வியாழன், 24 செப்டம்பர், 2026

கோயில்பாளையம் சண்முக மூர்த்தி திருப்புகழ்ப் பதிகம்

 

தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த

கோயில்பாளையம் சண்முக மூர்த்தி திருப்புகழ்ப் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

பண்முதிர்வே தக்கோயிற் பாளையத்தில் வாழ்கருணைச்

சண்முகன்மேற் சந்தத் தமிழ்பாட - வுண்முதிர்மெய்க்

கற்பகமார் தொண்டருளக் காதன்முற்ற நல்குமைங்கைக்

கற்பகவி நாயகன்தாள் காப்பு.

நூல்

தனனதன  தத்ததந்த - தனதானா

முழுமதியெ னத்துலங்கு

            கருணைபொழி வுற்றிடுஞ்சண்

             முகமலரு மொப்பகன்ற - முடிமீதே

          முதிரொளிப ரப்பிநின்ற

            வறுகதிர வர்க்கிணைந்த

             முடிகளுமி ரெட்டிரண்டு - விழியோடே

செழுமைநிறை யற்புதங்கொள்

            பவளமலை யொத்திலங்கு

             திருவடிவும் வெற்றிமிஞ்சு - படைதோய்வார்

          திரள்கரமு முத்தியின்ப

            வடிமலரு முற்பிறங்கு

             தெரிசனமெ னுட்புறம்பி - லருள்வாயே

மழுவணிக ரத்தான்செய்

            தவசில்விழி யிற்புலிங்க

             வடிவுகொடு வப்பில்வந்த - குமரேசா

          மலயமுனி வற்கிரங்கி

            யவிர்பிரண வத்தமைந்த

             மகிமைதெளி யப்புகன்ற – கனிவாயா

கழுமலந கர்க்கணன்று

            குழவியுரு வுற்றுவந்து

             கலதியம ணர்க்கடிந்த - புலவோனே

          கதிர்மதியு டுத்தவழ்ந்த

            சிகரிபொலி பொற்பிசைந்த

             கவுசிகபுரித்தலங்கொள் – பெருமாளே.     

(1)

தானத் தானன தான - தனதானா

வாசப் பூவின மோவற

             வேவிப் போர்புரி பாதகன்

             வாகைச் சீரறு மாதவ - நிறைமேலோர்

          வாய்செப் பேவல்கள் யாவையு

            மார்வத் தோடுசெய் தேயருள்

             வாரிப் பாலமை நீர்கொடு - முகில்போலே

நேசத் தோடுகண் மாரிபெய்

            தோகைச் சீர்பொலி வான்விழி

             நேர்நிற் காணுறு மோர்நல - மடையேனோ

          நீசப் பாதக மார்கலி

            காலத் தாமநி யாயர்க

             ணீதிப் பாலிசை வாகிட - முடியேனோ

பூசற் றோய்புலன் மாய்வுறு

            சீலத் தாபதர் தோயநு

             பூதிக் கோலநி லாவிய - முருகோனே

          போதிற் றோய்விதி கோவென

            மோதித் தாரக மாரபொருள்

             போதித் தாள்கரு ணாகர - வடிவேலா

கூசப் பான்மட வார்தரு

            தோடத் தீவினை தீர்நிலை

             கூடப் பார்வையி னேர்வரு - குருநாதா

          கோழிக் கேதன மேன்மைசொல்

            வோர்கட் காதர மாகிய

             கோயிற் பாளைய மேவிய – பெருமாளே. 

(2)

தானத் தானதத்த தானன - தனதானா

மானைப் போன்மருட்டு மாயவி

            நோதப் பார்வையிற்பொன் மேருவை

             மானத் தேமலுற்ற பேரின் - முலையாலே

          மாலிட் டாவலற்று ளோர்களில்

             வாதித் தேபிணக்குண் மூடிடு

             மாதர்க் காதலித்து வீணினி -மடியாதே

சோனைக் காரெனப்பல் பாடல்பெய்

            தீரக் கோலமெய்க்கௌ மாரர்க

             டூய்மைத் தாளுதிர்த்த தூளிமெய் - புனையேனோ

          தோகைக் கேகயத்தின் மீதுனொர்

             சேவைச் சீர்படைத்து மாயைசெய்

             சோர்வற் றோர்பொறுத்த சீருட - னுலவேனோ

யானைப் பேர்விளக்கு சீர்மக

            வான்மெய்ப் பாவையுட்ப கீரென

             வேனற் காவலிக்குண் மான்மிகும் - வடிவேலா

          வீசற் கோர்வுறச்சொ லோமொழி

             வேலைப் பானனுக்கு மோதரு

             ளீகைத் தேசிகக் குமாரசண் - முகவேளே

கூனைத் தோய்மதிக்கு நேர்முக

            மாதர்க் காளெனைப்ப டாதருள்

             கூடப் பார்மிசைக்கு லாவிய - குருநாதா

          கூவிப் பாவிகட்கு நீடரு

             ளீயச் சீர்மிகுத்து லாவிய

            கோயிற் பாளையத்தின் மேவிய – பெருமாளே.   

(3)

தனத்தனனத் தனத்தனனத் - தனதானா

துறக்கநகர்ப் பெருக்கமலர்த்

            தருப்புடையிற் பரத்தையர்மெய்ச்

             சுகத்தைநசைத் துளத்திலிரக் - கமிலாதே

          துடிக்கவுயிர்ச் செகுத்துடலைக்

             கனற்பெய்கசட் டரக்ககுணத்

             தொடக்கர்தமைப் பழிப்பவரைப் - புகழேனோ

வறக்கருணைக் கிலக்கியமுற்

            றியற்புலமைத் திறத்தொடுனக்

             களித்த வகத் தவத்தரடிப் - பொடிதானே

          யலக்கண்வினைத் தியக்கறுசிற்

             சுகத்தமைநட் பெனக்கருதுற்

             றருக்கன்முனுச் சியிற்புனைகற் - பகலாதே

குறக்கொடிபொற் புடைத் திதலைத்

            துணைக் களபத் தனத் தணை தற்

             குறித்தருள்விக் கினத்தரசைப் - புகழ்வோனே

          கொதித்துறுபற் கடித் துறுமிச்

             சமர்க்கெதிர் துற் குணக்கொடியர்க்

             குலத்தொடறப் படுத்தவயிற் - படையோனே

சிறப்பறுபொய்த் துறைக்கணிலத்

            தவத்துழலெற் கருட்கொடணித்

             திருப்பதமுற் றிடப்புரிசற் - குருவாவாய்

          திருப்புகழ்செப் பிசைதொனி குக்

             குடத்தொலிமைக் கலிப்பின்மிகைத்

             தெருட்கவுசைப் பதிச்சண்முகப் – பெருமாளே.    

(4)    

தனதன தனதன தந்தத் தந்தத் - தனதானா

சினைமுகின் முடிபொலி செம்பொன் குன்றம்

            புலவர்க ளயிலமு தொன்றுங் கும்பந்

             திரிமத கயமிசை தந்தம் பிந்துந் - தனமானார்

          சிறுசுக மயன்மிக வின்பென் றென்றுங்

             கவலையு மொழிவறு துன்புங் கொண்டுந்

             திரிதர விடுவினை யின்சம் பந்தங் - கழியாதோ

புனைகழ லணிகொள்சி லம்புந் திண்கிண்

            கிணிமுத லணிகள லம்புஞ் சந்தம்

            பொலிமல ரடிகணி னைந்தென் றென்றுங் - கனிவோடே

          புணரிகொள் புயலையி ணைந்துந் துங்கண்

             பொழிதரு மருவிப டிந்தென் பங்கம்

             புளகித முறவரு டந்தின் றிங்குய்ந் - திடவாள்வாய்

பனைநிகர் கரதல மொன்றொன் றொன்றொன்

            றெனூமெயி றுளகரி யுந்தும் பைம்பொன்

             பதியர சுளமிசை துன்றும் புன்கண் - டவிர்வேலா

          படிபுகழ் மதுரை யிலங்குஞ் சங்கந்

             திகழ்புலவனுளமை கம்பஞ் சிந்தும்

            படியயில் கடவருண் மிஞ்சுஞ் சிந்தென் - றியல்சேயே

கனைதரு பகடிவர் சண்டன் றென்புன்

            புலவுறு மெனதொரு தொண்டுங் கொண்டின்

            கருணையொ டடியவர் தங்கும் பின்கண் - புகவாள்வாய்

          கசிவுகொ டுறுபத கஞ்சந் தஞ்சம்

             பெறுமடி யவர்தொழ வந்தம் பொங்குங்

             கவுசிக புரிவளர் துங்கந் தங்கும் – பெருமாளே.   

(5)

தனதன தானன தனதன தானன

தானத் தானன தானத் தானன - தனதானா

அரிதென வேழிசை மறையின மோலிட

          லாமெய்ச் சீர்பொலி பாரிற் றோய்தரு

          பெருமைகொண் மானிட சனனம தூடமை

            பீடுய்த் தோர்கில ராய்மைக் கானிடை

            யலைதரு மாவின மிகமிக மேலென

             வாசைச் சாகர மூழ்கிப் பூமிபொன் - மிகுமாறே

          யமைபழி பாவமொ டிருணர காதிய

          வாவிக் கேய்தரு மாபத் தோர்பொரு

          ளெனமதி யாதிகன் மனமிசை வாம்வழி

            யாவற் றூடும்வி டாமற் போயெழி

            லரிவையர் மாயையுண் முழுகிய னார்பணி

             யாளொப் பர்முய லீனப் பாவரொ - டுழலாதே

சரியைமு னாநுவ லுயர் தவ மேனிலை

          சார்மெய்த் தாபதர் சூழப் பார்மிசை

          யணிகொளு னாலய முழுதினு மேகியு

             ளார்வத் தோடரு ளார்நற் பாடல்கள்

            சலதிகொண் மாமுகி லெனமிக நீடுப

             சாரத்தோடுபெய் தேசித் தாடல்செய் - திடுமாறே

          தரவருண் மூவறு விழிமுக மாறொடு

          தானத் தோன்மக ளேனற் காவலள்

          நடுவில்வை வேன்முத லியபடை தோய்தர

             ஞானக் கீரநி லாவச் சூலமை

            சலதரநேர்நட மிடுமயின் மீதிலு

             தாரப் பேரருளான்முற் சார்தின - மெதுதானோ

வரிகம லாதன மிசையமர் வானலை

          மீதிற் போகியெ னீண்மெய்ப் பாயலி

          லறிதுயில் கூரரி யிவரிக லாயம

            ராடித் தாண்முடி தேடிக் காணரும்

             விமலசொ ரூபமெய் தியவர னோர் தர

             மேன்மைத் தாரக போதச் சீரருள் - குமரேசா

          விதுகுல மார்மது ரையினர சானவன்

          வேள்விப் பாலருண் மேனிச் சீர்கொடு

          திசைமுழு தோலிடு புகழ்மிகை தோய்மிகு

            தீரத் தோடுகை லாயத் தேகுபு

            விறல்கொள்க ணாதிப ரபசய மேவல்செய்

             வீரத் தாய்மக வாகிக் கார்தளை - யிடுவோனே

குருகின மோலிடு கரமட வார்புடை

          கூடிப் பாணம்வி டாமற் றூவுமன்

          மதகலை யாமிழி நெறிபுகு வாருடன்

            வாடிச் சோகமு றாதெற் காரருள்

            குலவடன் மாதவ மிகுகவு மாரர்கள்

            கோலத் தாள்பொலி தூளிக் காவல்செய் – குருநாதா

          குளிர்மலர் வாவியின் மருவும்வ ராலிகல்

கூடிச் சேணியன் மீனைத் தானுற

வுறமிசை போயவை பகன்மறை வாயுறு

            மூனப் பான்மையை நாடிச் சாடுபு

            குறுகிடு சீர்கொள்கௌ சிகநதி மாடமை

            கோயிற் பாளைய வாழ்விற் றோய்சுரர் – பெருமாளே.

(6)

தனத்தானத் தானன தானன - தனதானா

உருக்கோலப் பாவைய ராசையி - லுழலாதே

          யுனைப்பேணிப் பாடியெ நாளினு - மகிழேனோ

சருக்கோலப் பாலபி மானமு - ளகலாதோர்

          களைத்தூய்மைத் தாபத ராதல்செய் - நலமீவாய்

யிருக்கோலிட் டோர்வரி யார்விழி - தருபாலா

          விசைக்கானிற் றோய்குற மாதருண் - மணவாளா

திருக்கோயத் தீயனுள் வாழ்தரு - குருநாதா

          திருக்கோயிற் பாளைய மேவிய - பெருமாளே.      

(7)

தனனத் தனனத் தனனத் தனனத் - தனதானா

அருவுற் றமதப் பயல்பொய்க் கணைபட்

            டுருவத்தளர்வுற் றறிவற்றுரமற்

            றழகுற்றமடக் கொடியர்க்குருகித் - தளராதே

          யசடுற்றகுணக் கயவர்க்குநசைத்

            தவையிட்டவரிட் டபலித்திரணத்

            தலகைத்திரண்முற் றழியக்கவியிற்     - றொலையேனோ

கருதிக்கருதிக் கசிவுற் றுருகுற்

            றுனைநத்திடுமெய்த் தவர்நற்கமலக்

            கழலிற்பொலிநற் றுகளுச்சிமிசைப் - புனையேனோ

          ககனச்சுரர்துய்த் திடுதிப்பியபொற்

             பமுதிற்சுவைமிக் கமையற்புதநற்

            கவிதைத்திரள்சொற் றுணையுட்கனிவிற் - றுதியேனோ

தருவுற்றியல்சொர்க் கபதிச்சுரரைத்

            தளரப்புரிதுட் டவரக்கரைமுற்

            சமரிற்றொலையப் புரிவெற்றியயிற் - படையோனே

          சயிலத்தொகை பக்குவிடத்தமரத்

             தவளத்திரையெற் றுகடற்குமுறத்

            தனிகற்சிறைகொட் டிடுகுக்குடமெய்க் - கொடியோனே

கருவித்திரளுற் றியல் பொக்கவுடற்

            கனவொத்தபுலத் துளைபுக்கவெனைக்

            கருணைக்கழல்பற் றிடவைத்தருள்சற் - குருநாதா

          கமலக்களைபெற் றவயற்புடைநெற்

             கதிர்கற்புளர்கட் புலனொத்தவளக்

             கவுசைப்பதிபெற் றதளிக்குமரப் – பெருமாளே.   

(8)

தனனதன தந்தனந்

தந்தனந் தந்தனந் - தனதானா

கலகமிடு மங்கசன் றிண்கரங் கொண்டபைங்

             கழையுமிழு மம்புநஞ்            சுஞ்செழுங் கொண்டலுங்

            கயலுமமு துந்தரங் கங்கொள்சிந் துங்கொளம் - பகமானார்

          கலனணிபொ னஞ்சிலம் புங்கடந் தந்திடும்

          புகர்முகமி சைந்ததந் தங்கள்பந் தும்பொருங்

          களபபுள கம்பெறுங் கொங்கைகண் டொன்றிநொந் - தழியாதே

சலதியற லுண்டெழுங் கொண்டலின் கும்புதங்

            கலின்மிகவி ருண்டுறும் பொங்கர்பம் பும்பெருஞ்

            சயிலவின மெங்கணுஞ் சென்றுசென் றன்பொடுன் - புகழ்தானே

          தமிழினய மிஞ்சுசந் தங்கள்கொண் டின்புடன்        

          பொழிதரவ ழங்கிநின் றண்டையம் பொன்பதந்

          தனிலளவி லன்பர்சங் கங்களுந் துன்றவந் - தடையேனோ

குலமறவர் தண்புனங் கண்டவண் சுந்தரந்

             திகழவதி மங்கையின் கும்பமென் கொக்கையங்

            குவடனைய நின்றுகன் கன்புடன் கும்பிடுங் - கதிர்வேலா

          குளிர்பலகை யின்கணொன் றும்பெருஞ் சங்கவண்

          புலவனிய லிந்திரன் றன்றவந் தந்தமின்

          குயமெனம கிழ்ந்தணிந் தங்கவன் புன்கணன் - றடுவோனே

கலதியமை யைம்புலன் புண்செயங் கம்பதிந்

            தயருமென தம்பகந் தன்கணுஞ் சிந்தையங்

            கரணமிசை யுங்கலந் திங்குறுஞ் சம்பவங் - கெடவாள்வாய்

          கமலமிசை யெண்கணொன் றந்தணன் றந்திடும்

          பொருண்முழு வதுந்தருங் கொன்பெறுந் தெம்புறுங்

          கவுசிகன லம்பொருந் துந்தலந் தங்கிடும் – பெருமாளே.   

(9)

தானத் தானன

தானத் தானன - தனதானா

வீணிற் பாருல கூடுற் றார்மனை

            சேய்பெற் றாரெனு மாயக் காதலுண்

             மேலிட் டாருற வாடிப் பாழினின் - மடியாதே

          வேரிக் காவுல கார்நற் பாவையர்

          நேரக் காலும்வி நோதப் போர்மத

          வேள்கைத் தாமரை யாமப் பூவையு - மெறியாதே

சேனிற் றோய்வரை தோறுற் றாடல்செய்

             வாசத் தாமரை நேர்பொற் றாண்மலர்

             சேரச் சூடிநன் மேன்மைப் பாடுகொ - டுறுமாறே

          சேவிற் றோய்பரன் வேலைப் பானனு

          ளோரப் பேசிய ஞானத் தாரக

          சீலப் போதமெ யோதிப் பேரருள் - புரிவாயே

காணிற் பேசிடி னாடிற் றீமெழு

             கேயொத் தாதர மார்நற் றாபதர்

             காயத் தோடுள மார்பொற் சேவடி - யுடையானே

          காவிற் றோய்மக வான்மெய்ப் பேறெனு

          மேன்மைக் கோதையுள் வாடக் கானவர்

          காதற் பேதையொ டாடற் கோகைகொண் - முருகோனே

கோணிப் பாழுடன் மானத் தோடழி         

             யாமற் றீவினை யேனைப் பார்மிசை

             கூவிப் பூரண ஞானத் தாளருள் - குருநாதா

          கூனற் பான்மதி சூடிக் கோபுர

          மீசற் கேநிக ராமெச் சீர்பெறு

          கோயிற் பாளைய வாழ்விற் றோய்சுரர் – பெருமாளே.     

(10)

தானத் தானன

தாத்த தந்தன - தனதானா

பாரிற் சீர்நர ராத்து லங்குநன்

             மேன்மைப் பாடறி யாக்கு ணங்கொடு

             பாழிற் சீலரை மாய்த்த ருந்திடு - மிழிவேதோய்

          பாவத் தோரிடு காட்டி லொன்றிய

          தூலப் பாலிடி வீழ்த்தி டும்பல

          பாடற் கூறிட வாக்கி டம்பலி - தமுறாதோ

காரிற் றோய்பவ னாட்டு றுந்தரு

             மானப் பார்வைமு னேற்று நின்றவர்

             காதற் கோடியு மீத்து வந்திட - வருவானீள்

          காமர்த் தோகையின் மேற்று லங்கிநின்

          ஞானத் தாண்முடி சூட்டி யொன்றிடு

          காயத் தோடுயிர் மாற்றி நின்சொரு - பமதீவாய்

தேரிற் றோய்தரு பார்த்த னெஞ்சம

             ராடற் காமுர மேற்க வன்றுப

             தேசக் கீதைசொல் வாற்கி சைந்தநன் - மருகோனே

          சேலைப் போல்விழி காட்டி டுங்குற

             மாதுக் கோகையு ளாக்கி டும்பல

             சீலப் பேரரு ளாட்ட யர்ந்தருள் - குமரேசா

கூரிற் றோய்கதிர் வேற்கண் மங்கைய

             ராசைச் சாகர மாட்ட மிழ்ந்திடு

             கோழைத் தீவினை மாற்றி யின்பருள் - குருநாதா

          கோலக் கோபுர           மீத்த வழ்ந்தியல்

          கார்மெய்ச் சீதர னேய்த்த விர்ந்திடு

          கோயிற் பாளைய மேற்சி றந்தியல் – பெருமாளே.

(11)

தனத்தனனத் தனனத் - தனதானா

தியக்கும்வினைத் துயரச் சரக்கறையைக் கிருமித்

                         திரட்பொலிபெட்டியினைத் - தொனியேதோய்

திரைக்கடலைப் பருகிக் கனைத்தெழுமைப் புடையிற்

                         செறித்ததடித் தினையொத் - தழிவேயார்

          துயக்கவுடற் சிறையுட் கிடக்குமெனைக் கருணைத்

                         துணைக்கமலக் கலமுற் - றிடுமாறே

            சுகத்துடலிற் புகுசற் குணத்தருணைத் தவனுட்

                         டுலக்கமுறப் பகர்மெய்ப் - பொருளீவாய்

          கயக்குமரிக் குயர்வெற் பிடத்தவர்நற் றவசிற்

                         கதித்தமகட் கருமைத் - துணைவோனே

            கசட்டுமனத் திமிரத் திருட்டமணத் திரளைக்

                         கழுப்புகவைத் தவியற் - கவியானே

          செயத்தகைமிக் கதவச் சிறப்புறுபத் தரிலெற்

                         றிருத்துதுணைப் பதசற் - குருநாதா

            செழித்ததருக் கிளிமெய்த் திருப்புகழ்செப் பருமைத்

                         திருக்கவுசைக் குமரப் – பெருமாளே.         

(12)

நூற்பயன்

(நேரிசை வெண்பா)

தாயிற் சிறந்த தயாநிறைவார் சண்முகவேள்

கோயிற் பதியமையக் கொண்டணிபா - வாயி

லறைபத்தி யன்படியார்க் காமிருமை யூடுங்

குறைவற்ற வின்பமுண்டாக் கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக