ஞாயிறு, 18 அக்டோபர், 2026

பெரிய நாயக்கன் பாளையம் கல்யாண சுப்பிரமணியர் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

பெரிய நாயக்கன் பாளையம் கல்யாண சுப்பிரமணியர் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

கல்யாண சுப்ரமண்யக் கந்தப் பெருமானை

வெல்வேல் அணிகுகனை வேண்டியே - சொல்மாண்பு

சாலும் மதுரத் தமிழ்பாட வேண்டுங்கால்

வேலும்மயி லும்துணையா மே.

(1)

நூல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

இந்தணி சடையான் கனல்கணில் பொறியாய்

            இலங்கியா றெனவவர் முகமும்

மைந்தவிர் புயங்கள் பன்னிரண் டோடு

            வந்தனை யிந்தநா ளென்முன்

உந்தணி மயிலில் வள்ளிதெய் வானை

            உற்றிடச் சேவைதந் தருள்வாய்

கந்தனே பெரிய நாய்க்கனூர் மேவும்

            கல்யாண சுப்ரமண் ணியனே!                        

(2)

செய்யமே னியினில் சிந்துர வுடையுஞ்

            செம்மணிப் பணிகளு மணியுந்

துய்யவெண் ணீற்று நெற்றியும் பொலியத்

            துலங்கிடும் தெய்வநா யகனே

வெய்யதா னவர்தம் படையெலா மழிய

            வென்றிடும் வெற்றிவே லேந்துங்

கையனே பெரிய நாய்க்கனூர் வளரும்

            கல்யாண சுப்ரமண் ணியனே.            

(3)

சமரினில் பெரிய தானவச் சூரன்

            சலதியில் மாமரத் துருவாய்

அமரர்கண் டஞ்ச நின்றிடும் போதில்

            அயில்விடுத் துப்பிளந் தருளுங்

குமரனே ஆறு முகப்பெரு மானே

            குஞ்சர முகற்கிளை யவனே

கமலம்நீள் பெரிய நாய்க்கனூர் மருவுங்

            கல்யாண சுப்ரமண் ணியனே.                        

(4)

கொந்திசை கடம்புங் கூதள மலருங்

            குலவிய பன்னிரு புயத்தில்

இந்தவென் கவியு மிசையுமா றணியில்

            ஏற்றம்யா னெய்துவே னன்றோ

பந்தியாம் படைவீ டாறுடைப் பரனே

            பயன்தரும் பலாமரத் தூடே

கந்திசூழ் பெரிய நாய்க்கனூ ரவிருங்

            கல்யாண சுப்ரமண் ணியனே.            

(5)

மந்திர முதலா மாறெழுத் துடைய

            வள்ளலே எள்ளரும் யோக

தந்திர முடையார் கூறிடத் திகழா

            தாரமோ ராறுடைக் குகனே

இந்திரன் முதலா மிமையவர் வேண்ட

            இனியபே றருள்பவா யேற்ற

கந்தமார் பெரிய நாய்க்கனூ ருறையுங்

            கல்யாண சுப்ரமண் ணியனே.            

(6)

நாத்தழும் பேற நின்திருப் பாடல்

            நவின்றுநின் றன்னரு மறையாய்

ஏத்தரு ளெழுத்தா மாறினைச் செபித்துன்

            எழிலுரு மனத்தினி லெண்ணிப்

பூத்தநன் மலரா லுனையருச் சிக்க

            இயன்றநல்த் தவத்தினை நல்கிக்

காத்தருள் பெரிய நாயக்கனூர் கவினுங்

            கல்யாண சுப்ரமண் ணியனே.            

(7)

தவிசெனக் கமல மீதுவாழ் பிரமன்

            தயங்கிட மோதுகைக் குகனே

நவில்புகழ்க் கந்த மாதனத் தவிரும்

            நாதனே வானுளோர் தாமும்

புவியிலுள் ளோரும் போற்றிடு மாறு

            பொலிபரா மாரனும் நாணுங்

கவினுளாய்  பெரிய நாய்க்கனூர் மன்னுங்

            கல்யாண சுப்ரமண் ணியனே.            

(8)

நிருதராங் கொடியோர் பலரைவென் றிட்டு

            நிலவுவேல்ப் பூசனை புரிவார்க்கு

ஒருதடை யின்றித் திருவருள் புரியும்

            உதாரம்மிக் குடையசிற் பரனே

பெருதயா சீல முள்ளநற் குணனே

            பெற்றவா கனன்மகிழ் குருவே

கருதணிப் பெரிய நாய்க்கனூர் பொலியுங்

            கல்யாண சுப்ரமண் ணியனே.            

(9)

நொய்யினுஞ் சிறிய தவிட்டள வேனும்

            நொந்துவந் தவர்களுக் குதவி

செய்யும்மாண் பில்லாக் கசடர்தங் கட்டுஞ்

            சீவநல்க் கருணையைத் தருவாய்

வெய்யதா னவர்தங் குலமறக் கறுவும்

            வீறுள வேற்படை யேந்துங்

கையனே பெரிய நாய்க்கனூர் வாழுங்

            கல்யாண சுப்ரமண் ணியனே.            

(10)

மாதர்பொன் பூமி யென்னும்முப் பகையால்

            மதிமயங் கித்தள ராமல்

சாதனைத் தவம்செய் திடற்குரித் தான

            தன்மையை யென்னிடத் தமைப்பாய்

தூதனா யன்று தமிழ்க்கவி வேட்டுச்

            சுந்தரர்க் கருள்புரி சிவன்றன்

காதலா பெரிய நாய்க்கனூர் வதியுங்

            கல்யாண  சுப்ரமண் ணியனே.                                   

(11)

திருப்புகழ்

தனதனாத் தந்தன தானன- தனதானா

நறைகொள்பூக் கொண்டிரு தாள்மிசை - இடுசீரே

            நலமதாக் கண்டுசெய் பூசையில் - முயலேனோ

நிறையும்நீற் றன்பினர் கூடிய - குழுவூடே

            நிலவுமேற் றம்தமி யேனுற - அருள்வாயே

குறையிலாத் தொண்டர்கள் நாடிய - பயனீவாய்

            குலவுவேல் கந்த கலாபநன் - மயிலோனே

பிறைகொள்வாற் கன்றொரு தாரகம் - நுவல்வோனே

            பெரியநாய்க் கன்பதி மேவிய - பெருமாளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக