வியாழன், 24 செப்டம்பர், 2026

கோவில்பாளையம் சண்முக மூர்த்தி பதிகம்

 

தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த

கோவில்பாளையம் சண்முக மூர்த்தி பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

விண்முகந்தோ யின்பநிறை மெய்த்தவத்தோ ருள்ளமிசை

பண்முகந்தோ யுங்கோயிற் பாளையம்வாழ் – சண்முகவேள்

துத்தியப்பா வோதத் துணையருட்கௌ மாரதொண்டர்

சுத்தியருட் பாதத் துகள்.

நூல்

(எண்சீர் விருத்தம்)

புரணமதி நிகராறு முகமலருங் கருணை

          பொங்குவிழி களுங்காமர்ப் புன்னகைச்செவ் வாயுங்

கிரணவலங் காரமுடி களுங்கைகளும் பவளக்

          கிரிநிகர்மே னியும்வடிவேல் கிளர்ந்தபுய வினமுஞ்

சரணமலர் களுந்துலங்க வள்ளிதெய்வ யானைத்

          தாயர்கண்மத் தியின்மயின்மேல் தரிசனமீந் தருளி

முரணமையென் மனங்கரையப் புரிந்தருள்வா யின்ப

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(1)

உறங்குதற்கு முண்ணுதற்கு முடுத்ததுதற்கு மவமே

          ஓடுதற்கு மாடுதற்கு முற்றவிரு வினையில்

இறங்குதற்கு மேறுற்கு மென்றலையின் மீதில்

          எழுத்தமைத்த விதியுனருள் பழுத்திடச்செய் பத்தி

பிறக்குதற்கு வரைந்திலனா யினும்வரைதோ றாடும்

          பிரசமலர் சூட்டிலவன் பிழையுமாறு மன்றோ

முறங்குலவு நாளிலன்பர் புரியும்விழாக் காட்சி

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(2)

வேளாக வந்தவன்றன் னின்பம்வெறுத் திடினும்

          விடமாட்டேன் யானெனவே விரும்பிநின்றா னுனக்கே

ஆளாக வெண்ணிநெடு நாளாக முயன்றும்

          அப்பாநீ சிறிதுமுளத் தொப்பாது விலக்கில்

தேளாகப் படுத்துலகச் சிலுகொழிய மாற்றித்

          தேற்றிடுவா ரெவர்மனப்புண் ணாற்றிடுவார் யாரே

மூளாக வம்புரிசூ ரனுக்கருள்செய் கருணை

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(3)

நம்பினர்போ லொருமாற்ற மிசைத்திடுவா ரதன்பின்

          நடுவமைவார் மறுகணத்தில் நகைத்திகழ்ந்தே கிடுவார்

வெம்பினர்போ லொருகாலத் தமைவார்வீ றாப்பு

          வெறிபிடித்துக் குதித்தாடி மிரளவிழித் திடுவார்

வம்பினர்நட் பறவொழித்துன் பதந்தொழுதுள் ளுருகி

          மாறாக்கண் ணிரருவி வழிந்திடநின் றேத்தும்

மொய்ம்பினர்தம் பணிபுரிமெய் வாழ்வருள்வாய் காமர்

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(4)

பனையேறும் பெருமுயற்சி கொண்டிவர்ந்து முடிதோய்

          பாளைதொடா திறங்குநர்போற் பற்றுலக மாயை

வினையேறு மவந்தவிர்மா தவப்பெரியோர் புனையும்

          வேடமிசை சுமந்துபுல வேடர்கைப்பட் டிளைத்தேன்

தினையேறும் புனம்பொலியென் னன்னைபொருட் டணைந்த

          திருவடியாங் கலத்தமையச் சேர்த்துபர ஞான

முனையேறும் படிகடைக்கண் ணோக்கிடுவாய் செல்வம்

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(5)

வேலிநட்புப் பெற்றமையாப் பயிர்போலே யநித்த

          வெறிமிகுத்து நித்தியவி வேகமதாற் றெளியார்

போலிநட்பு மெய்யெனக்கொண் டன்னவர்வாய்ச் சொல்லாம்

          புதுமதுவுண் டியற்றும்வகை புரியாதெய்ப் பேன்முன்

ஆலிநட்புப் பெற்றமையுன் சகுணவுருக் காட்டி

          அருவுருவா முபயநிலை யநுபவமாண் பருள்வாய்

மூலிநட்புப் பெற்றுவரை முழுதமைவாய் கோலம்

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(6)

சிறையகத்திற் பட்டயர்ந்து துதித்துருகுஞ் சயந்தன்

          சிந்தையமை கனவுபலித் திடப்புரியுஞ் செயல்போல்

தறையகத்தி லுற்றகுறு வாழ்க்கையிற்போ கத்தில்

          தளையமைந்து வாடுமெனைத் தனியகண்ட ஞானத்

துறையகத்தி லமைத்தருள வேண்டுமென விரந்துன்

          துணையடித்தா மரைகருத்தித் துதிக்குமென்விண் ணப்ப

முறையத்திற் கொள்கிலர்போ லிருப்பதென்னே நீதி

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(7)

பற்றமைந்த வுடலகத்தே யுற்றதுணை யான

          பருவமெலா மோடிடுமோர் பண்பறிந்தும் பார்மேல்

பெற்றமைந்தர் மனைவிசகோ தரர்சதமென் றெண்ணிப்

          பிரமைபெருக் கிடுமாயப் பித்தமற வொழித்துக்

கற்றமைந்த கௌமாரத் தொண்டருட்டோய் ஞானக்

          கண்ணளித்தென் கருத்தகத்திற் கணம்விலகா தென்றும்

முற்றமைந்த துணையாவா யடைக்கலம்யான் செம்மை

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(8)

அன்னியர்குற் றந்தூற்ற வெனதுகுணம் போற்ற

          அனந்தனும்பின் னிடமெய்யெலா மமையனந்த நாவேன்

மன்னியவென் குற்றமுடன் பிறர்குணஞ்சொல் வதெனில்

          வஞ்சமகா மௌனநிலை வாய்த்திடுவே னுளத்திற்

பின்னியவோர் பசுஞானக் களங்கமற வொழித்துப்

          பிறங்குபதி ஞானவின்பப் பேறமையும் படியென்

முன்னியற்கை யின்பமயச் சேவையருண் மகிமை

          முதிர்கோயிற் பாளையச்சவண் முகவருட்சற் குருவே.

(9)

ஒற்றுமைவேற் றுமையதனி லுறவுபகை தன்னில்

          உலகபந்த முத்தியில்வே ரூன்றவிடா துளத்தில்

பற்றுமையந் திரிபறியா மையைவளர்த்தே போலிப்

          பகட்டிசைக்கும் விகற்பசத்தி பயிற்றுசக சாலம்

தெற்றுமைய லத்தனையுந் தினகான்முன் னிருள்போல்

          தீர்த்தொழித்துற் பவமரணத் தியக்கறுபே ரின்பம்

முற்றுமைய நிலையிலுற வைத்தருள்வா யுண்மை

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(10)

கீர்த்தியருட் கதிர்பரப்புந் தினகரனே ரருண

          கிரிநாதன் பெற்றமையுன் கிருபையினா லுள்ளம்

பூர்த்திபெறு ஞானாநு பூதிகைவல் லியமாய்ப்

          பொங்கிவழிந் திடலேபோற் புதுமதுர புஞ்ச

நேர்த்திபெறு முன்புகழ்ச்சீர் கடல்மடைவிண் டதுபோல்

          னின்கோயி லிடந்தொறும்போய் நிகழ்த்துமவா வளித்த

மூர்த்தியுன்மெய்த் திருவுளமென் பாக்கியங்கா ணார்வம்

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவே.

(11)

புத்திநிலை பெறவழிபா டருளியுபா சனையின்

          பொலிவளித்துச் சித்திவரப் புரிந்துபர ஞான

முத்திநிலை யமைத்துயிர்கட் புரந்திடும்பே ரருட்சீர்

          முதிர்கோயிற் பாளையச்சண் முகவருட்சற் குருவை

நத்தியல்சேர் சிரவையிரா மானந்த நாதன்

          நளினமலர்த் தாளகத்தில் நயந்தகந்த சாமி

துத்தியஞ்செய் தணிபதிக மிசைக்கவல்லா ரெல்லாம்

          துன்பமணு காதியல்பே ரின்பமிசை வாரே.

(12)

முற்றிற்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக