வெள்ளி, 25 செப்டம்பர், 2026

சத்திய வாசகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

சத்திய வாசகம்

காப்பு

சூத்திரம்

 

            சத்திய வாசகஞ் சாற்றும் பொருட்டொரே

            நித்தியப் பொருளை நினைந்துகை தொழுவாம்.

 

நூல்

உரைநடை

            சகல லோகங்களிலுமுள்ள சருவான்மாக்களுக்கும் பொதுவாகிய தெய்வ மொன்றுண்டு.

(1)

பூரண சந்திரனைப் போன்று குளிர்ச்சி செய்கின்ற கருணையு முச்சிக் காலத்துச் சூரியனைப் போன்று சூடு செய்கின்ற நீதியுந் தெய்வத்தின் றிருவுள்ளத்தி லிருக்கின்றன.

(2)

            தெய்வ முண்டென்று மில்லையென்றுங் கவனியா லாகார நித்திரை முதலியவற்றிற் சிந்தையாய்த் திரிகின்ற மிருகாதிகளிலுந் தாழ்ந்த பாவிகளாய்ச் சதா தெய்வமில்லை யென்று போராடுகின்றவர்களுக்கும் மூட்டி யுறக்காட்டுகின்றதே தெய்வத்தின் கருணைக்குப் பெரிய யடையாளமாய் விளங்குகின்றது.

(3)

            தெய்வ தண்டனைக்குக் கொஞ்சமும் பயப்படாத கொலைஞர்,  திருடர் முதலியோர்களையுஞ் சிட்சிக்கத்தக்க சட்ட திட்டங்களோ டரசாட்சி செய்கின்றவர்களு மொருக்காற் கொடுங்கோன்மை செய்வார்களாயி னிரத்தின கிரீடந் தரித்த தலைகளை நாயு நரியுங் கவ்வும்படி போர்க்களத்தில் வெட்டுண்டு கிடக்கச் செய்வதே தெய்வத்தி னீதிக்குப் போதுமான பெருஞ்சாட்சியாயிருக்கின்றது.

(4)

            தெய்வ முருவமென்று மருவமென்றும் போராடுகின்றவர்க ளிரண்டு விதமாயும் விளங்குமென்பவர்கள் சமுகத்தி லவமதிப்படைவார்கள்.

(5)

            ஓரரசனுக்குப் பல பத்தினிகளிருப்பதுபோற் சகல சமயங்களுந் தெய்வமொன்றிற்கே யுரியனவாகும்.

(6)

            உயர்ந்த சமயங்களுந் தாழ்ந்த சமயங்களு முண்டென்பதே ஞாயமாகும்.

(7)

            அபிமானத்தாற் பொய்யு மெய்யுங் கலந்து பேசுவது சமயவாதிகளுக்குச் சுபாவமாகும்.

(8)

            உண்மை, தெய்வத்துக்கு மதையறிந்த ஞானவான்களுக்கும் விளங்கும்.

(9)

            தெய்வத்தை மனத்தாலு நேத்திரத்தாலுங் கண்டு பேசத்தகும்.

(10)

            மனத்தாற் றெய்வத்தைக் காண்பவர் மனச்சாட்சியான வின்ப மனுபவிப்பார்கள்.

(11)

            நேத்திரத்தாற் றெய்வத்தைக் கண்டு, வரப்பிரசாதம் பெற்றோர்களே, பிறரு மறியத்தக்க வற்புதங்களைச் செய்ய வல்லவராவார்கள்.

(12)

            தெய்வஞ் சருவ வல்லபமு முடையதென் றொப்பியுங் கண்ணாற் காணப்படாத தென்பவர், விவேக சூனியரே யாவர்.

(13)

            எல்லாச் சமயமுந் தெய்வ தெரிசனம்  பெற்றவர்களா லேற்படுத்தப்பட்டவைகளே.

(14)

            அபிமான மேலீட்டாற் பழைய சமய மொன்றைப் பலப்படுத்துகின்றவர்களும், பகைத் தன்மையாலொரு சமயத்தை யழிக்கின்றவர்களு மாணவத்தா லொரு சமயத்தை வுண்டு பண்ணுகின்றவர்களு மெந்தக் காலத்திலு முண்டாவார்கள்.

(15)

            தன்னா லேற்படுத்தப்பட்ட சமய மொன்றே வாழ வேண்டுமென முயற்சிக்கின்றவ னகங்கார குரு வெனப் பேர் பெறுவான்.

(16)

            சீவகருணை முதலிய நல்லொழுக்க முடைய சமயங்கள் யாவும் வாழ வேண்டுமென முயற்சிக்கின்றவன், ஞாய குரு எனப் பேர் பெறுவான்.

(17)

            எல்லாச் சமயங்களும் வாழ வேண்டுவனவே.  யவைகளிலுள்ள குற்றங்களை மாத்திரங் களைய வேண்டுமென முயற்சிக்கின்றவன் பொதுக்குரு எனப் பேர் பெறுவான்.

(18)

            ஒரே சமயம் விளங்கி மற்ற சமயங்களெல்லா மழிவது மின்னுஞ் சில சமயங்க ளேற்படுவதுஞ் சம்மதமென்பவன், சமரசகுரு எனப் பேர் பெறுவான்.

(19)

            ஆடு முதலியவற்றைப் பீசமர்த்தனத்தாற் கொன்று வெந்து தின்னவும், தெய்வ மில்லையென்று சொல்லவு மற்றுங் காலம் கருமம் முதலியவற்றுக்குப் பரத்துவஞ் சொல்லவுந் தெய்வத்திற்குப் பித்தவுபரி யுண்டென்னவுந் திருட்டுத்தன்மை யுள்ளதென்னவுஞ் சொல்லவுங் குருவை வருத்தப்படுத்தல், நிந்தித்தல், புண்ணியமென்று சொல்லவுஞ்,  சிசுக்களின் குறியைக் கொய்தன முதலிய சடங்குகள் செய்யவுஞ் சம்மதப்படுகிற சமய வாதிக ளின்னமொரு குரு வைதாவது விபரீத மொன்றேற்படுத்தினாலு மந்தப் பட்சத்திலு முடன்படுவார்க ளென்பதே சித்தம்.

(20)

            எவ்விதப் பிரயாச மெடுத்துக் கொண்டாவ தொருவன், றெய்வ கிருபையைப் பெற்றுக் கொள்வானாகிலவ னிவ்வுலகிலெது செய்தாலுஞ் செய்யலா மென்பதே திண்ணம்.

(21)

            அருட்பிரசாதம் பெற்ற ஒருவன் குற்றஞ் செய்தாலு மவனையுந் தெய்வந் தண்டித்தே பின்பிரட்சிக்கு மென்பதற்குச் சாட்சி  சுந்தரமூர்த்தி நாயனார் நேத்திரமிழந்து வெகுவா வருந்திப் பின்புய்ந்து, கதி சேர்ந்தது முதலியனவாம்.

(22)

            தெய்வ கிருபையாவ தரசர் சினேகமாவது கிடைக்கப் பெற்றான் மிகவு பய பக்தியாய் நடக்க வேண்டு  மப்படிக்கில்லாமற் கெருவம் கொண்டாற் சீக்கிரத்திற் றண்டனை கிடைக்கும்.

(23)

            தெய்வத்தை நம்பிப் பாடுபட்டுத் தேறுகிறதைப் பார்க்கிலுந் தெய்வ பத்தரை நம்புவ துத்தம மென்பதற்குச் சாட்சி.  மதுரகவி ஆழ்வா ரப்பூதியடிக ளாதியர் பலராவார்.

(24)

            தெய்வந் தன்னை நம்பிய விருதிறத்தாருட் கலக நேரிட்டால், வலியவர் பட்சத்திற் சேர்ந்து கொண்டு மெலியவரைக் கெடுக்கு மென்பதற்குச் சாட்சி யனேகமுள்ளன.  விவரஞ் சொன்னாற் சில சமயத்தோர் விசனப் படுவார்கள்.

(25)

            ஒரு பத்தனாற் பல பிராணிகண் மோட்சமடையலா மென்பதற்குத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் சரித்திரமே சாட்சியாம்.

(26)

            மோட்சமடைந்தார்களென்று பலராற் சொல்லப்படும் பிறக்கின்றவர்களு முண்டு.

(27)

            மோட்சமென்பது, பல பிரயோசனங்களைப் போன்ற வொன்றன்று.

(28)

            சரமசர மென்னு மிருவகைப் பிறப்பிற்பட்டுச் சுழல்கின்ற வான்மாக்களுக்கு, மோட்சத்தைப் பார்க்கிலும் பெரும்பிரயோசன மொன்றுமில்லை.

(29)

            சொர்க்க முதலாகச் சாரூபம் வரையுள்ள வொவ்வொரு பதவிகளையு மோட்சமென்று நம்புகின்ற மதங்கள் பலவாம்.

(30)

            சாலோக முதலான பதவிக ளடைந்தோர்கட்குச் சரீரம் பூமியில் விழுமென்று மோட்சமடைந்தவர்கள் சரீர மொருவர் தொட்டெடுக்கப்படாதென்றுஞ் சொல்வதே தீர்மானம்.

(31)

            சரீரத்துடன் மற்றொரு லோகத்துக்குப் போனவர்களைப் பற்றி யொருக்கால்  வந்தாலும் வரலாமென்று சந்தேகிப்பது ஞாயமே.

(32)

            வெளி, யொளி, விக்கிரக மென்னு மூன்றிளொன்றி லைக்கியமாவார்க்கே பிறப்பில்லை யென்பது சித்தம்.

(33)

            வெளியி லல்லமாப்பிரபு, மாணிக்கவாசகர் முதலோர் கலந்ததும் மொளியிற் சடகோபர், திருஞானசம்பந்தர் முதலோர் கலந்ததும், விக்கிரகத்திற் றிருநாவுக்கரசர், திருபாணாழ்வார் கலந்ததும் பிரசித்தமாய் விளங்குகின்றன.

(34)

            ஔவையார், சுந்தரமூர்த்தி முதலானோர் சரீரத்துட னிவ்வுலகத்தை விட்டுப் போனதும் விளங்குகின்றது.

(35)

            ஆன்றோர் விதித்துள்ள நூல்களை  நம்பாதவர்கள், பந்த மோட்ச விபகாரங்களிற் பிரவேசியாமலு லோகாயுத னநீச்சுரவாதி முதலியோரிற் சேர்ந்து வேண்டுவது.

(36)

            அனேகவித நூல்களிருப்பினு மவற்று ளுத்தமமாக மின்னதெனத் தெரிய வேண்டுவது பெரியோர்கள் சகாயத்தாலாம்.

(37)

            தெய்வபத்தி, சீவகருணை முதலியன வுண்டாக்குவ துத்தம நூலென்று மகங்காரஞ் சோம்பன் முதலியன வுண்டாக்குவது மத்திம நூலென்றுங் கொலைத்தொழில், பொருளாசை முதலியன வுண்டாக்குவ ததம நூலென்றும் பெரியோர்கள் சொல்வார்க ளென்பது சத்தியம்.

(38)

            உலகத்திற் பொருளன்னதான முதலிய நற்காரியங்களுக்கு மது, மாமிச பட்சண முதலிய தீய காரியங்களுக்குஞ் சகாயமாயிருப்பதுபோ லருள்-சித்தி முத்திகளைக் கொடுக்கு முத்தம குருவுக்கு மவகீர்த்தியு நரகமுங் கொடுக்கு மதம குருவுக்குஞ் சகாயமாயிருக்கும்.

(39)

            பொன், வெள்ளி, யிரத்தின முதலியன பொருளென விளங்குதல்போன் மந்திரசித்தி, வாக்குச்சித்தி, யருட்சித்தி முதலியன வருளென விளங்கும்.

(40)

            ஒருவ னிலட்சாதிகாரியாவதன் முன் கோடீசுர னாகா னென்பதுபோ லெப்படிப்பட்ட தவசியுஞ் சித்தனாவதன் முன், முத்தனாவதில்லை.

(41)

            ஒருக்கான்  முள்ளிச்செடி முதலியன முத்தியடைந்தாற் போலொருவராற் கொடுக்கப் பட்டா லெந்தப் பிராணியு முத்தியடையலாம்.

(42)

            மார்க்கண்ட முனிவர் போன்ற சிலர் மாத்திரங் கால கருமங்களைக் கடக்கலாமேயன்றி, மற்றி யாவரு மவற்றுட் கட்டுப்பட்டோ ரென்பது சருவ சாஸ்த்திரப் பிரசித்தம்.

(43)

            போக மோட்ச மென்னு மிரண்டுவித வநுபவங்களுக்குந் திருவருட் பிரசாதமிருந்தா லுத்தமம்.

(44)

            போகாநுபவத்திற்குந் திருவருட்சகாயம் வேண்டுமோ? வென்றையுறுவோ ரிட்ட வுண்டியையெல்லாம் புசித்த குண்டோதரன் முதலோரையு மனேகம் பொண்களுட னேக காலத்திற் சையோகஞ் செய்த கண்ணன் முதலோரையும் பற்றி யோசிக்கக் கடவர்.

(45)

            அருட்பிரசாத சித்திக்குத் தவமே யாஆதாரமென்பதுந் தவ மென்ப தீசர் தியானமே யாவதுந் தெய்வம்  பாவனை விளங்கு மென்பதுந் தீர்க்க விவேவிக ளனைவருக்குஞ் சம்மதம்.

(46)

            ஒருவனொரு மூர்த்தியைத் தியானித்தான் முதலிற் கனவிற்றோன்றி யிரண்டாவது நிட்டையிற்றோன்றி, மூன்றாவது நேரிற் றோன்றும்.

(47)

            கனவி னிட்டையிலுற் கண்ட மாத்திரத்திற் றிருத்தியடைந் துருவத் தியானத்தை மறந்து மோசம் போனோ ரனேகர்.

(48)

            தெய்வத்தி னருவ லட்சணங் கருப்பஞ்சாறு போலுமென்று முருவ லட்சண மதனா லுண்டாகுங் கற்கண்டு போலுமென்று மிவ்வாண்டி லொன்றை மற்றொன்றாக்குதல் கூடுமாயினு மருவத்தை யுருவமாக்குதலே கடினமென்று ம்றியத்தக்க விவேவிக ளேகதேசமே யிருப்பார்கள்.

(49)

            அக விளக்கத்தி லருவ தெரிசனமும், புற விளக்கத்தி லுருவ தெரிசனமுஞ் சிரேஷ்டமாதலினிரண்டு தெரிசனமும் பெற்ற ஒருவனே யுத்தமோத்தமமாகிய தவசியெனப் பேர் பெற்றுச் சித்தி முத்தி யென்னு மிரண்டிற்கு முரியவனாவான்.

(50)

            தூல வெளியிற் பிரசன்னமாக தெய்வத்தைக் கண்டு, வரப்பிரசாதம் பெற்று வாழ்ந்த வசுரர் முதலியோர்க்கிரமஞ் செய்தபோது, மற்றைய முனீசுரர் முதலியோரி யாவரு மடங்கி யிருந்த விபரத்தைக் கவனிப்பவர்களுக்கு மூர்த்தி தெரிசனத்தின் பெருமை தோன்றும்.

(51)

            சகள வுபாசகப் பிரசித்தாரான சுந்தரமூர்த்தி  முதலையுண்ட பிள்ளையைச் சில காலங் கழித்து வருத்தியது நிட்கள வுபாசகப் பிரசித்தரான தாயுமானவர் தன் சரீரத்தைக்கூட  மற்றொருவன் விக்கினத்தாலிழந்ததுந் தெய்வ பத்தி செய்கின்றவர்க ளவசியமி யோசிக்க வேண்டுவது.

(52)

            ஒரு பத்தன் றனது தெய்வ வடிவத்தை மனக்கண்ணாற் கண்டு பேசி யனேக ரகசியங்களைத் தெரிந்திருந்தாலு முலகத்தாருக்குச் சாட்சி காட்டமாட்டாதவனாயே வருந்துவா னாயினு மொருவாறு பக்குவர்களறியும் படிக்கான மகிமை விளங்கும்.

(53)

            சித்தியி லாசையில்லாத தவசிக்கு வீணான திருத்தி யுண்டாகும்.

(54)

            சித்தியி லாசையுற்ற தவசி யெவ்வளவு ஞானாநுபவ முற்றபோதுந் திருத்தியடையாமற் றவமுயன்று கொண்டே யிருப்பான்.

(55)

            திருத்தி யாணவத்தை யுண்டுபண்ணிக் கெடுக்கு மைய பயங்கரத்தை யுண்டுபண்ணி நன்முயற்சியிற் றூண்டும்.

(56)

            ஊழே வலிதென்போர்களு முயற்சியே வலிதென்போர்களு மாகிய விருதிறத்தாருந் தீர்க்க விவேவிகளல்லர்.

(57)

            ஆண் பெண்ணென்னு மிருவகைச் சம்பந்தத்தான் மகப்பேறுண்டாதல் போன்றருட் சித்தி முதலிய வெவ்வகைப் பேறு மூழ் முயற்சி யாகிய விருவிதச் சம்பந்தத்தாலுமே சித்திப்பது தீர்மானம்.

(58)

            ஊழ், தெய்வ வசத்தாயு முயற்சி சீவதந்திரமாயுந் தோற்றிய போது நன்முயற்சி செய்தற்கேற்ற மெய்யுணர்வைக் கொடுத்தலு மங்ஙனஞ் செய்யும்படி செலுத்துவதுந் தெய்வத்தின் தொழில்களாயே யிருக்கின்றன.

(59)

            மிகவுஞ்சிறந்த பெரியோர்களா லேற்பட்ட வவனசையாம லணுவசையா தென்ற வாக்கியம், விவேவிகளினன் முயற்சியைக் கெடாது மற்றையோர்களுக்குச் சோம்பன் முதலிய துர்க்குணங்களைக் கொடுத்துக் கெடுக்கும்.

(60)

            கல்விக்கட லளவுபடா தென்றொரு வார்த்தை யுலகத்தில் விளங்குகின்றதாயினு மெந்தப் புலவன் மற்றொரு புலவனைக் காணும் போது பொறாமை முதலிய குண முதியா தானந்த முதிக்கப் பெறுகின்றானோ வவன் கல்விக் கடலின் கரைகண்டோ னென்பதற் கையமில்லை.

(61)

            கல்வியென்பது சருவ சாஸ்திரங்களையுங் கற்றுப் பிரசங்கிப்பதல்லத் தெய்வ நிச்சயமுந் திருவருட்பிரசாத வாஞ்சையு மதற்குத் தக்க முயற்சியு மேற்படப் பெறுதலேயாம்.

(62)

            தெய்வ நம்பிக்கையாகிய ஞானமும், விற்பத்திப் பெருக்கமாகிய கல்வியும் பொருந்தினாற் பொன்மலரில் வாசமும் பொருந்தியதற் கொப்பாகும்.

(63)

            அனேகம் பெண்களைச் சேர்ந்தும் புத்திரபலமடையாத வொருவனும், விசேட விற்பத்தியுற்றுங் கவன தாரை பெறாத வொருவனுஞ் சமமாவார்கள்.

(64)

            மகப்பெற்றாளருமை மலடி யறியாவாறு போற் பாவலனருமை பண்டிதனறியா னென்பதுண்மையாம். 

(65)

            பல சாஸ்த்திர விற்பத்தியுற்றும், பாடல் செய்யுந் திறமை யுறாதவர்கள், பாடுவோரைக் காணுந்தோறு முன்னூல்கள் கற்றுணர்ந்தாற் போதாதாவேன் வீணாப் பாடுகின்றீரென மறுப்பதுண்டு.

(66)

            பூர்வ காலத்திற் பாவலர்களாற் பாடப்பட்ட நூல்களே தற்காலத்திற் பண்டிதர்களுக் காதாரமாய் விளங்குகின்றன.

(67)

            சருவ சாஸ்த்திரங்களுக்கும் பாவலர் பெற்றதாயும், பண்டிதர் வளர்க்குந் தாயும் போலாவார்கள்.

(68)

            ஒருவன் பாவலத் தன்மை, பண்டிதத் தன்மை யிரண்டு மடைந்திருந்தா லுத்தமோத்தம மாகும்.

(69)

            அருட்பிரசாத சித்தியடையாத வித்துவானுந் தவசியு மெவ்வித மேம்பாடுற்றிருப்பினும், பலரால்லவமதிக்கப்பட்டு வருந்துவார்க ளென்பது சித்தம்.

(70)

            அரசன் சக்கரவர்த்தியாகவுந், தெய்வத்துடன் வசனிப்போனாயுங் கருணையு நீதியு நிரம்பினோனாயு மரசாட்சித் தொழில் பெருங் கஷ்ட சீவன மென்றுணர்ந்தோனாயு மிருந்தா லுலகத்திற்கு மிகவு நன்மையுண்டாம்.

(71)

            மற்றோ ரரசனுக்கஞ்சுதல், கடவுட் டன்மையறியாதல் கோரகுணங் கொடுங்கோன்மை, யரசாட்சியின் பேரிறுமாப்பு, பெருங்காமம், பொருளாசை முதலான தீமை பொருந்திய வரசனுடைய குடை நிழலைப் பார்க்கிலு நரக வாதனை மிகவு மேன்மையுடையதாம்.

(72)

            உலக நன்மையை யுத்தேசித்துத் தனது பொக்கிஷத்துத் திரவியங்களைச் செலவு செய்கின்ற வரசர்களுக்குச் சுபகீர்த்தியுந் தனது நன்மையின் பொருட் டுலகத்தார் பொருளைப் பல வுபாயத்தாற் கிரகிக்கிறவர்களுக் கவகீர்த்தியுஞ் சித்திப்பது சித்தம்.

(73)

            எந்த வேளையினம தரசாட்சியை யீசுரன் மாற்றுவானோ வென்றெண்ணுகின்ற வரசனே விவேகியாவது போனம்மை வெல்ல வொருவராலு முடியாதெனவெண்ணு மரசனே மூடனாவான்.

(74)

            தன்னை யநுசரிக்கின்றவர்களைப் பாதுகாக்கின்றது மெதிர்ப்போரைக் கெடுப்பதும் வித்துவான்களுக்கு மரசர்களுக்கு முரிய குணமேயாம்.

(75)

            கல்விக் கடலைக் கடந்த புலவனுக்குஞ் செல்வக் கடலைக் கடந்த வரசனுக்கு நாய் போன்றினத்தைப் பகைக்குந் துர்க்குண முண்டாகாது.

(76)

            வணிகருக்குச் சொற்றவறாமையுஞ் சூத்திரர்க்குப் பரோபகாரமும் முக்கியமான நற்குணமாகும்.

(77)

            ஆசை யளவுபடாதென்பது பலர் வாய்பாடாயினுந் தெய்வ கிருபையாலுண்டாகத் தக்க வருட்பிரசாதத்துள் ளடங்குவதேயாம்.

(78)

            ஐக்க மோட்சத்தையல்லாத மற்றெல்லா பிரயோசனமும், மண், பொன், பொண்ணென்று மூன்றாசையுள் ளடங்குவனவேயாம்.

(79)

            சக்கரவர்த்தியை மண்ணாசையு மிரசவாதியைப் பொன்னாசையும், வசியமோகன சித்திபெற்றோனைப் பெண்ணாசையும் பீடியாது.

(80)

            அநுபவித்தேனும் வெறுத்தேனு நிராசை யடையப்பெற்றோரே மோட்சாதிகாரிகளென்பது சருவ சாஸ்த்திர சம்மதம்.

(81)

நல்லோர்களுக்குக் கற்புடைப் பெண்களை யிச்சிக்கின்ற பாவ கரும நேரிடாது.

(82)

            அக்னிதேவனுடைய பத்தினிக் கருந்ததியைப்போ லுருவ மெடுக்கச் சத்தி யில்லாமற் போனதை யோசித்தாற் கற்பின் பெருமை நன்கு விளங்கும்.

(83)

            அறிவுடையா ரெல்லா முடையா ரென்ற தமிழ் வேத வாக்கியந் தீர்க்க விவேகிகளானன்கு மதிக்கத்தக்கது.

(84)

            தெய்வாநுகூலமில்லாத காரிய மொன்றுஞ் சீர்படாது.

(85)

            ஒரு சமயத்தின் வழியே சகுணப் பிரமோபாசனை செய்கின்றவர்களுக்கே யெதார்த்த ஞான முண்டாகும்.

(86)

            தெய்வ மொன்றே யென்றுந் தெய்வ மிகழே லென்று மௌவையார் முதலாயினோர் சொன்ன வார்த்தைகளை விரும்பும் பக்குவமே  ஞானத்தி னடியாகும்.

(87)

            சமரச ஞான முண்டாகப்பெற்று மிளம்பக்குவிகளை யீடேற்றும் பொருட் டொவ்வொரு மதங்களையு முயர்த்தித் தனித்தனி சொல்லும் பொது வாசிரியர்களு மொன்றையே வற்புறுத்துஞ் சிறப்பாசிரியர்களும் பலராவார்.

(88)

            சமயங்க ளனந்தமென்றும், பன்னிரண்டென்று மான்றோர்களாற் சொல்லப்பட்டிருந்தாலு மாறு சமயமென்பதே திறமா மற்றவைக ளவற்றி னங்கிசங்களே யாகும்.

(89)

            சமய மென்ற சொல்லானது, தெய்வத்தின் பண்பை விளக்கு மென்றறியும் பெரும்புலவ ரேகதேச மாருப்பார்கள்.

(90)

            பல சமயங்களிலும் தெய்வங்க ளிருப்பதாய்ப் போராடித் தாமுங் கெட்டு, பிறரையுங் கெடுப்போரான விளம்புலவ ரனேக ரிருப்பார்கள்.

(91)

(ஆறு சமயங்கள்)

            சௌர மென்ற சூரிய சமயம், பிரகாசத்தன்மை காட்டி நின்றநுமார் முதலானோர்க்கு விலணக்கப் வியாகரணவிற்பத்தி முதலான செல்வங்களைக் கொடுத்தது.

(92)

            சைவ மென்ற சிவ சமய மெல்லாவற்றையுந் தன்னுட் காக்கும் வல்லபத்தைக் காட்டி நின்று, சனகாதியர்க்கு ஞான முதலிய பல பிரசாதங்களைக் கொடுத்தது.

(93)

            சாத்தேய மென்ற சத்தி சமயம், பஞ்ச பூத பௌதிகங்களை யுண்டு பண்ணுஞ் சிட்டித் (சிஷ்டித்) தொழிலைக் காட்டி நின்று, கொங்கண சித்தர் முதலிலோர்க்குக் காயசித்தி முதலியவற்றைக் கொடுத்தது.

(94)

            வைணவ மென்ற விட்டுணு சமய மெல்லாவற்றையும் மிரட்சிக்குந் திதித் தொழிலைக் காட்டி நின்று, துருவன் முதலோர்க்கு காலச் சக்கர வளவை முதலியவற்றைக் கொடுத்தது.

(95)

            காணாபத்திய மென்ற கணபதி சமய பத்தர்களுக்கு நேரிடும் விக்கினங்களை நீக்குங் கருணையைக் காட்டி நின்று தேவர்களுக் கமுதஞ் சித்திக்கும்படி செய்தது முதலான லீலைகளை யுடையது.

(96)

            கௌமாரம் என்ற குமார சமய மகத்தியருக் குபதேசித்தது முதலாகக் குரு தத்துவத்தை விளக்கி நின்று, சகல விரோதத்துக்குஞ், சமாதானத்துக்கு மாதாரமாய் நின்றது.

(97)

            குரு வென்றுந் தெய்வமென்றும் பொதுப்படச் சொல்லு நிலையே சமயாதீத மென்னத்தகும்.

(98)

            குருவுந் தெய்வமு மில்லாத சமய மின்மையா லெல்லாச் சமயங்களுஞ் சமயாதீத மென்றே ஞானவான்க ளொப்புகின்றார்கள்.

(99)

            தெய்வ மில்லையென்னுஞ் சுபாவவாதி முதலோர்களுங் குருவை யொப்புதலாற் றெய்வத்தைப் பார்க்கிலுங் குரு வுயர்ந்த பொருளென்றுணர்ந்தவர்கள் பெருமை யளவுபடாதென்பது சத்தியம்.

(100)

            தெய்வமே குருவாவருமென்ற சொற்கிசைகின்ற சமயவாதர்கள் பலராவார். 

(101)

            பரம சற்குருவாகிய தெய்வத்தையுந் தன்னோடொரு மனிதனாகச் சொல்வார்களும் பலராவார்.

(102)

            தெரிசன மாத்திரத்திற் சருவ ரபீஷ்ட சித்தியுங் கொடுப்பவருந், தபோமார்க்கத்தைத் தெரிவிப்போருங் கல்வியருமை தோற்றப் போதிப்போருமாகிய மூவித வாசிரியரு முறையே தரம் பிரிக்கப்படுவார்கள்.

(103)

            எவ்வகைப்பட்ட நன்முயற்சியாலு மடையத்தக்க பிரயோசங்க ளறம், பொருளின்பம், வீடென்னு நான்கு விதமே யாம்.

(104)

            உத்தம நூல்கள் பலவு மற முதலிய புருடார்த்தங்களைப் பற்றியே பேசுகின்றனவாகும்.

(105)

            பிதிர்தேவரைப் பொருட்படுத்துவோனை யில்லறத்தா னென்று நிராசையைப் பாதுகாப்போனைத் துறவறத்தானென்றுங் காருண்ணியத்தைப் பெரிதாகக் கொண்டோனைப் பொதுவறத்தானென்றுஞ் சொல்லலாம்.

(106)

            பொன் முதலியவற்றாற் சிறந்தோனைச் செல்வப் பொருளோ னென்றும், விற்பத்தி கவனத்தாரை யென்பவற்றாற் சிறந்தோனைக் கல்விப் பொருளோ னென்றும் பத்தி வைராக்கியங்களாற் சிறந்தோனைத் தவப்பொருளோ னென்றுஞ் சொல்வதுண்மையாம்.

(107)

            அனேகம் பெண்கள் விரும்பிப் புணரப் பெற்றோனைச் சிற்றின்பக் காரனென்றுஞ் சக்கரவர்த்திகளாலுஞ் செய்தற்கரிய வற்புதங்களைச் செய்வோனைப் பேரின்பக்காரனென்று மிகலோக பரலோக மிரண்டும் மறத்தற்கரிய நன்மைகளைச் செய்வோனே புகழின்பக்கார னென்றுஞ் சொல்லக்கூடும்.

(108)

            பரலோகத்தி லிந்திரபதம் வரையுள்ளவை சொர்க்க முத்தியென்றுஞ் சாலோக முதற்  சாரூபம் வரையுள்ளவை பதமுத்தி யென்று மிவ்வுலகிற்றானே வெளி, யொளி, விக்கிரக மென்னு மூன்றி லொன்றிற் றூலசரீரத்துடன் கலப்ப தைக்க முத்தி யென்றும் பெரியோர்கள் சொல்வார்கள்.

(109)

            சித்திபெற லருமை யென்று முத்திபெற லெளிதென்றுஞ் சொல்கின்ற மூடருலகத்தி லதிகமா யிருக்கின்றார்கள்.

(110)

            பல பிறப்பிற் சித்தனான வொருவனே பின்பு முத்தனாவா னென்பது திண்ணம்.

(111)

            ஞானமொரு தீபமுஞ் சித்தி யதன் பிரகாசமா மென்றறிவதே உணர்ச்சியாகும்.

(112)

            பொருளைத் துணைக்கொண்டதன் வழியே தான தருமங்களைச் செய்தீடேறக் கூடுமென்பதற்குக் கருனன் முதலோர் சான்றாவார்கள்.

(113)

            அருள் பெற்று மாணவத்தாற் கெடுவாருண் டென்பதற் கிராணவன் முதலோர் சாட்சியாவார்கள்.

(114)

            பத்தர்களுடைய பாவனைப்படி யெத்தனை சமய தேவதைகள் விளங்கினாலுஞ் சிவகளை விட்டுணுகளை யென்னு மிரண்டிற்றா னொடுங்கும்.

(115)

            சிவகளை சிவப் பென்பதும், விட்டுணுகளை  பச்சை யென்பது மிரண்டுமொன்றோடொன்று சம்பந்தமென்ப மொன்றாண் மற்றொன்று பெண்ணென்பது முபயவாதிகள் சம்மதம்.

(116)

            சருவ நாம ரூப சம்பந்தமுள்ளதாயு மவற்றிற் கதீதமாயும் விளங்குகின்ற தெய்வ மொன்றென்றுணர்வதே யனேக பிறவிகளிற் றவமுடித்தவர்களுக்குண்டாகு முணர்ச்சியாகும்.

(117)

            கருமம், பத்தி, ஞான மென்னு மூன்றையு மொப்புக் கொள்ளத்தக்க சமரச நிலையினது பெருமை பெற்றோருந் தெய்வமுமே யறியத்தக்கது.

(118)

            சரியை, கிரியை, யோகம், ஞான மென்னு நான்கையு மநுசரித்து நடக்கும் பொது நோக்குடையோரை யொவ்வொன்றி லபிமானித்தோ ரனைவரு மிகழ்வார்கள்.

(119)

            உத்தமோத்தமாகிய பாகத்தை யிகழ்வோரு மதமாதமமாகிய பாகத்தைப் புகழ்வோருங் கூடச் சிலரிருப்பா ராதலினாற் சற்குரு வாக்கியப்படி யென்ற மாத்திர முயற்சித்து, மற்றைத் தொழிலற நிற்பதே விவேவிகளுக் கேற்ற நன்னிலையாம்.

(120)

சத்தியவாசகம் முற்றிற்று.

 

நூற்பயன்

வெண்டளைக் கலிப்பா

            சத்திய வாசகநூல் சாற்றியது மென்செயலன்

            றுத்தி யுடையாயர்க ளுள்ளபடி நன்குணர்ந்து

            பத்தி நிலையிற் பதிந்துநின்று பாடுபட்டுச்

            சித்திமுத்திப் பேற்றாற் றிருத்தி யடைவாரே.

முற்றிற்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக