ஞாயிறு, 18 அக்டோபர், 2026

இராமானந்த சுவாமிகள் பதிகம்

                        தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

இராமானந்த சுவாமிகள் பதிகம்

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

கொங்குநன்னா டியற்றுபெரும் தவமாகிப்

            புவியதனில் குலவித் தூய்மை

தங்குதவ நெறிபூண்டு கணபதியைத்

            தண்டணிகைச் சாமி தன்னைப்

பொங்குமணப் பூவகையால் வழிபாடு

            நாள்தோறும் புரிந்து வாழ்ந்த

எங்குருவே சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                              

 (1)

சந்தவண்ணச் சரபகுரு பரன்றன்னைப்

            பழனிஎனும் தலத்தில் கண்டு,

சொந்தமுறப் பணிந்தவன் சொல் ஆறெழுத்தின்

            உபதேசம் தோயப் பெற்றோய்

சந்ததமும் அவன்உருவே சிந்தையிற்கொண்டு

            ஏத்தும்நெறி சார்ந்து நின்ற

எந்தவமே சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                              

 (2)

கறையவிரும் மிடற்றரன்சிற் பரைபரிதி

            கணபதிமால் கந்த னென்ன

மறைபகரும் அறுசமயக் கடவுளரும்

            பிறவுமென வரும்தே வெல்லாம்

நிறைபரத்தின் விளையாட்டென் றநுபவத்தில்

            இனிதுணர்ந்த நிலையோ யெங்கள்

இறையவனே சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                              

 (3)

பன்னுபுகழ்த் தமிழ்த்தலைவா  கவுமார

            நெறிபுவியில் பரவ வைத்து

மன்னுகுரு பரமணியே சமயநெறி

            கொங்கினிடை வளரச் செய்த

துன்னருள்சீர்ப் பெருந்தகையே உலகினிடை

            அவம்பெருக்கிச் சுழலா வண்ணம்

என்னையருள் சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                                          

 (4)

உற்றபவத் துழல்வேனைக் கருணையினால்

            கடைக்கண்ணரு ளுவந்து செய்து

பெற்றபிறப் பாலெய்தும் பயனிறைவன்

            பணியென்னப் பெரிதுஞ் சொல்லிப்

பற்றகன்றார் தொழும்நினது பாதமலர்

            பணியு முயர் பண்பு தந்தாய்

இற்றிசையார் சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                                          

(5)

துங்கமுறும் நின்றனது நூற்றாண்டு

            விழாஇயற்றத் தொடர்ந்து நின்ற

எங்களது விருப்பமொத்து முன்னிலையில்

            நீவிளங்கு ஏற்றி டாமல்

புங்கவர்போற் றிடமவுன நிட்டையுற்றாய்

            யாங்களுளம் புழுங்கி நின்றோம்

எங்ககன்றாய் சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                                          

(6)

ஆடுமயில்க் குகனைந்து கரன்கோயில்

            கவுமாரத் தணியார் மன்றம்

பீடுபெறு மறிநிலையம் பலவமைத்து

            மடாலயஞ்சீர் பிறங்க வைத்தாய்

கூடுமதன் பொறுப்பெனக்கிந் நாளளித்தாய்

            பணியாற்றும் கொற்ற மீவாய்

ஈடுதவிர் சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                                          

 (7)

மாற்றுயர்நின் பொன்மேனிக் கேற்றபணி

            சிலபுரியும் வாய்ப்பைத் தந்த

நீற்றுருவக் குருபரனே நின்தவச்சேய்

            ஆகியிந்த நிலத்தோ ரெல்லாம்

போற்றுகந்த சாமியெனுங் குருபரனால்

            அடித்தொண்டு புரிய என்னை

ஏற்றுவந்தாய் சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                              

 (8)

வெம்மிருகத் தன்மையையுற் றிவ்வுலகில்

            உழல்வோரை மேவு மன்பால்

வம்மின்னென அழைத்தணியார் திருநீறும்

            கண்டிகையும் வழங்கி யன்னோர்

தம்மிதயம் மகிழவரு ளபதேசந்

            தந்தருள்சீர் சார வைத்த

எம்மிறைவா சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                              

 (9)

அருந்தவரும் பெரும்புலமை யமைந்தவரும்

            பெரிதேத்தி யன்பு செய்யத்

திருந்தணியார் கௌமார சபையிலருள்

            சொல்மாரி தினமு மோங்கப்

பெருந்தனமுங் கல்விமுதல் பலபேறும்

            வேண்டுமவர் பெரிது கொள்ள

இருந்தருள்வாய் சிரவைஇரா மானந்தத்

            திருநாம மிசையுந் தேவே.                              

 (10)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக