ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சிரவையாதீனம் அழகிய நாதர் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சிரவையாதீனம் அழகிய நாதர் பதிகம்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

பணிபவருக் கெந்நாளும் நலமே செய்யும்

            பண்ணவனே விண்ணவர்க்கா நஞ்ச முண்ட

துணிவினனே  பரிதிமதி அனலம் மூன்று

            சுடர்விழியெம் பெருமானே  தூவெள் ளேற்றாய்

பணியணியும் புலித்தோலு மெலும்பும் பூண்டு

            பச்சைநிறத் துமையை இடப்பாகம் வைத்தே

அணிகுலவுஞ் சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

 (1)

காடுறைந்து காய்கனியா தியநு கர்ந்து

            கடும்தவஞ் செய்திடு மாற்றல் கவின்றேனில்லை

மாடுமனை சுற்றமென நிலையில் வாழ்வை

            மனத்தினிடை சிறிதேனும் மதிப்பே னில்லை

கூடுபெரும் தொண்டரொடுங் கோயில் தொறுங்

            குலவி வழிபடும் நெறிகைக் கொண்டுள்ளேன்காண்

ஆடுமயில்ச் சிரவைநகர்க்  கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே!                 

(2)

பற்பலவாம் நெறியினிலுஞ் சைவ மொன்றே

            பாங்கினதென் றறிந்துநும்மைப் பரவ லுற்றேன்

நற்பதமென் சிரஞ்சூட்டி யாண்டு கொள்ள

            நரைவிடைமே லுமையுடனே நண்ணி யாள்வீர்

சிற்பமுறைப் படிராமா னந்த நாமத்

            தேசிகன்தா பித்ததண்ட பாணி யோடும்

அற்புதமார் சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

 (3)

மட்டவிழ்பூம் பொழிற்காழிச் சம்பந் தற்கும்

            மருள்நீக்கி யாருக்குஞ் சுந்த ரற்குஞ்

சிட்டர்தொழும் மணிவாச கர்க்குஞ் செய்த

            திருவருளி லொருசிறிதுஞ் சிறியேற் கீவிர்

அட்டவித வடிவாகி யகிலத் துற்றீர்

            அந்தணற்கா வந்தகனை யன்று தைத்தே

அட்டவனே  சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

 (4)

களித்தமனத் தன்புடனே மைந்தற் கொன்று

            கறியமுதூட் டினருமில்லில்க் கவின்றும் வேறாய்

களித்தலிலா திருந்தாரு மாறு நாளில்

            காதல்மிக்குக் கண்ணிடந்த தொண்ட னாருங்

குளித்தவும தருள்கடலில் யானு மெய்தக்

            கூடுமோ அனல்க்கண்ணால்க் குமரன் றன்னை

அளித்தவரே சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

(5)

பாடவல்ல ஞானசம் பந்த ருக்குப்

            பாலளித்தீர் சிவிகைமுதல்ப் பலகொ டுத்தீர்

நாடறியச் சூலையினை யப்பற் கீந்தீர்

            நாரியரைச் சுந்தரற்கு நல்க லானீர்

சீடரொடு தோன்றிமணி மொழியை யாண்டீர்

            சிறந்தநும்தம் செயலெவணந் தெரிவேன் மன்றுள்

ஆடவல்லீர் சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

(6)

மயிலனைய கயற்கண்ணி யம்மை தன்னை

            மணந்துகலி யாணசுந் தரரா வாழ்ந்தீர்

எயிலொருமூன் றினையெரித்த கார ணத்தால்

            இசைந்ததிரி புரசுந்த ரப்பே ரேற்றீர்

பயிலுமிள மதிபுனைந்த பான்மை யாலே

            பகர்சோம சுந்தரப்பேர் படைத்தீர் சூல

அயிலுடையீர் சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

 (7)

ஏலமுண்ட குழல்கொள்சிவ காமித் தாய்முன்

            எடுத்ததிரு வடிகாட்டித் தோற்கச் செய்தீர்

நீலமுண்ட மயில்க்குகன்பா லொருமொ ழிக்கு

            நிலவுபொருள் வினவுசெயல் நிகழ்த்த லானீர்

ஞாலமுண்ட திருமாலோர் பாங்கில்க் கொண்டீர்

            நண்ணிவழி படுமடியர் நாளும் வாழ

ஆலமுண்டீர் சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

 (8)

படவரவப் பணிமுதலாக் கொடிய வாகப்

            படைத்துமுனி வரரேவப் பட்ட தெல்லாந்

திடமுடன்நும் மடைக்கலமாய்ச் சேரக் கொண்டீர்

            சிறியனேன் வினையடங்கச் செயல்கூ டாதோ

கடகளிற்று முகமகனு மழகார் செல்வக்

            கன்னியும்நும் மிருபுறத்தில்க் கவின வாழ்வீர்

அடல்விடையீர் சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

 (9)

ஐந்தென்னும் மலர்க்கணையால்ப் பொருத மாரன்

            அழிவாகக் கனல்க்கண்ணைத் திறந்தீர் வேதன்

உந்தெழுத்தா லெமைத்தீமை யுறாமல்க் காப்பீர்

            உயர்பார தக்கதையை யும்பல் மைந்தன்

வந்தெழுதப் பணித்திட்டீ ருயிர்க ளென்றும்

            மாறாமல் வரும்பிறப்போ டிறப்பை மாற்றும்

ஐந்தெழுத்தீர்  சிரவைநகர்க் கோவில் மேவும்

            அழகியநா தப்பெயர்கொள் ளைய னாரே.                 

 (10)

நூற்பயன்

பந்தவினைப் பிணியகலத் தவமே செய்யும்

            பண்புறும்மெய் யடியவரைப் பரிந்து காக்க

வந்தஇரா மானந்தக் குருப்பி ரானை

            மனம்கொள்கந்த சாமிமுனி வரன்தாள் போற்றும்

சுந்தரப்பே ருறுமடியேன் சிரவைக் கோவில்

            துலங்குமழ கியநாதர் துணைத்தாள் பற்றி

உந்தருள்வேட் டோதுமிந்தப் பாடல் கற்போர்

            உயர்ந்தநல மெல்லாம்பெற் றுவப்பர் தாமே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக