தவத்திரு
கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
சிரவைத்
தண்டபாணிக் கடவுள் திருப்பள்ளியெழுச்சி
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
போற்றிகௌ மாரர்கள்
புகலிட மான
புண்ணியத் திருவடி நண்ணிய பரனே
ஏற்றிசைக் கடலிடை
எழுசுடர் போல
எழில்மயில் மிசைவரு மழகிய குகனே
நாற்றிசை யவர்களும்
போற்றிசைத் தேத்தும்
நந்தன வளச்சிர வணபுரத் தரசே
ஏற்றிசைப் பரன்விழி
தோற்றிய புகழ்சால்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
(1)
கதுமெனக் கதிர்குணக்
கடலில்வந் துதித்தான்
காணநல்த் தொண்டர்கள் கனபழம் பால்தேன்
மதுமலர் மாலைகள்
கொண்டுசந் நிதியில்
வந்துநின் திருவடி வணங்கநின் றுள்ளார்
சதுரமை புலமையும்
தவமும்மிக் கவர்கள்
தழைத்திடும் புகழ்ச்சிர வணபுரத் தரசே
எதுயெமைப் பணிகொளு
மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
(2)
மண்ணகத் தவர்புரி
தவத்தினில் வேடர்
மரபினில் தோன்றிய வள்ளிநா யகியும்
விண்ணகத் தேவர்கள்
செய்தவப் பயனாய்
மேவிய குஞ்சரி விளங்கமத் தியினில்
கண்ணகம் குளிர்தரக்
காட்சிதந் தருளும்
கவின்மலி சிரவண புரத்தமர் அரசே
எண்ணம்முற் றவும்நிறை
வெய்திடப் புரிவான்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
(3)
கங்கைதங் கியமுடிச்
சங்கரன் மதலாய்
கற்றநல்த் தொண்டர்கட் குற்றவல் வினைபோல்
மங்குலு மகன்றது
வளத்திரு மேனி
மானநல்ப் பானுசெம் மணிக்கதிர் விரித்தான்
தங்கிய செந்நிறத்
தானைமா தவர்கள்
சார்ந்தனர் வளர்சிர வணபுரத் தரசே
எங்கணும் மங்களந்
தங்கிடப் புரிவான்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
(4)
பண்ணியல் பாடல்கள்
பாடுகௌ மாரர்
பண்ணிய புண்ணியப் பயனெனத் தோன்றும்
நண்ணிய சீலரா மானந்த
நாதர்
நற்றமிழ்க் கந்தசா மிக்குரு நாதர்
தண்ணரு ளால்ப்புரி
தருதிருக் கோயில்
சார்ந்தநற் சிரவண புரத்தமர் அரசே
எண்ணிய எண்ணியாங்
கெய்திடப் புரிவான்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
(5)
கார்பொலி நிறமமை
சூர்முதல் தடிந்தாய்
கற்றவர் போற்றிடும் நற்றவ முதலே
கூர்பொலி வேலணி திண்புயக்
குமர
குருபர தண்டணி தருதிரு முருகா
சீர்பொலி காவிடை
மயிலின மாடுஞ்
சிறப்பமை சிரவண புரத்தம ரரசே
ஏர்பொலி வளமடி யார்பெறப்
புரிவான்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
(6)
கூவின திருப்புயத்
தமைகொடிக் கோழி
குருகுக ளொலித்தன குளித்துவந் தடியார்
மேவின ரின்னிசை முழக்கினர்
வணங்கி
மேன்மைகொள் திருப்புகழ் பாடிநிற் கின்றார்
ஆவினம் மயிலின மலர்கொள்நந்
தனங்கள்
அழகுறப் பொலிசிர வணபுரத் தரசே
யாவினு முயர்பதிப்
பொருளென விளங்கும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
(7)
மன்னுயிர்க் கருணையும்
மலிபுகழ்ப் பக்தி
வலிமையும் பாசவை ராக்யமும் பிரமம்
உன்னிய ஞானமும் அமைந்தமெய்த்
தொண்டர்
உலகுய வேண்டிமெ யுறும்பணி யாற்றி
நல்நிலை வுணர்த்தி
யிந்நானில மக்கள்
நயந்திடச் செயும்சிர வணபுரத் தரசே
எந்நிலை யவர்களு
முய்ந்திடப் புரிவான்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
(8)
தன்னைநேர் சிவபிரா
னகத்திய முனிவர்
தவநிறை வருணையூர்ச் சந்தமா முனிவர்
முன்னைநாள் பெறுமுப
தேசம்நன் முறையில்
முழக்கிய திருப்புகழ் முருகதா சப்பேர்
அன்னைநேர் கருணையார்
திருப்பரம் பரையில்
அமைந்தவர் வளர்சிர வணபுரத் தரசே
என்னைநேர் தகையரு
முய்ந்திடப் புரிவான்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
(9)
என்றும்நல் மழைவள
மெய்திடப் பயிர்கள்
எங்கணும் பசுமையா யிலங்கவா னினங்கள்
துன்றும்நல் வளமுறக்
கோயில்கள் பூசை
துலங்கிட வளமையி லுலகெலாம் பொலிய
நன்றமை நெறியிடை
யனைவரும் விளங்க
நந்தலில் வளச்சிர வணபுரத் தரசே
என்றுமி னருள்வள
மெய்திடப் புரிவான்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
(10)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக