ஞாயிறு, 18 அக்டோபர், 2026

பொள்ளாச்சி இராமநாதபுரம் பத்திரகாளியம்மன் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

பொள்ளாச்சி இராமநாதபுரம் பத்திரகாளியம்மன் பதிகம்

விநாயகர் துதி

(நேரிசை வெண்பா)

திருஇராம நாதபுரம் சேர்பத்ர காளி

மருவும் திருக்கோயில் மன்னும் - அருளார்ந்த

சித்தி விநாயகனே சீராரு முன்னருளை

நத்துமெமக் கீந்தருளிந் நாள்.

(1)

முருகன் துதி

சீலம் மலியுந் திருஇராம நாதபுரப்

பாலமரும் பத்திரத்தாய் பக்கலுறும் - பாலதண்ட

பாணிப் பரனே பதம்பணிந்தேன் தீதின்றி

நீள்நிலத்தில் வாழ்வருள்வாய் நீ.

(2)

நூல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

விண்ணியல் மதிநேர் முகத்தினில் கருணை

            விழிகளுந் துவர்த்திரு வாயும்

நண்ணிய சூலம் முதற்பல படைகொள்

            நால்லிரு புயங்களு மடியார்

எண்ணியல்  பதமும் துலங்கிட வீறார்

            ஏற்றிடை எழுந்தருள் புரிவாய்

பண்ணியல் வல்லார் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(3)

மயிடனைக் கொல்லச் சூலமேந் தியநீ

            வண்மையா ரெனதுவல் வினையின்

இயலினை யொழிக்க வேண்டுமென் முறைகேட்டு

            இசைந்தருள் புரிகுவாய் சரணங்

குயிலமர் தேமா வளம்பொலி சோலை

            குலவுநெல் லுடன்வளர் வாழை

பயில்வளம் பொலியும் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(4)

நாடகத் தொண்டர் கூடருட் கூட்டம்

            நண்ணியுன் புகழ்களைப் பரவி

ஏடகத் தாம ரைத்திரு வடியை

            எண்ணியேத் திப்பணி புரிந்து

நீடகத் துனது கருணையை வியந்து

            நிலைத்தசெந் தமிழ்க்கவி மாலை

பாடவைத் தாள்வாய் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(5)

இந்திரன் போற்றுங் காழியம் பதியில்

            இசைதிரு ஞானசம் பந்தர்

செந்தகை யாடல் புரிந்திட ஞானத்

            தீஞ்சுவைப் பாலளித் தனையே

வந்தனை அடியேற் கதில்சிறி தளிக்கில்

            வளரும்நின் பெரும்புக ழருள்வாய்

பந்தனை  விரலாய் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(6)

ஒருகவி மெச்சுந் திருக்கவி ராச

            பண்டித னோகையெய் திடநீ

வருமதி யாறு மகளென வுண்டி

            வகைபெறச் சமைத்துடன் நடந்தாய்

பெருகரு ளுன்பா லந்நிலை வேண்டிப்

            பேசிலேன் காட்சிதந் துலகப்

பருவரல் ஒழிப்பாய் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(7)

விண்ணவர் துயரம் நீக்கிட மயிடன்  

            விறலழித் தடக்கியா ளன்னாய்

மண்ணில்நல் லவர்கள் வகுந்துறக் கடவுள்

            மறுப்புடன் மாண்பிலாச் செயல்கள்

எண்ணிடா  மல்செய் மடமையோ ருளத்தை

            ஏற்றமார் நன்னெறி புகுதப்

பண்ணுவாய் சரணம் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே!                                         

(8)

வந்தனை புரிவோ ரமுதடன் தேங்காய்

            வாழையா தியபழம் படைப்போர்

சிந்தனை யபிடே கம்புரிந் திடுவோர்

            திறம்பெறப் பாடியா டிடுவோர்

சந்தமார் கோவில் திருப்பணி புரிவோர்

            தமக்கெலா நலங்களுந் தருவாய்

பந்தியார் சோலை இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(9)

உலகுயிர்க் கெல்லா மன்னையா முன்முன்

            உயிர்த்திரள் களைப்பலி யிட்டு

நலம்மலி கோயில் களையிடு காடா

            நண்ணிடச் செயுமவர் திருந்தி

சலமொடு மலர்நல்த் தூபதீ பங்கள்

            தகையமு தமைத்துநற் பூசை

பலமுறச் செயச்செய் – இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(10)

அன்னையா யுலகத் தாருயிர் புரக்கும்

            ஆயுமை வழிபடு மடியேம்

முன்னையார் பிறப்பில் செய்தவல் வினையால்

            மூளும்நோய் நீக்கியாண் டருள்வாய்

கன்னல்பைங் கமுகு  மன்னுநெல் வாழை

            கவின்வளப் பண்ணைகள் மற்றும்

பன்னலம் பொருந்தும் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(11)

தரையினில் சிறிய  மேடைவீற் றிருந்த

            தாயுனக் கரியகற் களினால்

வரைநிகர் கோயில் தனையெடுத் தழகார்

            மானவி மானமு மமைத்தே

விரைகமழ் கும்ப நீர்விழாச் செய்யும்

            மேலவர் சாலநன் றெய்தப்

பரையுனைப் பணிந்தேன் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையே.                                         

(12)

நூற்பயன்

திதித்திடுங் கருணை வடிவுடன் வேண்டுந்

            திருவெலா மன்பர்கட் கருளிப்

பதித்திடும் பதம்கொள் இராமநா தபுரப்

            பத்திர காளியம் பிகையை

மதித்திடுஞ் சிரவை வளக்கவு மார

            வண்கந்த சாமிசற் குருதாள்

துதித்திடு மடிமைச் சுந்தர சாமி

            சொல்லிவை நல்லவை தருமே.

 

திருப்புகழ்

தான தானதனத் தத்தன தானத் - தனதானா

சோம னானமுகத்

தத்தையர் காதற் - படியாதே

            சோக மோகநிலைப் 

பற்றினில் மூழ்கித் - திரியாதே

தாம மானகுணத்

தற்பர் கடுடற் - றுழலாதே

            சாரும் ஞானநிலைப்

பெற்றிகள் மேவப் - புரிவாயே

வாம மானவுருப்

பெற்றடி யார்முற் - றிகழ்வாயே

            வாலை யேகுமரிப்

பொற்றொடி யேகைக் - கிளியாளே

நாம ரூபநிலைப் 

பெற்றிக ளோர்சற் - குருவாவாய்

            இராமநா தபுரப்

பத்திர காளிப் – பெரியாளே.

 

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

திருஇராம நாதபுரம் சேரன்பர் வாழ்க

வருபத்ர காளியருள் மாதா - திருக்கோவில்

நற்பணிசெய் தோர்வாழ்க  நாளும் வழிபடுவோர்

பெற்றியுடன் வாழ்க பெரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக