென் கொல்.

(82)

சத்தியள விற்றறை யிற்பயிர் செய்வானே

யத்திறைஞ்சி னாலு மிரங்காமல் – வைத்திருக்குஞ்

செய்யனைத்துஞ் செய்யென்னச் சீறுகின்றோன் றானுமிந்த

வையமதற் காகாத மன்.

(83)

பங்காறி லொன்றே பகுதிகொள்ளும் பார்வேந்த

ரிங்கார் பயிர்செயினு மின்றெனினு – நங்காவற்

கூலி குறையுமென்றுங் கூறிடா ரானாலு

மாலிமுகில் செய்யு மது.

(84)

ஏன்ற வலியுளரா யேற்றநில மில்லாதா

ரான்ற வரசற் கதுசொன்னாற் – றான்றனக்கு

வைத்திருப்ப வற்றேனும் வாரப் பயிர்காவ

தற்ற மளிப்ப தறம்.

(85)

தாம்பயிர்செய் கில்லாத் தருசுநிலத் தைப்பிறர்பா

லாம்பயிர்க்கு நல்கார்க ளாமென்னில் – வேம்பணிவா

னன்னமன்ன னீந்திடலா மானாலு மப்பயனிற்

றன்னளவே கொள்ளத் தகும்.

(86)

கள்ளர்க்கூன் விற்குங் கடைச்சீர் நனிவிழையு

மெள்ளற் றொழிலரசற் கேற்றதன்று – விள்ளவைகொண்

டுண்பாரை விற்பா ருடனே யொருங்கொழிக்கு

நண்பாள னாத னலம்.

(87)

விற்பவற்றி னல்லனவும் வேண்டா தனவுமறிந்

தற்பமுமா றாட்ட மளவுநிறை – யிற்பழகா

வண்ண முயன்றுவணி கர்தொழிற் சீர்படுத்து

மெண்ண மரசற் கிசை.

(88)

வாலிபத்தி னூலிழந்த மங்கையரை மாரிமுன்போற்

றாலிகட்டச் செய்த றருமமே – சூலினராய்ப்

பெற்றா தரியாது பிள்ளைக் கொலைமுயல

லுற்றா லிறைக்குண்டா மூறு.

(89)

தன்கணவன் மாய்ந்தபின்னர் தான்வாழச் சம்மதியா

மின்கனலீ கென்றிரந்தால் வேந்தன்றா – னன்கருமை

பாராட்டி யுந்திருந்தாப் பட்சத்தி லீந்திடலாந்

தாரா தடக்க றவறு.

(90)

தன்னூ லிழந்துந் தழலிற் குதியாமற்

பொன்னூ லொருவனல்கப் பூணமற் – பின்னூரா

ரெள்ளத் திரிவாளை யாவனிடத் தானாலுங்

கொள்ளக்கொ டுக்கைமன்னன் கோள்.

(91)

மானம் புரந்தொழுகு மங்கையரை வார்புவியும்

வானகமும் போற்றும் வகைகண்டு – தானவரைத்

தாயா மெனக்கருதுந் தார்வேந்தன் றன்புகழ்ச்சி

மாயா தொளிரும் வளர்ந்து.

(92)

கற்புடைய நன்மனைவி கண்கலங்க நாடோறும்

பொற்புவிலை மாதரில்லிற் போவாரை – வற்புறுத்தித்

தண்டித் தடக்குந் தகைமருவுந் தக்கோனே

பெண்டிக்கும் போற்று மிறை.

(93)

புகழை மதியாது பொன்னை மதிக்கு

மிகழ்வுடைய மன்ன னெவனேனு – மகழ்கடல்சூழ்

பூவுலகும் வானுலகும் பொன்றாம லுள்ளமட்டு

மேவு நரகிலென்கை மெய்.

(94)

சாலை தடாகந் தருமந் தவப்பள்ளி

யாலயங்க டம்மை யழிக்கின்றோன் – மேலையுல

கிந்திரனோ மன்னே யெனினு மிகலோர்தம்

வெந்திறற்கூர் வாளால் விழும்.

(95)

கோசிகனோ மேலோர்பொய் கூறெனினுங் கூறாம

லாசிலரிச் சந்திரற்கொப் பாவார்க்குங் – காசினிமுற்

றுண்டானொற் றாயு முதவாச் சுயோதன்னீர்

கொண்டார்க்கும் வேண்டாங் குரு.

(96)

தற்குலக மஞ்சலெனத் தானுலகிற் கஞ்சுதன்மை

முற்குறிக்கை மன்னன் முறையேனு – நற்கொள்கை

யொன்றினிலை காண்பா னொருங்கிகழப் பெற்றாலும்

பின்றிகழுங் கீர்த்தி பெரிது.

(97)

பாராது தன்கைப் பணம்விரும்பிச் சேவிப்போர்

பேரா லுலகாளும் பெற்றியொன்று – நேராரை

வெல்லும்வலி யில்லா வெறுமையொன்றும் வேந்தனிடத்

தொல்லுமெனிற் பாழா முலகு.

(98)

தன்னரசை யாளுந் தனையனையுந் தன்குடியிற்

சின்னவன்றன் சேயினையுஞ் சேர்த்தெண்ணூ – மன்னன்

மனத்தினிலு முன்னாள் வகுத்த மனுநூல்

கனத்ததல்ல வென்கை கடன்.

(99)

முற்றத் துறந்த முனிவோர்க் கடிமைசெய்யுங்

கொற்றவரே நீதிக் குறையெய்தார் – மற்றவர்க

ளெவ்வாறு செய்திடினு மீனமடை வாரெனலா

லிவ்வாறிந் நூன்முடித்தே மியாம்.

(100)

மல்லிலங்குந் திண்டோள் வயவேந்தர் நீதிமுற்றுஞ்

சொல்லி முடிக்கத் தொலையாவர் – னல்லியற்கொண்

டிவ்வளவிற் சொன்னே னினியாவ ரென்சொலினு

மவ்வளவு மீங்கிவற்றுள் ளாம்.

தெய்வமே துணை.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக