வெள்ளி, 25 செப்டம்பர், 2026

சத்திய சூத்திரம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

சத்திய சூத்திரம்

காப்பு

நேரிசை வெண்பா

1.         பத்திசித்தி முத்திப் பயனடைவார்க் காதரவாஞ்

சத்திய சூத்திரநூல் சாற்றுவதற் – கெத்திசையில்

வாழு மெவரு மறக்கரிய மெய்ப்பொருளாச்

சூழுங் குருவே துணை.

 

நூல்

முதலாவது

தெய்வத்தன்மை

2.         தெய்வமொன் றுளதெனத் தேறிப் பணிவது

மானிடப் பிறப்பில் வந்தோர் கடனே.

(1)

3.         தெய்வமின் றென்பவர் தீய விருகமே.

(2)

4.         பத்தர்த மெண்ணப் படிவிளங் குவதே

            நித்தமாந் தெய்வ நிலையென்ன முறையே.

(3)

5.         அவனவ ளதுவா யளவில்பற் பலவாஞ்

            சமயங்க டோறுஞ் சார்வதோர் தேவே.

(4)

6.         தன்னருள் பெற்றார் தமைப்பெறார் தனதே

            வென்ன விளக்கு மியற்கைதே வினதே.

(5)

7.         பெரிதருள் பெற்றார்ப் பேணா திகலிச்

            சிறிதுபெற் றுள்ளார் சிதைவுறு தீங்குங்

            கண்டுகண் டுறுதல் கடவுட் டன்மையே.

(6)

8.         நன்றொடு தீதி னடுநிலைப் பொருளாந்

            தெய்வத் தன்மை செப்பருந் தகைத்தே.

(7)

9.         இஃதே தெய்வத் தியற்கையென் றியம்பி

            யிகழப் பட்டா ரெண்ணரும் பலரே.

(8)

10.       எப்பொருட் குறிக்குமி யாவர் வணக்கமுந்

            தெய்வத் தினவெனத் தெளிகுவ தரிதே.

(9)

11.       தெய்வமென் மெய்ப்பொருள் செயுந்தொழில் பலவற்

            றோருயி ரதனையொத் தொளிரச் செய்தலி

            னன்று மதுபோ னாயுண  வருந்தித்

            தேக்குநர் கொடுங்கோற் செருக்குக் காட்டலிற்

            றீது மின்றெனச் செப்பிட றுணிவே.

(10)

ஆகச் சூத்திரம் 10.

 

 

இரண்டாவது

குருத்துவம்

 

12.       சகள முழுது மத்தன்மை வாய்தரப்

            பெற்ற தவனும் பெருங்குரு வாமே.

(1)

13.       வெட்டறா வுடல்கொளு மேதகு குரவற்

            றெய்வத் தயலெனச் செப்பவொண் ணாதே.

(2)

14.       எச்சம யங்களு மென்னவென் றேற்றே

            குற்றங் களையுங் குருத்துவம் வலிதே.

(3)

15.       குருவென நிகழ்வான் கொன்றூ னருந்தாக்

            கருணையைப் பெருக்குங் கடமை யோனே.

(4)

16.       எத்திறற் குருவு மிரக்க மிலானேற்

            சத்தியஞ் சத்தியந் தகுவனா மவனே.

 

17.       இரக்கமிலா மாந்தர்க் கியலுணர்ந்தார் கூடி

            அரக்கரெனப் பேரிட் டனர்

(5)

18.       தன்றவ வலியாற் சார்ந்தமா ணாக்கர்க்

            கின்பந் தருகுரு வெவனோ வொருவனே.

(6)

19.       பக்குவத் தளவிற்  பகர்தரு குரவன்

            மிக்குயர்ந் தோனென விளம்பும்மூ துலகே.

(7)

20.       கன்னியைத் துயர்செய் காமுக ரென்னத்

            தன்னிலை சிறியார் தமக்குரைத் துரைத்துப்

            புண்செயுங் குரவர் பூமியிற் பலரே.

(8)

21.       வல்லான் குருவெனின் மாட்டா தாரையு

            நல்லாற் றொழுக நடாத்து மன்றே.

(9)

22.       சமயக் குருவரிற் றாழ்தகை யினருங்

            கூலிகொள் குரவரிற் கூர்ப்பினர் தாமு

மிருப்பா ரேயென் றியம்பிடத் தகுமே.

(10)

ஆகச் சூத்திரம் 20.

 

மூன்றாவது

தவநிலை

23.       தன்தொழி லாவது தவமொன் றேயென

            வள்ளுவ ராதியர் வற்புறுத் தினரே.

(1)

24.       சிவன்றிரு மான்முதல் றேவர் பலரையுந்

            தவரெனக் கூறுந் தருமமொன் றுளதே.

(2)

25.       குருவாச் செய்தலுங் கொற்றவ னாக்கலு

            முற்றவ பலமென மொழியத் தகுமே.

(3)

26.       கருணை தோய்தலுங் காமங் கடிதலுந்

            தவத்தின துறுப்பெனச் சாற்றிடன் முறையே.

(4)

27.       காமந் தன்னிலுங் கடும்பகை கொலைபுலை

            யாந்தவத் தினுக்கென் றறிகுநர் சிலரே.

(5)

28.       செங்கோன் மன்னர்ச் சீர்பெறத் தாங்கலுங்

            கொடுங்கோ லரையர்க் குலத்தொடு கடிதலுந்

            தவசிகள் கடனெனச் சாற்றிடன் முறையே.

(6)

29.       உலகுயத் தகுந்நல மொன்றுமெண் ணாது

            தாமுயக் கருதுந் தவத்தினர் பலரு

            நாயனை யாரென நவிலத் தகுமே.

(7)

30.       தன்னலந் தாழ்த்தித் தரணி யுய்யு

            நன்னல முயர்த்துந னரகுலத் தவனே

            யாயினு மவனை யரியெனத் தகுமே.

(8)

31.       புலியழு நாளிற் பொன்றலும் பிறப்புந்

            தவிர்கதி யெய்துந் தவத்தோன் றனிலு

            மதுமகிழ் வதுவேட் டானமட் டுழைத்துப்

            பலர்நக விறந்தோன் பண்புய ருண்மை

            யருளுடைப் பரமே யறிதற் பாற்றே.

(9)

32.       இகபரம் வாழ்வித் திறப்பொடு பிறப்பின்

            றாயவீட் டடைத லருந்தவப் பயனே.

(10)

ஆகச் சூத்திரம் 30.

 

நான்காவது

வேதியர் தன்மை

 

33.       தன்னுயிர் போல்வன சருவான் மாக்களு

            மென்னுநீ ரந்தணர்க் கியற்கைய தாமே.

(1)

34.       இந்திரற் கட்டிலொ டீர்க்கும் வேதிய

            ரவனூர் நலம்விழைந் தருந்தா ரூனே.

(2)

35.       சீரருள் விழைவோன் றேய்வப் பிராண

            னழற்றசை நுகர்வோ னசுர வேதியன்

            றம்மிற் றாழ்ந்தார் தமக்கே பணிசெயற்

            காதலிக் கின்றோன் கடைப்பார்ப் பானே.

(3)

36.       மனைமக வினரொடு வாழினும் பார்ப்பான்

            றவர்பெருங் குழாத்திற் சார்ந்தோன் றானே.

(4)

37.       எவ்வகைத் தேவவர்க் கிடுமுண வாதியு

            முண்டநு பபவித்தற் குரியாவே தியரே.

(5)

38.       ஆயிரந் தோளிறை யாதியர் பலரையோ

            ரந்தணச் சிறுவ னணிதரு பரசால்

            வென்ற வுண்மை விளம்புமிவ் வுலகங்

            குயமக டன்னைக் கூடியோர் பனவன்

            பெறுமக றன்னாற் பீதக நாடு

            மதிக்குமோர் வேந்தன் மாய்ந்ததுஞ் சொலுமே.

(6)

39.       கந்த நாண்மலர்க் கடவுனூற் காக்கு

            மந்தணர் மாட்சி யறிவரும் பாற்றே.

(7)

40.       அந்தணர் நெறிச்சென் றல்லதி யாண்டி யாருஞ்

            செந்தகை முத்திச் சீர்பெற லரிதே.

(8)

41.       சாதி யொழுக்கந் தவறினு மற்றோர்

            வேதியர் நிந்தை விளம்பவொண் ணாதே.

(9)

42.       வேதிய மகவா மேதினிப் பிறந்துந்

            தீதியல் வார்போற் றீய ரின்றே.

(10)

ஆகச் சூத்திரம் 40.

 

ஐந்தாவது

அரசர் தன்மை

43.       சரதமும் நீதியுந் தன்மையுஞ் சார்தரு

            மரசன்மா நிலத்தோர்க் கனையனை யானே.

(1)

44.       பொய்புலை கோரம் பொருணசை யாதிய

            வெய்தும னுலகோர்க் கெமனனை யானே.

(2)

45.       எக்கணத் திகல்வந் திறுக்குங் கொல்லெனு

            மச்சமும் வீரமு மணைதரும் மன்னே

            யரசோர் பெருஞ்சுமை யாமென் றறிவனே.

(3)

46.       தயரதன் மகனெனத் தரணி யோருக்

            கஞ்சும னனிகலா லழியா னன்றே.

(4)

47.       கூழில்பாழ்ஞ் செய்க்கிறை கொள்ளுங் கொடுங்கோன்

            மன்னர்ச் செயுநாண் மலரவன் கைக

            ளெட்டுங் காரிவந் திறுக்கத் தகுமே.

(5)

48.       இகனமக் கின்றென் றிறுமாப் படையும்

            மன்னர் போலும் மடமையோ ரின்றே.

(6)

49.       ஆலயம் பசுக்க ளந்தணர் புலவோர்

            மாதர்கற் பாதியின் மன்ன னோக்கம்

            பெரிதுவைத் தளிப்பிற் பீடுறு மன்றே.

(7)

50.       மழைவறந் திடலான் மாநிலந் தளர்நாள்

            வாள்வலித் தடக்கை மன்ன னுண்ணு

            நல்லுண வனைத்து நாய்மலம் போன்ம்மே.

(8)

51.       தெய்வந் தன்னொடுஞ் சித்தரா தியரொடும்

            பேசலு மன்னன் பெறத்தகுந் தகுமே.

(9)

52.       நன்முறை செய்யினு நலிவுற வருத்தினு

            மன்முதற் றேவா மாநிலத் தினர்க்கே.

(10)

ஆகச் சூத்திரம் 50.

 

ஆறாவது

வணிகர் தன்மை

53.       செட்டெனுஞ் சொற்பொருள் சிறிதே யாயின்

            முழுதுணர் புலமை முருகறி யானோ

            வவனது புனைதலி னான்றதே யாமே.

(1)

54.       பத்தி கொண்டு பழுதில்வீ டீதலுஞ்

            செட்டெனின மற்றது தீருமா றின்றே.

(2)

55.       வணிகர்தா முலோபம் வாய்ந்தோ ரென்கை

            தரணி முற்றுந் தபனனொத் தெறிப்பினு

            மொவ்வொர்கா லவர்க் குதிக்கு முதார

            மகிதல முழுதாண் மன்னரெய் தாரே.

(3)

56.       கொள்ளல் கொடுத்தலின் குணமுங் காலமும்

            பொருண்நலங் கேடும் போதத் தெளிதல்

            வணிகர்தங் கடனென மாநிலஞ் சொலுமே.

(4)

57.       கலமுகைப் பாரிற் கள்வருங் காட்டிற்

            பைக்கூ றைப்பொருள் பலவிற் பாரிற்

            சீரியர் தாமுஞ் சிலரிருப் பாரே.

(5)

58.       வட்டியி னாசை மலிவுறும் வணிகன்

            கொட்டிய பொருள்,கரிக் குவையா மன்றே.

(6)

59.       சற்குரு மொழிவழி  தானியம் விற்றோன்

            பொற்கல் லொன்று, புணரியிற் போக்கியும்

            தானா வந்து தாளடைந் ததுவே.

(7)

60.       ஈச னளித்த வெழின்மாங் கனியொன்

            றினிதருந் தின்னமுத லெண்ணில் பல்லோர்

            வணிகர்தங் குலத்தின் மாண்படைந் தோரே.

(8)

61.       மழைமலிந் தியங்கும் வளநா டொப்ப

            வேனைய நாடு மியங்கச் செய்யும்

            வணிக மாந்தர்தம் மாட்சிமை வலிதே.

(9)

62.       வாரிதி குடித்து மலய மால்வரை

            மீதுறை முனிக்கோன் விளம்பு நூல்வாய்

            கூரியோர் வணிக ரெனக்குல வியதே.

(10)

ஆகச் சூத்திரம் 60

 

ஏழாவது

சூத்திரர் தன்மை

63.       நால்வகைக் குலத்துளு நாலாங் குலத்தின்

            கிளைபல வாக கிளைத்துள வன்றே.

(1)

64.       சூத்திரர் செய்யுந் தொழில்பல வவற்று

            றுழவு போலு முறுதியொன் றின்றே.

(2)

65.       விழுமிய மாதவர் வேதியர் தமக்கு

            முழுதொழிற் கூழே யுணவா மன்றே.

(3)

66.       செங்கோல் கொடுங்கோ லெனத்திக ழிரண்டுந்

            தாற்றுக் கோலாற் றரப்படு வனவே.

(4)

67.       மழைப்பொருட் டேனு மாநிலம் படைத்தாற்

            றொழுதெழு திறைஞ்சல் சூத்திரர் கடனே.

(5)

68.       காலின் றாயிற் கவின்தலை யாதிய

            துயருறு மாறே சூத்திர ரிளைப்பின்

            வேதிய ராதியர் மிகத்தளர் வாரே.

(6)

69.       நீதிநூற் பகுதி நிகழ்த்தினார் தம்மிற்

            சீரிய வௌவையுந் திருவள் ளுவரு

            முழுதொழி லினுக்கே யுயர்ச்சிகூ றினரே.

(7)

70.       வண்டமிழ் மதுரை மாநகர் வழுதி

            கண்டதோர் சித்தர் கல்லானைக் கருள

            கரும்புஞ் சூத்திரர் கழனிப் பொருளே.

(8)

71.       சிவன்மா லாதிய தேவர் தாமு

            முழவா லாமுண வுண்குந ராயின்

            மற்றெவ ரதனை மறுக்கவல் லாரே.

(9)

72.       பத்தியுந் தவமும் பாழென் றிகழ்ந்து

            கருமந் தானே கத்தா வென்னு

            மவரு முழுதொழி லதுமுதற் றொட்டுச்

            செய்யு மாறு செகமுழு தறியுமே.

(10)

ஆகச் சூத்திரம் 70

 

எட்டாவது

பஞ்சமர் தன்மை

           

73.       உயிர்க்கொலை யூனுண வுடையா ரெவரு

            மைந்தாங் குலத்தின ராமென்ன முறையே.

(1)

74.       அரசனுத் தார மகிலத் துள்ளார்

            பலர்க்கு முணர்த்தல் பஞ்சமர் கடனே.

(2)

75.       நால்வகைக் குலத்து நரர்க்குங் கீழ்ப்படிந்

            தொழுகும் பஞ்சம னூறுளோ னலனே.

(3)

76.       கடுகள வூனுங் காதலிக் கில்லா

            னைந்தாங் குலத்தின னாயினு மவனைச்

            சீரியர் தம்மொடு சேர்க்கத் தகுமே.

(4)

77.       நாளைப் போவா னறுந்தமிழ்ப் பாண

            னியாழ்வ லான்முதலா மெண்ணில் பல்லோ

            ரைம்பாற் குலத்துதித் தருளடைந் தோரே.

(5)

78.       கரும நூலோர் கழிப்பினும் பத்தித்

            துறையினர் பஞ்சமர் தொண்டிக ழாரே.

(6)

79.       கொலைபுலை பொய்ம்மை யாதிய கொடுந்தகை

            நீத்தோ னொருவ னீசக் குலத்தி

            லுற்பவித் திடினு மவையுடை யோனா

            மற்றைக் குலத்தனின் மாண்புடை யோனே.

(7)

80.       ஐந்தாங் குலத்தி னருந்ததி கற்பின்

            முதற்குலத் தரிவையர் மூவிரு  வோரு

            மொஞ்சத் தக்க வுயர்ச்சியெய் தினளே.

(8)

81.       அணுவுந் திரணமு மாதிய பிறவுந்

            தெய்வத் துருவெனத் தேறி வீட்டி

            லடைந்த வேதியர்க் களவின் றொருவரும்

            வேள்விக் கொலையு மிகக்கொடி தேயென்

            றைந்தாங் குலத்தி லவதரித் திட்ட

            வாதிமக் களைப்போ லறைந்தில ரன்றே.

(9)

82.       புலைகொலை பொய்ம்மை பொருந்தி நீசக்

            குலத்தினும் பிறந்த கொடியோர் தம்மைக்

            காண்டலு மாகா தென்பர்கற் றோரே.

(10)

ஆகச் சூத்திரம் 80

 

ஒன்பதாவது

கருமம் (தொழில் முறை)

83.       வேதஞ் சொல்லினும், விரிஞ்ச னாதியர்

            நேரிற் கூறினு நீசர்க் குரித்தாங்

            கொலைபுலை செய்தல் கூடா தன்றே.

(1)

84.       சமயா தீதத் தன்மையெய் திடினுஞ்

            சவுச மாதிய தணவவொண் ணாதே.

(2)

85.       தங்குல தருமந் தாழ்ச்சிய தாகில்

            விட்டு நல்லன மேவத் தகுமே.

(3)

86.       மேலாங் குலத்தினர் மேழி வேட்டலு

            நாலாங் குலத்தினர் நான்மறை யோதலு

            மனையன நிகழி னகிலநொந் தழுமே.

(4)

87.       நீசர்கைக் கொடுங்கோ னிகமரூன் வேட்கை,

            யாதிய நிகழ்கா லருந்தவம், பயிர்கள்,

            பசுக்க ளாதியின் பயன்குறை வுறுமே.

(5)

88.       மந்திர பலத்தால் மன்னர் தாமு

            மஞ்சுற வாழ்த லந்தணர் கடனே.

(6)

89.       மாரி குன்றா வளமே கருதி

            யறம்பெரி தீட்ட லரசர் கடனே.

(7)

90.       வாய்ச்சொற் புரத்தலும், வட்டியி னாசை

            வளராத் தன்மையும் வணிகர்தம் பாலவே.

(8)

91.       உண்டி வேட்டோர்க் குதவு மொண்டகை

            சதுர்த்தர் தன்மையிற் றலையா மன்றே.

(9)

92.       தவருவப் பனவே சத்தாங் கரும

            மவர்வெறுப் பனமுழு தசத்தா மன்றே.

(10)

ஆகச் சூத்திரம் 90

 

பத்தாவது

உபாசனை

 

93.    தெய்வ நாட்டஞ் சிறிது மில்லா

            மானிட ரியாவரும் மரையனை யாரே.

(1)

94.       உருவமு மருவமு மொன்றாந் தெய்வத்

            தன்மை யாயினுந், தனிமனக் கண்கொண்

            டுருவா நாடுத லுத்தம மன்றே.

(2)

95.       தெய்வசிந் தனையே திருக்கிளர் தவமா

            மெழுத்தை நாட லியம்பன்மட் டாதல்

            காற்றொடு  முரண லாதிய கடையே.

(3)

96.       பலவற் றொன்றெனப் பழகப் பழக

            யாவுந் தானா வியங்கு மன்றே.

(4)

97.       எந்தே துந்தே வெனவிகல் கின்றா

            ரிளம்ப ருவத்தோ ரென்பது துணிவே.

(5)

98.       தானொரு மூர்த்தி யாந்தகை வரினும்

            பற்றிய வுருவப் பாவனை விடானாக்

            கண்டு தேறுங் களிப்புறு தவனே

            சித்திமுத் திகளின் சீர்பெறு வானே.

(6)

99.       வங்கந் தனையிகழ் மடமலி வாதியும்

            விடங்கொடி தென்றிகழ் வெங்கட் பணியுஞ்

            சித்திவம் பென்றிகழ் சிறுமதித் தவனு

            மொன்றொடொன் றுறழ்தற் குரிய  பொருளே.

(7)

100.    கடன்மலை முதலாக் காண்டகு முலகைச்

            சிட்டிசெய் ததுமோர் சித்தி யாமே.

(8)

101.    தெய்வங் கண்ணெதிர் திகழா தென்னும்

            புன்மைத் தவத்தோர், புராணம் பலவற்

            றெண்ணில் பற்பலர் கண்டிட் டதாகச்

            சொல்லல் முற்றிகழ்ந்த தோட மெய்திக்

            கீழ்மைய ராகிக் கெடுவா ரன்றே.

(9)

102.    கோசிகன் முதலோர்க் குறியாத் தவத்தோர்

            பாவ மலிவாற் பலிநுகர் வோரே.

(10)

ஆகச் சூத்திரம் 100

 

பதினொன்றாவது

ஞானம்

 

103.    அம்பர முதன்முழு தாகியா கானை

            நம்பல் போலு ஞானமொன் றின்றே.

(1)

104.    நானென வெண்ணி நலங்குலை தலினு

            நீயெனக் குறிக்கு நிலையினி தாமே.

(2)

105.    ஒன்றே பரமென் றுணரார் ஞானங்

            கன்றே தம்பல காட்டு மன்றே.

(3)

106.    ஞானமெய் தியபின் னல்லருட்  சித்தியு

            முத்தியு மெய்தன் முறைமை யாமே.

4)

107.    வெல்லத் தினிப்பும் வேம்பின் கசப்பு

            மறிதலு மொருமூன் றாய கால

            நிகழ்ச்சியு மறிந்து நிகழ்த்தலு ஞானமே.

(5)

108.    கல்வி ஞானங் கானசுர ஞான

            முதற்பல நிகழினும் மூவா முதலொடு

            கலக்குமெய் ஞானம் கடுப்ப தின்றே.

(6)

109.    அஞ்ஞா னத்தி லமிழ்தரு சிறுவர்

            ஞானமுற் றேமென நன்கு மகிழ்தலு

            ஞான முற்றோர் நாரண னாதியர்

            திறங்குறித் தெய்தில மெனத்தேம் புதலும்

            பழமை யாமெனப் பன்னுமுன் னூலே.

(7)

110.    தோற்ற மட்டிற் றுலங்குவ தாகி

            யெவ்வகைத் தேவ ரியற்கையுங் காட்டும்

            பிரணவ சரீரம் பெற்று வாழு

            மவனது ஞான மதிக மாமே.

(8)

111.    ஈனமில் பெருமா னீயும் பேற்றுண்

            ஞானம் போலு நலத்ததொன் றின்றே.

(9)

112.    மாண்டார் மீளவும் வருத்தினர் பல்லோர்

            மனிதரி யாரு மாமிச மருந்தாப்

            புனித மெய்தப் புரிதன்மிக் குயர்வென

            ஞான மெய்தி நாட்டில ரொருவரு

            மாதலி னாண்டா னளித வளவி

            லறிவுடை யனவா மாருயிர்த் திரளே.

(10)

ஆகச் சூத்திரம் 110

 

பன்னிரண்டாவது

பொது ஞாயம்

 

113.    சுத்த பூசை தோய்தரு மாயிற்

            பேயுந் தெய்வமாம் பிணப்பலி யேற்கிற்

            றெய்வமும் பேயா மெனுமிவை திறமே.

(1)

114.    தவர்குழாந் தன்னி லொவ்வொரு வனுஞ்சிற்

            சிலர்க்கொரு குருவா மெவனோ வொருவ

னொருசம யத்தோர்க் குரியசற் குருவா

            மவரின்மிக் கரியா னருட்பொதுக் குருவா

            மித்திற மருட்பேற் றீட்டின தளவே.

(2)

115.    பனவனிற் சீர்த்த பஞ்சமன் றானும்

            பஞ்சமனற் னிற்றாழ் பனவன் றானு

            மிருப்பா ருலகிலென் றியம்பிற் றுணிவே.

(3)

116.    எத்திறல் மன்னரு மேங்க மிளிர்தரு

            சித்தி போலுஞ் செல்வமொன் றின்றே.

(4)

117.    வண்டமிழ்க் கவிகளில் வண்ணம்  போலு

            மொண்டகை யினதின் றென்ப துறுதியே.

(5)

118.    எவ்வகைச் சமயமு மிறையுங் குருவும்

            பந்தமு முத்தியும் பகர்வன தாமே.

(6)

119.    அனந்த பேதத் தறுவகைச் சமயமு

            மவைமுழு தொருவலுந் தழுவலு மாகு

            மதீத நெறியொன்று மாய வேழும்

            வழிபடற் பொருட்டே வாரமே ழாயவே.

 (7)

120.    எட்டுச் சந்தமு மியைதரு புலமையுஞ்

            சித்தியோ ரெட்டுஞ் சேரப் பெறுவான்

            கருணையொன் றிலனேற் கடைப்படு வானே.

(8)

122.    ஒருவிதச் சமயத் துள்ளா னெனினு

            மெச்சம யத்து மென்றே வொன்றே

            யவரவர் மனம்போன் றவிரு மென்னி

            லவனைப் பொதுநலத் தவரிக ழாரே.

(9)

123.    மெலியா வீரமும் வென்றியு மேலோ

            ரானா ரிகழா வருட்பெருஞ் சித்தியு

            ஞானா சாரமு நல்லநு பூதியு

            முடையா னுலகோர்க் குய்வரு டெய்வமே.

(10)

ஆகச் சூத்திரம் 120

முற்றிற்று.

 

நூற்பயன்

நேரிசை வெண்பா

124.    பாடியலுத் தேற்பிடித்துப் பாரதியாள் பாருலகங்

            கேடியலா வண்ணங் கிளத்துவித்தா – ளீடில்புகழ்ச்

            சத்திய சூத்திரநூல் சார்ந்தொழுகு வார்பலர்க்குஞ்

            சித்திமுத்தி நல்குவ துண்டே.