வியாழன், 24 செப்டம்பர், 2026

கோயில்பாளையம் கருணாகரவல்லி பதிகம்

 

தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த

கோயில்பாளையம் கருணாகரவல்லி பதிகம்

 

காப்பு

(நேரிசை வெண்பா)

இருணா டகத்தமிழ்த்து மின்னல்மிகக் கூட்டும்

மருணா டகத்தையற மாற்றும் - கருணா

கரவல்லி தோத்திரத்தின் காப்பவடன் பொன்னூ

புரவல்லிப் பாதாம் புயம்.

நூல்

(எழுசீர் விருத்தம்)

புத்திய லொளியார் திலகவா னனமும்

          பொழியருள் விழிகளுந் துவர்வாய்

முத்தியன் மந்த காசமும் ஞான

          முதிர்சுதைக் கலசமுந் தருவை

ஒத்தியல் தொடிக்கைத் தலமும்வான் பதமு

          மொளிரவந் தென்னுள்வீற் றிருப்பாய்

கத்தியத் துவசக் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(1)

நேற்றிருந் தவரின் றிலரெனும் வாழ்வை

          நிலையெனக் காட்டிடு மாயைச்

சேற்றிருந் திட்ட வென்மனத் தினுக்குச்

          செய்யதா மரையெனுஞ் சிறப்பான்

மாற்றிருந் திட்ட தன்மையிற் செம்பொன்

          மாற்றிருந் திட்டமாண் பாலுன்         

காற்றிருந் திட்டங் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(2)

முற்றிடாக் கொங்கை மைந்துல குயிர்கண்

          முற்றவு மீந்துகாத் தருளும்

வற்றிடாக் கருணை வாரிதி யென்ன

          மரகத மலையெனத் திகழ்ந்தும்

பற்றிடா தவத்தி லலைந்திடு மெனைக்கண்

          பார்த்தருள் புரிவதுன் கடனே

கற்றிடார்க் கருஞ்சீர்க் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(3)

சுகங்கருத் தினிலுற் றூட்டுநின் மகிமை

          துதிக்கிலேன் றுக்கவைம் புலந்தோய்

இகங்கலந் திடுபொய் வாழ்வினில் வீழ்வுற்

          றிடர்களே பெருக்கியுட் செருக்கி

அகங்கரித் திருந்தே னாயினு மன்ப

          னாகவேண் டினனவா வளிப்பாய்

ககங்களார் சோலைக் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(4)

இரும்பினுங் கரிய கல்லினும் வலிபெற்

          றிளகிடா விருதயம் படைத்தேன்

துரும்பினு மெளிதாப் புரியும்மூ வாசைச்

          சூறையிற் சுழன்றனன்;  மாறாய்த்

திரும்பினு மென்னைப் பரகதிக் கண்ணே

          சேர்த்துவ தன்னையுன் கடனே;

கரும்பினு மினிக்குங் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(5)

பழகிய பருவ மூர்க்கர்நட் பினைப்பின்

          பற்றியற் றொழிவதென் மதியோ?

குழகியற் கல்வி முறைப்பிடி வாதக்

          கொள்கைமேற் கொண்டதுன் பொன்னேர்

அழகிய  பதமே துணையென விருந்தே

          னருள்விருந் தயில்வதென் றறியேன்

கழகியற் புலவர் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(6)

மாலளித் தாள்வான் மாயைமார் தட்டி

          வந்துமுன் னின்றதென் றனையுன்

பாலளித் தாள்வா னாகவேண் டெனக்குன்

          பரவப ரத்திருக் கொங்கைப்

பாலளித் தாட்பட் டவர்க்கெலா மிருமைப்

          பயன்களும் வழங்கவைத் துன்பொற்

காலளித் தாள்வாய் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(7)

தேளினிற் றுயர்செய் கோளினுட் படியுந்

          தியக்கமே பெற்றயா னுனது

தாளினிற் பொருந்தும் பத்திமெஞ் ஞான

          சாத்திய மிசைந்துவப் புறவெந்

நாளினிற் கருணை செய்வையோ வென்ன

          நாடிவேண் டினனிரங் கிடுவாய்

காளினிற் சோலைக் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(8)

பாட்டிலே கிடந்தது தென்சிறு வாழ்க்கை

          பாட்டெலாங் கேள்வியற் றெழுதும்

ஏட்டிலே கிடந்த தயன்விதித் திட்ட

          வெழுத்திலே கிடந்ததென் மதிதான்;

நீட்டிலே நீயு மிருந்திடா துன்பேர்

          நிசம்பெற வுலகினுக் கெடுத்துக்

காட்டிலே காட்டாய்; கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(9)

மயக்குபாழ் மாயைச் சேற்றினுட் பட்டு

          மருவிரு வினைவளி சுழற்றத்

துயக்குறு மெனது மனக்கம லத்தைத்

          தூயமெய்ப் பத்திநீர் பாய்ச்சி

வியக்குமெஞ் ஞான மணமமைத் துன்றாண்

          மிசையமைத் திடும்பர முனதே

கயக்குல முலவுங் கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையே.

(10)

சிற்பர னின்பக் காலகா லேசன்

          றிருவுளத் துடன்விழி விருந்தாம்

கற்பகச் செல்வி கௌசைவாழ் கருணா

          கரவல்லி நாமவம் பிகையை

அற்பகக் கந்த சாமியாஞ் சிறுவ

          னார்வம்மிக் கேத்தெடுத் தணிபுன்

சொற்பதி பதிக மிசைப்பவ ரிருமைச்

          சுகங்களு மெய்தல்சத் தியமே.                                              

(11)

துதி

என்னை யிறப்புப் பிறப்பெனும்நோய்

          யெய்தா வண்ண மெடுத்தருளால்

பொன்னை நிகர்தாள் துணைமருந்து

          புசிப்பா னளிக்கக் கௌசையினில்

மின்னை நிகர்சிற் றிடைகமம்சூல்

          மேகம் நிகர்மெய் விழிகொண்ட

அன்னை கருணா கரவல்லி

          அடித்தா மரைகள் முடிக்கணிவாம்.

 

நூற்பயன்

அருள்பொலி கருணா கரவல்லி மகிழு

          மற்புதக் காலகா லேசன்

தெருள்பொலி யடியார்க் கருள்புரிந் திடுசீர்

          செப்பிடும் வைப்பிணை யாமிப்

பொருள்பொலி காதை படிப்பவர் கேட்போர்

          புகல்பவர் மகிழ்வுறப் புரிவோர்

மருள்பொலி துன்ப வலைப்படா வின்ப

          வாரிதி யூடமை வாரே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக