ஞாயிறு, 18 அக்டோபர், 2026

பிள்ளையப்பன் பாளையம் செல்வநாயகியம்மன் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

பிள்ளையப்பன் பாளையம் செல்வநாயகியம்மன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

பன்னுபுகழ் பிள்ளையப்பன் பாளையத்தில் கோயில்கொளும்

அன்னைசெல்வ நாயகிமே லன்பாக - மன்னுமிசைச்

செந்தமிழ்ப்பாட் டென்னுள்வரச் செய்தருளு மைங்கையுளான்

சுந்தரப்பொற் பாதத் துணை.

(1)

நூல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

நிறைமதி முகமும் திருவருள் கருணை

            நிலவிய மலர்த்திரு விழியும்

நறைகமழ் மாலை யணிதிருப் புயமும்

            நற்படைக் கைகளுந் தொழுவார்

கறைதவிர்த் தருளும் திருவடி மலருங்

            கவின்றிடக் காட்சிதந் தெங்கள்

குறைதவிர் பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(2)

நற்றவத் தினர்த முளத்திருக் கோவில்

            நண்ணிடும் புண்ணிய முதல்வீ

பற்றறுத் துனது திருவடி மலரே

            பணிந்திடும் பாக்கியம் பணிப்பாய்

பெற்றமே லமருஞ் சிவபிரான் பங்கில்

            பிறங்கிடு மம்மையா முமையே

குற்றமில் பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(3)

மங்கலம் பொலியு மம்மையே யுனக்கு

            வயங்கும்நல் திருமுழுக் காட்டித்

தங்களா லியன்ற வகையினில் பூசைத்

            தகைசெயு மவர்களுக் கெல்லாம்

பொங்குமங் கலம்சா லிகபர நலன்கள்

            பொருந்திவாழ்ந் திடவருள் வழங்காய்

கொங்கிசை பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(4)

நலம்திக ழெழுமாத் தூரினில் வந்து,

            நாங்களம் மையைத்தொழற் கரிதால்

வலம்திக ழெமது பகுதியில் கோயில்

            வகுத்திட வேண்டுமென் றன்பால்

தலம்திகழ் குலத்துக் குருவிடம் வேண்டித்

            தாபித்த காடைகூட் டத்தார்

குலம்பணி பிள்ளை யப்பன்பா ளையத்தில்                

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(5)

நன்றெலா மருளு முன்திரு முன்பில்

            நயந்துவேண் டிடுமோர்விண் ணப்பம்

உன்றன தருளா ருயிரின மாக

            உற்றிடு மாடுகோ ழிகளைக்

கொன்றிடும் தீயோர் தூயநல் நெறியைக்

            கொண்டிடக் கண்டருள் கருணைக்

குன்றமே பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(6)

வடிதமிழ்ப் பாடல் பலபடப் பாடி

            வாழ்த்தவும் வணங்கவு முனது

அடிமல ரதனில் கடிமலர் தூவி

            அருச்சனை செய்யவு மருள்வாய்

படியினில் மக்கள் பசிப்பிணி நீக்கிப்

            பாதுகாத் திடுமியல் வேளாண்

குடிதழை பிள்ளை யப்பண்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(7)

நறைகமழ் மலர்மா லைகளுட னினிய

            நயம்நிறை செந்தமி ழதனால்

துறையமை பாமா லைகள்புனைந் தேத்தித்

            தூயமா தவம்செய வெண்ணி

இறைவனோ டுன்பால் வேண்டிடு மென்றன்

            இச்சையை வழங்கினா லருள்சீர்

குறையுமோ பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(8)

தடுத்தெதி ருன்பால் போர்செயும் மயிடன்

            தன்னையுன் பதமலர்க் கீழாப்

படுத்தனை வரும்பார்த் தென்றுமே வணங்கப்

            பண்ணினை வுனைவணங் கென்பால்

அடுத்தவல் வினையைக் கெடுத்து நின்பாதத்

            தடிமையாச் செய்துநி னருள்சீர்

கொடுத்தருள் பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(9)

சிங்கவா கனமேல் படைக்கரம் துலங்கச்

            சேவையீந் தருள்புரி யபயம்

மங்கலம் மிக்க மதுரையம் பதியில்

            மாட்சிசா லாட்சிசெ யரசாய்ப்

பங்கமி லருள்சீர் காட்டிய வெங்கள்

            பாக்கிய மாமுமை யரசீ

கொங்கிலார் பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(10)

தீதக லுலகத் துயிரெலாம் படைத்துத்

            திகழ்தரக் காத்தருள் புரிந்தும் 

மீதமை ஊழி தொறும்மிக இளமை

            மிளிர்தரும் கன்னியாம் உமையுன்

பாததா மரையில் வீழ்ந்துபோற் றிடுமெம்

            பரம்பரை யினர்களுக் கெல்லாம்

கோதுதீர் பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(11)

தெள்ளுதீந் தமிழ்ப்பாட் டளவறப் பாடிச்

            சிரவண புரமடா லயத்தில்

விள்ளுபே ரருள்சீர்த் தவமுனி யாக

            விளங்கிய கந்தசா மிப்பேர்

வள்ளல்பொற் றிருந்தாள் சரணமே சரணா

            வாழ்ந்திடும் சிறியனேன் பாடல்

கொள்ளுவாய் பிள்ளை யப்பன்பா ளையத்தில்

            கோயில்கொள் செல்வநா யகியே.                             

(12)

திருப்புகழ்

தய்ய தானன தானன - தனதானா

வைய மீதுபல் வாறுளம் - மறுகாதே

            மைய லார்வினை யாலிடர் - பெருகாதே

உய்யு மாறெனை யாளவோர் - அரிமீதே

            ஒல்லு மாறொரு சேவையை - அருள்வாயே

கையி லார்திரி சூலம - துடையாளே

            கவ்வை தீர்தரு மாறருள் - தயையாளே

செய்ய தாள்பணி வோர்பெற - அருள்தாயே

            செல்வ நாயகி யாகிய - உமையாளே.

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

பற்றுபுகழ்ப் பிள்ளையப்பன் பாளையக் கோயில்வாழ்க

நற்றகைசா லெம்செல்வ நாயகிக் - குற்றபணி

செய்யுமவர் வாழ்க தினந்தோறும் போற்றுமவர்

உய்திபெற்று வாழ்க உவந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக