ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சிரவையாதீனம் திருப்பணிக்குப் பொருள் வேண்டி பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சிரவையாதீனம் திருப்பணிக்குப் பொருள் வேண்டி பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

விருப்பும்மலி யடியார்கள் வியன்பூசை செய்தேத்தத்

தருப்பொலியுஞ் சிரவையிடைத் தங்கியருள் முருகோனே

உருப்பொலியுந் திருமடத்தி லுன்கோயி லிடையெடுத்த

திருப்பணிகள் நிறைவேறச் செல்வமருள் புரிவாயே. 

 (1)

மயிலாடக் குயில்கூவும் வளச்சிரவைத் திருமடத்தில்

அயில்வேற்கைக் கொண்டருளி யமர்குமர குருபரனே

ஒயிலமைநின் திருக்கோயி லோங்குபணி செய்வதற்குப்

பயிலன்ப ரிடமிருந்து பணவுதவி செயவருளே.                     

 (2)

கந்தமலர் கொடுராமா னந்தமுனி கந்தமுனி

சந்தமுறப் பணியவருள் தருகுமர குருபரனே

சிந்தையினில் மிகவிரும்பும் திருராச கோபுரச்சீர்

விந்தையுடன் நிறைவேற வேண்டுபொரு ளருள்வாயே.        

 (3)

புள்ளிமயில்ச் சிரவைநகர் புகழுங்கௌ மாரமடம்

வள்ளிதெய்வ யானைநடு வளர்குமர குருபரனே

அள்ளிவுணும் பேரழகா யமைநின்ற னுலாவினுக்கு

வெள்ளிமயில் செய்வதற்கு மிக்கபொரு ளருள்வாயே.

(4)

செல்லுறழும் பொழில்ச்சிரவைத் திருமடத்துக் கோயிலிடை

வள்ளிதெய்வ யானையுடன் வளர்குமர குருபரனே

பல்லியங்கள் மிகமுழங்கப் பகர்பூச விழாவினுக்காம்

நல்லதிருத் தேரமைய நயந்துனருள் புரிவாயே.

 (5)

தெருள்கொண்ட வடியார்கள் சிரவணமா  புரத்தினிடை

அருள்கொண்ட தேவியரோ டமர்குமர குருபரனே

இருளண்டா தாள்கோயில் இராசகோ புரப்பணிக்குப்

பொருள்கொண்டு வந்துபலர் பொலிந்துதவ அருள்வாயே.

 (6)

படிபுகழும் பெருஞ்சீர்த்தி படைத்தசிர வணபுரத்தைக்

குடியாகக் கொண்டருளுங் குமரகுரு பரமுருகா

அடியார்கட் கமுதளித்தற் கானதிரு மண்டபத்தைக்

கடிதமைத்தற் கானபொருள் கனிந்துதவ அருள்வாயே.         

 (7)

ஆயிரங்கண் பொலிதோகை அணிமயில்கள் நடமாடுந்

தூயசிர வணபுரத்தில் துலங்குகுரு பரமுருகா

தீயபணி செய்வார்க்கும் செம்பொருள் மிஞ்சிந்நாளில்

ஆயபணி புரியுமெமக் கானபொருள்  அருள்வாயே.  

 (8)

பற்றருத்த மெய்யடியார் பலர்போற்றச் சிரவையிடை

உற்றதிரு மடாலயத்தில் உறைகுமர குருபரனே

நற்றகைய திருப்பணிகள் நன்கியற்றற் குரியவகை

பொற்றரப்பற் பலர்மூலம் பொலியவருள் புரிவாயே.

 (9)

மணம்மலிபூஞ் சோலையிடை மயிலாடக் குயில்பாடும்

வணம்பொலியுஞ் சிரவைநகர் வாழ்குமர குருபரனே

குணமில்லார் தம்மிடத்துங் குவிந்தபொரு ளுன்பணிக்கா

எணமிகுந்த செயல்முடிக்க வெளிதிலருள் புரிவாயே.

 (10)

வள்ளன்மை யால்மிழுந்த வள்ளிதெய்வ யானையுடன்

உள்ளமுவத் தருள்சிரவை உற்றகுரு பரமுருகா

தெள்ளுமுன்கோ யில்ப்பணிகள் சிறப்பாகச் செய்வதற்கா

உள்ளுமெம தெண்ணமெலா முடனிருந்து முடித்தருளே.

 (11)

பன்னிரண்டு கைம்மலரால் பரவுமவர்க் கருள்வழங்கிப்

பன்னியிரு வோருடனே பதிச்சிரவை அமர்குமரா

என்னுடைய முறைகேட்டிங் கேற்றபணி நிறைவேறப்

பொன்னளிக்க வுன்னுடைய பொன்னடியே தொழுவேனே.

 (12)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக