ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சிரவையாதீனம் குமரகுருபரக் கடவுள் மாதப் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சிரவையாதீனம் குமரகுருபரக் கடவுள் மாதப் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

மன்னும் சிரவை வளரும்கௌ மாரமடம்

நன்மைக் குமரகுரு நாதனுக்குப் – பன்னுமியல்

மாதப் பதிகமுடன் வாரப் பதிகமும்நன்கு

ஓதத் துணையவ னருள்.

 (1)

நூல்

(கட்டளைக் கலித்துறை)

சித்திசை சித்தர்கள் பத்தர்கள் போற்றுஞ் சிரவையிடை

வித்தகர் மேவு கௌமார மடத்தின் வியன்தளியில்

நித்திய மாக விருந்தருள் செய்குக நின்மலனே           

சித்திரை மாதம் வருவாய் மயில்மிசை சீர்பெறவே.   

 (2)

மெய்யான தொண்டர் மருவும் சிரவை மிளிர்மடத்தில்

செய்யாள்சேர் கோவில் குமர குருபர தேசிகனே

மையான கண்ணி வனவள்ளி தெய்வானை மாதருடன்

வைகாசி மாதம் மயில்மீது வந்து வரமருளே.             

 (3)

மானின் விழியுடன் மான்வயிற் றுற்றிடு வள்ளியம்மை

வானிய லிந்திரன் பெற்றதெய் வானை வலமிடமாய்த்

தானியல் கின்ற சிரவைக் குருபர தற்பரனே

ஆனிநல் மாதம் மயில்வா கனத்தில்வந் தாண்டருளே!.

 (4)

பாடிப் பரவு மடியார் சிரவைப் பதியினிடை

நாடிப் புகழ்கவு மார மடாலய நாயகனே

கூடிக் குலவும் அடியேங்கள் கண்களி கூறும் வண்ணம்

ஆடிநல் மாதம் மயில்வா கனத்தில்வந் தாண்டருளே.

(5)

தாவடி யோட்டும் மயில்மீ தமர்ந்தடி யார்தமக்குச்

சேவடி காட்டி யருளுஞ் சிரவைத் திருக்குமரா

மேவடி யேங்கள் விழிபெற்ற நற்பயன் மேவுதற்கா

ஆவணி மாத மெதிர்தோன்றிக் காட்சி யருளுகவே.  

 (6)

மரத்தான சோலை வளமார் சிரவைக்கௌ மாரமடம்

உரத்தான கற்றளி உற்றவிர் சிற்பர உத்தமனே

கரத்தான ஐங்கர னம்மை சிவன்மால் கதிருடனே

புரட்டாசி மாத மெதிர்தோன்றி யெம்மைப் புரந்தருளே.

 (7)

செப்புவண் ணச்ச ரபர்இரா மானந்த தேசிகனார்

மைப்பொலி மேக வளக்கவிக் கந்தசு வாமியுடன்

ஒப்பில் பரம்பரை ஆர்கவு மாரர்த மொண்பரனே

ஐப்பசி மாதம் மயில்மிசை வந்தெமை யாண்டருளே.

 (8)

நேர்த்திகை யார்சிவன் நெற்றி விழிவழி நேருதித்தே

கார்த்திகை மாதர்தம் தாலுடன் பாலுணக் காதலித்த

சீர்த்திகை யுற்ற சிரவைக் குமர சிகாமணியே

கார்த்திகை மாதம் வரவேண்டு மெம்கண் களித்திடவே.        

 (9)

சீர்பொலி கொங்கில்ச் சிரவண வூரின் திருமடத்தே

ஏர்பொலி கோயி லிடையமர்ந் தாளு மெழிற்குமரா

நார்பொலி யுள்ளக் கவுமாரர் நாடிடும் நாயகனே

மார்கழி மாதம் விழிகளி கூர்ந்திட வந்தருளே.

 (10)

செய்யதண் தாமரைச் செல்வியும் வெண்மலர்ச் சேயிழையும்

மெய்யிடம் ஆமென மேவுஞ் சிரவை மிளிர்மடத்தில்

வையகம் போற்றி வணங்க விளங்கும் மயிலவனே

தையெனும் மாதம் பலவாம்நற் காட்சிகள் தந்தருளே.

 (11)

ஆசில் புகழ்க்கவு மார மடாலய யாதிகுரு

மாசில் தவத்தர் இராமா னந்தக்குரு மகிழ்ந்தமைத்த

தேசியல் மேனிக் குமர குருபர தேசிகனே

மாசிநல் மாதம் மயில்மீது காட்சி வழங்குகவே.                     

 (12)

பொங்கும் களியால் மயிலினம் கூடிப் பொலிந்திலகித்

தங்கும் சிரவைத் தலத்தமர் செவ்வேள் தயாபரனே

மங்கையர் தமகட் டிற்புகு தாத வரமருளப்

பங்குனி மாதம்நற் காட்சிதந் துன்னருள் பாலிப்பையே.        

 (13)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக