ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சித்தோடு பாலதண்டபாணிக் கடவுள் பதிகம்

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சித்தோடு பாலதண்டபாணிக் கடவுள் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

செண்டவிர்பூஞ் சோலைதிகழ் சித்தோடு வாழ்பால

தண்டபா ணிப்பெருமான் தாள்மலரில் - விண்டணிபாத்

தந்தருளற் கைந்துகரத் தந்திமுகத் தெந்தைமலர்ச்

செந்தகைத்தாள் சிந்தையில்வைத் தேன்.

 (1)

நூல்

(கொச்சகக் கலிப்பா)

செங்கிரணத் திருமுடியும் திருவருள்சீர் பொழிவிழியும்

மங்களத்தண் மணிகரமும் வயங்குதொடை  யிடக்கரமுந்

துங்கமல ரடித்துணையுந் தோயவந்தாள் சித்தோட்டில்த்

தங்கியவிர் சீர்பால தண்டணிகைப் பெருமானே.       

(2)

சந்தம்மலி திருப்புகழ்ப்பா சாற்றருண கிரிநாதர்

செந்தமிழ்கேட் டருளியநீ சிறியேன் பகர்ந்தணியும்

இந்தமொழி தன்னையுமேற் றினிதருள்வாய் சித்தோட்டில்ச்

சந்தம்மிகு மருள்பால தண்டணிகைப் பெருமானே.  

 (3)

புலக்காட்டில் மிகச்சுற்றிப் புலர்ந்ததெனை யேற்றுனது

நலச்சேவை ஈந்தருளி நன்னெறியி லுறவைப்பாய்

குலத்தோகை மயிலாடக் குளிர்சோலைச் சித்தோட்டுத்

தலத்தேமே விடும்பால தண்டணிகைப் பெருமானே.             

 (4)

போற்றுகின்ற யடியவர்க்குப் பொருந்துமிலக் கணமாகத்

தோற்றுநல மெல்லாம்யான் தோயநல்லிப் புரந்தருள்வாய்

சேற்றுவயல் வளப்பம்மிகச் சேர்ந்தபுகழ்ச் சித்தோட்டில்ச்

சாற்றுமணி நீள்பால தண்டணிகைப் பெருமானே.    

 (5)

நஞ்சணிந்த மிடற்றரனும் நற்றமிழ்மா முனிவரனுஞ்

செஞ்சரணம் போற்றுமன்று செப்புபொருள் காலையுற்றேன்

கொஞ்சமுந்தன் நெஞ்சிலிதைக் கொண்டருள்வாய் சித்தோட்டில்

தஞ்சமுற்றே னெழிற்பால தண்டணிகைப் பெருமானே.        

 (6)

செந்தகரி லேறியன்று சென்றுசுர ரிடர்தீர்த்தாய்

பைந்தகைய மயிலேறிப் பாருலகை வலம்வந்தாய்

வெந்ததிரு நீறணிந்த மேனியுற்றாய் சித்தோட்டில்

சந்தகம்வாழ் வுறும்பால தண்டணிகைப் பெருமானே.

 (7)

வெம்பந்த பாசம்மிக மேவுபுவி மாந்தரைப்போல்த்

தெம்புந்து மாயையிடைத் தியங்காநல் வாழ்வருள்வாய்

நம்பந்த ரங்கமுறும் நற்றவர்வாழ் சித்தோட்டின்

சம்பந்த னாம்பால தண்டணிகைப் பெருமானே.        

(8)

சித்திமுத்தி பெறவேட்டுத் தினமுமுனை யேநாடிப்

பத்திசெய்வா ரொடுகூடிப் பணியுமெனைக் காத்தருள்வாய்

நத்தியெழுத் தோராறும் நண்ணுநர்வாழ் சித்தோட்டில்ச்

சத்திவேல் புனைபால தண்டணிகைப் பெருமானே.  

 (9)

கந்தம்மிகு பல்மலரால்க் காதலொடுன் திருவடியில்ச்

சிந்தனைகொண் டருச்சிக்குஞ் செல்வமென் றருள்வாய்

வந்தழிபோற் றுநர்வேண்டும் வாழ்வனைத்துஞ் சித்தோட்டில்த்

தந்தருள்செய்  புகழ்பால தண்டணிகைப் பெருமானே.          

 (10)

விண்முகம்வாழ் தேவருய்ய விறலவுணர் தமையழித்தாய்

கண்முயங்கு தோகைவள்ளி ககனமா தினைமணந்தாய்

பண்முழங்கும் பழமடியார் மலர்போற்றுஞ் சித்தோட்டில்ச்

சண்முகவே ளேபால தண்டணிகைப் பெருமானே.

 (11)

நூற்பயன்

சேமமெலாம் தினங்குலவுஞ் சித்தோட்டுப் பதியில்வளர்

தாமரைப்பூங் கழல்ப்பால தண்டணிகைப் பெருமானைத்

தேமணக்கச் சுந்தரப்பேர் திகழடியேன் செப்புமிவை

நாமணக்கப் பாடுமவர் நன்மையெலாம் பெறல்நிசமே.

 

திருப்புகழ்

தத்தான தான தான தந்த தானத் - தனதானா

பற்றேறு மாய வாழ்வை

நம்பி வீணில்த் - தொலையாதே

            பத்தோடு நூறு நாமம்

விண்டு வாழப் - பெறுவேனோ

நற்றோகை நீட மேவு

சந்த மார்பொற் - சிகிமீதே

            நட்போடு நீயோர் சேவை

என்றன் நேரில்த் - தருவாயே

புற்றோலி னாடை பூணும்

நம்ப னாசைப் - புதல்வோனே

            புத்தேளிர் வாழ்வு காண

அன்று மாவைச் - செறும்வீரா

சிற்றேனல் தோயும் மாது

கொண்க ஆகித் - திகழ்வேலா

            சித்தோடு மேவு பால

தண்ட பாணிப் – பெருமானே. 

 

வாழ்த்து வெண்பா

(நேரிசை வெண்பா)

சீலம்மிகு சித்தோட்டில்ச் சேருமன்பி னோர்வாழ்க

பாலதண்ட பாணிபுகழ் பாடுவோர் - சாலநலங்

கொண்டின்பாய் வாழ்க குலவுபணி செய்யுமுயர்

தொண்டரெலாம் வாழ்கநெடி து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக