ஞாயிறு, 18 அக்டோபர், 2026

விளாங்குறிச்சி (விளவை) காமாட்சியம்மன் கலிப்பாப் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

விளாங்குறிச்சி (விளவை) காமாட்சியம்மன் கலிப்பாப் பதிகம்

(வெண்டளைக் கலிப்பா)

விண்ணா டரும்பணியும் மெய்த்தவமு முன்றன்னைப்

பண்ணார் தமிழ்த்துதிசெய் பண்புமுறப் பண்ணிடுவாய்

தண்ணார் மதிதீ தபனனெனும் மூன்றாய்

கண்ணாளே சீர்விளவைக் காமாட்சி யம்பிகையே.   

(1)

பொய்வயங்கும் மாயைப் புவிவாழ்வை யேவிரும்பி

மெய்தளர்வே னுன்றனருள் மேவும்நாள் எந்நாளோ

செய்யமல ராங்கணையுஞ் செங்கரும்பு வில்லுமவிர்

கையுடையாய் நல்விளவைக் காமாட்சி யம்பிகையே.

2)

மங்கலமெல் லாந்தருமுன் வாரிசப்பொற் றாள்பரவுந்

துங்கம்மிகு வாழ்வடியேன் தோயப் புரிந்தருள்வாய்

சிங்கமிசை ஊருஞ் சிவையே செழுங்கனகக்

கங்கணக்கை யாய்விளவைக் காமாட்சி யம்பிகையே.          

(3)

பூத்தவிரும் பொற்கொடிநேர் பொற்பா ருனையன்பால்

பாத்தழைக்கப் பாடுமொரு பண்டிதன்றன் மகளானாய்

ஏத்த வறியா எளியேனை யாண்டன்பால்

காத்தருள்செய் வாய்விளவைக் காமாட்சி யம்பிகையே.        

(4)

நற்றா மரைத்திருவும் நாமகளும் போற்றிடுமுன்

பொற்றாள் களையடியேன் புன்தலையில்ச் சூட்டிடுவாய்

வற்றக் கருணை மலியுமுளத் தெம்தாயே

கற்றார் திகழ்விளவைக் காமாட்சி யம்பிகையே.                   

(5)

பச்சிலையும் நீரும் பரிந்தன்பா லிட்டவர்க்கு

மெச்சினிய வாழ்வருளுன் மேன்மைதெரிந் தேத்தலுற்றேன்

மெய்ச்சிவன்பா லிருநாழி மேவுநெல்பெற் றறமெல்லாங்

கச்சியிற்செய் தாய்விளவைக் காமாட்சி யம்பிகையே!.

(6)

கூன்முயங்குஞ் சந்திரனுங் கொக்கிறகும் பூண்டபிரான்

மான்முதிர்ந்து தென்மதுரை வந்துமணஞ் செயப்பெற்றாய்

தேன்முதிர்பிள் ளைத்தமிழ்நூல்  செப்புதொண்டன் காணமன்பால்

கான்முளையா னாய்விளவைக் காமாட்சி யம்பிகையே.

(7)

எத்தலமுஞ் சொல்லு மெழிற்பாண்டி நாட்டினிடை

முத்தலமும் போற்ற முடிசூடி யாண்டனையே

கொத்தலர்சூ டுங்குகன்பால் கூர்வேல் வடிவாகிக்

கைத்தலத்துற் றாய்விளவைக் காமாட்சி யம்பிகையே.          

(8)

நாரியர்க்கெல் லாமரசாம் நாரணியே யாரணியும்

மூரிவிடை யானொடென்றன் முன்வந் திடயிசைவாய்

சீரியபா சாங்குசம்கை சேர்ந்திலகும் பச்சுருவக்

காரிகையா ளேவிளவைக் காமாட்சி யம்பிகையே.

(9)

சாதலுடன் பிறப்பதுவுஞ் சாராதுன் தாளிலொன்றாய்ப்

பேதமறச் சேருமுத்திப் பேறடியேற் கீந்தருள்வாய்

ஆதரத்தா லன்றுகம்பை யாற்றிலரன் பூசைசெயுங்    

காதலுற்றாய் சீர்விளவைக் காமாட்சி யம்பிகையே.  

(10)

திருத்தமுற வுன்றன் திருமுன்வந்து சேவிப்போர்

பொருத்தமுறு தொண்டுசெய்வோர் பூசைசெய்வோர்க் கென்றென்றும்

பெருத்தநல மெல்லாம் பெரிதுமெய்தத் தந்தருளுங்

கருத்தமைந்து வாழ்விளவைக் காமாட்சி யம்பிகையே.         

(11)

திருப்புகழ்

தனனதன தானாத்த - தனதானா

கடைபடுபொய் வாழ்வேற்று - மெலியாதே

            கனிதமிழி னாலேத்தல் - மறவாதே

படைகொள்மத வேள்போர்க்கு - மெலியாதே

            பதுமம்நிகர் தாள்சூட்டி - அருள்வாயே

தடையிலருள் சேர்கூர்த்த - விழியாளே

            சயிலமுறும் வேளேற்ற - அயிலாளே

விடையிலிவர் வேளேற்ற – எழிலாளே

            விளவையவிர் காமாட்சி – உமையாளே.

விநாயகர் துதி

(இரட்டை ஆசிரிய விருத்தம்)

திருவருள் கருணைமலி பிரணவப் பொலிவோடு

                        திகழ்யானை முகமுமூன்று

            திருவிழிக ளுஞ்செவித் துணைகளும் பிறைபோல்

                        செறிந்திடும் கோடுமங்கை

மருவுபா சாங்குசங் கனியோடிந் திடுகொம்பும்

                        மன்னுமா றாகுமீதில்

            வனசமலர் எனமிளிரு மிருபதமி லங்கநீ

                        வந்தருள்வ தெந்தநாளோ

சருவநல மும்பரவு மன்பருக் கெளிதிலருள்

                        தயவுடைய விக்னேசனே

            தமிழாலு னைப்பரவு கிழமாதி னைக்கயிலை

                        தனிலெடுத் தன்றுவைத்துப்

பெருமையுற வாண்டருளு மையனே மெய்யன்பர்

                        பேணியிடு மெவையு மேற்பாய்

            பெட்பவிர்வி ளாங்குறிச் சிப்பதிக் கோவிலவிர்

                        பிரசன்ன கணநாதனே.

 

வாழ்த்து வெண்பா

(நேரிசை வெண்பா)

வாழ்க விளாங்குறிச்சி வாழ்ககா மாட்சியம்மை

வாழ்க வவணுறையும் மக்களெலாம் -வாழ்கவே

பூசைசெய்வோர் தொண்டு புரிவோர் முதற்பலரும்

நேசமுடன் வாழ்க நிலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக