வியாழன், 24 செப்டம்பர், 2026

கோயில்பாளையம் கற்பக விநாயகர் பதிகம் - 2

 

தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த

கோயில்பாளையம் கற்பக விநாயகர் பதிகம் - 2

 

காப்பு

(நேரிசை வெண்பா)

சிற்பரன்வாழ் வார்கௌ சிகபுரியின் மேவுதிருக்

கற்பகவி நாயகன்றாள் கண்புனைசீர்ச் - சொற்பதிகக்

காப்பவன்செம் பொற்றாள் கலந்தமனத் தொண்டடியார்

தூப்பதங்கள் தோயுந் துகள்.

நூல்

(அறுசீர் விருத்தம்)

கோவையங் கனிவாய்கொள் வல்லபைமைக்

          கோலவாள்விழி குலவொளி மணியுட்

பாவையாய் விளங்குன் னருள்வடிவம்

          படிறனேனுளம் பதியுமா றருள்வாய்

மாவையம் புயத்தமைத்த மாலரவின்

          வடிவமாறிட வழங்கருண் மணியே

காவைகிந்தி ரன்மலர்வ னம்புரந்தாய்

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(1)

உன்னிடுந் தொறுங்கனலிசை மெழுகொத்

          துளமுருக்கி மிக்குவட்டுறா வின்பந்

துன்னிடச்செய் நின்துணைப்பத நளினம்

          தொண்டனேன்சிரஞ் சூட்டியாண் டருள்வாய்

பன்னிடும்பழ மறைத்திரள் களினப்

          பால்விளங் கருட்பார்வதி நாமக்

கன்னிதந்தருள் பேரருட் கடலே

          கௌசைமேவு கற்பகவிநா யகனே.

(2)

பண்ணிசைந்த செந்தமிழ் கொடுன்றனையே

          பாடுமிச்சை யுட்பதிந்தவென் னெஞ்சைப்

புண்ணிசைந்திடப் புரிந்தமிம் மட்டும்

          போதுநின்றிருப் போதமுற் றன்பால்

விண்ணிசைந்த கார்மேனிமால் கொள்நின்

விசுவரூபமோர் மெய்யருண் ஞானக்

கண்ணிசைந்திடச் செய்யடைக்க லம்யான்

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(3)

சுடுங்கொடுந்தொழு நோய்கொடு தவித்த

          சோமகாந்த னுன்றூயமெய்ப் புகழ்கேட்

டிடுங்கருத்துடன் செய்தசங் கற்பத்

          திறுதியிற்சுகித் திடவருள் புரிந்தாய்

கொடுங்குணத்தன் யானெனினும்நின் புகழ்ச்சீர்

          கூறுமாவலுட் கொண்டனன் மெய்காண்

கடுங்கண்வஞ்சக ரணுகறு மகிமைக்

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(4)

மரணமுற்பவ மெனும்பிணி யமைந்து

          வாடுமென்னதான் மாவினுக் குன்பொற்

சரணமன்றியோர் மருந்தறி கில்லேன்

          தருமமூர்த்தியே தானமார் கரத்தோய்

திரணமொக்குமென் சிறுமையெண் ணாதுன்

          திருக்கணோக்கி நீசேர்தரு நாம

கரணம்மெய்ப்பட விளக்கிட வேண்டுங்

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(5)

இகலுமாயை கன்மங்க ளென்றனையீர்த்

          தியற்றும்வன் பிழைகளையுளங் கொண்டு

னகமிசைப்புறக் கணிக்கவெண் ணுதியே

          லடிமையுய்ந் திடற்காம்வகை யெதுவே

துகளுறுங்கன லாசுரன்பாவத் தூல

          தேகமுந்துய்த் தல்பொய்க் கதையோ

ககமிசைத்திடுங் கனிமலர்ப் பொங்கர்க்

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(6)

தொல்லையாகம மறையுபநிட தந்தொடர்ந்

          தளந்தணுத் துணையுமெட் டரிதாம்

எல்லைதீர்நின் பொற்றுணைத் திருப்பதப்

பேரின்பவா ரிதியிடைபடிந் தன்பிற்

செல்லையொத் திருவிழிக ணீர்சொரியச்

          செழுந்தமிழ்த் துதிபொழிந்திட வடியேன்

கல்லையொத்தவன் மனங்கரைத் தருள்வாய்

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(7)

பொய்வழக்கினுட் புகுத்தெனைச் சாலப்

          புண்செய்தீ வினைப்போர்க்குளந் தளர்ந்தேன்

செய்வதொன்றறி கின்றிலே னேழைச்      

          சிறியனேன்முறை திருவுளங் கொண்டு

மெய்வளம்பெறு தொண்டர்தோ யின்ப

          வீட்டுண்மேவிட விரைவில்நின் றானக்

கைவளந்தனைக் காட்டிட வேண்டுங்

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(8)

பிள்ளையாரென வினவிவல் லாளன்

          பிறங்குநம்பி யாண்டார்நம்பி மாயைச்

சள்ளைதீரருண் மெய்கண்ட தேவர்

          தக்கனாதியர் தமக்கெளி தளித்துத்

தள்ளைநேரருள் துதிக்கையிற் றானந்

          தாங்குமுனக் கபிதானமா யினதோ

கள்ளைநேர்சொன் முச்சத்தி நாயகனே

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(9)

தூயஔவை யார்நினைத்துதிக் கையினால்

          துதிக்கையால் கணத்துணையினில் தூக்கி

நேயமார்திருக் கைலையில் விடுத்த

          நீர்மையென்கணு  நேர்தியென் றிடில்நீ

ஆயபாடலொத் தோதெனி லடியேன்

          னயர்வதன்றியொன் றாற்றல்மற் றுளதோ

காயமேற்கொள் சிந்தூரனொத் தென்னைக்

          கௌசைமேவு கற்பகவிநா யகனே. 

(10)

நலந்திருந்தருட் பதங்கொள் இராமா

          னந்ததேசிக னாகியென் நெஞ்சில்

கலந்திருந்தவர் விக்கின மொழிப்பக்

          கௌசைமேவு கற்பகவிநா யகன்மேல்

தலந்திருந்தியற் சிரவைவாழ் கந்த

          சாமியன்பினிற் சாற்றிய பதிகம்

புலந்திருந்திடப் பாடவல் லவர்விண்

          புலவர்மெச்சு சீர்நிலவல் நிச்சயமே.

(11)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக