வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
பொது நூல்
காப்பு
(நேரிசை வெண்பா)
1.
எல்லா வுலகு முடையானை யெத்தொழிற்கும்
வல்லானை யன்பர் மனத்தானை – நல்லார்
விருப்பொருங்கு நல்கியொளிர் மெய்யானைப் பேசுந்
திருப்பொதுநூற் சொல்லே திறம்.
1. கடவுள் வாழ்த்து
2. மாதா வயிற்றகத்தும்
வண்சுவை யவூணளித்த
தாதா வொருவனே சற்குருவென் – றோதாத
பொய்ச்சமையத் தோரும் புகழும் பொதுக்கடவுண்
மெய்ச்சமையத் துள்ளவனா மே.
(1)
3. இத்தன்
மையனென் றியம்பரிய மெய்க்கடவு
ளெத்தன் மையுமுடையா னென்போரே – பைத்தலைப்
பாம்பன்ன சமைய மளவிறந்த பல்கோடி
துன்னவைத்தா ரென்பதுண்மைச் சொல்.
(2)
4. உலகிற்
சிலர்தயங்க வொன்றுட னொன்றொவ்வா
தலகில் சமைய மமைத்தோன் – கலகமறுத்
தொன்றாக் கியாள்வலியு முள்ளாளென் றோதுவது
நன்றாற் சிறந்துடைய நா.
(3)
5. எங்கு மிருக்கு
மிறையொருவ னென்னார்தஞ்
செங்குருதி யாறோடச் செற்றேனும் – பொங்குகடற்
பூமி நிறையப் புகழ்விளைக்கும் புண்ணியர்க்கே
காமியமு ஞானக் கதி.
(4)
6. யாதொன்றுந்
தானறியா தில்லா விறையவனை
வாதொன்றும் பேதம் வகுத்தானைக் – காதொன்றக்
கேட்டு மடமிகுத்துக் கீழோரைக் கெஞ்சுநர்க்கு
வீட்டு நலந்தீதா குமே.
(5)
7. எந்தப்
புகழு மிறைதருவ தென்றுரைக்குஞ்
சொந்தப் புலவருள்ளிற் றோயுமவன் – கந்த
மலரிற் செறிவதென் வானமுற் றுநின்ற
நிலயந் தெரிவதொன்றே நேர்.
(6)
8. தன்னைப்
புகழ்ந்திறைஞ்சுந் தன்மையோர் சாற்றன்முற்று
முன்னை மொழியாக்கு முதல்வனன்றிப் – பின்னையொன்றை
நன்றென் றுரையா நலத்தினோர் நற்புகழ்ச்சி
யென்றென் றொளிவிடுவ தே.
(7)
9. பொய்ச்சமையங்
கோடி புவியிற் கிடந்தாலு
மெய்ச்சமைய மொன்றன்றி வேறில்லை – யச்சமைய
மெத்தேவு மெங்கோ னெனவுரைக்கு மில்லையென்னுஞ்
சித்தேமெய்த் தெய்வமென்ப தே.
(8)
10. வாயுடைய
வெல்லாம் வளர்கால முள்ளமட்டு
மேயுடைய வண்மை விரித்தாலுந் – தீயுடைய
செந்தேன னையபொதுத் தெய்வத்தின் சீர்முடியா
தெந்தே வதுவொன்று மே.
(9)
11. ஓர்சமையத்
தேவா யொருவனா மெம்பெருமான்
பேர்சமையத்த தன்றிப் பிறருமாஞ் – சீர்சமைத்துப்
பேசியிகழ்வ தற்கோ பேசுமொழி கற்பித்தா
நாசிபகர்ந் துள்ளவென்றே யாம்.
(10)
முற்றிற்று.
2. கருணைக் கடல்
12. பரிதிமதி
யெழிலி பார்நீ ரழல்கால்
விரிக்கனம் வெற்றிவேல் வேந்தன் – றிரிவனவு
நிற்பனவு மாராய்ந்த நீள்கருணைச் சோதியொன்றே
தற்பரமாஞ் சத்தியந்தான் றான்.
(1)
13. வேந்தருக்கு
வேந்தனைய வேந்தன் விறற்கருணை
சாந்தமே யன்றித் தறுகணே – யாந்தகைமை
மெய்யடியார் தம்மளவு மேவாது மேவிடினு
மையமில்லை யஞ்சா ரவர்.
(2)
14. அணுவசைவுந்
தன்னசைவே யாகநின்ற சோதி
யெணுமியல்பை யாரறிவா ரில்லைக் – கணுவுமிழுஞ்
செந்நென்முத்தஞ் சிந்துந் திரைநீர் வயலுலகோர்க்
கெந்நெறியு நன்றாகு மே.
(3)
15. சூனிய மென்றோதறியாத்
தொண்டருக்கித் தொல்லுலகு
மேனிலமுஞ் சொந்தமென வெற்றிதருங் – கோனிருக்கப்
போற்றாமற் றம்முடைய புந்திபரமென் போர்க்குக்
கூற்றாங் கருணைமிகுங் கோ.
(4)
16. பல்லூழி
மெச்சிப் பகர்ந்தாலுந் தீரரிய
நல்லூழ் வடிவான நாயகனைச் – சொல்லூழென்
றோதமட்டும் வல்லா ருணரா ருயர்கருணைச்
சீதளத்தோர் காண்பார் தினம்.
(5)
17. தன்னடியார்
நெஞ்சந் தனைவிரும்புஞ் சத்தியத்தோ
னென்னடிமை யென்று மியம்புமா – முன்னடிமற்
றாருமில்லை யில்லை யவனாணை யன்னவனாஞ்
சாருமறி வோருரைக்கின் றார்.
(6)
18. கடவு ளருட்பேறே
கல்வியென்ற சொற்கேட்
டுடல்குளிர நெஞ்சு முருகத் – திடமுரைக்கு
மெய்யடியார் கூட்டமொன்றே மேலவர் கோன்றன்கருணைச்
சைய மிசையேறத் தகும்.
(7)
19. கருணையில்லார்க்
கில்லைக் கதியென்ற சொற்கொண்
டிருணலிய நாடி யிளைத்துத் – தருணியென
நெஞ்சுருக்கும் பாட
னிகழ்த்தவல்ல மெய்யடியார்க்
கஞ்சுதொழிற் செய்வதரி தா.
(8)
20. எந்த நலத்தை
யெடுத்துப் புகழ்ந்தாலு
மைந்த ருணர்வில் வலியென்ற – சொந்த
நிலயந் தனைக்காட்டு நித்திய மாந்தெய்வ
மிலகுங் கருணைவடி வே.
(9)
21. எல்லா நலமு
மிருந்தாலு மின்கருணை
யில்லார் வலிசிறிது மில்லாரே – கொல்லாமை
யொன்றுடையா ரியாவு முடையா ரெனவுரைக்கு
நன்றுடையார் தம்மடிமை நாம்.
(10)
முற்றிற்று.
3. நீதிநெறி
22. மெய்க்கடவு
டன்னை விரும்பு மொருவனுக்காப்
பொய்க்கடவு ளன்பர்களைப் பொன்றுவித்துக் – கைக்டவு
ளொன்றே யுயர்வெனினு முள்ளதெனுங் கள்ளனென
நின்றே யுலகா ணெறி.
(1)
23. எங்கோன டாத்துநெறி
யின்னதென யாரறிவார்
தங்கோ னொருவன் றனியனெனச் – செங்கோல்
செலுத்துந் திறலுடைய செல்வ ருணர்வா
ரலுத்திகழ மாட்டா ரவர்.
(2)
24. தீய ரறியார்
தெளிந்தோர் விருப்பமறார்
மாய மறுத்தோர் மருவுவார் – தூய
குணமனைத்துங் கொண்டதொரு கோமான் கொடியோர்
நிணமிகுக்கக் கொல்லு நெறி.
(3)
25. செங்கோலும்
வேலுந் திகழ்புயத்துத் தேர்வேந்து
மெங்கோன் கடவுளே யென்போனும் – வெங்கோலைக்
காயுங் கரமுங் கருத்துமுடை யாரெனக்கண்
டேயுந் துயரொழிப்ப தே.
(4)
26. தெய்வ நெறியினன்றித்
தீர்க்கரிய சந்தேக
மெய்வ தரிதறிமி னேழையீ – ருய்வ
தறியே னெனத்தளரு மாகுல மொன்றற்றாற்
பொறியே மதியாகிப் போம்.
(5)
27. நாயினு ரிமைகொண்டு
நற்குரங்கிற் பற்றுமன்பர்
மேயி னலது வெருளாதார் – தாயிற்
றிகழு மொருவனுக்குத் தெய்வமுள தென்போர்
புகழு மிகழும்பொ றை.
(6)
28. நற்கோ வுதவி
நலந்தீது காட்டுமவன்
றற்கோப மின்ன தகைத்தென்று – சிற்கோலங்
கண்டோ ரறிவதன்றிக் காசினியிற் காண்பவரார்
விண்டோய் நெறிகாட்டு மெய்.
(7)
29. தானே யழிவரிய
சத்தியமா நின்றதனிக்
கோனே யெமது குலதெய்வ – மானேறு
போலப் பொருந்திறலோர் புந்திகொண்ட மெய்த்துறவோர்
சாலப் பெருகுந் தமர்.
(8)
30. அன்னமு நீரு
மளித்துறங்கச் செய்தெழுப்பு
முன்னவ னீதி முறைநோக்கின் – மன்னவனுள்
ளஞ்சுந் திறலு மடியார்மெய் யன்பதனாற்
கொஞ்சுதலுந் தோன்றுங் குணம்.
(9)
31. ஓங்குங்
கடவு ளொருவ னெனவுணர்ந்தோர்
தாங்கு நெறியே தவமென்னிற் – றீங்குபுகல்
புன்சமைய மத்தனையும் போக்கிப் பொதுவிளக்கு
வன்சமைய நன்னெறியோர் வாள்.
(10)
முற்றிற்று.
4. சத்தியம்
32. யாவருக்குங்
கோவா மிறையொருவ னன்றிமற்றோ
சாவரெனக் கூறுகின்ற சத்தியம்போ – லீவதற்ற
மன்னருக்குத் தீங்கு வருமெனலுஞ் சத்தியமே
சின்னதல்ல மெய்ச்சத்தி யம்.
(1)
33. மெய்யறிந்த
மெய்யருக்கே மெய்யன ருண்மெய்யாம்
பொய்யழிந்த வெற்றிப் புகழுண்டாம் – வையமுடன்
வானுஞ் சமமாம் வழக்கறியு மாண்பெய்து
நானும் பொதுவென்னு நா.
(2)
34. செஞ்சேவ
லென்னச் செருப்புரியுந் தேர்வேந்தர்க்
கஞ்சேனென் றோது மறிவுடையார் – நெஞ்சேகன்
றன்பா லிருக்குமன்றித் தன்னுடம்பைத் தானென்று
வன்பா லழியாதம் மா.
(3)
35. கொல்லார்தங்
குற்றங் குணமாகக் கொள்ளுமொரு
வல்லான் றனைமறந்தோர் மற்றவரைப் – பொல்லாரென்
றெண்ணிப் பரதவிப்பா ரென்றுணர்ந்தீண் டெப்பொழுது
நண்ணிப் பரதவித்தே னான்.
(4)
36. இறைவன் றனைப்பணிவோர்க்
கின்னலு நல்லின்பம்
பொறையுஞ் சவுரியமும் பொற்பூண் – கறைதவிர்ந்த
நெஞ்சே யினியதுணை நீணிலத்துச் சீவர்முற்றுந்
தஞ்சே யனையார்மெய் தான்.
(5)
37. பொன்றாப்
பொருளறிந்து போற்றும் புனிதரதன்
கன்றாவ ரென்னுங் கவிஞர்பாற் – சென்றார்க்கு
மெத்தொழிற்குந் தாரகம தென்றுணரு மெய்மையுண்டாம்
பொய்த்தொழிலிற் சேரா பொறி.
(6)
38. சத்தியத்துக்
கஞ்சுந் தவத்திற் சிறந்தோர்க்கே
நித்தியன்பாற் பேசு நினைவுண்டா – நத்தியவா
றெல்லாங் கிடைக்கு மெளிமைப் படவிளையும்
பொல்லா வினையனைத்தும் போம்.
(7)
39. மெய்யாங்
கடவுளன்றி மெய்யுளதென் றோதுமவர்
பொய்யாள ரென்றுணர்ந்தும் பூதலத்தி – னையாம
னையுஞ் சிலர்புகழை நாட்டா மனைவுற்றாற்
செய்யுந் தொழிலே திரு.
(8)
40. எவ்வுயிருந்
தன்னடிமை யாகு மிறைவனுக்குத்
தெய்வுயிர்கொன் றோங்குந் திறற்புதல்வ – னிவ்வுயிரென்
றெண்ணு மறிவுடையா னியாவனவ னிச்சைபொய்த்தான்
மண்ணுலக மீடேறு மா.
(9)
41. மெய்வெறுத்து
மெய்மை விரும்புகின்ற வித்தகர்க்குப்
பொய்வெறுக்கும் வாழ்வோர் புதுமையோ – மைவெறுக்கும்
பஞ்சந் தவிரப் பரனருளுந் தம்புகழு
மிஞ்சன்பு கொள்வதொன்றே மேல்.
(10)
முற்றிற்று.
5. சித்து
42. எங்கெங்கு
நிற்கு மிறையவனை யேதமில்சீர்ச்
சிங்கம் பொருவுஞ் சிலநல்லோர் – பங்கினின்று
சித்து விளையாடுந் தெய்வத்தைச் சிந்தைசெய்வோ
ரத்துடையா ராவார்க ளாம்.
(1)
43. உலகிற் குதவும்வலி
யுள்ளா ருதவா
திலகு முடலோ டிருந்தா – லலகையினுந்
தீயரெனத் தேர்ந்துதினஞ் செப்புந் திறலளித்த
நாயகன் சித்தொன்றே நலம்.
(2)
44. மேகம் புனல்சொரிய
வெண்கதிருஞ் செஞ்சுடரு
மாகந் தனிலுலவ மாறுபடா – தேகவெளிச்
சித்தன் புரியுந் திருவிளையாட் டுன்னிமகிழ்
பத்தனுக்கு முண்டோ பயம்.
(3)
45. சித்தே வடிவாத்
திகழ்கின்ற தெய்வமொன்றே
யெத்தேவு மாமென் றிசைவுற்றும் – பொய்த்தேவு
மந்தந்த லோகத் தமர்கின்ற தென்னார்தஞ்
சொந்தந்தா னந்தச் சுடர்.
(4)
46. சித்தைப்
பழித்துத் திரிகின்ற தீயோர்மற்
றெத்தைக் கருதி யிருப்பாரோ – தத்தைமொழித்
தாயகடு நீங்கித் தறையிற் சிசுவென்முன்
மேயதுவு மத்தொழிலா மே.
(5)
47. அண்டபிண்ட
மாதி யனைத்து முளவாகக்
கண்டனவு முண்மைக் கடவுளார் – தொண்டருக்குச்
சித்தென்று தோன்றுந் திருட்டுத் தவமுடையார்க்
கெத்தென்று தோன்றுங் கொலே.
(6)
48. வங்கந் தனையிகழும்
வாதிகளு மாதவத்துச்
சிங்கமெனச் சித்துமிகச் செய்யாமற் – பங்கமுறும்
பத்தர்களும் பொய்யரெனப் பாடுகின்ற பாவலரைச்
சத்தரெனச் சொல்வதுமெய்ச் சொல்.
(7)
49. மெஞ்ஞானஞ்
சித்து விரவியதென் றோதாரே
யஞ்ஞானத் தோரென் றறிவுற்றோர்க் – கெஞ்ஞான்று
முள்ளானைப் போற்று
முணர்வுடைய மேலோருந்
தள்ளாப் பெருமை தகும்.
(8)
50. மெய்ச்சித்
துடையாரே மேலோர் வெருட்சியறாப்
பொய்ச்சித் துடையாரும் போன்றோரே – யெச்சித்து
மெங்கோ னருளிலையே லில்லையில்லை யாவருக்குந்
தங்கோ னவனொருவன் றான்.
(9)
51. எச்சமையத்
தோர்க்கு மிலங்குமெழின் மங்கலநா
ணச்சமறுஞ் சித்தொன்றே யல்லாம – லச்சமையத்
தெய்வங்க ளெங்கோன் றிருவருளை யன்றியில்லை
மெய்வசனங் கண்டுசொன்னோ மே.
(10)
முற்றிற்று.
6. ஞானம்
52. பத்திமுற்றி
வைராகப் பண்பா மதுமுதிர்ந்தாற்
சித்தி தருஞானத்
தெளிவுண்டா – முத்தி
வடிவாம் பொதுக்கடவுள் வண்மையே கூறு
மடியாருக் கெய்து மது.
(1)
53. ஞானமில்
லாத நரரெல்லாம் புல்லருந்து
மானமில் லாத மரையொப்பா – ரேனைப்
பெரியோர் பொதுக்கடவுள் பெற்றமைந்தர் போல்வார்
கரியோதி லன்னவனே காண்.
(2)
54. பெற்றவர்போற்
றெற்றிலரும் பெற்றேமெனப் பிறங்கி
யுற்றதொரு ஞான வொளிகண்டான் – மற்றவருந்
தந்தமரென் றெண்ணுந் தகையுண்டாந் தாழ்வணுகா
தெந்தவுல குந்தனதா மே.
(3)
55. மெய்யறிந்து
போற்றாத வீணருக்கு ஞானமில்லைப்
பொய்யணைந்தோர் நெஞ்சிற் பொறையில்லை – யையந்
தவிரார்க்குச் சித்தியில்லைத் தன்னைமறந்த
கவிராசர்க் கில்லைக் கலி.
(4)
56. தன்னுடலம்
வீங்கத் தசையருந்துந் தன்மையர்பான்
மன்னுமெஞ் ஞான மருவாதே – யென்னுயிர்க்குச்
சேதம் வரினுமொன்றைச் செற்றருந்தே னென்றுரைக்கு
மாதவர்பாற் றானே வரும்.
(5)
57. தெய்மொன்றுண்
டென்னத் தெளிகின்ற மெஞ்ஞான
மெய்வ தரிதே யெளிதல்ல – மெய்வலிமை
கண்டவர்போல் வாசனையாற் காசினியின் மாந்தர்சிலர்
விண்டதனா லாவதென்ன வீண்.
(6)
58. தெய்வமுண்
டென்னுந் தெளிவுற்றோர் சித்தனைத்துஞ்
செய்வரெனக் கூறுந் திறலோரே – மெய்வழக்கா
பொய்வலி கண்டஞ்சாப் புனிதர் புரைதீர்ந்தோர்
நைவ தொழிந்த நரர்.
(7)
59. அண்ண லருள்பெற்
றகங்குளிரா ராயுண்முற்று
முண்ண வுறங்க வுரையாடப் – பெண்ணணங்கு
காணப் பொருள்விளைக்கக் காவலவ ராதியர்பா
னாணத் தொலைவத்து நாள்.
(8)
60. பூவுலகிற்
றம்மினத்தோர் பொய்த்தேவைப் போற்றாதோர்
தேவுள தென்னத் தெளிவியா – ரியாவும்வல்ல
மெஞ்ஞானம் பெற்றதெல்லாம் வெட்டவெறும் பொய்யாகு
மஞ்ஞானத் தோர்க்கேமெய் யாம்.
(9)
61. தேகமன்று
நானென்னச் செப்புந் தெளிவுமெங்கோ
னேகனன்றி வேறில்லை யென்னுமன்பும் – போகம்
வெறுக்குந் திறலுணரு மெய்யுமுள்ள ஞானம்
பொறுக்கு நிறைவாம் புகழ்.
(10)
முற்றிற்று.
7. அறம்
62. கொல்லாமை
நல்லூண் கொடுப்பதறிந் தீகை
யெல்லா மிறையுடைமை யென்கைகோட் – சொல்லாமை
யின்ன லொருவர்க் கியற்றாமை யெள்ளாமை
யன்ன பிறவு மறம்.
(1)
63. சமையத் தலைவருக்குந்
தார்வேந் தருக்கு
மமைவற்ற வீர மழகே – சிமையமெனத்
தோற்றி மறையுந் துணைமுலையார் தோள்வேண்டார்க்
கேற்றினிது வாழ்வதழ கே.
(2)
64. எத்தருமஞ்
செய்வதினு மெல்லாம் படைத்தளிக்கு
முத்த மனைநாடி யுருகுவோர் – சித்த
மகிழப் பணிபுரிதன் மாண்பென்பார் நெஞ்சி
னெகிழ வுறவா நிசம்.
(3)
65. கொல்லுந்
தொழிலோரைக் கொன்றுகொலை நீக்குமறம்
புல்லு மொருவன் புவியனைத்து – மெல்லுறழத்
தோன்றும் பெருநலத்திற் றோய்வதன்றி மற்றவர்தா
மேன்றுமுயன் றாலு மிலை.
(4)
66. கொல்லாமை
யின்றிக் குறிக்குந் தருமங்க
ளெல்லாம் புரிந்திடினு மெய்தாதே – யில்லாமை
யுற்றோர்க்கு நன்றா வுயர்தரும மவ்வொன்றே
கற்றோர்க்குந் தோன்றுங் கதி.
(5)
67. மன்னரெனினு
மொன்றை மாய்த்தருந்து மானிடரேற்
பன்னரிய தீமைகொள்ளும் பாதகரே – தன்னனைய
துண்ணா விருகமுநன் றுள்ளதே யென்றுணர்த்து
மண்ணா வியேமுதல்வ னாம்.
(6)
68. எல்லாத்
தவமு மிறைவணக்க மென்பதுபோற்
கொல்லாமை யேயறத்தின் கூடென்று – சொல்லாத
நூலோ னெவனெனினு நுண்ணியனன் றென்றுநல்ல
மேலோர்தம் வாயுரைக்கு மே.
(7)
69. மற்றோ ருடலருந்து
மானிடர்க்கு மானமில்லைக்
கற்றோ ருறவில்லைக் கல்வியில்லைப் – பெற்றோரைப்
போற்றல் வினவும் புகழில்லைப் புண்ணியத்தி
னேற்றமில்லை வீடு மிலை.
(8)
70. நெஞ்சத்
தருளுடையார் நேயமுற்று நல்லறமே
வஞ்சத் தழுக்ககன்ற வல்லாரே – நஞ்சனையார்
பெண்ணார்க் குருகாப் பெருமையோ ராயினுமென்
கண்ணாணை கீழிற் கடை.
(9)
71. எல்லா முடையா
னிரக்கமிலா னானாலுங்
கொல்லாமை யொன்றைக் குறித்தொழுக – வல்லாரை
நானிகழே னென்னளவு நல்லறம தன்றியதன்
மேனிலையுண் டென்றுசொல்லேன் மெய்.
(10)
முற்றிற்று.
8. பொருள்
72. வேந்தன்கைக்
கோற்கும் விறல்வீரர் வெம்போர்க்குஞ்
சாந்தமிகுத் தோங்குந் தவத்தினுக்கு – மேந்துமுலை
மாதர்நல்லா ரின்ப
வளமைக்கு மற்றெவைக்கும்
போதநலங் காட்டும் பொருள்.
(1)
73. வேதித்துச்
செம்பொன் விளைவிக்கும் வேட்கைமிஞ்சி
யூதித் திரிவா ரொருகோடி – சாதித்துத்
தெய்வமே தஞ்சமெனத் தேர்ந்தவர்நூல் செப்புநலஞ்
செய்வ துடையார் சிலர்.
(2)
74. பொன்னுடையார்
தெய்வமில்லைப் பொய்யென்னிற் புத்திபுத்தி
யென்னுமவர் பல்கோடி யிங்குண்டு – மின்னும்
வடிவாள்கொண் டோங்கிடினும் வல்லோனுண் டென்னு
மடியார்கள் சிற்சிலரே யாம்.
(3)
75. பொன்னா லுயிர்வெறுத்துப்
போவார் பலருண்டு
தன்னா லுலகந் தனைப்படைத்துப் – பன்னாமஞ்
சூடினா னன்பரெனத் தோன்றுநர்க்கு மப்பொருளைத்
தேடி னாலுண்டு சிறப்பு.
(4)
76. ஒருவன் பலசமையத்
தொவ்வொரு வாறாக
மருவும் புதுமையென மண்ணிற் – பொருளொன்று
பல்வகைப்பூ ணாகிநின்ற பண்புணர்ந்து பாடுபடுஞ்
செல்வருக்கே யாருநத்துஞ் சீர்.
(5)
77. கற்றோர்
மயலொழியாக் காலங் கருத்தழிந்து
மற்றோ ரெனினு மலிபொருட்சீர் – பெற்றோரே
லன்னவர்பாற் சென்றிரப்ப ராகையா லம்புவியிற்
பொன்னருமை யென்றே புகல்.
(6)
78. மெய்த்துறவோர்
தாமும் வெறுக்கரிய வெண்சோறும்
பொய்த்துறவோ ரேற்கும்
பொருள்கொண்டு – செய்த்தொழியி
னெல்விளைத்துச் செய்ததன்றி நீணிலத்தோர் கொண்டாடுங்
கல்வியினாற் செய்ததல்லக் காண்.
(7)
79. கற்றோர்
துறந்தோர்போற் காண மடிப்போருஞ்
கற்றேனும் பொன்னைத் தணவாரேன் – மற்றார்
வெறுக்கவல்லா ரேனையரில் வேண்டுநரு முண்டே
பொறுக்கும் புகழ்ச்சிப் பொருட்டு.
(8)
80. பன்மதத்தோர்
போல்வரே பாடுபட்டுப் பொன்விளைப்போர்
கன்ம மொழிக்குங் கடவுளார் – நன்மகிமை
கண்டளிகூர் ஞானிகளிற் காண்பரே கள்ளமின்றி
யொண்டகைய பொன்செய்து ளார்.
(9)
81. அருளும்
பொருளுமொன் றென்றா ரறியவல்லார்
பொருளு மருளும் பொதுவே – தெருளுமுயர்
நெஞ்சுடையா ரும்பொதுவே நீணிலத்தோர் கண்டதொழி
லஞ்சுடையா னும்பொதுவே யாம்.
(10)
முற்றிற்று.
9. இன்பம்
82. அன்றே யெனைத்தனதென்
றாண்டுகொண்ட வென்கணவ
னென்றே யெனையணைவா னென்றோழி – குன்றேயென்
றோங்கு முலைத்துயரு மூரலருந் தாய்மொழியுந்
தாங்குதற்கு நானோ தரம்.
(1)
83. எத்தனையோ
மாதர்க் கினியனா மென்கணவ
னித்தனைநாட் சென்று மிரங்கிலனே – முத்தனைய
வெண்ணகை யாரேச மெலிந்தேனே மின்னார்பாற்
றண்ணளியி லானுமன்றே தான்.
(2)
84. உன்னாணை
யுன்னை மறவேனென் றோதியவன்
றன்னா வியங்கு தரிக்குமோ – வென்னாசை
யென்னை வருத்து மியல்பறிய மாட்டானோ
வன்னையினு நல்லா யறை.
(3)
85. தாமக் கருங்குழலாய்
தாரணியிற் செந்தழலிற்
காமக் கவலைக் கனல்பெரிதே – யாமத்திற்
கண்டு துயினீங்கிக் கனவென் றலமருநா
னுண்டுமகிழ் நாளுமொன்றுண் டோ.
(4)
86. தன்னை யறிந்துந்
தலைவன் றனைச்சேரா
வென்னை மடவா ரிகழாரோ – வுன்னையன்றி
யாருந் துணைகாணே னன்னவன்பாற் சொல்லியென்னைச்
சேரும் படியுறவு செய்.
(5)
87. பொன்னேரு
மேனிப் புணர்முலையாய் பொய்யல்ல
வென்னேய முன்னை யிகழாது – கன்னேயம்
விட்டதரத் தேனுதவி மெல்லணையிற் சென்றுமுலை
தொட்டணையு மாறொருசொற் சொல்.
(6)
88. உன்னைக்
கருதி யுடன்மெலிந்தே னுன்னைநம்பு
மென்னைச் சிறிது மிகழாதே – தன்னை
யறியாத பக்குவமு மல்லவே யாசைச்
செறிவால் வருந்துகின்றேன் றீர்.
(7)
89. வேலனைய கண்ணால்
வெருட்ட வெருண்டுமனஞ்
சாலநொந்து வாடித் தளர்வேனோ – பாலனைய
சொல்லாற் களிப்புநல்கித் தூய பளிக்கறையிற்
சல்லாபப் பேரின்பந் தா.
(8)
90. மோகத் தயர்வு
முயங்கினோர் தாமறியும்
போகச் சுகமும் புகல்வதோ – நாகபடத்
தல்குன் மடவாரு மாடவரு மேயறிவ
ரொல்கும் பகரவென்றா லும்.
(9)
91. இன்பம் பலவும்வலி
தெய்துநலந் தேர்ந்தோர்க்குத்
துன்ப மனைத்துந் தொலையுமே – யன்ப
ரிருணலியச் செய்துவக்கு மெம்பிரானீயு
மருணலமே பேரின்ப மாம்.
(10)
முற்றிற்று.
10. வீட்டு நெறி
92. தெய்வமொன்றே
யென்னுந் தெளிவுவரக் கற்றுணர்ந்து
செய்வ தறிந்து செயநாடிப் – பெய்வளையார்
மாய வலைகடந்து மாதவத்தைப் பற்றிநிற்கு
நேயமே வீட்டு நெறி.
(1)
93. நன்னூல்
விதியுணர்ந்து நன்றியற்றி ஞானமில்லாப்
புன்னூல் விருப்பமுற்றும் போக்குவித்துப் – பன்னூலுந்
தெய்வமே தஞ்சமெனச் செப்புமெனத் தேர்ந்தடங்கி
யுய்வதே நல்ல வுணர்வு.
(2)
94. அருளொன்றே
மிக்கதவ மாகுமெனத் தேர்ந்து
தெருனொன்றும் வல்லோரைச் சேர்ந்து – மருளொன்றும்
புன்மையோர் தம்முறவைப் போக்கிப் பொதுவினின்று
நன்மையே செய்வதெந்த நாள்.
(3)
95. கொல்லாமை
யொன்றே குறியென் றதைக்குறித்து
நில்லா ருறவனைத்து நீக்கியப்பா – லெல்லா
முடையா னொருவனெனு முண்மைகண்டு வாழ்வோர்க்
கடையாள மீவா னவன்.
(4)
96. எல்லா மிறைவடிவே
யென்றுணரு மெஞ்ஞானம்
பொல்லா ருளத்திற் பொருந்தாது – நல்லார்க்குத்
தானேவந் தெய்துமதிற் சத்தியமுந் தோய்ந்திருக்கு
நானேயென் றோதாது நா.
(5)
97. வல்ல பொருளை
மறவாத மாதவர்பா
லல்லல் வினைப்பே யணுகாதே – கல்லனைய
நெஞ்சா ரறியா நெறியுண்டா மெய்வீட்டி
லஞ்சா திருப்பா ரவர்.
(6)
98. அல்லும்
பகலு மறியா ரவர்மனம்போற்
சொல்லும் பலநூற் றொகையிடத்தும் – புல்லும்
பொருளறிய நாட்கழிக்கும் புரியர்க ளெல்லா
மருளறிய வல்லா ரலார்.
(7)
99. ஒன்றே கடவுளென
வுள்ளபடி யோதாதார்க்
கென்றேனு மீடேற்ற மில்லையே – நன்றே
ணர்ந்தவர் நூலவ்வாறே யோதுமற்றோர் வீட்டிற்
புணர்ந்தனரென்றோ தல்வெறும் பொய்.
(8)
100. நித்த னொருவனன்றி
நீணிலத்திற் பற்பலமெய்ச்
சித்தர்களு முண்டென்று செப்புவோர் – சுத்த
மனத்தாற் குருபதத்தில் வாஞ்சைகொண்டு நின்றோ
ரினத்தாற் றெளிந்தவரன் றே.
(9)
101. எங்கு முணர்வா
யிருந்துபர வீடளித்துப்
பொங்குங் கருணைப் பொதுத்தெய்வந் – தங்குமிடந்
தானாக வந்து சருவபிர சாதநல்குங்
கோனான வுண்மைக் குரு.
முற்றிற்று.
(அதிகாரியிலக்கணமும்
நூற்பயனும்)
102. வேத்திர பாணிசொல்லும் வெண்பாநூ றுள்ளபொதுச்
சாத்திரத்தைக்
கண்டு தலையசைக்கும் – பாத்திரமே
வெல்வதெல்லாம்
வென்று வினையொழிந்த மெய்வீட்டிற்
செல்வதற்கு
நற்பாத் திரம்.
மெய்க்குருநாதன்
றிருவருணீடூழி வாழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக