ஞாயிறு, 18 அக்டோபர், 2026

பூராண்டாம்பாளையம் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

பூராண்டாம்பாளையம் பதிகம்

விநாயகர் துதி

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

இந்தணிச்செஞ் சடிலமிசை இசைகங்கை நதியும்

            இலகுநெற்றிக் கண்ணுடனே இணைவிழியு மொற்றைத்

தந்தமணி துதிக்கரமும் துதிப்பவர்கட் கருளும்

            தகைசான்ற தெய்வபஞ்ச தருநாணுங் கரமும்,

வந்திக்கு மடியவர்க்கு வழங்குதிரு வடியும்

            மனத்தகத்தும் புறத்துமுற வந்தருள வேண்டும்

புந்திமகிழ்ந் தீகைசெய்வார் பலர்மேவி வாழும்

            பூராண்டாம் பாளையத்தில் பொருந்துகண பதியே.

(1)

முருகக் கடவுள் துதி

ஆயிரம்மன் மதனுருவ மனையதிரு முகமும்

            அயில்வேலை அணிபுயமு மபயவர தம்கொள்

சேயதிருக் கரமலரும் செந்தகைச்சே வடியும்

            சிறியேன்முன் சிகிப்பரியில்  திகழ்ந்தருள வேண்டும்

மேயநில வளத்துடனே நீர்வளமும் பொருந்தி

            மேவுசெல்வ ரறம்புரியும் மேன்மையுளத் துடனே

தூயதிருப் பணிசெய்யும் பூராண்டாம் பதியில்

            துலங்குசிவ சுதபால சுப்பிரமண் ணியனே.

(2)

சிவபெருமான் துதி

திங்களணி செஞ்சடையும் திருநீற்று நுதலும்

            தீபரிதி சந்திரனாத் திகழ்மூன்று கண்ணும்

மங்கலமா ரபயவர தம்பொலியுங் கரமும்

            மான்மழுஆர் திருக்கரமும் வனசமல ரடியுங்

கொங்களவுந் திருக்கூந்த லுமையிடப்பா லிருப்பக்

            குலவிடப வாகனத்தில் குளிர்காட்சி நல்காய்

பங்கமிலாப் பூராண்டாம் பாளையத்தில் மேவும்

            பரமசிவ னேவுனது பாதமடைக் கலமே.

(3)

நூல்

(கலி விருத்தம்)

தீய விடமெலாம் தீர்த்திட் டுடல்த்துயர்

ஓயச் செய்திடு முண்மைப் பரமனார்

கோயில் கொண்டு குலவி விளங்குமூர்

ஆய மேன்மைப்பூ ராண்டாம் பாளையம்.                              

(4)

தீர்த்தம் கோவில்த் திருநீ றவைகொடு

தீர்த்தற் கரியநோய் தீர்த்திட் டருள்செயுந்

தீர்த்தன் பரம சிவனருள் மேவுமூர்

ஆர்த்திமிக் கமையும்பூ ராண்டாம் பாளையம்.           

(5)

திருவருள் சத்தியாம் சேய வேல்ப்படை         

உருவது கொண்டுமு னுறுமவர்க் கருள்தரும்

பெருமைகொள் பரசிவன் பிறங்கி வாழுமூர்

அருமைமிக் கமையும்பூ ராண்டாம் பாளையம்.                      

(6)

இந்தணி பரமனா ரிலங்குமை மூர்த்தியாய்

வந்துல குயச்செயும் வண்மை காட்டவே

ஐந்துவேல் வடிவமா யாலயத் தமர்தரும்

அந்தம்மே வியதுபூ ராண்டாம் பாளையம்.                 

(7)

ஏலமார் நாயுடு யேற்றமா ரன்டினைச்

சாலவே ஏற்றநல்ச் சாமிதன் வேண்டலால்

வேலதா யுருக்கொடு விளங்கும் பரசிவன்

ஆலயம்தி கழ்வதுபூ ராண்டாம் பாளையம்.               

(8)

கணபதி வேல்குகன் கவின இருபுறம்

குணம்மலி கோயிலில் குலவும் பரசிவன்

வணநவக் கிரகமும் மருவக் கோயிலுள்

அணவுசீர் மேவும்பூ ராண்டாம் பாளையம்.                            

(9)

தவம்மலி முத்துக் குமார சாமிநல்

நவம்மலி சித்திகள் நயந்து, வேலுருச்

சிவமுறப் பதிட்டைசெய் சீர்த்தி மிக்கதால்

அவமறப் போக்கும்பூ ராண்டாம் பாளையம்.             

(10)

முத்துக் குமாரநற் சாமி முனிவரன்

சித்துச் செய்து சிறந்த சமாதியை

அத்த னய்யனம் கோயி லெனச்சொலும்

அத்தம் மேவும்பூ ராண்டாம் பாளையம்.                                 

(11)

தணியில் கோவிந்த சாமி யவருடன்

பணியு மன்பர் பலர்பொரு ளுதவியால்

மணிகொள் கோயில் வளருந் திருப்பணி

அணிகொள் சீர்த்திபூ ராண்டாம் பாளையம்.             

(12)

நன்மை மேவிட நல்ல பெரியவர்

புன்மை தீர்த்தருள் புண்ணியன் கோயிலில்

தன்மை யார்கும்பத் தண்புன லாட்டியது

அன்மை தீர்க்கும்பூ ராண்டாம் பாளையம்.                

(13)

நல்ல வண்ணங்கள் நயந்தபல் மூர்த்திகள்

வல்ல மண்டபத் தின்மேல் வயங்கவே

சொல்ல வல்ல திருப்பணி தோய்தரும்

அல்லல் தீர்க்கும்பூ ராண்டாம் பாளையம்.                             

(14)     

வாழ்த்து

வாழ்க வாழ்கபூ ராண்டாம் பாளையம்

வாழ்க பரசிவன் மாண்புகொள் ஆலயம்

வாழ்க வந்து வணங்குமெய் யடியவர்

வாழ்க மாநிலம் மன்னுயிர் யாவுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக