ஞாயிறு, 18 அக்டோபர், 2026

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் அட்டகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் அட்டகம்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

மிக்கமறை நான்கினுக்கும் முதலாகுஞ் சிறப்பு

            மேவிய எழுத்தாகும் பிரணவத்தின் வடிவாய்க்

கைக்களிறென் றவிர்முகமு மைந்துகர தலமுங்

            கருணைபொழி விழிகளுங்கொண் டாகுமிசைக் குலவி

இக்கணத்து னருட்சேவை யெளியனேன் கண்காண

            ஈந்தருளத் திருவுளம்சற் றிரங்கிடவேண் டினன்காண்

தக்கசுவைக் கனிவேண்டி யுலகிதுவே யென்று

            தாய்தந்தை தமைவலம்செய் சத்திவிநா யகனே.        

(1)

தும்பிமுகத் தைந்துகரத் தொந்திவயிற் றெந்தாய்

            தோயகுளக் கரைநின்முன் தோய்திரட்டைப் புலவர்

நம்பிவைத்துக் குளித்துவந்து பணம்காணா விதத்தை

            நாடியுன்றன் மடிபிடித்து நற்றமிழின் முழுப்பா

தம்பியுரைத் திடுபொழுதி லத்துடனோர் பணமும்

            சாரவிரு பணமாகத் தந்தருள்விந் தையுளாய்

கொம்பொடித்து வடமேரு மாமலையில் பண்டு

            கோமுனிக்குப் பாரதம்செய் சத்திவிநா யகனே.         

(2)

போற்றுதமிழ்ச் சுந்தரற்கா விருத்தகிரி யாற்றில்

                போட்டபொன்னைத் திருவாரூர்க் குளத்திலெடுத் திடுகால்

மாற்றுரைத்துப் பார்க்கவொரு சான்றான நீயென்

            மனச்சான்றை யறியவெண்ணில் மந்தனொரு தரமோ

கூற்றுதைத்த பரமனருட் பேற்றிலுரு வெடுத்த

            குஞ்சரமே தஞ்சமெனக் குலவுமெனை யாள்வாய்

ஆற்றலொடு வளர்புகழு மன்பிருக்கும் நெஞ்சும்

            அத்தனையு மருளவல்லாய் சத்திவிநா யகனே.          

(3)

பொற்குவைவைத் திருந்தாலும் பதவியிலுற் றாலும்

            புவிமுழுதும் தனதாட்சி பொருந்தயிருந் தாலுங்

கற்குமுயர் கலைகளெலாம் கைவரப்பெற் றாலுங்

            ககனவழி போய்மீளுங் கண்ணியமுற் றாலும்

நிற்குறித்துப் போற்றுமுய ரன்பிலரே யானால்

            நெஞ்சவரை மதியாத நிலையருள வேண்டுங்

கற்கனியக் கனிகின்ற செந்தமிழாய் வாழ்த்திக்

            கைதொழுதேன் மெய்யுருவாம் சத்திவிநா யகனே.    

(4)

முத்தானாய் மணியானாய் பொன்பொருளு மானாய்

            மொழியுமுயிர்க் குலத்துக்கே முதல்வனும்நீ யானாய்

பித்தானார் போலுலக மாயவாழ் வதனில்ப்

            பெரிதிறுமாந் தலையாதுன் பிரசமலர்த் தாளில்

நத்தார்வத் துடன்நாளும் வழிபாடு புரியும்

            நல்லோர்கொள் ளானந்தம் நல்கும்சித் தாகிச்

சத்தானாய் மறைகளுக்கோர் சான்றானாய் கைலைச்

            சங்கரனார் திருமகனே சத்திவிநா யகனே.    

(5)

சிந்தனையி லுனைநினைந்து வந்தனைசெய் தன்பால்

            சிவநெறியில் நிற்குமுயர் தவநெறியை யருள்வாய்

நிந்தனைகொள் பொன்புவியே முதலாய ஆசை

                நெஞ்சமெலாங் கொள்ளைகொள நெடிதயர்ந்தேன் கண்டாய்

பந்தவினைப் பழம்பாசப் பற்றெனும்சங் கிலியில்

            பட்டதுயர் போதுமினிப் பாதமலர் தருவாய்

சிந்துரவேர் வேழமுகம் செழுந்தரளக் கோடுஞ்

            சித்திரமாய்ப் பொலிவுசெயும் சத்திவிநா யகனே.      

(6)

வஞ்சனைபொய் கள்காமம் மிகவுடைய மாந்தர்

            வாழ்க்கைநெறி தனைத்திருத்தும் வகையருள வேண்டுங்

கஞ்சமலர் நிகருனது திருவடிகள் நெஞ்சில்

            கணமேனும் மறவாத நிலையருள வேண்டும்

மஞ்சனையை கூந்தலுடைச் சித்திபுத்தி கணவா

            வல்லவருள் பெருமானே துயர்மிகுந்த போதில்

அஞ்சலென்று கரம்காட்டி அணைத்தின்பம் நல்கி

            ஆனந்த நிலைசேர்க்கும் சத்திவிநா யகனே.  

(7)

நயம்மருவு செந்தமிழால் துதிபுரியு மௌவை

            நாடுதல்போல் கயிலைமிசை நண்ணிடமுன் புரிந்தாய்

செயம்மருவு வேற்குகனாம் தம்பிகுற வள்ளி

            செழும்புயம்தோய் வுறக்கானில் திரிகரியாச் சென்றாய்

அயலவர்கள் பக்திநெறி யறியாத பேர்கள்

            அறிவுகொள லவரிடம்நான் பரிவுகொளச் செய்வாய்

வியனுலக வாழ்க்கையெனும் விரிகடலில் புணையாய்

            விளங்குமெழி லரசேமெய்ச் சத்திவிநா யகனே.         

(8)

நூற்பயன்

(நேரிசை வெண்பா)

தள்ளாக் கருணைமலி சத்தி விநாயகனைப்

பொள்ளாச்சி என்னப் புகல்பதியில் - உள்ளார்

புகழும்மகா லிங்க புரத்திலின்று போற்ற

மிகவரும்நல்ச் சீரனைத்தும் மெய்.

 

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

மருவுசத்தி ஐங்கரன்தாள் வாழ்கமகா லிங்க

புரத்துறையு மன்பர் பொலிக - தருமம்தான்

நாளும் சிறந்திடுக நல்லார் உயர்ந்திடுக

ஆளு மிறைவ னருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக