ஞாயிறு, 18 அக்டோபர், 2026

தெனம நல்லூர் கரிய காளியம்மன் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

தெனம நல்லூர் கரிய காளியம்மன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

மன்னும் தெனமநல்லூர் வாழ்கரிய காளியம்மை

பன்னுமியல்ப் பாமாலைப் பாட்டருளும் - முன்னவனார்

பொன்னார் திருவடியும் போற்றுமயில் வேல்முருகன்

தன்நாள்ப் மலர்ப்பதமும் தான்.

(1)

நூல்

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

திருவார் கமலச் செழுமுகமும்

            திகழும் கருணை பொழிவிழியும்

பெருவா ரிதிநேர் கொடைக்கரமும்

            பிறங்கும் படைசேர் கரமலரும்

வருசீர்ப் பதுமத் திருவடியும்

            வயங்கச் சிங்கத் தெழுந்தருளிக்

கருவார் துயர்தீர் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.                                           

(2)

வடிவும் தனமும் மனமுமுயர்

            வகையாம் கல்வி ஞானமெலாம்

அடிசே ரடியார்க் கருள்பரையே

            அன்பால் நினது திருவடியில்

கடிசேர் மலர்கள் தூவியிரு

            கண்நீர் பொழிந்து துதிக்கும்நிலை

கடிதீந் தருள்வாய் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.                                           

(3)

ஞானம் பொலியும் புகழ்க்காழி

            ஞான சம்பந் தப்பெருமான்

வானம் புகழும் தேவாரம்

            வழங்கும் படிநீ யூட்டியபால்

ஈனம் பொலியு மெனக்களிக்கில்

            இசையா தென்று தடுப்பாரார்

கானம் பொலியும் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.                                           

(4)

ஆடக் குலத்தார் பரஞ்சேரி

            அருகி லுள்ள நின்கோயில்

நீடப் பணிவோர் மீகொங்கில்

            நிறைசீர் வெள்ளிங் கிரியருகில்

நாட வருங்கா லுண்கலயம்

            நாடி நீயு முடன்வந்தாய்

காடார் சோலைத் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.

(5)

சங்கம் புதரில்  நின்மேனி

            தன்னை யெறியு மவர்கனவில்

இங்கும் முடனே தொடர்ந்துவந்தேன்

            என்றாய் பரஞ்சே ரியிலிருந்து

பொங்குங் கருணை யுடன்வந்தாய்

            போற்று மவர்க்கு வினைவறுமைக்

கங்குல் தீர்த்தாள் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.                                           

(6)

ஆத்தாள் நினக்குத் திருக்கோயில்

            அமைத்து நாளும் திருப்பூசை

சேர்த்தார் திருநாள் பொலியும்விழாச்

            செய்தார் வந்து பணிபுரிவோர்

வாய்த்த பாடல் பலசொல்லி

            வணங்கு வோர்க ளனைவரையுங்

காத்தாண் டருள்வாய் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.

(7)

வாஞ்சை யுடனே யுயிர்க்கருணை

            வாய்ந்து மக்கள் கொலைநீக்கி

ஆஞ்சை வத்தின் நெறிமுறையே

            அமைய வுனது கடைக்கண்ணருள்

தோஞ்சு வாழ வருள்புரிவாய்

            தூய வெள்ளி மலையினிலார்

காஞ்சி வளம்சால் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.                                           

(8)

விண்பார் புகழும் பெருங்கருணை

            விமலை கமலை பணிபுரியும்

பண்பார் உமையே படைத்தளிக்கும்

            பரையே யுனது திருமுன்னர்

வண்பா வோதி வழிபட்டு

            வணங்கு மடியேம் துயர்தீரக்

கண்பார் சரணம் தெனமநல்லூர்

            கரிய காளி யம்பிகையே.                                           

(9)

சுருதி மறைகட் கெட்டாவுன்

            தூய திருத்தாள் பணிவார்க்கு

வருதீ தகற்றும் வரலாற்று

            வகையின் றென்பால் செய்துன்னருள்

தருவாய் என்றுன் சரணடைந்தேன்

            தமியேன் பிழைகள் தன்னையுளங்

கருதேல் வளஞ்சால் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.                                           

(10)

புவியில் அணியார் கொங்கினிடைப்

            புகழ்சால் வெள்ளி மலைச்சாரல்

அவிரும் காஞ்சி நதிவடபால்

            அருளா ருனது திருக்கோயில்

நவிலும் பணிகள் செய்துபணி

            நல்லோர்க் கருள்வாய் வயல்தோப்புக்

கவினும் கவினார் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையே.                                           

(11)

நூற்பயன்

முதிரு மன்பால் பணியன்பர்

            முன்னு மனைத்தும் முடித்தருளுங்

கதிரார் சோலைத் தெனமநல்லூர்க்

            கரிய காளி யம்பிகையை

வதியும் சிரவைக் கந்தகுரு

            மலர்த்தாள் வணங்குஞ் சிறியேன்சொல்

துதியைப் படிப்பார் அம்மையருள்

            தோய்ந்து வாழ்வார் மிகநலமே.                                 

 

திருப்புகழ்

                        தன தய்யாத் தன தானத் - தனதானா

கனவு மெய்யாக் கருதி ஆசைக் - கடல்மூழ்கி

            கருணை அல்லாத் துறையில் மேவிப் - பொருள்தேடி

இனவ ரல்லாக் கயவர் நேசத் - துழலாதே

            இனிய நல்வாக் கமைய நீசற் - றருள்வாயே

சினமு மில்லாத் திகர்தம் நேசத் - துரியாளே

            திகழும் மெய்யோர்க் குதவு தானத் - தயையாளே

தினமும் நல்வாழ்த் தடியர் சேவைக் - கினியாளே

            தெனம நல்லூர்க் கரிய காளிப் – பெரியாளே.

 

வீரமாச்சியம்மை துதி

(கலி விருத்தம்)

பார னைத்தும் பணிந்து  வியந்திடும்

சீர னைத்தும் சிறப்புற நல்குவாய்

சேர ணிப்புகழ்த் தெனமநல் லூரமர்

வீர மாச்சி வியன்மிகு தேவியே.        

 

கருப்பராய சுவாமி துதி

(நேரிசை வெண்பா)

தினம்பணியு மன்பர் திருந்துநலங் கொள்ளத்

தெனமநல்லூர் தன்னில்ச் சிறக்கும்  - வனக்கரிய

காளியம்மை கோயில்க் கருப்பராய சாமியணித்

தாள்பணிவார் வாழ்வார் தழைத்து.

 

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

வாழ்க தெனமநல்லூர் வாழ்கரிய காளியம்மை

வாழ்க திருவீர மாச்சியம்மை - வாழ்கவே

வந்து பணிபுரிவோர் மன்னுமிந்நூல் அச்சிட்டோர்

சந்ததமும் இன்பம் தழைத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக