வியாழன், 24 செப்டம்பர், 2026

தவத்திரு சுந்தர சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

 

தவத்திரு மருதாசலசாமி அருளிச்  செய்த

தவத்திரு சுந்தர சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

காப்பு

(நேரிசை வெண்பா)

துங்கம் பொருந்தும்ஸ்ரீ சுந்தரசு வாமிகள்மேல்

தங்கம் நிகர்பிள்ளைத் தமிழ்பாட – அங்கசன்

தைக்கும் சரத்தாலே தாழ்வார்தா ழாதைந்து

கைக்குஞ் சரத்தாளே காப்பு.

 

1.            காப்புப் பருவம்

சுகந்தருங் கமலமக ளமர்ந்ததிரு மார்பமுஞ்

                        சுடராழி சங்குதங்குந்

            தூயகர மலர்களும் பாகவத ரிதயமுறு

                        துணையடிச் சரணங்களுஞ்

சகந்தனை யருந்தியுமிழ் திருவாயு முளவருட்

                        சலதிபைங் கொண்டல்பார்த்த

            சாரதி கசேந்திரன் றன்னைரட் சித்தருள்செய்

                        சகநாத னைப்பணிகுவாம்

மகந்தரும் பதவிபெறு மிந்திரன் பொன்நாட்டை

                        மானுமுயர் சிரவநகரில்

            மாகொங்கு வேளாளர் வேலப்பர் சின்னம்மை

                        மாதவப் பயனதாக

நகந்தொறுந் தங்குகுகன் நல்வேலி னமிசமாய்

                        நானிலத் துய்பவித்தே

            நல்லோரெ லாம்புகழ வல்ல சுந்தரமெனும்

                        நற்குருந்தைக் காக்கவே.

(1)

2. செங்கீரைப் பருவம்

சிற்சபையி னில்தில்லை யானந்த நடராசர்

                        தித்திதோ மென்றாடவுந்

            திருமாலின் மருகனாம் முருகேசன் மலைதொறுந்

                        திவ்யநட னம்புரியவுங்

கற்றபல பரதநாட் டியமால யங்களிற்

                        கணிகைமங் கையர்களாடக்

            கந்தமிகு பூஞ்சோலை யினில்வண்டு தேனுண்டு

                        காந்தார மீந்தாடவும்

பொற்புமிகு நீலமயில் நீர்முகில்முன் னாடவும்

                        பொங்கொளி முகிலிலாடப்

            பொழிமழையி னுழவர்விளை கதிரினந் தென்றலாற்

                        பூவெனவ சைந்தாடவும்

அற்புதச் சிரவணச் சண்முகச் சுந்தரம்

                        ஆடியருள் செங்கீரையே

            ஆறுசம யங்களுக் கும்பொதுவ தானகுரு

                        ஆடியருள் செங்கீரையே.

(2)

3. தாலப் பருவம்

இமையமலை காசிகே தாரபத் திரிநாதம்

                        ரிஷிகேசந் த்வாரகை

            எழிலமர நாதமுத லாகவட நாட்டினி

                        விலங்குந்தலங் கள்தென்நாட்

டமையுமிசை மூவர்தே வாரம் பெறும்தல

                        மனைத்துமற் றுள்ளகோயில்

            அத்தனையு மடியார்கள் புடைசூழ வேசென்

                        றருச்சித்தும் மேலைநாடாம்

அமெரிக்க விங்கிலாந் தும்மலேசியா சிலோன்

                        அழகுசிங்கப் பூரதும்

            ஆற்றலொடு சென்றுமீண் டிடுதலாற் றிருமேனி

                        அதற்குநல் லோய்வுவேண்டும்

தமைநிகரு மமரர் குறமகள் குமரகுரு அடிமை

                        தாலேல தாலேலவே

            கந்தம்பொ லிந்ததட விழிகொள்சுந் தரசாமி

                        தாலேல தாலேலவே.

(3)

4. சப்பாணிப் பருவம்

ஆலயம னைத்தினும் பெரியமே ளங்கொட்ட

                        அர்ச்சகர்தம் வறுமைநீங்கி

            ஆனந்த பாட்பமிரு கண்களிற் கொட்டவும்

                        ஆடலொடு பாடல்செய்வோர்

சீலமிகு வெண்கலத் தாளங்கள் கொட்டவுஞ்

                        சிற்பங்களைச் செதுக்கித்

            தெய்வவுரு வாக்குவோ ருளிசுத்தி கொட்டவுஞ்

                        சிவஞான சித்தியார்கள்

மூலகுண் டலிகொண்டு பரநாத ஒலிகொட்ட

                        முத்தமிழும் நன்குதேர்ந்தோர்

            மொழிகின்ற சந்தத்தி ருப்புகழி னொலிகொட்ட

                        முகிலமுதநீர் கொட்டவும்

சாலவள மேவுதிரு வோணபுரி வாழரசு

                        சப்பாணி கொட்டியருளே

            தந்தைநிகர் கந்த சாமிக்கினிய சுந்தரம்

                        சப்பாணி கொட்டியருளே.

(4)

5. முத்தப் பருவம்

கொண்டல்நா கம்கதலி சங்குயா னைக்கொம்பு

                        கொக்குமீன்தலை தாமரை

            கூலநெற் கதிர்கமுகு கழைபன்றியின் கொம்பு

                        கோதையர் கழுத்துமான்பல்

கொண்டதுவி டாமுதலை சிப்பிசந் திரனெனக்

                        கூறுமிவை போன்றபலவும்

            கொடுப்பதாம் முத்தினுக் கொருவிலைய துண்டன்பு

                        கொண்டரனை வரிபாடுசெய்

தொண்டர்தந் தொண்டரைச் சம்புவினும் மேலெனச்

                        சொல்“அமுதகவி” குன்றையூர்த்

            தூயராம் “சேக்கிழார்” ஆரூரர் நம்பியின்

                        தொகைவகை கொடேவிரித்த

“தொண்டர் மாக்கதை”யெனுஞ் சுதையாழி மூழ்குநும்

                        சொன்முத்தினுக் கிணையாமோ?

            சுந்தர சுவாமிகளே! எந்தமது நாயகரே!

                        சொல்முத்த மீந்தருள்கவே.

(5)

6. வாரானைப் பருவம்

பெரியமனை மாளிகையெ டுத்துமனை புகுவிழாப்

                        பிரபலம தாப்புரிகுவோர்

            பிரசமலர் அனையநும் பாதமுதல் வைத்திடப்

                        பிரியமொடு வரவழைப்பார்

அரியதொழி லாதிபர்கள் தாம்தொடங் குந்தொழில்கள்

                        ஆக்கமுடனே பெருகவே

            ஆகிவரும் நும்கரத்தாற் றொடங்கப் பெறநல்

                        ஆசையொடு வரவழைப்பார்

உரியபல வாலயப்பணி தேர்செய் நற்பணியு

                        மும்திருவுளப் பாங்கினில்

            உருவாக வேண்டுமெனவே திருப்பணி மன்றம்

                        உளவன்பர் வரவழைப்பார்

கரியமுகில் நிறமாய னனையவொரு குருசாமி!

                        கருணையுருவே வருகவே!

            கவுமார நெறிமடா லயநாத குறையாத

                        கலைஞானமதி வருகவே!!

(6)

7. அம்புலிப் பருவம்

வானமிசை நீடொளிவ ழங்கிவர லாற்றக்க

                        வாசகம்நிசப் படுதலால்

            வாரமிகு பேர்பெறுத லாலிவரைநீ நிகர்வை

                        மாதரனு ராகமுளைநீ

ஞானகுரு நாதரிவர் குறைதலும் நிறைதலும்

                        நண்ணியுளை யிவர்பூரணர்

            நாகங்களிவர் நாமம்நீ யுரைத்திடி லோடும்

                        நானிலத்திடை யிறங்கிக்

கானமொடு நீதுதிக் களியெனில் நவவீரர்

                        காலுதையி னாலழிகவை

            கழறினே னாணவமொ டெய்திடா தங்குறிற்

                        கட்டமிக உண்டாகுமால்

ஆனதிரு வோணவே லப்பரரு ளப்பருடன்

                        அம்புலீ ஆடவாவே

            அழபொலி கவுமார சுந்தர சுவாமிகளொ

                        டம்புலீ ஆடவாவே.

(7)

8. சிற்றிற் பருவம்

சத்தியக் குருபரம டாலய வளாகம்

                        தனிற்குருந்தாய்ச் சனித்தே

            தன்னைநிகர் சிரவணச் சிறுமியர்செய் மணல்வீடு

                        தளிரடியினாற் சிதைத்தே

நித்தியம் விளையாடு தன்மைபோற் கருணையால்

                        நிமலர்தரு தேகமிதனால்

            நியம்மிய மங்களாற் சரியைகிரி யாயோக

                        நிறைஞான சித்திபெற்றே

அத்திமுத லாயெறும் பீறான ஆருயிர்கள்

                        ஆனந்தவாழ் வடையவே

            ‘அல்லமப் பிரபு’வென அலகில்விளை யாடல்புரி

                        அற்புதமதொடு சொரூபச்

சித்திமுத் திப்பயன டைந்திடுமுன் னெஞ்சிறிய

                        சிற்றிற்சிதைத் திடேலே

            சிரவணபு ரீசரா மானந்தர் வாரிசே

                        சிற்றிற்சிதைத் திடேலே.

(8)

9. சிறுபறைப் பருவம்

ஆலயம டங்களிற் சங்குசே கண்டிதுத்

                        தாரிசின்னம் முழங்க

            ஆடல்புரி பரதமங் கையர்காற் சதங்கையொலி

                        அதிர்முழவி னொடுமுழங்க

மாலகலும் இசைவாணர் பாடலொலி வீணையாழ்

                        மத்தளம தொடுமுழங்க

            மந்தார சண்பக மனோரஞ் சிதம்வெட்சி

                        மல்லிகையில் அரிமுழங்கக்

கோலமிகும் அருணகிரி சாமிநுவல் பாடலொலி

                        கொண்டலொலி போல்முழங்கக்

            குயில்குகூ கிளிகிகீ மயில்கெகே வெனநெருங்

                        குஞ்சோலை யதின்முழங்கச்

சீலமிகு சிரவை யாதீனகுரு மாமணீ!

                        சிறுபறை முழக்கியருளே

            தெளிவுற்று முரசொத் திலங்குசொற் பொழிவுளாய்

                        சிறுபறை முழக்கியருளே.

(9)

10. சிறுதேர்ப் பருவம்

ஏர்கொண்ட கார்முகில்க ளினியமழை பொழியவு

                        மெங்கணும் பசுமைபொங்கி

            எவ்வுயிரு மின்புறவும் மன்றல்மண மங்கலத்

                        தேந்திழையர் காளையரெலாம்

சீர்கொண்ட நல்வாழ்வு வாழ்ந்துபதி னாறான

                        திருவான பேறுபெறவுந்

            தேவால யங்கள்நற் பசுவந்த ணாளர்மறை

                        தெய்வத்திருத் தொண்டர்கள்

பார்கொண்ட மன்னர்மநு நீதியிவை வாழவும்

                        பைந்தமிழ்ப்புல வோர்களும்

            பக்குவத் தளவினிற் பகர்கின்ற தேசிகர்கள்

                        பயிலமுண வரும்வாழத்

தேர்கொண்ட சிரவை வேலப்பசண் முகவழக

                        சிறுதே ருருட்டியருளே

            தெய்வமணி குமரகுரு தேசிகசி காமணீ

                        சிறுதே ருருட்டியருளே.

(10)

வாழி

(நேரிசை வெண்பா)

கொங்கார் சிரவைக் குளிர்மடம் வாழ்கவொளி

தங்கம் திருக்கோயில் தன்னுடனே – மங்கலமாம்

சுந்தரப்பேர் கொண்டவெங்கள் தூயகுரு மாமணிவான்

அந்தரரும் போற்றிட வாழ்க!

முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக