தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
சிரவணம்பட்டி
பத்திரகாளி அம்மன் பதிகம்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
திருவளர் கமலம் நிகர்மதி
முகமும்,
செறியருள் பொழிவிழி மலரும்
உருவளர் படைக்கைத்
தலங்களு மடியார்க்கு
உகந்தருள் பதமல ரிணையும்
வருமயி டாசு ரன்றனைச்
செருத்த
வண்மையார் சூலமுங் கொண்டென்
பருவரல் தீரக் காட்சிதா
சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(1)
விண்பர விடுசீர்
விமலையே கமலை
விரும்பிநல்ப் பணிசெயுந் தேவீ
கண்நுதல்ப் பெருமா
னுள்நெகக் கண்டுக்
களிப்புறப் புரிதிரு மயிலே
எண்ணுதல்க் கரிய
புகழ்ச்சிறப் படியேன்
ஏத்திடப் பாத்திர மமையப்
பண்ணுவா யுனது சரண்சரண்
சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(2)
கற்றவர் போற்றும்
கற்பகக் கனியே
கவின்திரு வருள்நிறை கடலே
நற்றவத் தினர்தம்
அகத்தொளிர் விளக்கே
ஞானபோ னகம்கொள அருளி
உற்றஇவ் உலகப் பற்றற
உளத்தில்
உபயதா மரைஅடி தமக்கே
பற்றுறச் சற்றே தயைபுரி
- சிரவைப்
பத்திர காளியெந் தாயே/
(3)
கூடவைத் தனைநல் லடியவர்
கூட்டங்
கோயில்கள் தொறுமுனை தேடித்
தேடவைத் தனையுன்
தெரிசனம் புறத்தே
தெரியவைத் திலையுன திருநாள்
நாடவைத் திரவும்
பகலும்நின் நாமம்
நவலவைத் துன்னருள் புகழே
பாடவைத் திடுவான்
வேண்டினன் சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(4)
வீரமா யுன்முன வரும்மயி
டனைக்கீழ்
வீழ்த்தியே வெருண்டிடக் குத்தி
கோரமாய்த் தடிந்த
தேவி நீயின்று
கொடுமைசெ யெமதுவல் வினையைத்
தீரமா யொடுங்கப்
புரிந்திலை கருணை
செய்திலை யெங்களைக் காத்தல்
பாரமா யம்மா பரிந்தருள்
சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(5)
விரிந்தபூஞ் சோலை
மேவுசீ காழி
மிளிர்திரு ஞானசம் பந்தர்
தெரிந்திடத் தோன்றி
ஞானமார் முலைப்பால்
தெளிவுறத் தந்தனை யதனில்
வருந்திடு மடியேம்
துயரறச் சிறிது
வழங்கிநின் கருணையம் கடைக்கண்
பரிந்தருள் புரிய
வேண்டினன் சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(6)
சீததா மரையில் விளங்கிடும்
செம்மைத்
திருவுடன் பயில்கலை மாதும்
ஆதரத் துடன்போற்
றிடுமடி அடியேன்
அகத்தினில் கண்டுபே ரின்பம்
நீதரப் பெற்று ளுருகியா
னந்த
நிமலவாழ் வுறத்தயை புரிந்து
பாததா மரையில் சேர்த்தருள்
சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(7)
இச்சைநா யகனெ முளங்கவர்
கள்வன்
இகபர நலம்தரு குமரன்
செச்சையார் புயத்துச்
செயம்மிகு வேளைச்
சேய்யெனப் போற்றும்மா தேவி
மொச்சைவூண் விரும்பும்
விநாயகன் தாயே
முன்றுபட் டீச்சுரர் இடமார்
பச்சைநா யகியே சோலைசூழ்
சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(8)
அத்திரம் தாங்கி
யரக்கரை மடித்த
அம்மையே செம்மையா ரடியார்
துத்தியம் செய்யத்
துலங்கிடு மம்மே
தூயநின் கோயிலின் பணிகள்
சித்தசுத் தியுடன்
பத்தியாய்ப் புரிவோர்
சிறப்பெலாம் பெறத்தயை புரிந்து
பத்திரம் பெறக்காத்
தாளுவாய் சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(9)
அணிபொலி கோயில்த்
திருப்பணி புரிவோர்
அலகொடு திருமெழுக் கிடுவோர்
மணியணிப் பணிகள்
செய்தலங் கரிப்போர்
மகிழ்வொடு திருவிழாப் புரிவோர்
தணிவிலாப் பக்திப்
பூசனை செய்வோர்
தகுதியி னால்ப்பல வகையாம்
பணியவர்க் கருள்வாய்
தென்னையார் சிரவைப்
பத்திர காளியெந் தாயே.
(10)
திருப்புகழ்
தனனத்
தத்தன தானத் - தனதானா
பரவிப் பத்தியில்
மேவிப் - பணிவோரும்
பதிகட் கற்பொடு பாடிப் - புகழ்வோரும்
விரவிப் பெற்றிடு
தாளிற் - சிறியேனும்
மிளிரச் சற்றரு ளீயப் - பெறுவேனோ
குரவப் பத்திகொள்
மாலைப் - புயவேள்தான்
குலவிப் பற்றிட வேலைத் - தருதாயே
திரவைப் புற்றடி
வேலைத் - கெளியாளே
சிரவைப் பத்திர காளிப் – பெரியாளே.
வாழ்த்து
வெண்பா
(நேரிசை
வெண்பா)
வாழி சிரவை வளர்பத்ர
காளியுமை
வாழி திருக்கோயில்
வண்பணிகள் - வாழியவே
போற்றும் திருத்தொண்டர் பொற்புடனே பூசிப்போர்
சாற்றும்நலம் பெற்றுத் தழைத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக