ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சிரவையாதீனம் குமரகுருபரக் கடவுள் வாரப்பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சிரவையாதீனம் குமரகுருபரக் கடவுள் வாரப்பதிகம்

(கட்டளைக் கலித்துறை)

மாயிரு ஞாலம் தனில்வள மாக வதிந்திடவுஞ்

சேயருள் பெற்ற கவுமாரர் கூட்டத்தில்ச் சேர்ந்திடவும்

நீயருள் செய்திட வேண்டின னுள்ளம் நெகிழும்வண்ணம்

ஞாயிறு நாளில் வரவேணும் வள்ளிதன் நாயகனே.   

 (1)

அங்கட் பரமன் விழிவழித் தோன்றி யழலுதித்த

செங்கட் கடாவைநல் வாகன மாக்கிச் சிவன்மகிழ

அங்கப் பிரணவ மந்திரம் சொன்ன வருட்குமரா

திங்கட் கிழமையில் வந்தெம் துயரினைத் தீர்த்தருளே.          

 (2)

செவ்வா யுமையவள் கந்த னெனப்பெயர் செப்பிமகிழ்

ஒவ்வாப் புகழ்ச்சிர வைத்தலத் துற்றே ஒளிர்குகனே

இவ்வாழ் வினில்த்துன்ப மெய்தாத வண்ண மெமைப்புரக்கச்

செவ்வாய்க் கிழமை தரிசன மீந்தருள் செய்குதியே.

 (3)

இதமார் கவிபொழி அண்ணா மலைக்கிளி யின்தமிழ்ப்பா

விதமாகக் கேட்டு மகிழும் குருபர வேலவனே

பதவாரங் கொண்ட கவுமாரர் போற்றும் பராபரனே

புதவாரம் தன்னில்மெய்க் காட்சிதந் தெம்மைப் புரந்தருளே.  

 (4)

தயாபர னான சிவனுமை நாப்பண் தனிச்சிறப்பால்

வியாபக மாக விளங்கும் குருபர வித்தகனே

வயாவற நீக்கித் திருவருள் செல்வ வளம்பெறவே

வியாழக் கிழமையில் வந்தருள் செய்திட வேண்டுதுமே.       

 (5)

வள்ளிக் கொடியுடன் தெய்வானை யம்மன் வயங்குறவே

புள்ளிக் கலாப மயில்மீது மேவுமெம் புண்ணியனே

கொள்ளித் தலையி னெறும்பெனு முள்ளங் குளிர்தரவே

வெள்ளிக் கிழமை யருட்காட்சி நல்கிட வேண்டுவனே.

 (6)

கனவுளங் கொண்ட கவுமாரர் போற்றிக் கவின்சிரவைத்

தனிமடத் தற்புதக் கோயில் விளங்கியல் சண்முகனே

நனிவுளம் வாடிடு மெம்துயர் மாற்றிட நன்மயிலில்

சனிநாளில் வந்து திருவருட் சேவையைச் சாதிக்கவே.          

 (7)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக