ஞாயிறு, 18 அக்டோபர், 2026

தருமையாதீனம் குருமணி தோத்திரப் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

தருமையாதீனம் குருமணி தோத்திரப் பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

திருக்கயிலைப் பரம்பரையில் திகழ்தருமை யாதீனத்து

அருக்கனென இருபத்தைந் தாம்பட்டத் தமர்ந்தருளிப்

பெருக்கருளா ராட்சியினில் பெருகுமறம் பலபுரிந்து

தெருள்பெருக்கார் திருமுகம்சால் திருக்கயிலைக் குருமணியே.

 (1)

குருஞான சம்பந்தக் குருமுனிவர் தருமையினில்

இருபத்தைந் தாம்பட்டத் திருந்தருளாட் சியைச்சிறப்பாய்

இருபத்தா றாண்டியற்றி இயைந்ததே வாலயங்கள்

இருபத்தே ழினைப்புரந்த இசைக்கயிலை குருமணியே.        

 (2)

ஆலயத்தைப் புதுப்பித்த லருட்கும்ப நீராட்டல்

மேலான நூல்பதித்து மிக்கவர்கள் தமக்களித்தல்

ஞாலமிசைப் பலர்கான நற்கல்வி யறம்முதலாக்

கோலம்மிகுஞ் செயற்களவோ குளிர்கயிலைக் குருமணியே.

 (3)

திருமுறையில் பாடல்பெறும் திருத்தலங்க ளத்தனையும்

ஒருமுறையோ பலமுறையு மொளிர்பாட லச்சியற்றிப்

பெருமுறையில் கொடுபரவிப் பேணுதல வழிபாட்டில்

வருமுறையில் நிகர்யார் வளர்கயிலைக் குருமணியே!.

 (4)

கேதாரம் பசுபதிநாத, கிளரமர நாத்முதலாம்

ஆதார மானசிவ னமர்ந்தருளும் மலைத்தளங்கள்

சீதார விந்தத்தாள் சிவக்கநடந் தெம்பெருமான்

பாதார விந்தமலர் பணிகயிலைக் குருமணியே.                     

 (5)

கயிலாய பரம்பரையாக் காணுமுரை மெய்யாக்கிக்

கயிலாய திருமலைக்குக் கவினப்பர் யெனநடந்து

பயிலும்வழி பாடாற்றிப் பரமனருள் கடல்குளித்தீர்

எயிலமையுந் திருத்தருமை யெழில்கயிலைக் குருமணியே.   

 (6)

தெய்வீகப் பேரவையின் திருத்தலைமை யேற்றருளி

மெய்யையுல குணர்வதற்காம் மிக்கபிரச் சாரநிலை

செய்தருளித் திருமுறைகள் சித்தாந்த சாத்திரங்கள்

உய்வகையில் வெளியிட்ட வுயர்கயிலைக்  குருமணியே.     

 (7)

திருத்தருமை யிடத்தெங்கள் திருக்கூட்டத் துடன்வந்து

திருப்பொலிய வழிபாடு செயுங்காலை திருவாளன்

திருப்பெருகுந் திருநீறும் திருவமுதும் வெளியீடும்

விருப்பமுட னுவந்தருளும் வியன்கயிலைக் குருமணியே.     

 (8)

வந்துதிருத் தருமையினில் வணங்குதொறுந் திருநீறு

தந்தருளி யாசியுடன் தகுமுணவு செயச்செய்து

செந்தகைய பரிவட்டம் சீர்கொள்பிர சாதங்கள்

சந்தமுறத் தந்தருளுந் தகைக்கயிலைக் குருமணியே. 

 (9)

பூசைசெபந் தவமாதி புண்ணியர்சேர் காசியினில்

ஓசைபெறச் செய்தருளி யொளிர்கங்கை நதிக்கரையில்

பேசுபுகழ்க் கேதார கட்டத்தில் பெருமான்தன்

தேசுலவு கயிலையிடைச் சேர்கயிலைக் குருமணியே.

 (10)

கவுமார மடத்தினிலும் கவின்மருத மலைத்தலத்துஞ்

சவுகரிய மாய்வந்து தங்குவமென் றருள்செய்தீர்

உவகைமிக யாமெய்த உற்றருளா விதமென்னோ

தவஞான சம்பந்தத் தனிக்கயிலைக் குருமணியே.     

 (11)

சாலவருள் பொழிவிழியுஞ் சாந்தம்மிகும் முகமலருஞ்

சீலமுட னுளங்குளிரச் செப்புதிரு வாய்முதலாக்

கோலம்மிகுந் திருக்காட்சி குவிமனத்தும் படத்துமன்றித்

தூயவிழி காண்பதுண்டோ சுகக்கயிலை குருமணியே.         

 (12)

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

திருக்கயி லாய பரம்பரை யாகத்

            திகழ்திருத் தருமையா தீனம்

பெருக்கமார் ஞானக் கோல்கரத் தேந்திப்

            பிறங்கரு ளாட்சியி லமர்ந்து

திருந்துநற் புலமை தவம்கொள் சண்முகப்பேர்த்

            தேசிக ஞானசம் பந்தர்

குருத்து வமிருத் தாறதாக் கொண்டு

            குலவருள் பொழிந்தனர் மாதோ.

 (13)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக