வெள்ளி, 25 செப்டம்பர், 2026

அருளாட்சி நூல்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

அருளாட்சி நூல்

காப்பு

(நேரிசை வெண்பா)

தெருளாட்சிக் காரருண்மைச் சிந்தையினுக் கான

வருளாட்சி நூலான் றளிக்கும் – பொருளாட்சி

கொண்டவரை நாடிக் குலைகுலைந்து வாடாமெய்த்

தொண்டர்மலர்ப் பாதத் துகள்.

 

(நூல் வரலாறு)

வள்ளுவப்பேர் மாமன் மகட்புணர்ந்து மக்களன்ன

தெள்ளுதமிழ் நூனான்கு செப்பினேன் – விள்ளு

மவைக்குத் துணையா மருளாட்சி நூல்க

ளெவைக்கு முயிராவ தே.

(தேற்றம்)

நூன்முகப்பில் வேள்வி நுவன்ற கொடுமையெண்ணி

நான்முகத்தோ னாவினளை நான்மதியே – னூன்முகக்க

வொண்ணாதென் முப்பா லுரைத்தோ னொருநாவின்

பெண்ணா ளுயர்ச்சிகண்ட பின்.

நூல்

அருள்போலு மிக்கநல மங்குமிங்கு மில்லை

யிருள்போக்கு மெய்யொளியா மீசன் – மருள்போதத்

தெல்லா வுயிர்க்குமின்ப மீவதனா லல்லவோ

நல்லா னெனவிளங்கி னான்.

(1)

தம்மி லெளியார் தமக்கிரங்குந் தக்கோர்பால்

விம்மி யழுந்துயர மேவாதே – யிம்மி

யளவெய்தின் மேருவொப்ப தாமென் றிடையு

முளமுள்ளா ராவா ருவர்.

(2)

இன்னுமொரு தாய்வயிற்றி லேகா தெழில்வீட்டின்

மன்னு நிமித்தம்வந்த மாந்தர்க்கு – முன்னுதிக்கு

நல்லடையா ளத்தை நவிலுங்கா னாற்றமுண்பான்

கொல்ல லிசையாக் குணம்.

(3)

ஆருயிர்கட் கொன்றாகு மாக்கங் கடையென்னப்

பாருணரச் சொன்னோன் பதம்போற்றிக் – கூருலவா

வச்சிரத்தா னூரார் மகத்தூன் வெறுத்தனரேன்

மெச்சிடுவார் வல்லோர் மிக.

(4)

எந்தநல மில்லா ரெனினு மிரக்கமென்னுஞ்

செந்தகையொன் றெய்தினவர் தேவர்க்கு – முந்தறிஞ

ரென்னத் தெளிந்தோ னெவனோ வவன்கொடுங்கோன்

மன்னர்க் கெமனாகு வான்.

(5)

அருநோன்பு கொன்றருந்தி டாமையெனச் சொன்ன

திருநூலை விட்டுச் சிலர்தாந் – தருநாடு

கொள்வேமென் றெண்ணிக் கொலைமுயன்றூ னுண்கின்றா

ரெள்வே மவரைநித்த மியாம்.

(6)

புல்லுண்ப வற்றைப் புசிப்பார் குலமுழுதுங்

கொல்லு நலத்தைக் குறித்தென்று – மில்லும்

பகலு முயல்வோரே பல்லுலகுஞ் செய்தோன்

மகனென்ற மேன்மைபெறு வார்.

(7)

வலியார் மெலியார்தம் மாட்டிறுமாப் புய்க்கிற்

புலிபோற் சினவாப் பொறுமை – நலியாத

வீரத் தனிவேற்கை வேந்தருக்கு மெய்யருட்சீர்க்

காரருக்கு மாகாக் கடை.

(8)

தானோ ருயிர்வதையார் தன்விழியி னேரொருவ

ரேனோகொன் றாலு மிரங்குவார் – வானோர்க்கு

மேலாம் பதத்தினிடை வீற்றிருக்கும் மெய்யுணர்ந்தோர்

போலார் பொறுப்பார் புகழ்.

(9)

சித்தியொடு முத்திநலஞ் சேரப் பெறல்வேண்டிப்

பத்தி முயன்றுழைக்கும் பண்போரே – யெத்திசையு

நத்திக் கொளநிறைந்து நாசமின்றி வாழொருவன்

சத்திக் கிசைந்தமனத் தார்.

(10)

தன்னே ருயிர்கட் சதிசெய்யா மானிடர்தம்

பின்னே திரிவான் பிரானென்று – முன்னே

மறைகள் பகர்ந்ததன்றி மாதவத்தோர் தாமு

மறைவா ரதுநிசமே யாம்.

(11)

எல்லாச் செயலு மிறையறிவா னென்றுணர்ந்த

வல்லார் பலருமுயிர் மற்றொன்று – பொல்லாத்

துயரடைதற் காணிற் றுடிதுடிக்கு நெஞ்சத்

தயர்வொழிக்க மாட்டா தவர்.

(12)

தேவ ரெனினுமொன்றைச் செற்றருந்திற் றீயோரே

யாவ ரெனினுமதொன் றில்லாரேற் – பாவ

வினைதீர்ந்து ளாரேமெய் மெய்யன் றுரைப்போ

ரெனையாளுந் தாளுடையா ரே.

(13)

நான்முகவன் சொல்லதென நம்பி நளிர்கடற்பார்

மேன்மகஞ்செய் தூனருந்தும் வேதியர்தம் – பான்மை

யவனேர் வரினுமதொன் றாகாதென் றார்க்குந்

தவநேசர்க் காகாத தே.

(14)

நல்லருளென் றுள்ளவொரு நாம நமைப்படைத்தோன்

வல்லமைக்குங் கொன்றருந்தா மாட்சிக்கு – மல்லதுமற்

றெந்தப் பொருட்கு மிசையா தெனத்தினமுஞ்

சந்தப் புலவர்சொல்கின் றார்.

(15)

தெய்வம் பலவெனும்பொய்ச் சீராட்டு ளாரொருக்கா

லுய்வடைந் திட்டாலு முறலாகுங் – கைவலியாற்

கொன்று புலாலருந்திக் கொக்கரிக்குங் கோலுடையா

ரென்றுமுய்ய மாட்டார்க ளே.

(16)

ஓருயிரின் தேகந் துறுநோ யொழியமற்றோர்

சீருயிரைக் கொல்வார் சிலமாந்தர் – பாருலகி

லித்தனைநாட் டாம்வாழ்வ தென்றுமறி யாரிதெண்ணிற்

சுத்தமுழு மூடத் தொழில்.

(17)

ஊனேற வுண்பா ருயர்ச்சி யுருங்காலந்

தானே தனைக்கிணையாந் தற்பரனும் – வானேற்றம்

வேண்டே மெனுமுவகை மிக்குடைய மேலோர்தாங்

கூண்டேசு நிந்தை கொளும்.

(18)

ஈசன் விரும்புநல மெல்லாங் கொடுத்தினைய

தேசமறி யப்பதத்திற் சேர்த்தாலு – நீசர்க்

கினிதாய வூனொருசிற் றெள்ளளவுண் டுள்ளா

ரெனிலியா னவரைமதி யேன்.

(19)

சித்தியொரு சற்றியற்றிச் செத்தோரை யுமுலகோர்

முத்திபெற்றா ரென்றே மொழிகுவா – ரெத்திறத்தோ

ரானாலுங் கொல்லா வருணோன்பொன் றில்லாரேன்

மானார் வயிற்றினுழை வார்.

(20)

மேனாள் சிறுத்தொண்டன் வீட்டில்வரு மீசனையுந்

தானா விகழத் தலைப்பட்டா – ரூனாறும்

வேள்விப் புகைமுகக்கும் விண்ணவரை யெண்ணுவரோ

நீள்விற் றுனைநுதன்மின் னே.

(21)

ஆட்டு வடிவத் தவுணன் றனையருந்தி

மீட்டுருவெய் தாதெரித்த மேலானைக் – கேட்டுணவு

சின்னா ணுகரும்வினைத் தீமையுற்றா ரென்றுநனி

சொன்னாரு முண்டே துணிந்து.

(22)

நல்ல வுணவருந்து நாகரிகத் தோர்க்கலது

வல்லமனி தப்பிறவி வாயாது – கொல்லன்

முயன்றூ னருந்திலவை முற்றுமாய்த் தோன்றும்

வியன்றோய்ந் துழல்வார்மெய் மெய்.

(23)

ஓருடல்விட் டேகு முயிர்வே றுடலெடுக்குஞ்

சீருணரு மாந்தர் சிலரேனை – நீருடையார்

பல்லோரிம் மாற்றம் பகர்நூலு மப்படியே

யெல்லோர்க்குந் தோன்றா திது.

(24)

எந்தவே தத்தி லியம்பியவா றேனுமுயிர்

நந்தவதைத் தூனருந்த னாதனது – சிந்தனைக்குஞ்

சம்மதமா மென்னிலவன் றாட்டா மரைத்துணைக்கு

மும்மலமாம் பேய்களஞ்சு மோ.

(25)

போதங் கடந்தபரி பூரணன்றா னேபுகலல்

வேதங்க ளாகுமென்னில் வேற்றுயிர்கட் – கேதங்கள்

செய்யச்சொ லானொருக்காற் றீயோர்கள் செப்பியவற்

றையப்ப டாதிசைத்த தாம்.

(26)

சீலத் துணவதனாற் றேகம்வளர்த் தார்சிலரோர்

காலத்தி லூனருந்தக் கண்டோமே – யாலத்தை

யுண்டாவி நீத்ததார் குயரா ருலகினித்தங்

கண்டார் வசைகொள்கை யால்.

(27)

ஆவிநிலை யுண்ணா வருளார்ந்த நற்குலத்தோர்

பாவிகளா மற்றையர்தம் பாலேகிச் – சேவித்துப்

பொன்றேடி வாழ்வதெண்ணிற் பொல்லாப் புழுநரகி

லன்றே விழுவதொப்பா மால்.

(28)

கொல்வார் நரகிற் குடியாவ ரென்னமுன்னூல்

சொல்வாய்மை யோர்ந்துந் துணிவாரை – வல்வாட்கை

கொண்டடக்க னீதிக் குறையன் றவருலகத்

துண்டனபல் கோடி யுயிர்.

(29)

கொன்றருந்து வானொருவற் கூர்வேல் குடர்குழப்ப

வென்றவன்பா லக்கணத்தின் மேவுமே – துன்றகில

மீதுநாற் றிக்கில் விளங்கு முயிரனந்தம்

பாதுகாத் திட்ட பயன்.

(30)

மானிடராப் பாருலகில் வந்தோ ரனைவர்களு

மூனிணந்தின் னாமை யுஞற்றுவான் – மேனிலத்தி

லுள்ளானென் றோது மொருவனே யென்றுரைக்கிற்

றள்ளார்க ளுண்மைத் தவர்.

(31)

கொல்லா விரதக் குணமே தவமாகு

மல்லான்மற் றெல்லா மவமாகும் – வல்லா

ரறிவார்மற் றேனையவ ராருரைத்திட் டாலுங்

குறியாமென் றெண்ணிக் கொளார்.

(32)

சங்கப் புலவர் தமதுள் ளிறுமாப்பைப்

பங்கப் படுத்துமொரு பாவலவ – னெங்கட்

குரைத்ததமிழ் வேதத் துட்கருத்துற் றோர்ந்தார்

தரைத்தலத்திற் கொன்றருந்தா தார்.

(33)

இரவைப் பகலாக்கி யேந்திழையார்க் காண்மை

வரவழைக்கின் றோரெனினு மற்றோர் – சாவுடலூ

னுண்பார்க ளாயினவ ரூறுடையா ரென்பாரே

நண்பாள ராவார் நமக்கு.

(34)

கொல்லாமை யொன்றுபற்றிக் கோதுபல செய்கின்ற

நல்லா ரடையும்நரகத்து – மெல்லா

விரதங் களுமுயன்றூன் வேட்கையறார் மேவுங்

கரவுபடும் வீடு கடை.

(35)

தெள்ளு மறைக்கருத்தைத் தேறாது தீமகத்தூன்

கொள்ளுநரே முன்னதனைக் கோதென்ற – வள்ளுவனார்

மெய்வீட்டிற் சேர்ந்த விதங்கேட் டறியீரோ

பொய்வீடு விண்ணோர் புரம்.

(36)

நான்மறைமேற் குற்ற நவின்றிட்டு நாய்விரும்பு

மூன்மகிழ்ந்துண் போரே யுலகெல்லா – மேன்முதலென்

றோதுமொழி மட்டு முமக்குக் கசப்பான

தேதுணர்ந்து சொல்மி னெனக்கு.

(37)

போதோ டிளம்புற் புசிக்கின்ற வானினத்தூ

டேதோவொன் றென்பருந்து மீனம்போல் – வாய்தோயும்

வேதத்தோ ரிற்சிலர்தாம் விண்ணவரூர் வாழ்வைநம்பி

யேதத்தூ னண்பார் களே.

(38)

சாவக் கிடக்குமுயிர்த் தட்டழிவைக் காணின்மிகும்

பாவ மனிதர் பதைத்திடார் – தேவருக்கு

மேலாய தன்மையுளார் வெந்தநெருப் பின்மெழுகு

போலாய்வார் நெஞ்சம் புலர்ந்து.

(39)

விண்டலத்துத் தேவருக்கும் வீறுபெற்ற சித்தருக்கு

மண்டலத்துள் ளார்க்கு மருந்தன்றே – கொண்டல்வெட்குந்

தாதாவா யெந்தச் சமயத்தி னர்க்குமொரே

வாதார மாவா னருள்.

(40)

பொருளுடையார்க் காக்கம் புரைதீர் புலமைத்

தெருளுடையார் தம்மையொன்றாச் சேர்த்த – லருளுடையார்க்

காக்க முலகத் தனைத்துயிருந் தம்முயிர்போற்

காக்க முயலுங் கடன்.

(41)

கொல்லல் விழைவார் குவலயத்தில் லாதொழிய

வெல்லன் முயன்றொருவன் வென்றியுற்றான் – மல்ல

லுலகங் குறைவுபடா துள்ளபடி முன்போ

லிலகுஞ் சிலநாளை யில்.

(42)

உலகின்க ணிற்றைவரை யுண்டாய தொண்ட

ரலகின் றியபலபே ரானார் – புலவுண்கை

நீங்கச்செய் வான்முயன்று நீடுபுகழ் தோய்ந்துவிண்ணோ

ரேங்கச்செய் திட்டா ரிலர்.

(43)

வேடர்களுங் கொல்லா விரதியர்க ளாமாறிங்

காட லியற்று மவன்திருத்தா – ணாடலன்றி

மற்றையரைச் சற்று மதியேயென் பாருறவை

யெற்றையினு மியான்மறவே னே.

(44)

தம்மைப் பிறர்வதைப்பச் சற்றுமிசை யார்களெண்ணில்

செம்மை யுயிரைச் சிதைக்கின்றா – ரெம்மையினு

மீடேற மாட்டார்மற் றெவ்விதச்சீ ருற்றாலும்

வீடே யடையார்மெய் மெய்.

(45)

பார்த்தன் சமர்க்களத்திற் பல்கோடி தீங்கியற்றுந்

தூர்த்தர்களைக் கொல்வதஞ்சித் துக்கித்தான் – மூர்த்தி

யொருவ னருணீதி யுணர்த்தினா னோரா

விருண்மனத்தா ரீனமென்பா ரே.

(46)

ஊனுண்டு விற்பா னுதரத்துச் சேயொருவன்

றானுண்ணா விட்டாற் றவறன்றே – மானுண்கண்

வேசி மகளொருத்தி மெய்க்கற் பினளாகி

லேசி மறுக்கவொண்ணா தே.

(47)

எந்தச் சமயத் தினரேனுந் தாமருவுஞ்

சொந்தச் சமயஞ் சுகமென்பார் – நந்தவொன்றைக்

கொல்லா நெறியே குணமென்று கூர்ப்புடையா

ரெல்லாரு நன்குரைப்பா ரே.

(48)

கொன்றருந்த னன்மையெனக் கூறு நெறிமுகப்பி

னின்றவர்க்குஞ் சற்றுதவு நீர்மையாற் – குன்றலின்றி

யெங்கு நிறைந்தபொரு ளீனமுற்ற வாறுணரார்

கங்குல் பொருமனத்தார் கள்.

(49)

வண்ணான்சொற் கஞ்சி மனையை வனத்தினிடை

யெண்ணாமல் விட்ட விராமன்றான் – விண்ணாடர்

போற்றத் தவசு புரிந்தானைக் கொன்றவித

மேற்றமெனச் சொல்லறியே மியாம்.

(50)

தெய்வம் மனிதத் திருவுருவத் துற்றதென

வையமின்றிச் சொல்வா ரளவில்லார் – வையகத்திற்

செய்யரிய வண்மை சிலகாட்டுஞ் சித்திநலங்

கையகத்திற் பெற்றோர் களை.

(51)

எல்லா வடிவு மிறைவனே யென்றுணர்ந்த

நல்லாருங் கொன்றருந்தா ஞாயத்தி – னில்லாரைப்

பொல்லாரென் றெண்ணிப் புறங்கூற லாமவர்தம்

வல்லாண்மைக் கில்லை வழு.

(52)

பொருளை மிகமதித்தார் புண்ணியங்கட் காகா

ரருளைத் தினம்விரும்பு மன்பர் – குருளையொடு

பார்ப்பு மருந்தும் பலர்க்காகா ரென்றவிரு

தீர்ப்பு முலகறிந்த தே.

(53)

நானிலத்து மாந்தர் நலியப் படுத்துகொடுங்

கோனிறுத்து மன்னர் கொதுகன்னார் – வானிடத்து

வாசவனு மாலயனு மற்றையருந் தானான

வீசனருள் பெற்றா ரெதிர்.

(54)

அந்நா ளொருபே ரருளாளன் பெற்றமகன்

மைந்நாக மன்னதிண்டோண் மன்னவரைப் – பைந்நாகக்

கோவெதிரிற் றேரைக் குழுவாப் படுத்திடல்பல்

பாவெடுத்துக் கூறும் பரிந்து.

(55)

பொருளிறுமாப் பெய்திப் புரவலரா னாரு

மருளிறுமாப் பெய்தினர்க்கொப் பாகார் – சுருள்பனைக்கை

வெள்வேழத் தான்றிருவோர் வேதமுனி சாபத்தா

லள்வேலை யிலமிழ்ந்த தால்.

(56)

எச்சமயத் தோரு மியம்புபல நூலிடத்துப்

பொச்சமொடு மெய்யுமொன்று போல்பவே – யச்சமறுத்

தாளும் பெருமா னடியார்க் கடிமைசெய்து

கோளுங் குறியுமற்றோர்க் கு.

(57)

முன்னூ லினத்து மொழிகின்ற நூலினத்தும்

பின்னூ லினத்தும் பிறங்குமே – யெந்நூற்கு

மாதார மாகு மறிவ னருளார்கட்

சீதார விந்தச் செயல்.

(58)

அருளே யுருவா மடியார் தமக்கு

மிருளே வடிவா யினர்க்குந் – தெருளு

மருளுங் கலந்த மதியாள ருக்கு

மொருவன் றுணையாவ துண்டு.

(59)

பொருளாண்மை யுற்றுவக்கும் பரியர்க ளொல்க

வருளாண்மை வேண்டு மவர்பாற் – சுருள்கூந்த

னல்லார் மயற்பேயு நல்குரவாஞ் செந்தழலு

மொல்லாது சற்றாயி னும்.

(60)

சித்தி யரிதென்றுந் தேவருக்கு மெய்தரிய

முத்தி யெளிதென்று மூடர்தாம் – பித்தியன்ற

நெஞ்சத்தா ரென்ன நிகழ்த்துவா ரிந்தமொழி

நஞ்சத்தோ டொப்பா நமக்கு.

(61)

அருள்வேட்கை யெய்தி யலமருவார்க் கெல்லாம்

பொருள்வேட்கை யென்றுமிகப் பொல்லா – திருள்வேட்கைப்

பாவிகள்பா லுள்ளமிகப் பல்கால் பதைபதைப்ப

மேவியிரந் தேத்த விடும்.

(62)

ஈசனருட் பேறெய் தினரை யீடில்விண்ணூர்

வாசவனும் வந்து வணங்குவா – னேசம்வைத்து

வேண்டித் தவஞ்செயுநாண் மேதினியின் மானிடருங்

கூண்டிட் டிகழ்வார் குறித்து.

(63)

பைத்தலைய பாம்பைப் பருகும் பசியமயில்

கைத்தலத்து முட்டையெனக் காணுநா – ளத்தகைய

மாசுணத்துக் கூணாம் வகையுணர வேண்டுமே

தேசுபெற நாடுஞ் சிலர்.

(64)

மன்னர் முடிமேன் மலர்த்தாளும் வானுருவா

முன்னவன் பொற்றானின் முடியுமாங் – கன்னலம்பா

கன்ன தமிழு மருட்பேறு மம்புவியோ

ருன்னரிதாக் கொண்டொளிர்வாற் கு.

(65)

கரத்திற் கடையாய்க் கழியூ னருந்துந்

தரத்துக் கொடியார் தமக்குஞ் – சிரத்தைமுத

லாய குணங்க ளனைத்தினுக்குந் தூரமென்கை

தூயமுது நூலுணர்ந்தோர் சொல்.

(66)

கல்லா ரெனினுங் கருணை யுடையாரே

னல்லாரே நூன்முழுது நன்குணர்ந்த – வல்லார்கண்

மானு மொழியினராய் வான்விரும்பி யூனுகர்ந்தா

ரேனு மிழிநாயனையா ரே.

(67)

வான மடந்தையரை மண்ணிற் புணர்வதற்கு

மான தவமுண் டதைவிட்டுத் – தானழிந்த

பின்னவர்தா மின்பம் பெறலா மெனநினைத்தூன்

றின்னலைப்போ லில்லைச் சிரிப்பு.

(68)

காலன்வரு முன்னருட்சீர் கைவரநா டாமலினி

மேலடையு மேனிநலம் வேண்டுநரிற் – றூல

வுடலு முயிருமொன்றென் றோதுநரை மேலென்

றிடலாகு மென்ற னிசைவு.

(69)

ஈச னருளு மிரக்கமுமொன் றென்றுணரார்

பாச வினையிற் படுமாந்தர் – நாச

முறலரிய மெஞ்ஞான முற்றோ ரெவரு

மறலுங் குளிர்ச்சியுமென் பார்.

(70)

மேலுலக மில்லெனினும் வேண்டுநருக் கீடுதலொன்றே

சாலுநல மென்னுந் தமிழ்வேத – நாலுவகை

யோகைக்கு முத்தி யுயர்புகழ்க்கோர் வித்தாகு

மீகைக்குந் தாயிரக்க மே.

(71)

ஆராலுங் காண்டற் கரியா னருண்மலிந்து

சீரார் மழைபொழியச் செய்யானேற் – போராடும்

வேல்வேண்டும் வீரர்பலர் மேன்மேலு மெச்சுகைச்செங்

கோல்வேந்தர் வாழ்வுநுடங் கும்.

(72)

நம்போ லொருமனித னாதனருட் சீர்பெறலா

லம்போதி நீரை யருந்தினான் – செம்போத

முள்ளார்மற் றொன்றை யுயர்வினதாக் கொள்வாரோ

கள்ளார் மலர்க்குழற்றோ காய்.

(73)

பொன்னுறழ வொன்றாகிப் பூணுறழப் பற்பலவா

மன்னு மவனருட்சீர் வாஞ்சையினிற் – றுன்னுநரே

மானிடர்க ளாவார்கண் மற்றையவ ரெல்லோருங்

கானிடத்து வாழ்விருகங் கள்.

(74)

அருளே யுயர்வென் றறைந்தாலு மொப்பா

விருளாளர் வாழு மிகத்திற் – பொருளியாதும்

வேண்டா ததனை விரும்புகின்ற வித்தகரை

யாண்டா னெனவுரைக்க லாம்.

(75)

ஐயமிட் டுண்ணென் றவையா ருரைத்தபடி

செய்யத் துணிந்தோர் சிலர்தாமே – வையகத்தின்

முக்காலே நாலுமா முக்காணி முந்திரிமூன்

றெக்காலு மில்லையென்போ ரே.

(76)

அருவ முடனுருவ மாகியமெய்த் தெய்வங்

குருவடிவே யென்றுணர்ந்து கொண்டு – திருவருட்பே

ராழியிடை மூழ்கு மறிவுடைய மேலோர்கள்

வாழியெனச் சொல்லு மறை.

(77)

எல்லாம்வல்லா னிறைவ னென்றுணர்ந்தார் போன்றசில

பொல்லா ருருவாய்ப் புகழ்வார்முன் – னில்லானென்

றோதுகின்றா ரந்த வுணர்ச்சியவர்க் கீந்தபொரு

ளியாதுகொலோ யானறிகி லேன்.

(78)

தெய்வ நிலையுமது செய்தொழிலுந் தேர்ந்தமட்டின்

மெய்வழக்கர் பல்லோர் விளம்புவார் – சைவ

முதலாய பல்சமய மூர்த்திகளாய் வேறா

மதலான்மற் றோர்துணையின் றால்.

(79)

தான்பெற்ற சேயிற் சகல வுயிரையுமெண்

ணான்பெற்ற வுண்மை யசத்தியமே – வான்பெற்ற

போது மொருபொய் புகலாதார்க் கேயருட்சீர்

மீதுவருந் தீரா விருப்பு.

(80)

கோடிக் கொருமனிதன் கோமா னருட்டிருக்கூத்

தாடிக் கதியடைதற் காசிப்பா – னாடித்

திரிவார்கள் கோடியிலோர் சீராளன் றானே

பெரிதாமப் பேறு பெறும்.

(81)

அருட்சித்தி வேண்டுகிலா ராரேனு மன்னோர்

மருட்சித்த மெய்தியபுன் மாந்தர் – தெருட்சித்தர்

தங்குழுவிற் போய்த்திரும்புந் தன்மையடை யார்சகத்தி

லெங்கு மிகழ்ச்சியுண்பா ரே.

(82)

பத்தி யிடைமுயன்று பார்முழுதும் போற்றவருட்

சித்தி புரிந்தோரே சீரியோர் – முத்தி

யடைந்தார்க ளானாலு மன்னவர்க்கொப் பாகா

ரிடைந்தார்க் குவகைநல்கா ரேல்.

(83)

நானிலத்து மாந்தர் நகைப்ப நலங்குலைந்து

மேனிலத்துத் தேவர்கட்கு மேவரிதா – நூனிகழ்த்து

மெய்யருட்சீ ரெய்தியதா வீறாப்புப் பேசுகின்றோர்

பொய்யர்கட்கெல் லாந்தலைப்பொற் பூண்.

(84)

உள்ள மறிய வுடலா தியமூன்றும்

வள்ளலுக்கென் றீந்துவக்கு மாதவர்பாற் – கள்ள

மொருசிறிதுஞ் சேரா தொருக்கா லுறினு

மருளினுக்கே சாட்சி யது.

(85)

நல்லார் பலர்க்குமுத்தி நல்கவல்ல ஞானத்தோன்

பொல்லார் குலமுழுதும் போக்கலா – மல்லாரும்

பாழி நெடுங்கைப் பகடூர் வழுதிமெச்சுங்

காழிநகர்ச் சேயே கரி.

(86)

ஓர்சமையத் தோர்பா லுடையா னருட்பெருக்கஞ்

சேர்சமையந் தோறுமற்றைச் சேகரத்தார் – கூர்சளத்தா

லானிநினைத் தஞ்சி யலமருத லாழ்கடல்சூழ்

மாநிலத்துத் தொல்லை வழக்கு.

(87)

கொல்லுஞ் சமயம்விட்டுக் கொல்லாச் சமயமதிற்

செல்லு மவர்க்குமுத்திச் சீருண்டா – நல்லுணவு

கொள்ளு நெறியைவிட்டுக் குக்கலுண வுண்ணுநெறி

நள்ளுநருக் கெய்தும் நரகு.

(88)

இத்தெய்வ மேபரமென் றெண்ணி யுரைப்போர்க்கு

மெய்த்தெய்வ மாண்மை விளைப்பதுண்டே – லெத்தெய்வ

மாவதுவு மாராயி லந்தப் பரமாமென்

றோவறச்சொல் வார்க்குதவா தோ.

(89)

பரமே யனைத்துமெனப் பாடுகின்ற வேதத்

துரமே யுரமென் றுணர்ந்து – சிரமீது

மெய்யடியார் பொற்றாள் விரையாரப் பெற்றோரே

வையமிக வாழநினை வார்.

(90)

எந்த நிலைவிட் டிழிந்தாலு மீசனருள்

வந்தடைய வேண்டுமென வாஞ்சிக்கு – மந்த

நிலைதவற வொண்ணாது நிச்சயமாச் சொல்வே

னலைவொழிய வேண்டு மகம்.

(91)

குறியைக் குறித்தாற் குறியிறந்த ஞான

நெறியிடைபோய்ச் சித்த நிலைக்கு – மறியாமை

முற்றியவ ரந்நிலையை முன்பற்ற வேண்டுமிருட்

பெற்றியினாற் றோய்வார் பிழை.

(92)

எவ்வுருவத் தேனு மிதய மிகநாடி

லவ்வுருவங் கைக்கொண் டவிருமே – வௌவுநெறி

யத்தனைக்கு மாதரமா யாராலுங் காண்பரிய

சித்தனென நின்ற செயல்.

(93)

வல்லா னருட்பெருஞ்சீர் வாஞ்சித்த மாதவரைப்

பொல்லா வினைக்கொடும்பேய் புண்படுத்து – மல்லாதார்

பாடாணத் துற்ற பழைய புழுவினம்போல்

வாடாது வாழ்வார் மகிழ்ந்து.

(94)

தற்பரத்தை நாடித் தவம்புரியுந் தக்கோருக்

கற்ப ருறவுசற்று மாகாதே - சொற்பனத்து

மெல்லா மதன்செயலென் றெண்ணி யிறுமாக்கும்

வல்லாண்மை யைக்குறுக்கு வார்.

(95)

உயிரொன் றுடலொன் றுலப்பில்பர மொன்றென்

றயிரொன் றுணர்வா லறியார் – செயிரொன்று

தத்துவங்க ளாய்ந்து தயங்குவா ரன்னவர்தம்

பித்துநமக் காகாப் பிழை.

(96)

ஒன்றென் றிரண்டென் றுரைசெய்வா ரொன்றிரண்டு

மன்றென்று சில்லோ ரறைகுவா – ரென்றென்றுங்

கள்ளமறப் போற்றுநர்க்குக் காணரிய மெய்யருட்பே

றுள்ளபடி தானே யுறும்.

(97)

மங்கல மில்லா மகளு மழலைமொழிச்

செங்கனிவாய்ச் சேய்நலமில் சீர்வீடும் – பொங்கருட்பே

றேற்றுவக்கைக் கானதவ மில்லாத் துறவோனுஞ்

சாற்றுகைக்கொன் றாகுந் தரம்.

(98)

கல்விக் கடலைக் கடந்து களிகூரு

நல்விற் பனர்க்குதிக்கு ஞானத்தைப் – பல்விதத்து

மாராய்ந் தறியி னழியாப் பிரானருட்செஞ்

சீராகு மியாவுமென்ப தே.

(99)

மெய்யேமெய் யாகி விரிகடல்சூழ் மேதினியிற்

பொய்யேபொய் யாகப் புலர்வார்க்கு – மையேழுஞ்

சிந்தா மணியுமிரு செந்நிதியுந் தேனுவும்வெண்

டந்தா வளமுஞ் சளம்.

(100)

செம்பனைய தாமுலகோர் செல்வந் திரண்டவெள்ளித்

தம்ப முறழுந் தமிழ்க்கல்வி – யம்பரத்தி

லோங்குங் கனகவரை யொப்பா முயர்பிரம

மாங்குரவ னார்கண் ணருள்.

(101)

பரிதி சிவனுமைமால் பாழி நெடுங்கைக்

கரிமுகன்சே யென்னக் கழறும் – பெரியநெறி

யாறு மவைதீர்ந்த வதீதமுநன் றாகுமெனக்

கூறுநரே நந்தங் குரு.

(102)

சிஃறேயஞ் சுற்றித் திரிந்தாலுஞ் செந்தமிழாற்

பஃறேவும் போற்றிப் பணிந்தாலுங் – கஃறேடுஞ்

சித்தருக்கு மேலாய சீர்படையார் சிந்தையருள்

வைத்தவர்க்குத் தானே வரும்.

(103)

வத்து நிலையுணர்ந்து வாயாற் பிதற்றுநர்க்குச்

சித்து விளக்கந் திகழாதே – முத்துறழு

நெஞ்சால் வடிவமொன்றை நித்தமுஞ் சிந்திப்பவருக்

கெஞ்சாம லுண்டாகு மே.

(104)

காமத்தும் பொல்லாக் கலியாற் கயங்குநர்க்கு

நேமத் தினுக்கு நெடுந்தூரந் – தாமருளை

நாடி முயல்கை நடுத்தோன் றிடுமாகில்

வாடிவிட மாட்டார் மருண்டு.

(105)

எந்தத் துயரினத்து மீனரிடம் போயிரக்கு

மந்தத் துயரே யதிகோரஞ் – சந்தக்

கவியினையு மிக்கிழந்து காஞ்சனத்தைப் போற்றி

யவிவுறுவார் கூட்டமிக லால்.

(106)

நல்லார் மிடிப்படவு நாயனையா ரின்புறவும்

வல்லான்செய் கின்ற வழக்கெண்ணி – யெல்லாரு

மொன்றுபோற் றீமை யுஞற்றாரீ துண்மையென்கை

யென்றுமுல கிற்றுலங்கு மே.

(107)

பார்ப்பா ரிரப்போர் படைமன்னர் தண்டிப்போர்

கூர்ப்பார் மதிவணிகர் கொண்டுவிற்போ – ரேர்ப்பாலர்

தாமே மழைவகுத்தோன் றண்ணருளாற் சந்ததமும்

பூமே லுணவுவிளைப் போர்.

(108)

இன்ன செயலரிதா மென்றிசைத்தற் கெட்டாத

முன்னவன்றன் மெய்யருளை முன்னுவார்க் – கின்னல்

பலவுண்டா மானாலும் பார்த்திருக்கும் போதே

யலகின் றியநலமுண் டாம்.

(109)

வாதவூ ரானை வழுதிவையை யாற்றினிடை

மோதலுறு நாளின் மூதுலகோ – ரேதம்

பகர்ந்திகழ்ந்து மன்னவனுட் பத்திகெட வில்லை

நிகழ்ந்ததுமே லுள்ள நிசம்.

(110)

பத்தி புரிந்துய்ந்தோர் பாருலகிற் பற்பலருண்

டத்திருக்கூட் டத்துளெவ ரானாலு – மெய்த்திறல்சேர்

நாவிற் கரசனென நைந்திலர்பின் னாளிலுமோர்

மாவிற் றிகழ்ந்தான் வரன்.

(111)

சண்பை நகரித் தமிழ்விரகன் போற்றவத்தின்

பண்பறியு முன்னே பரன்வந்து – விண்புரப்பார்

தங்களுக்கு மெய்தாத் தனியாண்மை நல்கலுற்றா

ரெங்க ளுலகத் திலை.

(112)

தானே பரமன் றடுத்தாண்ட சுந்தரனு

மானோருண் கண்ணார் மயக்கத்தா – லேனேனென்

றெல்லவருங் கேட்பவிழி யின்றியலைந் தானென்றா

லல்லலுறா துய்குநரிங் கார்.

(113)

தண்ணார் குருகைச் சடகோபன் றாமரைப்பூங்

கண்ணா னருட்பெருக்கங் கண்டாற்போன் – மண்ணாட்டின்

மற்று மவனை வணங்கினருங் கண்டாரென்

றெற்றுநரும் பற்பலருண் டே.

(114)

பூங்கமலக் கண்ணனன்பர் போற்றும் புகழ்முனிவ

னாங்கவரைக் காப்பதெண்ணி யையகோ – வேங்கடத்திற்

பொல்லாக் கவுமாரர் போர்விளையு மாறுசெய்தா

னெல்லாருஞ் சொல்வ திது.

(115)

சைவ முதலாகச் சாற்றுகின்ற சட்சமயத்

தைவகையு மொன்றாயு மஞ்சாமன் – மெய்வலியால்

வீர வயிணவன்றான் மேதினியில் வாழ்கின்றா

னியாரறியா ரிந்த விசை.

(116)

கன்றை யெடுத்துக் கனிமீ தெறிந்தொருக்காற்

குன்றைக் குடைப்பிடித்த கோமான்றொண் - டொன்றை

யிரண்டாக்கு மேழ்மையோ ரிங்குமங்கு மன்னோன்

சரண்டா னளந்ததெண்ணா தார்.

(117)

மங்கலநூல் பூட்டு மனையிடத்தும் வாழ்விழந்திட்

டங்கதனைக் கொய்யு மகத்திடத்து – மங்க

ணுலகத்தார் போற்றொருவ னுண்டே யவன்றான்

மலரிற்போ மேலோர் மனம்.

(118)

மாறு படாத மறைநூல் வகுத்தநெறி

யாறு மொருகுரவ னானனமாத் – தேறுநரை

யாவர் பகைப்பா ரெவரை யவரிகழ்வார்

பூவலயத் தன்னோர் பொது.

(119)

கண்ணறியத் தோன்றுங் கதிரே கடவுளென்னு

மெண்ண மிலாதா ரெவரேனு – மண்ணதனிற்

சின்னாள் விளக்கமுற்றுத் தீயரெனும் பேர்பொறுத்திட்

டொன்னாரான் மாய்வா ரொருங்கு.

(120)

மாயையருட் சத்தியென வல்லோர் வகுக்குமொரு

தாயை யிகழுஞ் சழக்கர்தாந் – தீயை

யறலைத் தணந்திட் டடிசி லமைக்குந்

திறல்விழைவார் போலுஞ் சிலர்.

(121)

அன்னமென்பான் றன்பா லமுதென்பான் வாதமிட்டுப்

பின்னவிதம் பேசுமொரு பெற்றியொப்பா – மின்னதுதா

னென்றெய்வ மென்பாற் கிதுதெய்வ மாமதுதே

வன்றென் றுரைப்பா னகம்.

(122)

யான்றெய்வ மாமென் றியம்பி யிறுமாப்போன்

றான்றெய்வ மென்றிடலுந் தன்மமே – வான்றெய்வ

முண்டென் பவர்க்குறவா யூறொழித்தின் றென்பவரைக்

கண்டெங்கும் வெல்லல் கடன்.

(123)

குழவி யுருவாய்க் குவலயத்தில் வந்த

பழமை யறியாத பலருந் – தழலிற்

கொடிதாய்ப் புனலிற் குளிர்ந்ததெய்வந் தாமென்

றிடியேறொத் தார்ப்ப திழிவு.

(124)

எத்தேயத் தெச்சமயத் தியாவரருள் பெற்றாலு

மெய்த்தே வருட்செயலின் வேறல்லப் – பொய்த்தேவொன்

றிங்குவகுத் தாலு மிருக்கைக் கிடமில்லை

யெங்கு நிறைந்தது வே.

(125)

ஏயநெடு நாட்சென்றி யாதேனு மோர்சமய

மாய வுலகினிடை வந்தாலுந் – தூயமறை

சொல்லுநெறி யாறின் றொடர்பா முடியுமன்றி

யொல்லும் வகையில்லைமற் றொன்று.

(126)

சங்கரப்பேர் மாமுனிவன் சட்சமயத் தோர்களுந்தம்

புங்கவனென் றேத்தப் பொதுவானா – னங்கதுகண்

டுள்ளாருங் கேட்டவரு மொன்றையொப்பி மற்றவற்றை

யெள்ளாண்மை யுற்றவித மென்.

(127)

சக்கரைவட் டன்ன சமயங்க ளாறிலொன்றை

மிக்கதெனப் பற்பலர்சொன் மேதினியி – லொக்கநல

மென்றேத்து வார்க்கிகழ்ச்சி யெய்தா திராதெனினும்

வென்றேதந் தீர்தரலா மே.

(128)

ஆறு நெறியுமெய்மை யாமெனலு மன்றெனலுங்

கூறும்வித மேழாய்க் குலாவுமே – வேறுவழி

காட்டுவா னுண்டாயிற் காசினியோர் வாரமெனக்

கூட்டு தினமுமெட்டா கும்.

(129)

மாதமுதல் வெவ்வேறா வைத்துக்கொண் டார்சிலரு

மாதவனாட் டொட்டெழுநா ளாகவே – யோதலிடை

மாறுபட்டா ரில்லையிது மண்ணுலகும் விண்ணுலகுங்

கூறுமிறை காட்டுங் குறி.

(130)

வாயா லருந்தன் மகளிர் மகப்பெறுத

னோயாதி யாலிறத்த னூலினத்தின் – றாயாங்

குரவற் பழிச்சலன்ன கொள்கைகளி லொத்தா

ரரவத்துந் தீயமதத் தார்.

(131)

ஆண்டான் வகுக்கு மவையவத்து ளோர்சிறிது

வேண்டாமென் றெள்ளும் வெறுஞ்சமயம் – பூண்டாரும்

வாழுலகி லெந்த வகைநிறுவக் கூடாதோ

வாழு மறிவுள்ள வர்.

(132)

பல்கோடி யாமுலகும் பன்னூலும் பல்லுயிரு

நல்கோகை யாதியவர் நற்குணமுங் – கொல்கோர

மில்லாத மாதவமு மியாவ ரெடுத்தோது

மெல்லாமு மீசனரு ளே.

(133)

முற்றிற்று.

 

(மனச்சாட்சி)

எத்தனையோ நூல்க ளிருக்கவரு ளாட்சியென்னு

மித்தகைய நூலிசைத்த தென்றனது – சித்தமிசை

வள்ளுவன்போல் வந்து மறுபிறப்பெய் தாதெனுஞ்சொல்

விள்ளுநலந் தோய்ந்ததெய்வ மே.

குருபாதமே கதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக