வெள்ளி, 25 செப்டம்பர், 2026

திருவெண்பா

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருவெண்பா

காப்பு

(நேரிசை வெண்பா)

1.         திருவெண்பா வென்றொருநூல் செப்பி மகிழக்

குருவென் றறிவறிந்தோர் கூறு – முருவென்ற

னெஞ்சகத்தி னின்று நிறையுணர்வு நல்காதோ

வஞ்சலெனச் சொல்லி யது.

நூல்

தெய்வ நலம்

2.         தெய்வம் பழமை திருவருட்சீர் சித்துருவ

மெய்வலிமை யானந்தம் வீட்டுமுதல் – செய்வதெல்லாந்

தானாகிச் சாட்சியாய்ச் சத்தாகிச் சாற்றரிய

வானாகி நின்ற மயம்.

(1)

3.         எந்தவா றெண்ணி யெவர்பணிந்தா ரன்னவருக்

கந்தவா றாகி யவிருமே – சந்ததமும்

பல்லோர் வழக்காடப் பார்த்திருந்தும் பாராதா

யெல்லோர்க்கு மேலா மிறை.

(2)

4.         பரிதி மதியுடுக்கார் பஞ்சவகைப் பூதந்

திரிதலொடு நிற்கைகொண்ட சீவ – ருரியவெல்லாஞ்

சிட்டித் தளித்தழிக்குந் தெய்வமொன்று சிற்றறிஞர்

மட்டிற் பலவா வது.

(3)

5.         தாயாகித் தந்தையாய்ச் சற்குருவு மானதெய்வ

மாயா மனத்தை மயக்குவதுந் – தேயாத

மெஞ்ஞானந் தந்து வெளிப்படுத்தி யாள்வதுவு

மஞ்ஞானத் தோரறிவ தா.

(4)

6.         நம்புமவர் குற்ற நலமாகக் கண்டருளி

வெம்புதுயர் முற்றும் விலக்குமே – யம்புவியோ

ருண்டென் றிலையென் றுரையாட வுள்ளுவகை

கொண்டெங்கு நின்றதொரு கோ.

(5)

7.         நல்லார் வயிற்றி னரராப் பிறந்திடினும்

வல்லார்க் கருட்சீர் வழங்குமே – யெல்லார்க்கு

முண்ணவூ ணூட்டி யுறங்கவு றக்காட்டு

மண்ணலென வாழு மது.

(6)

8.         தேர்வேந்தர் தங்கோற்றி றல்காணுந் தெய்வமென்னு

மோர்வேந் தழியா துறுவதாற் – சீர்வேய்ந்த

நல்லுடலு மூற்றுடலு நானிலத்தோர் தாங்குவர்முற்

புல்லும் வினைத்திறமை போல்.

(7)

9.         கொன்றாரைக்  கொன்று கொடாதாரை யேற்கவிட்டுத்

தின்றாரைத் தின்னச் செயுந்தெய்வ – நன்றாய்

நீதி யுடைத்தென்றே நினைக்கு நிரம்பியநூ

லோதி யுணர்ந்துய்ந்தோ ருளம்.

(8)

10.       அண்டபிண்ட மாதி யனைத்து மரைநொடியிற்

றொண்டர் மொழியாலுந் தொலைக்குமே – கொண்ட

லரசன்கைக் கோலி னளவிதென்று செல்லா

முரசடித்துப் பெய்யவைத்த முன்.

(9)

11.       வேதங்கள் பற்பலவும் வீடுடைய மேலோரும்

போதங் கடந்தபரி பூரணத்தைப் – பாதமிரண்

டுள்ளகுரு வென்றே யுரைப்பதுணர்ந் தோர்க்கே

கள்ள மறுஞானக் கனி.

(10)

முற்றிற்று.

 

இல்லறவியல்

1.         இற்புகழ்ச்சி

12.       உலகந் தழைவதற்கு மொன்ற னருட்சீ

ரிலகுதற்குஞ் செங்கோ லிறைக்குங் – கலகச்

சமையங்கள் வாழ்வதற்குஞ் சாத்திரங்க ளுக்கு

மமையுந் துணையில் லறம்.

(1)

13.       நல்லாருந் தீயாரு நன்குணர்ந்து நன்றியற்றும்

வல்லாரும் வெற்றிவேன் மன்னருமற் – றெல்லாரு

மில்லறத்துச் சேயினமே யாவுமா மொன்றடியா

ரல்லலறத் தோன்றலுமொத் தாம்.

(2)

14.       சுடரொளியும் பல்புனலுந் தொண்டர்களுந் துய்ப்பும்

படருயிருங் காலும் படியு – மிடனகன்ற

மோடுந் திகழநின்ற மூதுலகு மில்லறமென்

வீடுஞ் சமமாகு மே.

(3)

15.       இல்லறத்திற் றோன்றிமுத்தி யெய்தினரு மெய்தநண்ணிச்

செல்ல மனத்தைத் திருத்துநரு -மெல்லமெல்லச்

செல்வோருஞ் சென்றுதவஞ் செய்வோருஞ் செப்புநருஞ்

சொல்வோருக் காமோ தொகை.

(4)

16.       மாற்றுக் கடங்கரிய வன்பசியால் வாசறொறுஞ்

சோற்றுக் கலைந்துமனஞ் சோராம -லேற்று

வருவார்க்கும் பிச்சையிட்டு வாங்காமற் பட்டுண்

டருவான வர்களுமுண் டாம்.

(5)

17.       வேண்டார்க்கும் வேண்டுநர்க்கும் விடளிக்கத் தக்கவண்மைத்

தூண்டா விளக்கிற் றுலங்குஞ்சே – யாண்டா

னருளப் பெறுவோ ரறம்வே றொன்றன்றா

லிருளுற்ற தல்ல விலம்.

(6)

18.       உலகைத் துறந்தவர்போ லூர்காண நின்றுங்

கலதகத்து ணைவிழியார் காத – லிலகையான்

மாலையிட்டோர் கோடி மகிதலத்துண் டாதலினால்

வேலையினு மில்லறமே மேல்.

(7)

19.       முற்றத் துறந்த முனிவோருந் தெய்வமெனப்

பெற்றதொன்மை யில்லறத்தார் பேராக்க – மற்றவரா

லெள்ளப் படாமுன் னிருந்ததென்றோர்ந் தேத்தலுறுங்

கொள்ளப்ப டாததென்றே கோள்.

(8)

20.       நன்மகவை யீனு நரனுக்கும் வீடென்றே

புன்மதத்தோர் தாமும் புகல்வரால் – வன்மதமா

மில்லறத்தைத் தீதென் றிகழ்வ தெளிதல்லச்

சொல்லறத்தின் முந்தலுற்ற து.

(9)

21.       நானிலச் சீரத்தனையு நன்கமைத்துக் கொண்டொருவன்

மானிடத்தைச் செய்தவன்றே வந்தவற – மானியிலா

வில்லறமே மிக்கீண் டிலங்குவது மவ்வறமே

நல்லறத்தின் மெத்த நலம்.

(10)

முற்றிற்று.

 

2. நற்கொள்கை

22.       ஈன்றதாய் கல்விநல மெய்தப் பயிற்றுதந்தை

யான்ற குருவ னறிதெய்வ – மேன்றமட்டு

மீவிரக்க நல்லோ ரிணக்கமிவை யேழு

மாவியென்கை நற்குணமே யாம்.

(1)

23.       முன்னோர்க் கவர்தோளா முன்னின்று தந்தோளாப்

பின்னோர் தமைத்தாங்கிப் பெற்றோருட் – டுன்னோகை

கண்டுலகு மூருங் கழறத் திகழுநல

முண்டு குடிப்பிறந் தோர்க்கு.

(2)

24.       குலத்துக் குரவனையூர்க் கொற்றவனைக் கல்வி

நலத்துக் கினியவனை நாரி – வலத்திருக்கத்

தத்தஞ்செய் தோனைத் தவத்தோனைப் பாவலனை

நித்தம் புகழ்வதுநன் னீர்.

(3)

25.       சொன்னங் கொடுப்பதினுந் தோகைநல்லா ளீவதினு

மன்னங் கொடுப்ப ததிகமென்று – தன்னகத்தில்

வந்திரப் போர்க்கேனும் வழங்கத் துணிந்துநிற்கும்

புந்தியுற்றா லெய்தும் புகழ்.

(4)

26.       ஈகை நலந்தேர்ந் திரக்கத்தோ டீயாமற்

சாகையற்ற பேர்நிமித்தந் தந்தேனு – மோகைமொழி

கேட்டுக் களிக்குமவன் கீழ்க்குலத்தோ னானாலு

மேட்டுக் குலத்தினனா மே.

(5)

27.       புகழ்விழையா மாந்தருக்குப் பொற்பணந்தே வாமா

லிகழ்வதனுக் கஞ்சா ரெனக்கண் – டகமகிழ்ந்து

நல்லோ னெனும்பெயரே நாடி நடக்குமவ

னில்லோர் பெருங்கூட்டத் தேறு.

(6)

28.       தன்றந்தை செய்தவத்தைத் தாரணியும் போற்றும்வண்ண

நன்றன்றிச் செய்யா நரனொருவன் – கொன்றன்றி

வாழாக் குலத்தின் மகவாகான் வந்தாலுந்

தாழா நெறிசுமப்பான் றான்.

(7)

29.       உலகோ ரிகழ்குலத்தி லுண்டா மொருவ

னிலகோர் நலஞ்செய் திருந்தா – லலகைநிகர்

தீயா ரிகழ்ந்தகல்வார் செந்நெறிகண் டந்நெறியின்

மேயா ருறவுகொள்வார் மெய்.

(8)

30.       தங்குலத்தோர் தந்நிமித்தஞ் சாராமற் றன்னறிவாற்

பொங்குபஞ்ச பாதகமும் போக்கலா – மிங்குபல

நூறேடி யாய்ந்துமன நோவதினு நுண்ணியர்செல்

லாறேசென் றுய்ந்துகொள்ள லாம்.

(9)

31.       நல்ல குணங்கல்வி நாடனைத்துஞ் செய்தளிக்கும்

வல்ல பொருணாட்டம் வாய்மையே – சொல்லலுயிர்

கொல்லாமை கொன்றதனைக் கொள்ளாமை கொண்டிருக்கு

மில்லாரைத் தீயரென்போ ரியார்.

(10)

முற்றிற்று.

 

3. உயர்குடித் தோற்றம்

32.       உயர்ந்த குடிக்கழகா மொன்றினரைக் காத்த

லயர்ந்த மனத்துக் கழகாஞ் – செயங்கொடுக்குந்

தெய்வத்தை நாடித் திகழ்வதுநற் சேய்க்கழகு

மெய்வர்த்தனை செயலா மே.

(1)

33.       மேற்குடிதன் கைதாழ்ந்து மெத்த மெலிந்தாலு

நாற்குடியு நம்பி நடக்குமே – பாற்குடத்தை

முற்றும் வறுமைவந்து முட்டிடினுஞ் சிற்றெறும்பு

சுற்றும் பலகோடி சூழ்ந்து.

(2)

34.       பொன்னா லுயரிற் புகழென்பார் புண்ணியச்சீர்

தன்னா லுயர்கை தவமென்பார் – நன்னாக்க

ளீகை யிரக்க மியைந்தக்கா லுண்மையென்னு

மாகைக் கறிவுதுணை யாம்.

(3)

35.       பொருளளவின் மேலாப் பொறையிற் கொடையி

லருளிற் குலத்தி லறிவிற் – றெருளிற்

சிறியவர்க ளானாலுஞ் சேவிப்பா ருண்டா

லறியுமுயர் வத்தனையு மாம்.

(4)

36.       ஒருவர்க் கொருவ ருயர்குடி யென்றோதி

லருவருப்புற் றங்கி கரியாராற் – சருவசன

சம்மதமா நற்குடியுஞ் சாற்றரிதாற் றன்மமுற்றா

லெம்மதத்தோர் தங்குடியு மே.

(5)

37.       நற்குடியிற் சேயா நலமும் பெறலரிதாற்

பொற்குடியு மாதல் புதுமையே – யிற்குடிக

ளெல்லா முயர்குடியே யீனவல்ல சேயீன்றா

லல்லாம லெய்வதரி தாம்.

(6)

38.       வானனைய மேற்குலத்தில் வந்தோர்கு வண்சுவைத்தீந்

தேனனைய சொல்லே சிறப்பாகு – மானனைய

கண்ணாரு மஞ்சுங் கடுஞ்சொல்லோ ரானாலு

மெண்ணா ருலகத் தினர்.

(7)

39.       விரும்புந் தவப்பயனா மேற்பாற் குலத்தில்

வரும்புனிதர் தம்பகையு மாண்பே – யிரும்பனைய

வுள்ளத்துக் கீழோ ருறவுமுணர் வுடையா

ரெள்ளற்குத் தக்க விழிவே.

(8)

40.       மாடை மலைச்சாரல் வாயசமும் பொன்னுருவிற்

சாடை தருமென்கை சகசமாற் – கோடைமயி

லென்னத் தளரு மெளியோ ருயர்குடியிற்

றுன்னலுறிற் கொள்வார்நற் சொல்.

(9)

41.       உலகமுற்றும் வாழுநல முன்ன லுணர்வாற்

கலகமற்ற நன்னெறியைக் காணல் – விலகரிய

நட்பிற் பிழைபொறுத்த னாகரிக மிந்நான்கும்

பெட்பி லுயர்வார் பெறல்.

(10)

முற்றிற்று.

 

4. மனைமாட்சி

42.       கொண்கன் மொழியே குறியென்று ணர்ந்தியற்றும்

பெண்க ளரிதிற் பிறக்கையால் – வெண்கருத்தோ

ரில்லறத்தைப் பொல்லாதென் றேற்றருந்த வீடுதொறுஞ்

செல்லறத்திற் சேர்ந்தார் சிலர்.

(1)

43.       செத்தார் பிழைப்பதற்குஞ் செய்யவல்ல சித்துடைய

வித்தாரத் தோரும் வெருள்வாரே – முத்தாரந்

தாங்கு முலையாரிற் றங்கொழுநன் றெய்வமென்னும்

பாங்கு பெறுமவர்தம் பால்.

(2)

44.       மானார்தங் கற்பெனுந்தீ வையகத்துச் செந்தீக்கு

மானாத மாதவமா மங்கிக்குந் – தேனாய

முத்தமிழோர் கோப மொழிக்கனற்கு மேலாமென்

றெத்தகையோர் தாமுரையா ரே.

(3)

45.       கற்புடையார் தம்மெழிலைக் கண்டவுடன் காமுகர்க்கு

மற்பமதி நீங்கி யறிவுண்டாம் – விற்பனர்க்குஞ்

செந்தீயிற் பூளையெனத் தீயும் விதியடுத்தாற்

றந்தீரு மால்விளையுந் தான்.

(4)

46.       தன்னிலையாட் கொண்ட தலைவனுக்கத் தன்மையே

நன்னிலைமை யத்தனையு நல்குமே – பன்னிலைமைப்

பெண்கொண் டலைவோன் பெருந்தகையோ னானாலு

மெண்கொண்டு தானே யிறும்.

(5)

47.       பல்வேந்தர் போற்றப் படிமுழுதும் பார்த்தளிக்கு

நல்வேந்தன் வாழ்வி னவில்கின்ற – சொல்வேண்டி

யெய்த லருந்திமகி ழின்முகத்தா டன்னைமணஞ்

செய்துடையான் வாழ்வே திறம்.

(6)

48.       மான மெழிலாக்கம் வாய்மை வருந்தாமை

யேன மனையா ரிணக்கமின்மை – யானருளுங்

கன்றனையார் சேர்க்கை கலங்காத கற்பறிவு

நன்றடைவாற் சேர்வா ணலம்.

(7)

49.       கற்றாத நெஞ்சுடைய காதலியைச் சேரொருவன்

கொள்ளாத செல்வங் குவலயத்துந் – தள்ளாம

லெந்தச் சமையத் திருப்போருங் கொண்டாடு

மந்தத் தலத்துமில்லை யாம்.

(8)

50.       ஈன ரிவரென் றிகழப் படுஞ்சிலரு

மான முடைய மனைவியான் – ஞானமுற்று

வீடடைந்து மெய்ப்புகழா மேனிகொண்டு சாகாம

னாடடைந்தா ரென்பார் நரர்.

(9)

51.       கைதவமும் பொய்யுங் களவுங் கொலையுமின்றிச்

செய்தவத்தி லூறுவந்தாற் றேறலா – மைதவழ்வெற்

பன்ன முலையா ரருங்கற்பிற் சோர்வுவந்தா

லென்னபட்டுந் தேறவொண்ணா தே.

(10)

முற்றிற்று.

 

5. மக்கட்பேறு

52.       இன்பத்த வாநெகிழ்மு னேனக் குருளையென்

வன்பற்ற பன்மகப்பே றாவதினுந் – தன்ப

லசையுமட்டு நோன்புற் றரிமாப் போலோர்சே

யிசையப் பெறுவது நன்றே.

(1)

53.       கற்றோர் மொழிகேட்டுக் காதலற்ற மெஞ்ஞான

முற்றோர்தம் பொற்றா ளுறப்பணிந்து – மற்றோரு

மந்தோவென் றேங்க வருநோன்புற் றீன்றெடுக்க

வந்தோனே நல்ல மகன்.

(2)

54.       பல்லோர்க் குதவிசெய்வோர் பாராள்வோர் பற்றறுப்போர்

வல்லோ னெனுந்திருப்பேர் வாங்குவோர் – பொல்லோரை

வென்றுலகி னன்றே விளைப்போர் முதலோர்தா

நன்றுடையா ரீன்ற நரர்.

(3)

55.       பல்குடியாம் பல்சேய் பயப்போரிற் பாடுடைத்தா

மெல்குலவு மட்டு மிலங்கும்பேர் – புல்குதலை

மைந்தனொன்று பெற்றுடைய மானிடர்மே லாவரென்ப

தந்தகர்க்குத் தோன்றா தது.

(4)

56.       செங்கோ னிலைநிறுத்தித் தீயகோற் சீரழித்துப்

பொங்கோ தமன்ன புகழ்கொண்டு – நங்கோ

னொருவனே யாமென் றுலகுணரச் செய்யுந்

திருவுருவும் பெற்றோர் சிசு.

(5)

57.       பெண்மகவு மாண்மகவும் பெற்றுக் களிகூரா

தெண்மருவு நெஞ்சகத்தா னில்லறமுந் – திண்மைபெறு

மேவார் பணிய விளங்குசித்தும் வீடுமின்றிச்

சாவார் துறவுஞ் சரி.

(6)

58.       பொல்லார் வயிற்றகத்தும் புண்ணியத்தோர் தோன்றலுண்டா

லில்லா மலடரினு மேற்றமே – வல்லா

ரிகழத் தகுமகவொன் றீன்றோன தன்சேய்

புகழத் தகுநிலைக்கும் போம்.

(7)

59.       நலத்தோர் மகவுதித்து நன்றியற்றி லந்தக்

குலத்தோ ரனைவருக்குங் கொற்றஞ் – சொலத்தாங்கு

மல்லா தனசெய்தா லன்னைபிதா வாதியரா

மெல்லார்க்கு மெள்ளலுண்டா மே.

(8)

60.       மென்குதலைச் சேயின் வினைத்திறத்தை யாராலு

நன்குணரக் கூடாத ஞாயத்தால் – வன்குணத்துத்

தீயோருங் கொள்வார் தெவிட்டாக் கனியிதென்று

வாயோ ரனைவருஞ்சொல் வார்.

(9)

61.       தற்சீவ சாட்சியதே தஞ்சமெனச் சார்ந்தோரு

நற்சீடர் வேண்டுமென நாடலா – லிற்சீரிற்

றள்ளை மகவாகார் தாரணியி லில்லையாற்

பிள்ளையென்கை யெள்ளப் பெறா.

(10)

முற்றிற்று.

 

6. நட்பு

62.       நட்பின்றி வாழு நரனை நவிலுங்காற்

பெட்பின்றித் தோன்றும் பிணம்போல்வான் – கட்பறவை

யென்னத் தமரோ டிருந்துண் டளிகூரு

நன்னயத்தோன் கண்டு நகும்.

(1)

63.       இன்முகத்தா னன்மொழியா னீகையா னேற்றத்தான்

வன்முகத்தார் தம்மை மருவாதான் – றன்முதல்போன்

மற்றோர் பொருளையெண்ணும் வண்மையா னென்றுரைக்கப்

பெற்றோனை நட்பாப் பெறல்.

(2)

64.       சக்களவன் றன்னுறவுந் தான்வாழப் பார்த்திருக்கு

மக்களுற வுங்கொடுங்கோன் மன்னுறவு – மிக்கபுகழ்

வேண்டா ருறவும் விரும்பா ருறவிருந்தா

லாண்டானுக் காளாக லாம்.

(3)

65.       நன்றுணர்வார் தம்முறவு நாற்றிசையும் போற்றிசைக்கு

மொன்றுதுணை யென்றிருப்போ ருள்ளுறவுங் -கொன்றுதின்னா

மாண்போங்கச் செய்யும் வயவேந்தர் தம்முறவும்

வீண்போகா தென்கை விதி.

(4)

66.       நட்டார் மனத்துயர நந்துயரே யென்றகற்றி

விட்டார் மனுக்குலத்தின் மேலாவார் – கெட்டாரென்

றோராமற் பேசி யுறவு மறந்துமுகம்

பாரா திருப்போர் பதர்.

(5)

67.       சேர்ந்தார் பொருளைச் சிலவுசெய்து தம்பொருளை

யோர்ந்தார்க்கு நல்கா துறக்காத்துச் – சார்ந்தார்

கயவனெனுஞ் சொல்லுமுறாக் காதி னனாவாழ்வோ

னயவசனம் பேசி நகும்.

(6)

68.       இட்டம் பெரிதென் றிருப்போற் கிடர்வருங்கா

னட்டவர் முன்னின்று நலஞ்செய்வார் – கட்டமுற்றுப்

பொன்றேடி வம்பிற் புதைத்திருப்போற் கப்பொருளே

தன்றேக நாசந் தரும்.

(7)

69.       கற்றோ ருறவாற் கவலைபோங் காதலறப்

பெற்றோ ருறவாற் பிறவிபோ – மற்றோளார்

தம்முறவாற் சத்துருப்போந் தையனல்லா டன்னுறவாற்

பொய்ம்முயக்கத் தோர்விருப்பம் போம்.

(8)

70.       நன்முயற்சி யோங்க நவின்று நவைசார்ந்த

புன்முயற்சி யத்தனையும் போக்குவித்துத் – தன்முயற்சி

கூடப் புரிந்து குணம்போ னடந்துசற்று

மூடத் தகாத துறவு.

(9)

71.       ஒவ்வொன்றா லொவ்வொருவ ரொவ்வொருசீ ருற்றிடலைச்

செவ்வொன்ற நாடித் தெரியுங்கா – லிவ்வொன்றே

மேலாமென் றோத விளங்குவது நட்பென்று

நூலாய்ந்தி லாருணர்வா ரோ.

(10)

முற்றிற்று.

 

7. ஈகை

72.       பன்னூல் விரித்துரைக்கும் பாவலர்க்கும் பாருலகுந்

தொன்னூலென் றோதுஞ் சுருதிக்கு – நன்னூ

லுழைந்தோர்க்கு மெச்சமையத் துள்ளார்க்கு மீகை

விழைந்தோர்மீ தாசை மிகும்.

(1)

73.       தவிடளவு நல்கறியாச் சண்டாளன் றானும்

புவிபின்ரோ டீகைதனைப் போற்றுங் – கவிஞருட்

னீவோருஞ் சாகா திருப்பதனை யாரறியார்

சாவோர் கொடுக்கறியா தார்.

(2)

74.       ஈகை நலந்தேரா ரெத்தகையோ ரானாலுஞ்

சோகை யனைய தொடக்கர்தா – மாகையினா

லொவ்வாச் சமைய முளவெல்லா மொன்றுபோற்

செவ்வாகு மென்றிசைந்த தே.

(3)

75.       ஈவதே மெய்ப்புகழ்க்கு மின்பத்தி னுக்குமொப்ப

யாவர் மொழியு மெவற்றிற்குந் – தாவரமாம்

போக்கும் வரவும் பொருந்தாத முத்திக்குந்

தேக்குந் தமிழ்க்கடற்குஞ் சீர்.

(4)

76.       தெய்வ மெனுமொன்று சேண்முதலா மைப்பூதஞ்

செய்வதுவு மீகைச் சிறப்பன்றோ – வுய்வ

தறியாத மூடர்க் கதன்பெருமை தோன்றா

நெறியார்க்குத் தோன்று நிசம்.

(5)

77.       பெரும்பான்மை யுந்துறந்த பெற்றியோர் தாமு

மரும்பா வலிமைபெற் றுள்ளாருந் – தரும்பாழிச்

செங்கை மலரிலன்பு சேர்ப்பதுண்டாற் றேடிநல்கு

மங்கை யழகிலழ காம்.

(6)

78.       கேட்டுங் கொடாதிருக்குங் கீழ்க்கரமுங் கேட்டுநல்குந்

தாட்டுக் கரமுஞ் சரியானாற் – பாட்டுட்

சுவையறியாப் புன்கவிஞர் தோற்றத்திற் சொல்லாற்

சவைகுலுங்கும் வாணர் சரி.

(7)

79.       நன்மாற்க முத்திக்கா நாடனைத்தும் விட்டோர்க்குந்

துன்மாற்கப் பொய்மைத் துறவோர்க்குஞ் – சன்மாற்க

நல்லார்கைப் பிச்சையன்றி நற்றுணைவே றில்லையெனக்

கல்லாரு மொப்பக் கடன்.

(8)

80.       கொண்மூ மழைநீர் குறைவுபட்டாற் கூறடங்கா

விண்மூலந் தானும் வெதும்புமான் – மண்மூலத்

துள்ளார்க ளெவ்வண்ண முய்வாரென் றோர்ந்திருப்போர்

தள்ளார்க ளீகை தனை.

(9)

81.       பத்தருக்கு மாதவமே பண்ணும் பெரியோர்க்குந்

தத்தம் விருப்பநல்குந் தன்மையா – லித்தறையில்

வல்லோர் பலருமொரு வத்துவுண்டென் றோதலுற்றா

ரல்லோ வுணர்வா ரவர்.

(10)

முற்றிற்று.

 

8. ஊக்கமுடைமை

82.       ஆக்க முடைமை யருளுடைமை யன்னவற்று

ளூக்க முடைமை யுயர்வாகுந் – தாக்கவருந்

தானையைக் கண்டஞ்சாமற் றக்கவன்போ னின்றதட்டிற்

கோனையஞ்சிப் பார்க்கினும்பார்க் கும்.

(1)

83.       உள்ளக் கமலநடுவூக் கம்வைத்துப் பேணாதான்

வெள்ளப்பொன் பெற்றிடினும் வீணேபோ – மெள்ளனைத்தா

மூக்க முடையாற் குணவோ டுணவுவந்தாற்

போக்கரிதா நட்டும் புகழ்.

(2)

84.       வீரருக்கும் வேந்தருக்கும் வித்தகர்க்கும் விற்றுமுதற்

காரருக்குங் காமுகர்க்குங் கள்வருக்குந் – தீரமெனு

மூக்கமே தஞ்சமென்ப தோர்ந்ததனைப் பற்றிநிற்போர்க்

காக்கமொடு கீர்த்தியுமுண் டாம்.

(3)

85.       ஊக்க முடனிரப்போ னோட்டுணவை மற்றொருவன்

வாக்கதனாற் கேட்டால் வழங்குமே – சேக்கனகக்

குன்றுடையா னேனுமனக் கோழையென்றாற் கொள்ளுமட்டுந்

தின்றுமிரா னைவான் றினம்.

(4)

86.       கருப்பத் திருந்துமுற்றிக் காசினியிற் றோன்ற

வுருப்படுத்தி னானுதவு மூக்கம் – பொருப்பளவு

பெற்றோரே யெய்தரிய பேறுபெற நாடிநிற்பார்

மற்றோ ரிகழ்வார் மறுத்து.

(5)

87.       எய்தரிய மெய்ப்பே றிசைந்தாலு மூக்கமில்லார்

செய்த லறிந்துசெய்யார் சேர்ந்துள்ளார் – பொய்தவிர்சீர்

கைவருமுன் பெற்றியற்றுங் காரியங்க ணாடிமன

கைவரதற் கீதே நலம்.

(6)

88.       ஊக்க மிலரா வுணர்வுடையர் ராகிநிற்கு

மாக்களுக்கு மெய்ப்புகழ்ச்சி வாராதே – யாக்கமற்ற

புன்முகத்து மானார்பாற் பொற்புமுலை யுற்றாலும்

பன்முகத்து நாட்டம் படா.

(7)

89.       ஆனையி னூக்க மரியிடத்தி லஞ்சுமது

பூனையொக்குஞ் சிம்புள் புறப்பட்டாற் – சேனை

மனுவேண்டுஞ் சிற்றரசர் வன்கோல் சொலியுந்

தனுவேந்தற் கஞ்சிநிற்பார் தாம்.

(8)

90.       பெருங்காரி யம்விரும்பும் பெற்றி பெரியோன்

வருங்காதல் பற்றிநிற்கு மாட்சி – சுருங்காத

கோகனகச் செங்கைபெறுங் கொற்றமொக்கு மற்றெவைக்குஞ்

சோகமற்ற வூக்கந் துணை.

(9)

91.       வேளாண்மை வாணிபம்போர் மிக்குணர்தன் மெய்த்தவமாந்

தாளாண்மை யைந்துந் தருமூக்க – மீளா

நலத்தாற் றுறந்தவர்க்கு நால்வகையாத் தோன்றுங்

குலத்தார்க்கு நல்லபற்றுக் கோல்.

(10)

முற்றிற்று.

 

9. நன்றியறிதல்

92.       நன்றி யறிந்து நடப்போர்க்கே நன்றெய்து

மன்றி யொருவர்க் கமையாது – வென்றிமிகு

மன்னரே வாழ்வார் மனதறிந்த வஞ்சகத்தோ

ரென்னப்பட்டும் வாழ்வதில்லை யே.

(1)

93.       ஆனை கிளிபரத்தை யாய்புலவ ரற்றார்போல்

வானையொக்கு நன்றி மறவாரே – தேனைநிகர்

சொல்லாண் மணந்துயருந் தோற்றத்தா ராகியன்பி

னல்லாரென் றோங்கு நரர்.

(2)

94.       உபகாரஞ் செய்யு மொருவனுக்கு மற்றோ

னபகார நாடி லறிவே – விபகாரம்

பாராட்டிப் புண்படுத்தும் பாங்குணரும் பண்புடையார்

சீராட்டு முண்மைத் திரு.

(3)

95.       நெஞ்சகத்தி னன்றி நினைவிருக்க வாயளவில்

வஞ்சகமாப் பேசுதலு மாண்பன்றே – மிஞ்சறிவாற்

றாயென்று ளன்பு தழைத்திருக்கப் பொய்ச்சரசம்

பேயென்றும் பேசல் பிழை.

(4)

96.       கொன்றிரையா வூனருந்துங் கொள்கையோர் தம்மினத்து

நன்றி மறந்த நரர்பொல்லார் -பொன்றிடலிற்

பொல்லாது வெந்நோய் புணர்முலையிற் பொல்லாதே

பல்லார் விரும்பும் பணம்.

(5)

97.       கண்ணுஞ் செவியுங் கருத்துங் கொடுத்தநன்றி

யெண்ணு நலஞ்சிறிது மில்லார்பால் – விண்ணும்

வளியுங் கனலுமம்பு மண்ணும் படைத்தோ

னளியும் பொருந்தாதம் மா.

(6)

98.       வென்றி மிகுந்தொன்னூல் விரித்தவற்று ளெல்லாமு

நன்றி யறித னலமாகுங் -  குன்றினங்கள்

கொள்ளத் திகழுங் குலவளத்துட் குன்றாத

வெள்ளருவிச் சீருயர்வா மே.

(7)

99.       நன்றி யறியு நரனிடத்திற் சேராத

தென்றிலங்கு நன்மையெங்கு மில்லையே – மின்றிகழும்

வேலார் நெடுந்தோள் விறல்வேந்த னேவல்செய்தற்

கேலா ருலகத் திலை.

(8)

100.    பொய்யுணர்ச்சி யத்தனையும் போக்கிப் புகழ்வினைக்கு

மெய்யுணர்ச்சி கொண்டுநிற்கும் விற்பனரே – செய்யுநன்றி

கண்டு களித்துக் கவலைப்படா தொருவன்

றொண்டுபற்றித் தோய்வார் சுகம்.

(9)

101.    வென்றிபெறுஞ் சிங்கநிகர் மேன்மை யுடையாரே

நன்றியறி தன்மட்டி னாயாவார் – பன்றிநிகர்

தீயார் மறந்திகழ்ந்து செப்பரிய பாழ்நரகிற்

போயாழ்வ ரென்னும் புவி.

(10)

முற்றிற்று.

 

10. வாழ்க்கைச் சிறப்பு

102.    சுற்றத் தினர்க்குந் துயர்சேர் மிடியினர்க்கும்

பற்றற்ற வர்க்கும் பகிர்ந்துண்டு – கற்றவராற்

காரியா காரியங்கள் கண்டியற்றிக் காமுறுதல்

சீரியார் வாழ்க்கைச் சிறப்பு.

(1)

103.    இரக்க முடனீகை யீனத் தொழிலா

லரக்க ரனையாருக் கஞ்சல் – குரக்குறழு

மானாரைச் சற்று மருவாமை யிம்மூன்று

மானாத வாழ்விற் கணி.

(2)

104.    கற்றோ ருறவுங் கடவுளே தஞ்சமெனப்

பெற்றோர் மனக்களிப்பும் பேதமையான் – மற்றோர்தோள்

சேரா மனைத்தொடர்புந் தீமைசெய்யாப் புத்திரனுஞ்

சோராத வாழ்வின் றுணை.

(3)

105.    கள்ளுண்பார் தம்முறவுங் காமுகர்தம் பாழுறவுந்

தள்ளுண்ட புன்குலத்தோர் தம்முறவு – மெள்ளுண்

முளையளவு நல்கறியா மூடருறவும்

விளையவொட்டார் வாழ்வே மிகும்.

(4)

106.    மன்னவனுக் கஞ்சன் மனைவிக் கடங்காமை

தன்னவரை யப்புறத்திற் றள்ளாமை – யின்னல்

வரினுந் தளராமை வஞ்சமின்மை வாழ்விற்

பெரியனென்கை வேட்போன் பெறல்.

(5)

107.    கரும்பைத் தொடினுமது கைப்பாகுங் கையு

மிரும்பனைய நெஞ்சு மெளியோர் – வரும்போது

செந்நிறமாங் கண்ணுஞ் சிறியார் தொடர்புமுள்ளார்க்

கந்நியரே வாழ்வுள்ள வர்.

(6)

108.    தாழ்வு வரினுந் தயங்காமற் றாமருந்துங்

கூழ்பகிருந் தன்மையரே குன்றாத – வாழ்வடைவா

ரல்லாக் கயவ ரளவிறந்த பொன்பெறினு

மெல்லா மிழந்தழிவா ரே.

(7)

109.    வாரியுடைப் பார்முழுதாண் மன்னவனு மூனருந்தாச்

சீரிசைந்த கோத்திரத்துச் செல்வனுநற் – பாரியொடு

மக்க ளுடையானும் வண்டமிழ்நூற் பாவலனு

மிக்கதென்னு நல்வாழ் வினர்.

(8)

110.    பல்லண்ட முந்தனதாப் பத்திநிலை கொண்டுபெற்று

நல்லன்ப னென்றபுகழ் நாட்டிடுவ – தில்லறத்தோர்க்

காகாது கொல்லோ வறங்களெல்லாம் பெற்றதன்றோ

சாகாப் புகழ்தான் றவம்.

(9)

111.    வந்த விதிப்பயனால் வாழ்வு மிகப்பெற்றாலு

மந்தமட்டிற் கீர்த்தி யமைவரிதே – கொந்தளக

நல்லார்க் கெழின்மிகுதி நண்ணிடினுங் கற்பென்னும்

வல்லாண்மை தாங்கரிதா மாம்.

(10)

முற்றிற்று.

ஆக அதிகாரம் பத்துக்கும் வெண்பா நூறு.

இல்லறவியல் முற்றிற்று.

குருபாதமே கதி.

 

துறவறவியல்

1.         துறவாக்கம்

112.    உண்டென் றிலையென் றொருகோடி வாதமிட்டுந்

தொண்டென்று கூட்டமிட்டுந் தூமமிட்டும் – பண்டென்று

கூப்பிட்டும் பல்சமையங் கொண்டாடுந் தேவுமெல்லாஞ்

சாப்பிட்டு நின்ற தனி.

(1)

113.    பல்லுடுவி னாப்பண் பனிக்கதிரோன் போலுமே

யில்லுடையார் போன்று மிகல்வேந்த – னெல்லுதவும்

வெய்யோனைப் போல விளங்குமே மெய்யுணர்ந்து

பொய்யோட விட்டோன் புகழ்.

(2)

114.    தெய்வந் தனிமையென்று தேர்ந்து திரும்பாம

லுய்வதே நாடி யுருகுவோ – ரைவருக்கா

ளாகார் துறவே யவர்க்கழகென் றாரணங்க

ளேகாந்தத் தோதலுண்டு மே.

(3)

115.    விருகங்கள் போன்மனுவு மேயநாட் டோன்றிச்

சுருதிகளும் வார்த்தைகளுஞ் சொன்ன – குருவென்ற

முன்னோன் றனியனென்றான் மோசமில்லை வேறுரைத்தா

லென்னோ விளையு மிகல்.

(4)

116.    ஏக னொருவனே யாவருக்குந் தஞ்சமெனச்

சோக மொழிக்குந் துறவோரை – யாகரத்தாற்

பேராற் பிதற்றிப் பிணங்குஞ் சமையத்தோ

ராரா யினுமிகழா ராம்.

(5)

117.    உண்மைத் துறவோ ருலகத்துத் தெய்வமென்னும்

வண்மைக் கிசையா மனுவில்லைத் – திண்மைக்

கயம்போன்ற நெஞ்சினவர் காரணத்தார் தாமென்

றியம்பாத நூலு மிலை.

(6)

118.    எவ்விடமு மெம்பொருளு மியாருமுடை யானடியார்க்

கிவ்விடமு மிப்பொருளு மின்னாரும் - வௌவிடற்கா

மென்றுகொள்ள லாகாதென் றில்லறத்தை நீத்தவல்லோர்

கொன்றுகொள்ளா ரென்கைமுன்னூற் கோள்.

(7)

119.    மன்னவற்கு மஞ்சா மனவலியு மாதவமு

முன்னவனைச் சுட்டு மொழிப்பெருக்கு – மின்னலுறா

மெய்ப்பேறு நல்லுணர்வு மேவுந் துறவோர்க்கே

பொய்ப்பேறு வேண்டாப் புகழ்.

(8)

120.    பொன்னா மெனச்சுணங்கு பூத்தமுலைப் போர்புரியு

மின்னாரிற் கற்புடையார் மேலாகும் – பன்னாம

மொய்த்துடைய தேவே முதன்மையெனத் தேர்ந்தோரின்

மெய்த்துறவு பெற்றுடையார் மேல்.

(9)

121.    பாடு மிகுங்கல்விப் பயனாந் துறவுகொள்ளார்

வீடுதவு மெஞ்ஞான மேவிடினுஞ் – கோடுங்

கடியார் மதப்புனலுங் கண்சிவப்புங் காட்டாப்

பிடியார் புகர்ப்பொறிக்கொப் பே.

(10)

முற்றிற்று.

 

2. விரத்தியிலக்கணம்

122.    முன்னூழ்த் தொடர்பான் முதல்வனருட் சீராற்

றொன்னூ லுணர்ச்சியாற் றோன்றுமே – மன்னூகம்

பெற்றோர் துறந்து பெருந்தவஞ்செய் தானந்த

முற்றோரே யென்னு முரம்.

(1)

123.    பல்வாறு தோன்றிப் பழுத்த விரத்திபற்றிச்

செல்வார் துறவே திறமாகு – மல்வாய்ந்த

தோள்வேந்தன் மானமுதற் சொல்வனவாற் சென்றாலு

மீள்வோரல் லாதவரேன் மேல்.

(2)

124.    நாடகத்தில் வேண்டு நரனிற் கொடியானே

தேடறிய தாந்துறவிற் சென்றிழந்தோ – னாடப்

பணங்கொடுத்தா லன்னவனப் பாங்குறுவா னின்னோ

னிணங்கவிடத் தக்கதில்லை யே.

(3)

125.    சென்று திரும்புந் திருட்டுத் துறவியுட

லென்று நிலையென் றிருப்பானோ – குன்றுறழுங்

கொங்கைத் தினவாற் குலமிழக்குங் கோதையெழின்

மங்கையுண்டென் றெண்ணலுண்டு மா.

(4)

126.    மெய்த்துறவோ ரில்லறத்தின் மேவினரைச் சேயிலெண்ணிப்

பொய்த்துறவைப் பெற்றதையும் போக்கினரைக் – கைத்துமனப்

பித்துடைய பேயிலெண்ணிப் பிச்சையெடுத் துண்டுபர

வத்துடைய தாகியதா வார்.

(5)

127.    திரும்பாமை யெண்ணித் தெளியும் விரத்தி

யரும்பாந் துறவு மலராகும் – பெரும்பான்மை

வேண்டல்பிஞ் சாங்காயாம் விருப்பும் வெறுப்புமற

னீண்ட களிப்பே கனி.

(6)

128.    இல்லறத்தை விட்டொருவ னேற்றருந்து மோடுகொண்டா

னல்லறத்தோர் சற்று நகையாரே – வல்லறத்தை

விட்டொருவன் மெல்லறத்தின் மேவினாலி யாவருங்கை

கொட்டி நகைப்பார்முற் கோள்.

(7)

129.    மெய்த்தவத்தோர்க் கன்றி விரத்தி யுதியாது

பொய்த்தவத்தோர்க் குண்டாம் பொருளாசை – யத்தமிக

வேண்டுநரும் பெண்டுபிள்ளை விட்டொருதே யம்புகுத

லீண்டு பழவழக்கா மே.

(8)

130.    பொன்னை மடவாரைப் பூமியைப்பொய் யென்றுணரான்

றன்னை வெறுக்குந் தருமமா – முன்னைத்

துறவினடி யாம்விரத்தி தோய்வானோ தோய்ந்தா

லறவினைக்கா மாண்மைசெய்தி டான்.

(9)

131.    வேதங்கள் கோடி வெகுளிகொண்டு போர்புரியு

நீதங்கள் கொண்டு நிறைந்தவொன்றின் – பாதங்க

னன்றியெல்லாம் பொய்யென் றறிந்தோர் விரத்தியென்னு

மொன்றின் பயனே யுயர்வு.

(10)

முற்றிற்று.

 

3. திருவேடச் சிறப்பு

132.    கருவேலை நீந்தும்வண்ணங் காதலித்தோர்க் கெல்லாந்

திருவேடங் கொள்ளல் சிறப்பா – முருவேதஞ்

சேராமற் செய்வோன் றிருவருளா லன்றியது

வாராதென் றோதல் வழக்கு.

(1)

133.    பெரிய திருவேடம் பேணிக்கொள் ளாதா

னரிய துறவடையு மாக்க – மரிவுபட்ட

மூக்குஞ் செவியுமுள்ளான் முற்றிழையும் பொற்புமுள்ளாள்

பாக்குமுலை தோய்ந்த பரிசு.

(2)

134.    பொய்யன் றிருவேடம் பூண்டாலும் பூதலத்தோர்

மெய்ய னெனவே விழைதலால் – வையமய

லற்று மறான்போ லவிர்வானுக் கன்புகொண்டு

சற்று மதித்திறைஞ்சார் தாம்.

(3)

135.    முத்தி யடையு முனிவோர் திருவேடம்

பத்தியொடு மாதவமும் பாலிக்குஞ் – சித்திதரு

மாறு சுவையோ டமுதளிக்கு மானந்தப்

பேறுதவு மென்றே பெறல்.

(4)

136.    பேதாதி பேதம் பிறங்குஞ் சமையமெல்லா

மாதாவி னல்லான் மலர்ப்பதமே – மீதாமென்

றாயபொருண் மற்றனைத்து மற்றாருக் காவதென்றோர்

தூயதிரு வேடஞ் சொலல்.

(5)

137.    காலனிகர் கண்ணுடையாள் காளைமனங் கொள்வதற்குங்

கோல மிசைந்தாற் குணமாமான் – மூலபர

மானா னருட்பேற்றுக் காசைகொண் டோர்க்காதரவா

மேனாட் டிருவேட மே.

(6)

138.    திருவேட மாமவற்றுட் செங்காவித் தானை

பெருவேட மற்றனைத்தும் பேதங் – குருவேட

மாவதுதே வென்னா வழிசமையத் தாழ்ந்துழலுஞ்

வீவர்களு மொப்புவத தே.

(7)

139.    கொல்லாது நல்லுணவே கொள்வோர் திருவேடம்

பொல்லாத தென்றிகழப் போகாதே – யெல்லாரு

மொப்பா வொருசமையத் துள்ளபொரு ளானாலுந்

தப்பாமென் றெள்ளார் தவர்.

(8)

140.    ஒவ்வோர் சமைய முடைய திருவேடஞ்

செவ்வோ வெனக்கேட்கிற் றேர்ந்துள்ளார் – தெவ்வோர்க்குந்

தங்கடவு ளாமவனே தஞ்சமெனுஞ் சத்தியத்தோர்க்

கிங்கழகா மென்றுரைப்பா ரே.

(9)

141.    இல்லந் துறந்திரந்துண் டெம்பிரான் றன்புகழே

சொல்லன்பு கொண்டு தொழுமேலோர் – நல்ல

திருவேடம் பூண்டிருந்தாற் செம்பொன் மலரின்

மருவேய்ந் திருப்பதொப்பா மாம்.

(10)

முற்றிற்று.

 

4. பிச்சைப் பெருமை

142.    எல்லா மொருவனதே யென்றுணர்ந்து போற்றிசெய்யும்

வல்லார்க்கே யற்றருந்தன் மாட்சியா – மல்லாதார்

பொல்லா மிடிக்கனலாற் பொன்றலஞ்சி யேற்றிடினு

மில்லாமை யெண்ணிநைவா ரே.

(1)

143.    இச்சை யறுத்தாளு மெம்பிரா னன்பருக்குப்

பிச்சை யெடுத்துண்கை பெருமையே – கொச்சைமொழி

தோயாத பாவலர்க்குச் சொற்சுவைதேர்ந் துள்ளவர்பால்

வாயாரக் கேட்டல் வழக்கு,

(2)

144.    வீடுதொறுஞ் சென்றிரந்த வெண்சோற்றால் வெம்பசிநோ

யோடுவது கண்டு ளங்குளிர்ந்து – கூடுமுலைத்

தையலார் தம்மையெல்லாந் தாயாகக் காண்பவரே

மையலா னையாத வர்.

(3)

145.    ஏற்றருந்த வல்லா ரிறைவன் புதல்வரெனச்

சாற்ற லிகழத் தகாததே – போற்றரிய

வல்லாண்மை தோயுமவன் மற்றெவையுந் தானாகி

யல்லாது நின்றபொரு ளால்.

(4)

146.    மன்னவன்றன் கோனிலையும் வையகத்தோர் வாழியல்பு

மன்ன மிரந்துண்போ னறியலா – முன்னவர்சொல்

வாய்ந்த பலநூலில் வண்மையதும் புன்மையது

மாய்ந்த கவியறிய லாம்.

(5)

147.    இல்லந் துறந்து மிசைந்ததிரு வேடமிட்டு

நல்லன்ன மேற்றருந்த நாணுவோ – னெல்லவருங்

கட்கிசைந்தோ னென்னுங் கணவன்பாற் காமமட்டில்

வெட்கிநிற்கு மங்கையொப்பா மே.

(6)

148.    ஆகமுதன் மூன்று மருட்குரவற் கன்பினல்கிச்

சோகமெல்லா நீங்கத் துறந்தேற்போர் – பாகனைய

சொல்லார் களூடிற் றெழும்வேந்தர்க் கச்சமுற்று

நில்லார்முக் காலு நிசம்.

(7)

149.    ஈவோர் தமைப்போற்றா ரில்லையென்பார் தம்மையெள்ளார்

சாவோரைக் கண்டு தளர்வுறார் – பாவோதுஞ்

சீரியரை மற்றவரிற் சேரார் சிறிதுமஞ்சார்

பூரியரைத் தள்ளியிரப் போர்.

(8)

150.    இல்லறத்தா ரேற்கை யிழிவென்று மேதமற்ற

வல்லறத்தா ரேற்கை வழக்கென்று – நல்லறங்கள்

சொல்லும் பலவாஞ் சுருதியினுந் தோன்றல்கண்டு

புல்லுந் திரைநீர்ப் புவி.

(9)

151.    எத்தகையோர் தாமு மிறைவன்பா லேற்பவரா

லத்தகையைத் தீதென்றறை வாரியார் – மெய்த்தகைய

தாகுந் துறவுடையா னன்னமிரந் துண்டறிவிற்

போகுமுயர் வீட்டும் புகும்.

(10)

முற்றிற்று.

 

5. திருக்கூட்டம்

152.    அண்டங்கள் கோடி யமைத்த பெருமானைக்

கண்டன்பு செய்யுங் கடவுளாந் – தொண்டரிங்கு

வந்தாற் றிருக்கூட்ட மாமகிழ்ச்சி யாகுமன்றிச்

சிந்தா குலமாஞ்சி தறி.

(1)

153.    பெம்மா னருட்பெருக்கம் பெற்றதிருக் கூட்டத்திற்

சும்மா விருக்குஞ் சுகமுண்டாந் – தம்மா

லுலகங் களுண்டாச்சென் றோதுநர் கூட்டத்திற்

கலகம் விளைதல் கரி.

(2)

154.    கொல்லாத் திருக்கூட்டங் கூடிக் களிகூர்ந்தோ

ரல்லாதார் ஞான மடைவரிதே – யெல்லாருங்

கூடுஞ் சபையிலொரு கொண்கனைக்கைக் கொண்டாட்கே

நாடுஞ் சுரத நலம்.

(3)

155.    உண்மைத் திருக்கூட்ட முண்டாகி லோதரிய

வண்மை யுலகின் மலியுமே – தண்மையொடு

வன்மை யுடையார் மருட்கூட்ட முண்டாகிற்

புன்மைமிஞ்சுந் தன்மமஞ்சிப் போம்.

(4)

156.    செய்தற் கரிய செயலார் திருக்கூட்டத்

தெய்தப் பெறுந்துறவி யிங்குவரா – துய்தற்

கருதிக் கருதிக் கவலாமற் காண்பான்

சுருதி யுணராச் சுகம்.

(5)

157.    மெய்யடியா ராமவரே மேவுதிருக் கூட்டத்தாற்

பொய்யடியா ருக்கும் புகழுண்டாம் – வெய்ய

விடப்பாம்புக் கூட்டத்தால் வேறுள் ளனவுந்

திடப்பான்மை நீங்கச்செ யும்.

(6)

158.    சொல்விற் பனமுடைய தொண்டர் திருக்கூட்டத்தாற்

கல்விப் பயனதனைக் காணலாம் – பல்வினையும்

போக்கலா மானந்த போகப் பொதுவிளைவுண்

டாக்கலாம் வீடுபெற லாம்.

(7)

159.     பொய்ப்பொருளைப் போற்றும் புலைத்தொழிலோர் புன்னாவான்

மெய்ப்பொருளொன் றில்லையென்றால் வெல்லுமே – கைப்பொருளா

நல்வசனங் காத்து நவைதீ ரொழுக்கமுறுஞ்

செல்வர் திருக்கூட்டச் செயல்.

(8)

160.    ஆனைக் குழுவி லரியே றனையமன்னன்

சேனைக்கு மஞ்சாத் திறலோரே – வானை

யிறுகச் சமைத்த தெனவிளங்கு மேலோன்

றறுகு திருக்கூட்டத் தவர்.

(9)

161.    பொய்முத்தி வேண்டியுழல் புன்மையோர் காணரிய

மெய்முத்தி சேர்வோர் விருப்பெல்லாம் – வைமுற்றும்

வேலோரும் போற்ற விளங்கொருவற் சூழ்ந்துமகிழ்

மேலோர் திருக்கூட்ட மே.

(10)

முற்றிற்று.

 

6. அருளாடல்

162.    பொருளாடற் கண்டுவக்கும் பூரியார் நெஞ்ச

மருளாடற் காணினன்றி யஞ்சா – திருளா

மிரவு பகலாதற் கென்செயினும் வெய்யோன்

வரவுபோ லாகாதம் மா.

(1)

163.    தெருளாரு நெஞ்சகத்துச் சீரியர்க ளல்லா

ரருளாடற் காண்பதில்லை யன்பர் – பொருளான

வல்லோனே சற்குருவா வந்துவிளை யாடிடினும்

பொல்லோ னெனப்புரிவார் போர்.

(2)

164.    ஒருமா னிடனை யுறவுடையா ரெல்லாம்

பெருமானென் றேத்தவைக்கும் பெட்பா – லுருமார்த்தாற்

போன்முழங்கும் பல்சமையம் பூமியிலுண் டாக்கிநின்ற

மேன்முதலா மெய்யருளே மெய்.

(3)

165.    பொதுவாடல் செய்யுமொன்று புண்ணியத்தோ டேனை

யதுசார்பா மாட லனைத்து – மெதுவேனு

மொன்றாற் புரிவ துளதென்று ணர்ந்தோனே

குன்றா வருளாடற் கோன்.

(4)

166.    அருளாண்மை யின்றி யலையுந் துறவி

பொருளாளர் தம்பாற் புலம்பு – மருளானென்

றெள்ளப் பரதவிக்கு மேக்கமுறு மீடழியும்

விள்ளப் படாதுழலு மே.

(5)

167.    எல்லா நலமு மிசையுந் திருவருளிற்

பொல்லார் மனக்குரங்கு போகாது – வல்லார்

மனமான மந்திசெல்லு மாயை யிருளா

வினமாறிக் கொம்பிழவா தே.

(6)

168.    கொம்பிழந்த மந்திநிகர் கூடா வொழுக்கத்தா

னம்பிச் சிறிது நலம்பெற்றால் – வெம்பிப்

பகைசெய்வார் தங்குலத்துப் பாலர் பலர்சேர்

தொகையென்றோர் துன்மதந்தோன் றும்.

(7)

169.    பூரியரே யானாலும் பொன்னுடையா ராமாகி

லாரியரு மஞ்சு மதிசயம்போற் – கூரியநூல்

வல்லா னெனினுமொரு மந்திர சித்துள்ளான்பா

லுல்லாசங் குன்றலு முண்டு.

(8)

170.    மானிடராற் செய்யரிய வண்மை யருளாட

லானியிலாச் செல்வ மதுதானே – மேனிலமு

மிந்நிலமும் யொய்யென் றிகழ்துறவிக் கேற்றமதே

யெந்நிலையிற் றோன்றினுநன் றே.

(9)

171.    ஆரணங்க டாமு மருளாடலா மென்றாற்

காரணங்க ளெல்லாங் கடந்ததன்றோ – சீரணங்கள்

வாராமற் காக்கும் வலியதன்றோ மாதவத்தோ

ராரா யினுமுணர லாம்.

(10)

முற்றிற்று.

 

7. பெருந்தன்மை

172.    முருந்தன்ன பல்லார் முலைப்போகம் வேண்டாப்

பெருந்தன்மை யேயுயர்ந்த பேறாம் – விருந்தன்ன

மிட்டுண்டு வாழ்ந்தாலு மில்லறத்தீ தியானுமுன்பு

தட்டுண்டே னென்பான் றனக்கு.

(1)

173.    தேர்வேந்தர் வாழ்வுஞ் சிறிதென் றருவருத்துப்

பார்வேண்டு நன்மைசெய்யும் பத்தருக்குட் – சார்வோன்

குருந்தென்று தம்மைக் குறிக்குங் குணமே

பெருந்தமை யென்றுரைக்கும் பேறு.

(2)

174.    வல்லா னொருவன்  மகவா மெனப்பிறங்கு

மெல்லா வுயிர்க்கு மிதஞ்செய்து – கொல்லா

விரதம் புலாலருந்தா மேன்மையருண் மூன்றுஞ்

சரதமெனக் காண்போன் றவன்.

(3)

175.    கூறற் கரிய கொடுங்கோலர சர்குல

நீறப் புரிந்து நெறிதாங்கும் – வீறணைந்த

செங்கோலார் வாழ்ந்துவக்கச் செய்துங் களிக்குநல

மங்கோல மாதவருக் காம்.

(4)

176.    முன்னவற்குக் கீழா முடிதாங்கிப் பார்புரக்கு

மன்னவற்கு மேலாவோர் மாதவரே – யன்னமிரந்

துண்பதெண்ணித் தாமே யுலகிற் குதவிசெய்யும்

பண்படைவார் மற்றோர் பதர்.

(5)

177.    உவமான மற்றபொரு ளொன்றுளதென் றோர்ந்து

தவமுயல்வ தொப்பில் பெருந்தன்மை – கவலைமிகு

மற்றவர்போற் பொய்ப்பெயரில் வாஞ்சையுற்று வாதமிட

லற்றவருக் காகா தது.

(6)

178.    அறியாமை முற்றியதா லாணவத்தின் மூழ்கிச்

சிறியார் பெருந்தீமை செய்யிற் – குறியான்

மனமடங்கிப் போத மயமாம் பெரியோ

ரினமடங்க லும்பார்த் திரா.

(7)

179.    இரவுபக லற்றதல மித்தகைத் தென்றோர்ந்து

கரவு முழுதுங் கழித்தோ – ரரவுநிகர்

பொல்லார்க்கு நன்றியுணர் புண்ணியர்க்கு மிவ்விரண்டு

மில்லார்க்கு நல்லவரா மே.

(8)

180.    புன்குலமு மேற்குலமாம் பொய்ப்பொருளு மெய்ப்பொருளாம்

வன்குணமு நன்மை மலிகுணமா – நன்குணராப்

புல்லியனும் வண்மைப் புலவனாம் பொய்ப்பாச

வல்லியற்றோர் தம்பால் வரில்.

(9)

181.    தெய்வத்தி னுண்மை திகழ்வதற்குந் தேர்வேந்தர்

நைவற்ற நீதி நடத்துதற்கு – மைவளர்க்கும்

பாருலகி னன்மை படர்வதற்கும் பற்றொழிந்த

சீருடையார் சொல்லே திறன்.

(10)

முற்றிற்று.

 

8. சித்தாந்தப் பத்தி

182.    எல்லவர்க்குங் கோவா மிறைவ னொருவனே

வல்லவனா மியாவுமுணர் வத்துவாஞ் – சொல்லரிய

பேதாதி பேதமெல்லாம் பெற்றதுவா மெனறுரைத்தற்

காதாரக் கேட்கை கடன்.

(1)

183.    வானம் பெயலு மதியிரவி தோன்றுதலுந்

தானந் தருமந் தழைப்பதுவு – மோனநிலை

யுண்டென்று பன்னூ லுரைப்பதுவு முன்னுநர்க்கே

தொண்டென்கை நல்ல தொழில்.

(2)

184.    கருப்பத் திருந்துமுற்றிக் கான்முளையாத் தோன்றிப்

பருப்பதநேர் கொங்கைப் பயமுண் – டிருப்பவரைக்

கண்டுந்தா மந்நாட் கழித்ததறி யாதிருந்தும்

பண்டுடையே மென்பார் பலர்.

(3)

185.    பத்தி நிலையிற் பதியாத பாமரர்க்குச்

சித்தியொடு முத்தி சிறிதுமில்லைக் – கத்திகொண்டு

வெட்ட வரினுமொரு மெய்ப்பொருளுண் டென்பவருக்

கிட்டமுற்று மெய்துவதுண் டே.

(4)

186.    சாகப் பயந்து தடுமாறுந் தன்மைக்கு

மோகக் களைகளையு முன்னவற்குத் – தேகமுதன்

மூன்றுங் கொடுக்கு முரணார்ந்த பத்திக்குந்

தோன்றுமல கில்லாத் தொலை.

(5)

187.    தெய்வ முலகைத் தெரியாத பாழென்றா

லுய்வதென்றொன் றில்லை யுயர்வில்லைச் – செய்வதனுட்

புண்ணியபா வங்களில்லைப் போர்வேந்தும் பொன்னுமெய்யென்

றெண்ணியவர் தம்மையெள்ளோ மே.

(6)

188.    முத்தி யடைந்த முனிவோர் பலருக்கும்

பத்தி துணையான பண்புணர்ந்து – சித்தி

வழியாகச் சேரவெண்ணி வாடாத் துறவோர்க்

கழியாகக் கொண்டதுல கம்.

(7)

189.    ஆலயத்தி லன்புசெய்தா லவ்வச் சமையத்துச்

சீலமிகு தெய்வத்தின் றேட்டமுண்டாஞ் – சால

வருந்தி யுழைத்தான் மனம்போல் வடிவம்

பொருந்திவரு மொன்றிலன்பு போம்.

(8)

190.    அருவுருவென் றோது மகண்டகண்ட மாகு

மொருவனே யெச்சமையத் தோர்க்கும் – பருவமறிந்

தின்பங் கொடுப்பா னெனவுணரா ரேய்ந்தபத்தி

துன்பந் தருவதுண்மைச் சொல்.

(9)

191.    கொன்று புலவருந்தாக் கூர்ப்புடைய பத்தரவை

துன்றுநரை யெள்வரவர் சொந்தமென – நின்று

விளையாடுந் தெய்வமொன்று வேறுளதென் றெள்ளார்

களையா மவரிகழ்வார் கள்.

(10)

முற்றிற்று.

 

9. வேதாந்தத் தவம்

192.    எந்தை யெனவே யெவரும் பரவுமொன்று

மந்தையினிற் கற்றூணை மானுமே – சிந்தை

யடங்கத் தவம்புரியு மற்றார்க் கறிவே

தடங்கலறத் தோன்றியன்ன தாம்.

(1)

193.    தவம்புரியச் சோம்பிச் சமையத் தொடர்பா

வம்புரிந்து நாட்கழிக்க லாகா – நவம்பெரிது

செய்வதுபெற் றென்றுந் திரும்பாத மெய்வீட்டி

லெய்வதுவேட் டுள்ளதுற வி.

(2)

194.    மெய்த்தவத்தா லன்றி வினையொழிய மாட்டாதாற்

கைத்தலுறுந் துன்பக் களஞ்சியமா – வைத்ததொரு

பொய்யறத்தை நீங்கிப் பொறியுடைய புண்ணியத்தோ

ரையமெடுத் துண்பா ரமைந்து.

(3)

195.    சற்குருவை நாடித் தவம்புரியுந் தன்மையின்றிச்

சொற்குரவன் சொல்லாற் றுயர்ப்பட்டுக் – கற்குவடு

போலு மனத்தார் புறங்கடையிற் போயிரப்போர்

பாலும் வருமோ பயன்.

(4)

196.    சோராத் தவமே தொழிலென் றதுபுரிவோர்ச்

சேராத் துறவோன் சிறப்பெல்லாங் – காராழி

நீந்திடற்கு மஞ்சா நெடுந்தோளாற் சேர்ந்தறியா

வேந்திழையாள் கொள்ளு மெழில்.

(5)

197.    உண்மைத் தவமா மொருமாதைச் சேர்ந்தார்க்கு

வண்மைமிகுஞ் சித்தே மகவாகுந் – திண்மைபெறுந்

தொண்டர்குழா மத்தனையுஞ் சுற்றமாஞ் சொற்சுவைச்சீர்

கொண்டவர்வாய் வாழுங் குடி.

(6)

198.    பொன்கொண்டு வாழும் புரவலர்க்கும் போர்வேலா

மின்கொண்ட மேகநிகர் வீரருக்குந் – தன்கொண்க

னன்றி மருவா ளனையதொரு மாதவன்பால்

வென்றிகுன்றி யச்சமுண்டா மே.

(7)

199.    பத்தி யெனுங்காய் பழுத்துத் தவமாமென்

றுத்தி யுடையா ருணர்வரான் – முத்தியே

வித்தாகு நல்ல விருட்சங் குருவேராம்

வந்தா மெனச்சொல் வது.

(8)

200.    தன்னை யிழந்து தவம்புரிவோர் தற்பரமாம்

பொன்னை யுணர்ந்தன்பிற் பூசிப்பார் – முன்னைக்

குரவன் பணிபுனலாங் கோதிலுப தேசம்

விரவுங் கடிமலரா மே.

(9)

201.    கண்ணாளர் பொன்னாற் கலன்பலவா றாற்றலெனப்

பெண்ணாரை வென்ற பெருந்தவத்தோர் – விண்ணாகி

யெங்கு நிறைந்தவொன்றா லெண்ணிறந்த கோடிதெய்வம்

பங்குபங்காச் செய்வார் பரிந்து.

(10)

முற்றிற்று.

 

10. சமரச நிச்சயம்

202.    சித்தென்னிற் சித்தாத் திகழுஞ் செயலிறந்த

வத்தென்று நாடிலந்த வாறாகு – முத்தென்ற

பல்லார் முலைமயக்கிற் பட்டுழலாப் பண்புடைய

வல்லார் விரும்பு வது.

(1)

203.    எய்தற் கரிதென் றியம்புந் தனிவீடுஞ்

செய்தற் கரிய செயற்பெருக்கும் – பொய்தவிர்ந்த

மந்திரமுந் தம்மில் வலியார் வணக்கமுநற்

றந்திரமுந் தள்ளாச் சமம்.

(2)

204.    உருவம் பரமென் றுரைப்பாருந் தோன்றா

வருவம் பரமென் பவருங் – குருவன்றி

யுய்ந்துகொள்ள மாட்டாத வுண்மைகண்டு நாடிமன

நைந்து மெலிகை நலம்.

(3)

205.    மற்றைச் சமையத்தோர் வாழ்தல்கண்டுந் தஞ்சமைய

மொற்றைக் குயர்ச்சி யுரைப்போரி – லெற்றைக்கு

முள்ளபொருள் சித்தோ வுரையிறந்த சூனியமோ

விள்ளறியே மென்றுரைப்பார் மேல்.

(4)

206.    மழையுங் கதிர்மதியும் வான்பொருளைச் சித்தா

விழையும் படிபுரியும் வேந்தும் – பிழைமுதிர்ந்த

பொய்ச்சமையத் துள்ளாரும் பொன்னுமது சூனியமென்

றச்சமறுக்குந் தெளிவா ரார்.

(5)

207.    ஐந்து தொழிற்கண் டகங்குளிர்ந்து போற்றுதலுஞ்

சிந்துமனத் தைக்குறியிற் சேர்த்திடலும் – வந்துதென்றா

லாக்கமெல்லாங் கைக்கு ளமையுமென்கை யாய்புலவர்

பாக்க ளுரைக்கும் பயன்.

(6)

208.    அருளுடைமை கொல்லாமை யார்வ தறிகை

தெருளுடைமை வல்லாரைச் சேர்கை – பொருளுடைமைக்

கேங்காமை யன்னநல மெத்தவர்க்கும் பத்தருக்கும்

பாங்காமென் றோர்தல் பளு.

(7)

209.    சாற்றறிய வண்மைச் சமரசத்திற் சார்ந்தோரே

யேற்ற மவருக்  கிகலில்லைக் – கூற்றனிகர்

துன்பமில்லை யாவருக்குஞ் சொந்தமென நின்றுபெரி

தின்பநுகர்ந் துய்ந்துகொள்வா ரே.

(8)

210.    பத்தரொடு மாதவரும் பாருலகின் மெத்தவுண்டு

சுத்தச் சமரசமாந் தொன்மைசேர் – வித்தகரைக்

காண்ப தரிதாங் கவித்தொகையு மப்படியே

மாண்பகிலம் போற்று வது.

(9)

211.    பலியாக வுந்துணிவோன் பத்த னுணர்விற்

சலியாது நிற்போன் றவசி – மெலியாம

லிவ்விரண்டுஞ் சம்மதமென் றேற்போன் சமரசத்தோன்

செவ்விரண்டுஞ் சேரநிற்ப தே.

(10)

முற்றிற்று.

ஆக அதிகாரம் பத்துக்கு வெண்பா நூறு.

துறவறவியல் முற்றிற்று.

குருபாதமே கதி.

212.    தண்டமிழோர் கொண்டாடுந் தண்டபாணிப் புலவன்

விண்ட திருவெண்பா மேதினியிற் – றொண்ட

ரெவர்க்கு நலமா மிரக்கமின்றிக் கொன்றுண்

பவர்க்குமட்டு மாகா தது.

ஆக மொத்தம் வெண்பா 212.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக