வெள்ளி, 25 செப்டம்பர், 2026

விற்பனம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

விற்பனம்

காப்பு

(நேரிசை வெண்பா)

1.         தற்பரமே யாகிநின்ற சற்குருவின் றண்ணருளால்

விற்பன மென்றோர்நூல் விளம்புதற்குக் – கற்பனைக

ளெல்லாங் கடந்தநல மின்னதெனத் தேர்ந்திருக்கும்

வல்லார் பதத்துகள்கா வல்.

நூல்

அறத்துப்பால்

1.  கடவுள் வாழ்த்து

2.         குருவாம் வடிவையன்றிக் கும்பிடா வல்லோர்

திருவாகி நின்ற பொதுத்தெய்வம் – பெருவாய்மை

கோடாத நீதி குலக்கருணை குற்றமின்மை

தாடாண்மை யைந்துந் தரும்.

(1)

3.         அருவென் பவர்க்கருவே யாகிநிற்குந் தெய்வ

முருவென்று நாடிலவ்வா றொக்குஞ் – சருவசித்து

முள்ள தடியார்க் குதவச் சலியாது

கள்ளமறு ஞானக் கடல்.

(2)

4.         எந்தச் சமயத் திருக்குமியல் போர்க்குஞ்

சொந்தப் பொருளாத் துலங்குமே – யிந்தப்

புவிமுதலா மைந்துவகைப் பூதமுந் தானாகி

யவிதலுறா தோங்கு மது.

(3)

5.         மன்னரஞ்சிச் செங்கோல் வழுவாம லோச்சும்வண்ணந்

தன்னதென மாரி தனைக்காட்டு – முன்னவற்குச்

செஞ்சுடரும் வெண்கதிருஞ் சீரருட்கண் போலுமென்கை

விஞ்சுதமிழ்ப் பாவலர்க்கா மே.

(4)

6.         தூலமொடு சூக்குமத்துஞ் சொல்லவல்லார் சொல்லரிதாச்

சாலவும் பேதஞ் சமைத்தானைக் – காலபர

வாதிகட்குந் தோன்றா மயமென் றுணர்ந்தோர்க்கே

நீதிமுற்றுங் காணு நிசம்.

(5)

7.         வாக்குமனத் தாலடங்கா வண்மையன்றான் வந்தருள

நோக்கும் விருப்ப நுடங்காமற் – றாக்குநலம்

பெற்றோ ரெவரும் பெரியோரென் றோதுநன்னூல்

கற்றோர்க்கே மீளாக் கதி.

(6)

8.         எல்லாமும் வல்லானெதிர் தோன்றிக்காக் கும்வலி

யில்லானென் றோது மிழிவார்ந்த – பொல்லாரைக்

கொன்று விளையாடிக் குவலயமெல் லாம்புரக்குங்

குன்றுழற்தோட் பெம்மான் குரு.

(7)

9.         எல்லாமுந் தானா யிருந்ததனை யாதொன்று

மல்லாத தாகு மரும்பொருளைக் – கொல்லா

விரதத் தினுக்கிரங்கு மெய்யருளை வேண்டுஞ்

சரதத்தின் மேலோ தவம்.

(8)

10.       கூறுவது கூறுங் குருவென்றுந் தெய்வமென்றும்

வேறுபட நாடி வினைப்பேயான் – மாறுபடுஞ்

சேட்டைச் சமையத் திருக்ககன்ற சீரியர்சொற்

பாட்டையெல்லாஞ் சூடும் பரம்.

(9)

11.       எண்ணில் கலையா லியம்பவல்லா ரெல்லோரு

நண்ணி யுரைத்து நடுநின்றோன் – புண்ணியச்சீர்க்

கீறுவந்த தில்லை யெனச்சலியா தேன்றமட்டுங்

கூறுவதே நல்ல குணம்.

(10)

முற்றிற்று.

 

2. இல்லறம்

12.       மெய்கொண்ட சொல்லும் வியனார்ந்த பேரழகும்

பொய்கொண்டோர் தாமும் புகழ்கற்புங் – கைகொண்ட

தாரா ளமும்பொருந்துந் தையனல்லாட் சேர்ந்துடைய

சீராளன் வாழ்வே திறம்.

(1)

13.       பொன்னுந் தனக்கினிய புத்திரரும் புந்திமிகு

மின்னுந் தமரும் விளைநிலமுந் – துன்னும்

பெரும்புகழு நல்லுணர்வும் பெற்று மகிழ்சீர்

கரும்புறழு நெஞ்சினர்க்கா கா.

(2)

14.       பல்வேந்த ரஞ்சப் படிமுழுதும் பார்த்தளிக்கு

நல்வேந்த னைக்குறித்து நாடுங்கால் – வல்வேங்கைக்

கூற்றனைய வீரங் கொடைநீதி யன்னவற்றா

லேற்றமுறு மில்லறத்தா னே.

(3)

15.       பத்திகொண்டு நாடிப் பணிவார்தம் பாவனைபோன்

முத்தி யுதவு முதற்பொருளைச் – சத்தியெனு

மாதருடைத் தேவனென்பார் வையகத்தில் வாழ்வதனா

லேதமற்ற தில்லறமா மே.

(4)

16.       ஈகை யுதார மிரக்க மிழிவின்மை

யோகைதருங் கல்வி யுறவுண்மை – சாகையற்ற

மெய்க்கீர்த்தி யித்தனையு மேவநிற்கு மில்லறத்தான்

பொய்க்கீர்த்தி சற்றும் பொறான்.

(5)

17.       கல்வி யுடையாரைக் காதலற்ற மாதவரை

மல்விளைக்குங் கொங்கை மடவாரை – நல்வினையே

செய்வோரைச் சற்றுஞ் சினவாத சிந்தைபற்றி

யுய்வோருக் கில்லறந்தீ தோ.

(6)

18.       கற்புடைய மங்கையர்க்குங் காத லுடையார்போல்

விற்புருவங் கோட்டிநிற்கும் வேசியர்க்கு – மற்புரியும்

வீரருக்கும் வேந்தருக்கு மெய்யருக்கும் வீட்டறத்துக்

காரருள மஞ்சக் கடன்.

(7)

19.       பிறனில்லாட் சேராத பேராக்கந் தோய்வுற்

றறமுயன்று நன்றி யறிந்து – மறமொழித்து

மானம் பெருக்கி மனைக்கடங்கா வாழ்வுடையான்

வானம்போ னிற்கு மகன்.

(8)

20.       கருந்தா தனையமனக் கள்வர் கயவ

ரருந்தாமை தேரா வசடர் – பொருந்தாம

லிட்டுண்டு வாழு மியல்புடையா னில்லறமே

தட்டுண்டு போகா தது.

(9)

21.       மாழைக் குவடு மணிக்குவையு முள்ளானை

யேழையெனச் செய்வதுமில் லென்றாலு – மூழை

மதியா முயற்சிகொண்டு வாழ்வோன் வறுமைச்

சதியால் வருந்தா தவன்.

(10)

முற்றிற்று.

 

3. துறவறம்

22.       சிறந்தவுறுப் பெண்ணான்குஞ் சேர மனுவாப்

பிறந்தவரு ளெல்லாம் பெரியோர் – துறந்தருளே

தஞ்சமெனச் சந்ததமுந் தற்பரத்தைப் பற்றிநிற்கு

நெஞ்சமுளா ரென்கை நிசம்.

(1)

23.       துறவாதா ரெம்பெருமான் றொண்டு புரிந்து

பிறவாத முத்தி பெறுஞ்சீர் – மறவாத

சீல மனைவியென்றோர் சித்திரத்தைச் சேருமவன்

சாலமக வீனுந் தகை.

(2)

24.       முற்றத் துறந்து முதற்பொருளே தஞ்சமென்னார்

கற்றவர்க ளேனுங் கடையரே – பற்றறுத்து

வல்லானைப் போற்றி வணங்கும்வி ரியாரேனு

நல்லாரே யென்பார் நமர்.

(3)

25.       நெட்டுயிர்ப்புக் கொட்டாவி நித்திரையாற் செத்துடலை

விட்டுவிட்டோர்க் கண்டிருந்து மெல்லியலைத் – தொட்டு

மணம்புரிந்து நாட்கழிப்பான் வல்லோர் துறங்குங

குணம்புகன்றாற் றேர்ந்து கொளான்.

(4)

26.       கற்றோ னொருவனுக்குங் காசகன்ற பேரின்பம்

பெற்றோர் கொளுந்துறவிற் பேதமைநோ – யுற்றோரே

புல்லுமில்ல நல்லதெனப் புந்தியினிற் றோற்றுவிக்குங்

கொல்லும் வினைப்பேய்க் குணம்.

(5)

27.       எவ்வுதவி யார்செயினு மெம்பிரான் றன்னருளே

யிவ்வுதவி செய்ததெனக் கொள்கை – தெவ்வு

முறவுந் தவிர்ந்தொருவ னுண்டென் றுணருந்

துறவுடைய மேலோர் தொழில்.

(6)

28.       நாய்போ லொருவர்பின்போய் நாரியரைப் பார்த்துருகிப்

பேய்போற் பறந்து பெரிதயர்ந்து – தீய்போற்

சினக்கின்ற பொய்த்துறவுந் தீவினையோர்க் கெய்தா

தெனக்கண்டோர் வல்லோர்க ளே.

(7)

29.       பற்றற்ற தெய்வப் பழம்பொருளைப் பற்றுநர்க்கு

முற்றத் துறக்கை முறையாமென் – றுற்றவர்க்கே

மன்னருக்கு மஞ்சா மனவலியு மாதவமுந்

துன்னருளு நீங்காத் துணை.

(8)

30.       மன்னர்க் குலகோர் வணங்கல்போன் மாதவத்தான்

முன்னவனைக் கண்ட முனிவோரை – யன்னவர்தாம்

போற்றிப் பணியாரேற் போர்த்திறலும் பொன்முடியும்

வீற்றிருப்பும் பாழாகு மே.

(9)

31.       காணரிய ஞானக் கடலிற் குளித்தருளைப்

பூண முயலும் பொதுத்துறவோ – ராணலிபெண்

மூன்றுந்தா னாகியன்பர் முன்னியவா றன்னவர்முற்

றோன்றுமொரு தெய்வச் சுதர்.

(10)

முற்றிற்று.

 

4. பொதுவறம்

32.       கொல்லா விரதமொடு கொன்றதனைத் தின்னாமை

யில்லார் மனுப்போன் றிருந்தாலு – நல்லார்

விழித்துணைக்குப் பொல்லா விருகமாத் தோன்றி

யழித்துருவவ் வாறுகொள்வா ராம்.

(1)

33.       ஏன்றமட்டு மீத லிரங்கலிசை வேண்ட

லான்ற முதுநூ லறிதன்மை – வான்றனக்கு

மம்பா லிருந்தபொருட் கன்புசெய்த லாமிவையிங்

கெப்பான்மை யோர்க்கு மிதம்.

(2)

34.       இல்லறத்தில் வாழ்ந்தாலு மேழையருக் காகாத

வல்லறமா மெய்த்துறவின் மன்னிடினுஞ் – சொல்லரிய

சத்தா விளங்குஞ் சருவபரி பூரணத்தாற்

சித்தாடு வார்க்கே செயம்.

(3)

35.       புன்மைமுற்றும் போக்கிப் பொதுவினின்று புண்ணியஞ்சேர்

நன்மை விளைக்கு நரரெல்லாம் – வன்மை

யுடையார்க ளேனுமவ ருள்வதெல்லா நல்கிப்

படையாது காக்கும் பரம்.

(4)

36.       சத்தியமுஞ் சித்துந் தவமுந் தருமமுநற்

றுத்தியமுந் துய்ப்புந் தொலையாத – நித்தியனு

மன்னுஞ் சுடரிரண்டும் வானும் வளியுமண்ணும்

பொன்னும் பொறையும் பொது.

(5)

37.       மூவாச் சுருதி மொழிதவறிச் செய்தாலும்

பாவாணர் தம்மைப் பகைத்தாலு – மேவார்

குடன்மாலை சூடும்வைவேற் கொற்றவன்றன் சொற்கீழ்ப்

படல்வேண்டு மாந்தர் பலர்.

(6)

38.       தெய்வங் குரவன் றிருவேடத் தொண்டர்குழா

மைவனப்புக் கண்ணார் மகப்பேறு – மெய்வளமை

யச்சஞ் சுகதுக்க மாண்மையனை யவற்றை

யெச்சமைய முந்துழுவு மே.

(7)

39.       ஆரு மறிதற் கரிதாகு மப்பொருட்கோர்

பேருரைப்போர் தம்பாற் பிணங்குவோர் – சீருஞ்

செயலும் பகர்காற் சிரமசைத்தற் றேர்ந்தான்

மயலகன்ற ஞானம் வரும்.

(8)

40.       மெஞ்ஞான மின்றி விருகம்போற் கொன்றருந்து

மஞ்ஞானத் தோர்தம் மகத்திடத்து – மெஞ்ஞான்று

முள்ளபொதுத் தெய்வமன்றி யோர்தேவு மில்லையென்பார்

தள்ளரிய ஞானத் தவர்.

(9)

41.       பின்னும் பிறவாப் பெரியோர்க் கருளாண்மை

துன்னும் பொழுதிற் றுலங்குமே – மின்னுறழும்

பொய்ச்சமைய மத்தனையும் பொய்யாம் பொதுவாய

மெய்ச்சமைய ஞான விழி.

(10)

முற்றிற்று.

அறத்துப்பான் முற்றிற்று.

 

பொருட்பால்

5. செல்வப் பொருள்

42.       எங்கோன் கடவுளன்றி யில்லையென்னு மாதவர்க்குஞ்

செங்கோல் கொடுங்கோல் செலுத்துநர்க்கும் – பொங்கோத

மன்ன மனுக்கூட்ட மத்தனைக்கு மாராயிற்

றுன்னரிய பொன்னே துணை.

(1)

43.       தீண்டரிய புன்குலமுந் தீராத நோயுமுள்ளான்

மாண்டபெருஞ் செல்வனென்றான் மங்கையரி – லாண்ட

கொழுநனன்றிக் கைகுவியார் கூட்டநிற்க மற்றக்

குழுமுழுது மோகங் கொளும்.

(2)

44.       பொய்மதத்துத் தெய்வப் புகழெழுதும் பொற்காசை

மெய்மதத்தோர் தாமும் விழைவராற் – கைமருந்தாற்

செம்பிரும்பு பொன்னாகச் செய்வோன் றிருக்குரைத்தா

னம்பிநிற்பார் கோடி நரர்.

(3)

45.       சித்தியிடத் தாசை சிறிதுமின்றிச் சேரரிய

முத்தியையே வேண்டு முனிவோர்க்கும் – பத்தியுள்ளார்

பொன்னாற் சமைத்தளிக்கும் போனகமே தஞ்சமென்றாற்

பின்னா ரதைவெறுக்கும் பேர்.

(4)

46.       புண்ணியமுஞ் சாகாப் புகழும் பொருந்தியிங்கு

நண்ணியவா றோங்க நடத்துமே – வெண்ணிலவிற்

சேர்த்தார் தமைக்குளிர்ந்து சேராசைச் செஞ்சுடரிற்

பார்த்தாயச் செய்யும் பணம்.

(5)

47.       அற்றாரை யன்றி யரசர் முதலாகு

மற்றாரு நன்கு மதிப்பாரே – கற்றா

ரினந்தேடி மெய்ப்புகழீந் தேற்பாரே யிங்கு

தனந்தேடி வாழ்வோர் தமை.

(6)

48.       சற்று முதவான் றறுகண்ணான் றாழ்குலத்தான்

பெற்று வளர்த்தாரைப் பேணாதான் – சுற்று

முறவின ரோடுண்ணா னுணர்வில்லா னேனும்

பிறரிகழார் செம்பொன் பெறில்.

(7)

49.       முக்குற்றமுங் கடிந்த மோனிகட்குங் கோதுரைத்து

நக்குத் திரிவோரு நானிலத்திற் – செக்குறழும்

பொன்னுடையார்க் காணிலஞ்சிப் போற்றிப் பணிவரென்கை

மன்னு முதுநூல் வழக்கு.

(8)

50.       போற்றிப் பொருள்விளைத்தார் புண்ணியங்கொண் டவ்வழியே

கூற்றிறந்த வீடுங் கொளலாமே – னாற்றிசையி

லெய்தா நலஞ்சிறிது மில்லையா லேன்றதவஞ்

செய்தார்க்கே யெய்துந் திரு.

(9)

51.       மண்ணிற் புதைபட்டான் மட்காது வன்னியுலை

யுண்ணின் றுருகி லொளிமேலா – மெண்ணியெண்ணிப்

பார்ப்பார்க்கு மின்பம் பயக்கும் பசும்பொன்னைச்

சேர்ப்பார்க்கே வண்மைச் செயல்.

(10)

முற்றிற்று.

 

6. கல்விப் பொருள்

52.       கற்றோ ரிரந்தாலுங் கண்ணுடையார் காசினியின்

மற்றோர்கள் வாழ்ந்தாலும் வன்குருடர் – பொற்றோகை

யன்னமட நல்லாரு மாமென்பா ராகையினா

லென்னசென்மங் கல்வி யிலார்.

(1)

53.       செல்வ முதிர்ந்தாற் செருக்குண்டாந் தேடறிய

கல்வி முதிர்ந்தாற் கவியுண்டாம் – பல்விதத்தாற்

குன்றி யழியுங் கொடுஞ்செருக்குப் பாமாலை

யென்று மழியாததே.

(2)

54.       சுருதி முடிவுணர்ந்த தூயோர் பொருளாற்

பெருமையுறோர் தம்மையன் பிற்பேசா – ரொருபுலவற்

செத்தாலு மன்னோன் றெளிதமிழாற் சிந்தைசெய்வா

ரித்தா ரணியறிந்த தே.

(3)

55.       தமிழருமை யென்றுரைக்குஞ் சாகரத்திற் றாமே

யமிழவல்லார் தம்மடிமை யாவா – ரிமிழ்திரைநீர்ப்

பாராளு மன்னர் படைக்கும் பயந்தடங்காச்

சீராள ராய சிலர்.

(4)

56.       கற்ற புலவன் கதையொன்றி யற்றிவைத்தான்

மற்றவர்மெய் யென்று மருள்வாரே – குற்றமிகு

மூடனொன்றைக் கண்டு மொழிந்தாலும் பொய்யென்றே

நாடனைத்து மெண்ணி நகும்.

(5)

57.       அக்கரமுஞ் சொல்லு மதன்பொருளுந் தேராதார்

மக்க ளுடம்பின் மருவிடினு – மிக்க

பொருளாட்சி பெற்றிடினும் போக்கரிய மாயை

யிருளார் விருகமொப்பா ரே.

(6)

58.       கல்வியிலார் செய்தவமுங் கைதவமே காதலிக்கு

நல்வினையுந் தீவினையே நன்குணர்ந்த – வல்விதியோர்

செய்கொலையும் புண்ணியமே தீநினைப்பு நன்னினைப்பே

மெய்கொள் பலநூலுரைக்கு மே.

(7)

59.       அருளாட்சி யாக்க மறிவுடைமை யன்பு

மருளாளர்க் கெய்தரிய வாய்மை – பொருளாண்மை

யுள்ளார் தமைமதியா வுற்காச மாய்வெல்லாங்

கொள்ளாதோ கற்றோர் குழாம்.

(8)

60.       அடியா ருரைத்தநன்னூ லத்தனையுட் சற்றும்

படியாத மூடர்களைப் பாடு – மிடியார்ந்த

பொய்ப்புலவ ராமவர்க்கும் பொன்றாப் புகழ்கிடைத்தான்

மெய்ப்புலவர்க் கியாதரிதா மே.

(9)

61.       நாய்போற் சினந்து நரிபோற் பயம்பெருக்கிப்

பேய்போற் பறந்து பிணங்காமற் – றாய்போ

லிரவு பகலற்றானை யெண்ணித் தினமும்

பரவுவதே கல்விப் பயன்.

(10)

முற்றிற்று.

 

7. தவப்பொருள்

62.       எத்திசையும் போற்று மெழிற்புகழு மெய்தரிய

சித்தியெட்டுங் காட்டுந் திருவருளு – நத்தியவர்க்

கின்பங் கொடுத்திகலோ ரீடழிக்குந் தோள்வலியு

மன்பணைந்த மாதவத்தா லாம்.

(1)

63.       பூசனையுந் தோத்திரமும் போக்கரிய மெய்யன்பும்

வாசனையாத் தோன்று மனநலமு – நீசனையுஞ்

செய்கை யுயர்விருந்தாற் சேர்த்தருளு ஞானமும்பெற்

றுய்கை தவத்தா லுறும்.

(2)

64.       மாதவத்தால் வேல்வாங்கி வார்புவியை யாண்டோர்க்கு

மேதமற்ற சித்தி யிசைந்தோர்க்கும் – போதமுற்றி

மோனக் கடலின் முழுகினர்க்குந் தெய்வமொன்றென்

றீனக் கருத்துணரா தே.

(3)

65.       இத்தெய்வ நம்முடைய தென்போரை யெங்குநிற்கு

மெய்த்தெய்வ மொன்றன்றி வேறனைத்தும் – பொய்த்தெய்வ

மென்றுணரச் செய்யு மியல்புடைய மாதவமே

நன்றுணர்ந்து செய்வார் நரர்.

(4)

66.       தவம்புரியு மாந்தரெல்லாந் தற்பரன்சே யன்னா

ரவம்புரிந்து நாட்கழிப்போ ராரும் – பவம்புரிந்து

செத்துப் பிறந்துழலுந் தீமிருகம் போல்வரென்று

கத்துஞ் சுருதிக் கணம்.

(5)

67.       செய்தவத்தாற் றேறுநரைத் தெய்வமென்று கைகூப்பி

யுய்தமுடன் போற்றுமத முள்ளதெல்லா – மைதனக்குஞ்

செஞ்சுடர்க்கும் வெண்கதிர்க்குந் தீமுதலா மற்றெவைக்கும்

விஞ்சுபரத் திற்குரித்தா மே.

(6)

68.       மன்னர் படையு மழையும் பெருங்காற்றுந்

துன்னரிய தீயுஞ் சுடரிரண்டுஞ் – சொன்னபடி

கேட்கச் செயலுதவுங் கேடறுசீர் மாதவத்தை

வேட்கப் பெறலும் விதி.

(7)

69.       நல்வினையிற் சீரியது நாடரிய மாதவமே

கல்விச் சுருதிக் கணங்கூறும் – பல்வியப்புஞ்

சேர்ந்தார் குதவித் திருக்ககன்ற மெய்வீட்டி

லார்ந்தாய் வறப்புரித லால்.

(8)

70.       ஒன்றன்றி வேறுதெய்வ முண்டென் றுழலாதார்

குன்றன்ன நெஞ்சாற் குறிகண்டு – நின்றன்பாற்

செய்யுந் தவமே திருவருட்சீர் நல்குமென்றால்

வையும் பிறப்போர் மதம்.

(9)

71.       மண்ணிடதத்திற் பொன்விளையும் வானகத்திற் பூமலருங்

கண்ணினுக்கு வேண்டியநற் காட்சியா – மெண்ணியவா

றெல்லாந் தரும்பெருமா னிச்சையன்றி யாதொன்று

மில்லாத மாதவர்சொல் லில்.

(10)

முற்றிற்று.

பொருட்பான் முற்றிற்று.

 

இன்பத்துப்பால்

8. சிற்றின்பம்

72.       கண்ணால் வெருட்டிக் கருத்துருக்குங் காரிகையார்

விண்ணாணச் சொற்சுவையின் மிக்கதோ – மண்ணாள்வார்

தம்முறவாற் றோன்றுந் தனிப்புகழுந் தாமரசா

மெய்ம்முடிசூ டுஞ்சிறப்பு மே.

(1)

73.       சஞ்சலஞ்சேர் நெஞ்சொழிந்து தானும்போய்ச் சார்வுமின்றி

நஞ்சயின்றார் போற்கிடங்கு ஞானிக்குங் – கொஞ்சம்வந்து

தாக்கும் பெருங்காமந் தன்னைவென்றே மென்றுசிலர்

வாக்குரைத்தற் றேரின் மருள்.

(2)

74.       சீரார் மனுத்திரளிற் சிற்சிலர்க்கா மோர்சமையத்

தாரால் வெறுக்குந் தகையதோ – பாராதி

யைம்பூதந் தாங்குமுயி ரத்தனையும் பற்றிநிற்கும்

வெம்பூதக் காம வெறி.

(3)

75.       கொங்கைச் சுணங்கெழிலாற் குற்றமற்ற நற்குலத்தை

யங்கைப் பொருளை யறநெறியைச் – சங்கையில்லா

மெய்ப்புகழைக் கல்வியினை விட்டோர் பலகோடி

யிப்புவியி லின்றுமுள்ளா ரே.

(4)

76.       தேக்குந் தமிழ்க்கவிக்குஞ் செப்பரிதா மின்னிசைக்கு

மாக்கு மமுது மளியாதார் – பாக்கு

முலையார் நகைத்தோர் மொழிகூறிற் றாமே

விலையாவார் முக்காலு மெய்.

(5)

77.       ஆடிக் கவுட்கணிகை யாடலுக்குஞ் சாராயச்

சாடிக்கும் வேண்டுந் தனமீவார் – நாடிக்

கரங்குவித்துப் பன்முழுதுங் காட்டி யிரக்குங்

குரங்கனையார்க் கேதுங் கொடார்.

(6)

78.       மானோ வெனப்பிறங்கும் வாள்விழியார் வாய்மொழிக்குத்

தேனோ நிகர்த்ததென்று செப்புவார் – வானோவென்

றோங்குபெரு வாழ்வடைவா ரோதாதா ரோடெடுப்பார்

தீங்குதவிர் தெய்வச் செயல்.

(7)

79.       சின்னத்தாற் பேராற் றிருவுருவாற் போராடு

மின்னற் சமையத் தினரெல்லாம் – வன்னமுலைப்

பேதைநல்லா ரின்பப் பெருக்கிற் பிணக்கமுறா

ரேதையுயர் வென்றுகொண்டா ரே.

(8)

80.       வேதங்கள் கோடி விளங்குதற்கும் பல்சமைய

வாதம் புவியில் வழங்குதற்கு – நீதங்க

ளெல்லா நடப்பதற்கு மேந்திழையுங் காளையுஞ்சேர்

சல்லாப லீலையின்பந் தாய்.

(9)

81.       ஐந்தொழிலுந் தேவு மடியாரு மெய்யுணர்வுஞ்

சந்திரனுஞ் சூரியனுந் தாரணியு – நந்தாத

மேகப் புனலும் விரவாக்கான் மிக்கினிய

போகப் பெருக்கொழிந்து போ.

(10)

முற்றிற்று.

 

9. பேரின்பம்

82.       சமையத் தலைவருக்குஞ் சாராத ஞான

மமையப் பெறவிரும்பி யாயா – திமையணையும்

போதிசையுஞ் சிற்றின்பப் போகத் தயர்ந்திறக்குந்

தீதினர்க்கே பாழ்நரகத் தீ.

(1)

83.       எம்மா னருட்ரும்பே ரின்ப மிருக்கவம்பிற்

பொய்ம்மால் விளைக்கும் புணர்முலையார் – தம்மால்

வருந்தித் தவமறந்து மாமாயக் கூத்திற்

பொருந்தியவர்க் குண்டோ புகழ்.

(2)

84.       ஆசு கவித்தொடையா லண்ணலைக் கொண்டாடுவது

மாசுதவிர் தொண்டரொடு மாதவச்சீர் – பேசுவதுங்

கைதவத்தோர் தம்மைக் கறுவுவதுங் காசினியி

லெய்தரிய பேரின்ப மே.

(3)

85.       ஈனத் தொழிலுடையார்க் கெய்தரிய பேரின்ப

மோனத் தகைசார் முனிவோர்க்கே – யானவர்தா

மோருயிர்க்குத் தீங்கியற்றா ரூனருந்தா ரொப்பில்பெருஞ்

சீருடைய பாரிற் சிலர்.

(4)

86.       பிறப்பிறப்பிற் கச்சமுற்றுப் பேரின்பம் வேண்டுஞ்

சிறப்படையப் பெற்றார்தஞ் சிந்தைக் – கறப்பெரிய

பாரும் பொருவருஞ்சீர்ப் பாவையரும் பைம்பொன்னுஞ்

சேருந் திருவினியா தே.

(5)

87.       பெற்றோர் வெறுக்கரிய பேரின்ப மாயநல

மற்றோர்க் கவருரைத்தல் வம்பாமே – பொற்றோகை

நல்லாட் புணர்ந்தோன பூஞ்சகன்பால் வேறுதுணை

யில்லா துரைத்தா லென.

(6)

88.       பெறற்கரிய பேரின்பம் பெற்றோ ரெவரு

முறற்கரிய மெய்வீட் டுறுவா – ரறற்கரிய

பாசக் கயிறதனாற் பந்தமுற்றோர் பாழ்வினையின்

வாசக் கருக்குழிசேர் வார்.

(7)

89.       பேரின்ப மாவதனைப் பேசுங்காற் பேதையர்பொய்ச்

சீரின் மருளாத சிந்தையார் – நாரிற்

கிரங்கி யொருபெருமா னெண்ணம்போற் றோன்றி

வரங்கொடுக்கு ஞான  வழி.

(8)

90.       தொழுவார்க் கருள்வழங்கச் சோம்பாத பெம்மான்

வழுவா நெறியுடைய மன்னன் – குழுவாய

தொண்டரொடு தோன்றத் துணைவிழியாற் காண்பதுவே

யண்டரிய பேரின்ப மாம்.

(9)

91.       வல்லானைக் கண்டு வணங்கி மனவிருப்ப

மெல்லாம் பெறுவதுபே ரின்பமென்று – சொல்லா

னிருபாதத் தொண்டுசெய்யு மேழையோர்க் கில்லைச்

சொருபாநு பூதிச் சுகம்.

(10)

முற்றிற்று.

 

10. புகழின்பம்

92.       சாகாப் புகழ்புனையான் றாரணியை யாண்டாலும்

வேகாப் பிணமனையான் மேதினியோர்க் – காகாத

செய்கையினாற் சொற்சுவைச்சீர்ச் செந்தமிழ்ப்பா வல்லான்வாய்

வைகவிபெற் றோனு மனு.

(1)

93.       மேகந் தவழ்சிகரி மெய்ப்புகழ்க்காச் செய்தாலும்

பூகம்பத் தாலும் பொடியாகும் – பாகனைய

சொற்கவியொன் றேற்றாற் சுடரிரண்டு முள்ளமட்டு

நிற்குமெங்கோ னாணை நிசம்.

(2)

94.       நவகீர்த்தி யாதுமின்றி நந்தினோர் தம்மி

லவகீர்த்தி பெற்றவர்மே லாவார் – தவகீர்த்தி

யில்லாத் துறவிக் கிகலோரைக் கொன்றுழக்கும்

வல்லாளன் மேலாகு வான்.

(3)

95.       தெய்வ முலகைச் சிருட்டித் தளிப்பதுவு

மெய்வலிமைத் தொண்டர் வியப்பவென்றாற் – பொய்வளமை

யுள்ளசிலர் மெய்ப்புகழோர்க் கூறுரைக்க ஞாயமுண்டோ

கள்ள மறக்கற்றோர் களே.

(4)

96.       உள்ள மனிதரெல்லா மூனோ டுயிர்வதையுந்

தள்ள முயன்றியற்றுந் தன்மையனே – விள்ளரிய

பெம்மான் மதலையென்னும் பேராண்மை கொண்டோர்க்கே

பொய்ம்மா லறுக்கும் புகழ்.

(5)

97.       நாண்மிகவுஞ் சென்றாலு நாவலவன் பாவணிந்தோன்

மாண்மிகுந்த நீதி வயவேந்தன் – கோண்மலிந்த

புன்சமைய வேரறுத்தோன் பூண்டபுக ழோங்குமென்றற்

கொன்சகத்திற் கண்டு கொளல்.

(6)

98.       புகழ்விருப்ப மின்றிவம்பிற் பொன்றேடிக் காப்போர்க்

கிகழ்வுடனே யச்சமுண்டா மென்று – பகலனைய

நூலுரைத்து நல்லார் நொடியிற் குடர்பறிக்கும்

வேலுடையார்க் கீவார் மிக.

(7)

99.       குற்றம் பெருக்குங் கொடுங்கோ லரசர்குல

முற்றழியத் தாக்கு முனைவீரன் – பெற்றபுகழ்

நல்குரவொன் றின்றி நரரெல்லாம் வாழவைப்போன்

மல்குபெருங் கீர்த்தியினு மால்.

(8)

100.    வெய்யி னிலவெறிக்கு மேதினியெல் லாம்புரந்து

பொய்யில்செங்கோ லோச்சும் புரவலற்கு – மெய்யினனென்

றெல்லாச் சமையத் தினருந் தொழுங்குருவாம்

வல்லாற்குங் கீர்த்தி வளம்.

(9)

101.    சொல்லி லடங்காது சோராது தொல்புவியிற்

புல்லி னிடத்தும் பொருந்துமே – நல்லிதயங்

குன்றாத மெய்யடியார் கூட்டங் கறித்திறைஞ்சும்

பொன்றாத தெய்வப் புகழ்.

(10)

முற்றிற்று.

இன்பத்துப்பான் முற்றிற்று.

 

முத்திப்பால்

11. சுவர்க்க முத்தி

102.    கொன்றருந்தும் புன்சமையக் கூட்டத் தொருமனித

னன்றறிந்த மட்டு நடத்தித்தான் – பொன்றலுற்றாற்

பொன்னுலகிற் போகம் புசித்தலெனக் கண்டுபின்னர்

மன்னுலகி லாவான் மரை.

(1)

103.    அருணாட்ட நன்றென் றறியாதான் சொல்லு

மருணாட்டம் பற்றிநிற்கு மாந்த – ரிருணாட்டுப்

பேயனையா ரன்னவர்க்குப்  பேதையர்பொய்ப் போகமதே

தூயமுத்தி யென்னுஞ் சுகம்.

(2)

104.    கூட்டம் பெருக்கியுயிர் கொன்றனலில் வெந்தருந்தி

வேட்டவர் தாந்தம் மளவின் மெய்யாய – வாட்டடங்கண்

மின்னாரை யன்ன வியனுலகிற் றோய்ந்துமுன்பு

தின்னாகங் கொள்வார் திறம்.

(3)

105.    வெங்கோலார் தம்மையெல்லாம் வெட்டும் விதிர்வாளுஞ்

செங்கோலுந் தாங்குந் திறல்வேந்தன் – றங்கோர்

நகரின் மொழிந்தவறா நல்லாளைச் சேருஞ்

சுகமுஞ் சுவர்க்கமென்றே சொல்.

(4)

106.    துன்னரிய சொற்கமென்று தோகைநல்லார் கொங்கைக்கும்

பொன்னகரிக் கும்பேர் புனைந்திருந்து – மின்னவித

மென்றுரையாப் புன்மதத்தோ ரெத்தகைத்தோ வென்றுருகி

நின்று விழைவார் நிதம்.

(5)

107.    இன்னாரின் னங்க மெனத்தெரிந்து தாமுழைத்த

பொன்னாற் றுணிந்தியற்றும் புண்ணியத்தோர் – தின்னாதற்

கொள்ளாதா ரென்னில்விண்ணூர்க் கோவாகிப் பூதலத்து

மெள்ளாத மன்னவ ரே.

(6)

108.    குடிவருந்தக் கோலோச்சுங் கொற்றவனே யாதிக்

கொடியமா பாதகத்தோர் கொள்ளு – நெடிய

நரகைக் குறிக்குங்கா னல்லோருக் கெய்தும்

விரகபத மாஞ்சுவர்க்க மேல்.

(7)

109.    முன்வைத்த காலை முனைவீரர்க் கச்சமுற்றுப்

பின்வைத் திடாதுவெற்றி பெற்றோர்க்கு – மின்வைத்த

வேலாற்குத் துண்டுவிழுந் தோர்க்குஞ் சொற்கமென்று

மேலாய நூலுரைக்கு மே.

(8)

110.    என்பு தசைதோ லிரத்த முதலியவாற்

புன்புலவார் தேகம் பொருந்தாமற் – பொன்புரையுந்

தோற்றமொடு நன்மணமுந் தோயுமுடற் கொள்வாரே

யேற்றமிகு சொற்கத் தினர்.

(9)

111.    நற்கருத்து நற்றொழிலு நல்லுணவு முள்ளார்சேர்

சொற்கச் சுகமதனைச் சொல்லுங்கால் – விற்ககனத்

துண்டுநக ரிவ்வாறென் றுன்னியவா றூனிழந்துங்

கண்டு மகிழுங் கனா.

(10)

முற்றிற்று.

 

12. பதமுத்தி

112.    ஆலயத்திற் சென்றாங் கமர்தேவைக் கைகுவித்துச்

சால மகிழுந் தகையுள்ளார் – காலபய

மின்றியடி யாரோ டெண்ணியவூர்க் கேகியங்கு

நின்றிறைஞ்சி வாழ்க்கை நிசம்.

(1)

113.    செந்நீரூன் கள்ளரக்குச் சேல்விரும்பிப் பூசையெய்யும்

வெந்நீரா ராலயத்தின் மேவாரே – முந்நீர்சூழ்

பூலோகம் போற்றும் புனிதச் சமையமுற்றுச்

சாலோகஞ் சேரவல்லார் தாம்.

(2)

114.    எம்மளவுந் தெய்வமிதென் றேதேனு மோருருவைச்

செம்மலராற் பூசைதினஞ் செய்வோர் – தம்மகத்தி

லெண்ணியவா றிட்டதெய்வத் தேவற் பணிபுரிந்து

மண்ணிற் பிறந்துயர்வா வார்.

(3)

115.    எந்திரத்திற் கோணெழுதி யெம்பெருமான் பீடமென்று

மந்திரத்தால் வாழ்த்தி மலர்தூவித் – தந்திரத்திற்

பூசை புரிவோர்தம் புந்தியெண்ணுந் தேவருகி

லாசையொடு வீற்றிருப்பா ராம்.

(4)

116.    மானதத்தாற் பூசை வழுவாமற் செய்துவப்போ

ரான புனித ரனைவோருந் – தானறிந்த

தெய்வத் துலகிலதன் சேயாகிப் பாரில்வந்து

செய்வரருட் பேற்றின் செயல்.

(5)

117.    வேண்டு முருவில் விழியா மனம்பொருந்த

யாண்டும் புகழ்நலமே யென்றிரப்போர் – கூண்டுவரும்

பொல்லா ருயிர்குடிக்கும் போர்த்திறலும் போதமொடு

வல்லாண்மைச் சித்துமெய்து வார்.

(6)

118.    அம்புலிக்குஞ் செங்கதிர்க்கு மப்பா லகண்டமென்று

நம்புமுணர் வோடுருவை நாடுவோ – ரம்புவியி

லோர்சமைய முண்டாக்க லுள்ளதொன்றைச் சீர்படுத்த

லார்சகுண ராவார்க ளாம்.

(7)

119.    எம்மதத்தாற் றேறு மியல்புடைய மேலோர்க்குஞ்

சம்மதமாஞ் சாட்சிதனை நாடிக் – கைம்மலர்கள்

கூப்பியதைக் கண்டுகொண்டோன் கோடாநு கோடியண்டக்

காப்பிசைந்த மெய்த்தேவின் கண்.

(8)

120.    இவ்வுலக மானிடத்தி லேதமற்ற நல்லுடஞ்

செவ்வுணவும் பெற்றுத் திருவருளை – வௌவுமன்பா

லிற்றுறவுற் றேற்றுண் டிசைந்ததிரு வேடம்

பற்றுவதே மேலாம் பதம்.

(9)

121.    மானிடத்தி லன்றிமுத்தி வாயாதான் மன்னுயிர்க்கு

வானிடத்தில் வேறுமொரு வாழ்வுண்டோ – கோனிடத்தில்

வாழ்தலெனக் காண்டன் மனத்தகமே மாறிலது

வீழ்தலெனக் கொள்ளுமற்றோர் மெய்.

(10)

முற்றிற்று.

 

13. ஐக்கிய முத்தி

122.    நிற்கு நிலையுணர்த்தி நெஞ்சொழியப் பார்க்கவல்ல

சற்குருவுந் தெய்வச் சகளமுமே – நற்குணமுந்

தீய குணமுமற்றுச் சித்திகளுங் கைத்திறப்ப

தாயபர விடளிக்க லாம்.

(1)

123.    அண்டங்கள் வாழு மகண்டமே வீடென்னாத்

தொண்டனின்னம் பாரில்வந்து தோன்றுமெனக் – கண்டவர்க்கே

யம்புராசிப் புனலி லாற்றுநீர் போற்கலந்து

வேம்புமிரு ளற்றொழியும் வீடு.

(2)

124.    தற்பரமுண் டென்றுணர்ந்துந் தானொழியச் சோம்பிநிற்கு

மற்பமதி சிறிது மாகாதே – கற்பனைக

ளெல்லாந் தவிர்வுற் றியம்பரிதா மெய்வீட்டிற்

கொல்லாமை யாலடை வோர்க்கு.

(3)

125.    சத்தாய சூனியமுந் தானான சித்துமொன்றாம்

வத்தாய தெய்வம் வழங்குமே – சித்தாடி

யானந்த வாரிதிக்கு மப்பாற்போ யாருமற்ற

வானந்த னிற்கலக்கு மால்.

(4)

126.    பத்தி வயிரம் பழுத்ததான் ஞானமுண்டாய்ச்

சித்தி யடைந்து திருத்தியாய் – முத்தி

யடைவோ ரெவரு மதுவாத லாற்பின்

படையாதா மந்தப் பரம்.

(5)

127.    பாவலவர் கூறப் பகல்போ லிலங்குபுகழ்க்

காவலரா முண்மைக் கடவுளார் – சீவரென்று

நின்றா ரவையுணரா நின்மலமு மானார்மெய்

யென்றார்க்கே முத்தி யிதம்.

(6)

128.    நானே முதன்மையென்னு நாவினர்க்கு நானதல்லத்

தானே தலைமையென்னுந் தன்மையர்க்கு – மூனே

வராதமுத்தி யெய்தரிதாம் வண்மைகண்டு வாழ்வோர்

தராதலத்தி லேகதே சம்.

(7)

129.    முத்தியென்றோன் றின்றேன் முனிவோர்க் குயர்ச்சியில்லை

பத்தி நிலையிற் பயனில்லைச் – சத்தியமும்

புண்ணியமு மாதவமும் பொய்யா மெனத்துணிந்து

நண்ணி யவர்க்கே நலம்.

(8)

130.    மோக்கத் துயர்வுணர்ந்து மூதுலக முற்றுமன்பிற்

காக்கப் பெறுஞ்சிறப்புங் கைப்பாகி – யாக்கமிகுஞ்

சித்திதரு ஞானமுறார் தீவிருகம் போல்வரென்று

சத்தியமுஞ் செய்யத் தகும்.

(9)

131.    பிறவாத விட்டினிச்சை பெற்றோ ரெவரு

மிறவானை வேண்டியவா றெண்ணி – மறவாமற்

றோத்திரஞ் செய்துண்மைச் சுகநாடித் தொண்டுபுரிந்

தாத்திரங்கொண் டாய்வார்க ளாம்.

(10)

முற்றிற்று.

முத்திப்பான் முற்றிற்று.

விற்பனம் முற்றிற்று.

 

(நூற் புகழ்ச்சி)

132.    கல்ல முருகக் கவிபாடு நாவலவ

ரல்லும் பகலுமறும் பொருட்குச் – சொல்லும்

பலநாம தாசன் பகர்விற் பனநூல்

சிலநாம தாசருக்குந் தேன்.

குருபாதமே கதி.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக