தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் வரதராஜப் பெருமாள் பதிகம்
காப்பு
(நேரிசை வெண்பா)
விரதநிலைத் தூயர்
மிளிர்கௌசை வாழ்வாம்
வரதரா சப்பெரு
மாள்மேற் – சரதவிசைத்
தண்டமிழா லோர்பதிகஞ்
சாற்றத் துணையவன்மெய்த்
தொண்டர்திருப்
பாதத் துகள்.
நூல்
(எழுசீர் விருத்தம்)
திருவள ருரமும்
புன்னகை வாயுந்
திகழருள் விழிகளுங் காமர்க்
கருவளர் மணிநேர்
மேனியும் படைதோய்
கரங்களும் பதங்களுந் துலங்க
உருவளர் தாயா
மத்தியிற் புள்வேந்
துரமிசை தரிசனந் தருவாய்
மருவளர் கானக்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(1)
தளவணிப் புறவம்
புரந்திடுந் தலைமைத்
தன்மையிற் றிறம்பிடா தருளாற்
களவணி யுடன் ற்
பணிபுனைந் திடுவார்
களவணி கற்பணி காக்கும்
துளவணி தடந்தோட்
பகவனின் மகிமை
துதித்துநெக் குருகிடப் பணிப்பாய்
வளவணிப் பெருக்கார்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(2)
கோடியற் புதமேற்
படும்விளை யாடல்
குயிற்றுபு துட்டர்தங் குலத்தைச்
சடியன் பர்களைக்
காத்தநீ யுனது
சந்நிதிப் பான்மிக விரந்து
நாடிய வெளியே
னளவினி லிரக்கம்
நண்ணிடா திருப்பது முறையோ
மாடியன் முல்லைக்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(3)
பணத்திலே யிசையு
மண்ணிலே யாசா
பாசமிக் கூட்டிடு மாதர்
கணத்திலே யிச்சை யமைத்திடா துன்மெய்க்
காட்சியி லேயிசைந் திடுமெண்
குணத்திலே கருத்தை
யிருத்துமெய்த் தொண்டர்
குறியிலே நெறியிலே ஞான
மணத்திலே புகுத்தாள்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(4)
உந்தியம் புயத்தி
லுதித்தநான் முகத்த
னொளிர்கரத் தமைவிதி யறவே
சிந்தியம் புவிமா
தணிக்கையால் வருடுந்
திருவடி மலர்முடி சூட்டி
அந்தியும் பகலுங்
கருதிநெக் குருகு
மருளிர கசியவுண் மையைமுன்
வந்தியம் பிடுவாய்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(5)
குரங்கினங் களையெண்
கினங்களைப் படையாக்
கொண்டுடன் வதிந்தநீ மேலாம்
நரங்கிளர் வடிவம்
பெற்றுனை வணங்கி
நம்பியே துதித்திரப் பேன்மே
லிரங்கியோர் தரமுன்
மங்களச் சேவை
யீந்திலை யிதுமுறை தானோ
வரங்கிளர் மகிமைக்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(6)
தேகமே மயக்கும்
போகமே வியக்குந்
தேசமே காலமே யென்னும்
மோகமே பயக்கு மாயைகன் மங்கண்
மோதிடுந் தீதிலா தொழிக்கும்
யோகமே லமையப்
புரிந்திடும் புத்தி
யூகமே லிடப்பணித் துன்றாள்
மாகமே லமைப்பாய்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(7)
ஓய்ந்திடுங் கருவி
கரணமு மெண்ணி
லுபநிட மாகம மறைகள்
ஆய்ந்திடுந் தேர்ச்சித்
துணிவுநின் றுணைத்தா
ளகத்தினி லிடையறாப் பத்தி
தோய்ந்திடு நிலையு
மகண்டமெஞ் ஞான
சொருபசித் தியுமடி யேற்கு
வாய்ந்திடும்
படிசெய் கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(8)
அலுத்தயர்ந் துலக
வாழ்வுவர்த் துன்றா
ளடைக்கலம் புகுமெனக் குனது
கொலுத்தரி சனந்தந்
தனந்தகல் யான
குணம்வியந் தேத்துமா தவமேல்
செலுத்தலுன் கடனே
யினியெனக் கமையும்
தீமைநன் மைகளுன தெனவே
வலுத்ததென் னெஞ்சம்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(9)
புயலெலாந் திரண்ட
கருணையே மயமாம்
புண்ணிய மூர்த்தியே நாயேன்
மயலெலாங் கொண்ட
மனக்கடல் பருகும்
வடவையே வந்தனை புரிவேன்
செயலெலாம் நீயே
கொண்டதா லெனது
சென்மமு முனக்கமைந் ததுவே
வயலெலாங் கயல்பாய்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளே.
(10)
பண்ணியன் மறையுச்
சியிற்பொலி கமல
பாதமன் பினர்க்களித் தருள
மண்ணியன் மகிமைக்
கௌசிக புரிவாழ்
வரதரா சப்பெரு மாளைத்
தண்ணியல் சிரவைப்
பதியிசை கந்த
சாமிதோத் திரித்தணி பதிகம்
நண்ணிய லன்பிற்
போற்றுநர்க் கெல்லா
நலங்களும் பொருந்தல் சத்தியமே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக