புதன், 28 அக்டோபர், 2026

மருதாசல (மருதமலை) வியமக அந்தாதி

 

தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த

மருதாசல வியமக அந்தாதி

காப்பு

(கட்டளைக் கலித்துறை)

மருதா சலவி யமகவந் தாதிச்சை மாற்றிமெய்க்கா

மருதா சலவி யமகவந் தாதி யெனவழுத்து

மருதா சலவி யமகவந் தாதிக்கு வாய்த்ததுணை

மருதா சலவி யமகவந் தாதிதன் மாணடியே.

(1)

நூல்

வாரண வத்திரள் சூசுக வள்ளி மகிழ்ந்தணைவான்

வாரண வத்திர னைப்போற்று சீர்மரு தாசலத

வாரண வத்திர மார்காய வாழ்க்கையை மாற்றுபுமூ

வாரண வத்திர நாடகத் தாளிடை வைக்குதியே.

(2)

வைக்கா தரமை விழியார்சொற் கொண்டு வரைதருஞ்சி

வைக்கா தரமைந்த னாமரு தாசலன் வண்புகழ்ச்சு

வைக்கா தரமை யலின்மூழ்கு மூடர்கள் வாய்ந்திடுந

வைக்கா தரமைந் தினுந்தாழ் குறும்பி வழிபூழையே.

(3)

வருத்தம் பலவிதத் துங்கொண் டுழன்றிட மாசுறுமை

வருத்தம் பலமிக் கியற்றின ரர்ச்சன வள்ளனின்முன்

வருத்தம் பலநடத் தார்க்கரு ளுண்மை வகுத்துனுட்க

வருத்தம் பலம்பெறு மெய்த்தொண் டரிலொரு வன்னெனவே.

(4)

வன்னத் தலைவழங் கார்கலிக் கப்புற மன்னிமுகில்

வன்னத் தலைவனை யாண்மரு தாசல வாரிசத்தன்

வன்னத் தலைவது கண்டும்வன் னீதி மதித்துளத்தின்

வன்னத் தலைவறி துற்றாயென் செய்வன் மதியிலியே.

(5)

மதியங் கரந்தை யலர்மூக மோதிகண் மானுமென்றுன்

மதியங் கரந்தை யலதின்பின் றர்ச்சன மால்வரைமேய்

மதியங் கரந்தை யலர்வேணி யன்குர வற்றுதிப்பின்

மதியங் கரந்தை யலர்திருச் சேவை வழங்குமன்றே.

(6)

வழக்கம் பலபல வுஞ்செய் துலகின் மயங்குவிர்தி

வழக்கம் பலபல மெய்திடுங் காலை நுமக்கிடர்கள்

வழக்கம் பலபல முள்ளுன்னிப் பார்மின் மதுரரத

வழக்கம் பலபலஞ் சான்மரு தாசலன் வாரிசமே.

(7)

வாரிச வாதனத் தான்கரந் தொட்டின மாயப்புலை

வாரிச வாதனப் பைபுகுத் தாதன்பின் வாழ்த்துமென்சொல்

வாரிச வாதன கப்புயந் தோய்மரு தக்கலருள்

வாரிச வாத னறுந்தமிழ்ப் பாவலர் மாதவமே.

(8)

மாதங் கவிலங் கமைகொப்பம் வீழ்ந்திடன மானமனை

மாதங் கவிலங் கணைவார் மதியின் மதிப்பருஞ்சீர்

மாதங் கவிலங் கலினீ டருச்சுனம் வாழ்த்தினமே

மாதங் கவிலங் கடைகில மெய்தலை வம்புறுமே.

(9)

வம்புத் துணர்திருக் கோவீர் மருத வரையிறைதாள்

வம்புத் துணர்திருக் கோவிலிற் கண்டிட்டு வாழ்த்திடுத

வம்புத் துணர்திருக் கோன்பேறு மேவுதிர் மாறிடில

வம்புத் துணர்திருக் கோடுறுங் கூசிட வாய்தருமே.

(10)

வாயசங் கங்கட னாய்நரி யாதிகண் மாந்திரையாய்

வாயசங் கங்கடம் புக்கிளைத் தேன்மலர் வாவிக்கரை

வாயசங் கங்கடண் ணார்நில வேய்மரு தாசலகா

வாயசங் கங்கட யேன்பெற வஞ்சலென் மாற்றம்விண்டே.

(11)

மாற்றுய ரம்பங்க நல்கிடும் வேள்கர வாரிசமெய்ம்

மாற்றுய ரம்பங் கருதுநெஞ் சேமலர் வாழ்பிரமன்

மாற்றுய ரம்பங்க ரேத்து மருத வரைக்குகன் பொன்

மாற்றுய ரம்பங் கயப்பதம் பேரின்ப வான்றுணையே.

(12)

வானத் தரங்கத் திருமாள் மருகன்முன் வந்தழுத

வானத் தரங்கத் திருமே விடும்படி வைத்தகன

வானத் தரங்கத் திருக்கும் பதங்கண் மதித்திடுசு

வானத் தரங்கத் திருக்குநெஞ் சர்ச்சுன மாடடைந்தே.

(13)

மாடா டிரண மெனவறி யாது வயக்கியிழி

மாடா டிரண மவாவுவி ரர்ச்சன மால்வரையின்

மாடா டிரணச் சிலம்படி சூடிட வாஞ்சிமின்சும்

மாடா டிரணஞ் சுமக்க விதிவிதி மாய்ந்தறவே.

(14)

மாயா மலகந் தரநிழல் போன்று மடியுடல

மாயா மலகந் தழைத்தே குளிதைகண் மாந்திடுவீர்

மாயா மலகந் ததைபொழி லர்ச்சன வள்ளலினுண்

மாயா மலகந் தவிர்வீரி தொப்பதின் மாநிலத்தே.

(15)

மாநிலத் தோடிணை யஞ்சனக் கண்ணியர் மால்பெருகி

மாநிலத் தோடி யிளைத்தேனைத் தீம்புனல் வாவியிற்பூ

மாநிலத் தோடிய வோடங் கிடக்கு மருதவெற்புன்

மாநிலத் தோடிகழ் கிள்ளையி லாள மதித்தருளே.

(16)

மதியாத வன்கண்ண ருங்க விதம்மேல் வகுத்துறிற்கேண்

மதியாத வன்கண்ண லென்றேவற் கோதி வழங்குகின்றார்

மதியாத வன்கண் ணலமேல் வருமரு தாசலதா

மதியாத வன்கண் ணருணீசெய் யாமை மரபல்லவே.

(17)

மரகதத் தோகைத் திடத்தோ நிற்கிச்சை வழுத்தெனுமம்

மரகதத் தோகைய ரேவலர் தென்றிசை வாழ்சமன்கொண்

மரகதத் தோகை கெடுவார் மருத வரைக்குகனை

மரகதத் தோகையைப் பாடுநர்க் கன்னவன் வந்தனியே.

(18)

வந்திக்கு வந்தவொ ராளாகி மாணிக்க வாசகர்த

வந்திக்கு வந்தவர் காணச்செய் தார்குர வன்மருதம்

வந்திக்கு வந்தர நோக்கா துருவழி மாரவிகல்

வந்திக்கு வந்தம்பு பெய்யே லெனிதன்று வைச்சத்தியே.

(19)

வையத்தங் கற்பணி மின்னர்க்கு வந்திறு மாப்பீர்கணீர்

வையத்தங் கற்பணி தன்னையு நும்முண் மதித்திலிரோ

வையத்தங் கற்பணி யாரர்ச் சுனவரை யன்வடிவுள்

வையத்தங் கற்பணித் தொண்டருள் ளாநலம் வாஞ்சிமினே.

(20)

வாஞ்சித்த வண்ண மடியார் தமக்கு வழங்கிடவ

வாஞ்சித்த வண்ண மருதா சலநினை வாழ்த்திடற

வாஞ்சித்த வண்ண முதலாப் புகல்கவி மாலைகொண்டு

வாஞ்சித்த வண்ணண் ணிடுமா றருணின் மனமுவந்தே.

(21)

மனங்கண்ட குற்றம் புரிந்தானை யுந்தயை வாய்ந்துயர்க

மனங்கண் டரிக்கும் பரிகொடி யாக்கொண் மருதவெற்பாய்

மனங்கண் டனதமி ழாலுனை நாடொறும் வாழ்த்துமெனை

மனங்கண் டழைக்க வருளாம லேனின்னம் வாதிப்பதே.

(22)

வாதிக் குமையல ருங்கொண் டவனமன் வாரிசனோ

வாதிக் குமைய லியற்றநொந் தேன்குற வள்ளிகண

வாதிக்கு மையருந் தாழ்மரு தாசல வள்ளலொரு

வாதிக்கு மைய லறப்புரி யாயிரம் வந்தனமே.

(23)

வந்தனங் காத லடியார் செயர்ச்சன வள்ளலையு

வந்தனங் காதமை யப்பாடி நாடுமோர் மாண்பமைந்தேம்

வந்தனங் காதர மோரா துலகுடன் மானமிக்க

வந்தனங் காதலிப் பாரின் மதித்துந்தல் வம்பலரே.

(24)

வம்பல ரும்பர்கொ ணின்னர்ச்சு னப்புகழ் வாழ்த்துமென்னை

வம்பல ரும்ப லனமாந்தர் யாரும் வழுத்திடக்க

வம்பல ரும்ப விடாதே மடிப்பைகொன் மாமகத்து

வம்பல ரும்பழிச் சப்புரி வாய்கொன் மதித்திலனே.

(25)

மதித்தற் கரிய மருதா சலன்புகழ் வாழ்த்துநர்வான்

மதித்தற் கரிய னடுப்பதத் தெய்துவர் மாறுகொள்புன்

மதித்தற் கரியங் கசநெறிப் பட்டலர் வாய்ந்திவண்டா

மதித்தற் கரிய நிரயங் கதியா வதிபவரே.

(26)

வதிமா தரங்கம வாவிடி லோர்மாத் திரையிடையு

வதிமா தரங்கணத் தாழ்த்திடு நெஞ்சே மருவமரா

வதிமா தரங்க வனம்புகுஞ் சீர்மரு தாசலன்றாள்

வதிமா தரங்க நிகரான சிற்சுக மன்னிடுமே.

(27)

மன்னவ ராகந் தசகோடி சற்றென வன்கடத்துண்

மன்னவ ராகந் தகைய மடிந்த மதித்துமிப்பார்

மன்னவ ராகந் தணந்திலை நெஞ்சே மருதவெற்பின்

மன்னவ ராகந் தனைப்போற்று மாறுள வாவுதியே.

(28)

வாவிக் கணத்து நிலையா தலர்த்தண் வனத்திடைய

வாவிக் கணத்துவண் டொத்தோடு நெஞ்சால்வ ருந்தியெய்த்தேன்

வாவிக் கணத்துல வுஞ்சீர் மருத வரையவென்முன்

வாவிக் கணத்துட் களிப்பான் முகினேர் மயிலென்னவே.

(29)

மையத் தியங்கண் டகுவிய ரேச மகேந்திரத்த

மையத் தியங்கண்டர் மன்மகற் கோதிய வாயுவிவான்

மையத்தியங் கண்டந் தாமரு தாசல வள்ளலுள்ள

மையத் தியங்கண் டகவோதி லென்றுயர் வான்மலரே.

(30)

வானத் தரம்பைய ரெய்தினு முண்மரு ளாமலமை

வானத் தரம்பைய வென்னாது வல்லை வழங்கிடுவாய்

வானத் தரம்பை யரவத் தனந்தலர் வந்துமகிழ்

வானத் தரம்பை யணியார் மருத வரைக்கரசே.

(31)

வரைக்கடங் காதுடன் புக்கிருப் பாகு மலரயன்கை

வரைக்கடங் காதலித் தெய்த்தே னடைக்கலம் வந்தருளாய்

வரைக்கடங் காதழு வாரோ கணத்தில் வளர்மருத

வரைக்கடங் காதர நீபாரந் தோயகன் மார்பத்தனே.

(32)

மாரணஞ் சம்பவத் துக்காற் றிடாதற வாடிமங்கை

மாரணஞ் சம்பவத் தாற்பக லெல்லியை மானவரு

மாரணஞ் சம்பவத் துக்கிளைத் தேன்மரு தாசலமெய்

மாரணஞ் சம்பவ மாக்கும் வினையை மடித்தருளே.

(33)

மடியான வத்திர சத்தின்பம் வேட்டு மறலியென்ன

மடியான வத்திர மாயமின் னாரை மணம்புணர்த்து

மடியான வத்திரத் துக்குடைந் தேனிம வான்மகளின்

மடியான வத்திர மார்மரு தாசல மாமணியே.

(34)

மாமணி வண்ணத் துளவக லாவகன் மார்புடைய

மாமணி வண்ணத்து மான்மரு காமரு தாசலகண்

மாமணி வண்ணத்து ளார்பாவை யாகி மதியளிக்கு

மாமணி வண்ணத் துனையேத்திப் போற்ற வரமருளே.

(35)

வரப்பிர சாதல மட்டுங் குளிர வயக்கிடுது

வரப்பிர சாதர வாவி யருண்மரு தாசலன்றன்

வரப்பிர சாதம் படைத்தமெய்த் தொண்டர்கண் மைந்தரென

வரப்பிர சாத மயில்வார்க்கு மெய்தலர் வாய்மையிதே.

(36)

வாய்மையற் றங்கத் தினுக்கின்பிற் றுன்பம் வழங்குநர்கண்

வாய்மையற் றங்கத் திகைப்பீரிப் புன்மதி மாற்றியங்கா

வாய்மையற் றங்கத் திரிமரு தேய்மின்முன் மாமகத்தில்

வாய்மையற் றங்கத் திடவூர்ந்த காதை மனத்தமைத்தே.

(37)

மனக்குரங் கோட்ட மிகுத்ததைம் புலத்தின் மருவுபுக

மனக்குரங் கோட்டகு நீர்போன் றுலகின் மயக்கிலதன்

மனக்குரங் கோட்ட மதியேன் பெற் றுய்ய வழங்கியென்று

மனக்குரங் கோட்டத் தணிமரு தாசல மாணிக்கமே.

(38)

மாணிக்க வாசகந் தேறத்தந் தொப்பின் மதுரமலி

மாணிக்க வாசகர் போற்றநின் றாற்கு மறைகொள்பிர

மாணிக்க வாசகஞ் சொற்றான் மருத வரையடையின்

மாணிக்க வாச கணையோடு மென்முனி மத்தையொத்தே.

(39)

மத்தம் புயங்க மணிவார் நுதற்கண்ணின் மாய்ந்தவன்கா

மத்தம் புயங்கச் செயத்தளர்ந் தேன்வள்ளி மான்புணர்சே

மத்தம் புயங்களி லென்பாட லேற்றெனை வாட்டுசர

மத்தம் புயங்களிற் சேர்ப்பாய் மருத மலைக்கரசே.

(40)

மலையவ சந்தத் துலாவரும் வேடன் மலர்க்கணையான்

மலையவ சந்தத் துறவா ருணர்வரு மாமருத

மலையவ சந்தத் துனைப்போற்று மேன்மை வழங்கியென்று

மலையவ சந்தத்து வங்கமுன் றின்புற வைத்தருளே.

(41)

வைத்த வுடம்பிடிச் கையான் மருத வரையநெஞ்சுள்

வைத்த வுடம்பிடித் தேவறி யார்க்கு மனையிடைக்கு

வைத்த வுடம்பிடி நல்கா ருயிரை நமன்கொடுந

வைத்த வுடம்பிடி காலத்தி லென்னை வயக்குவரே.

(42)

வயப்பட் டரைக்கண நில்லாம லோடுபு மங்கையர

வயப்பட் டரைக்கண வாய்ச்சிற் சுகங்கொள் வகையறியா

வயப்பட் டரைக்கண மாநினைத் தேமரு தாசலன

வயப்பட் டரைக்கணஞ் சேர்ந்தாடிப் பாடி மகிழ்மனமே.

(43)

மகிழந் துணரணி வேடன் கிருபை வழங்குவதே

மகிழந் துணரணி மெய்க்குயிர்க் குத்தம்ப வாய்ப்புவியோ

மகிழந் துணரணித் தண்டலை யர்ச்சன வள்ளறரன்

மகிழந் துணரணி யார்தன்ன தொப்பில் வடிவமன்றே.

(44)

வடிவேற் றிகழுங் கரமரு தாசல மாரனொஞ்சும்

வடிவேற் றிகழுங் கரமார் பவள மலைபுரைநின்

வடிவேற் றிகழுங் கரவரை யுங்கவின் மாதர்தம்மை

வடிவேற் றிகழுங் கரங்கொடு மாற்றவ வாவினனே.

(45)

வாரிக் கரையன் றடும்விழிப் பாலக வந்துபொரும்

வாரிக் கரையன் றடுமாறச் செய்மரு தேசவற்ற

வாரிக் கரையன் றடுமிட யானெதிர் வந்துகையால்

வாரிக் கரையன் றடுத்தோது மாற்றம் வளம்படவே.

(46)

வளக்கடத் தந்தினைக் காவல்செய் வாடன் வனமுலைப

வளக்கடத் தந்திட வேட்டுளத் தன்பின் மலைநிகர்க

வளக்கடத் தந்தி முகற்போற் றருச்சுன வள்ளன்மெய்து

வளக்கடத் தந்திய மேயாதுன் பாத மனையருளே.

(47)

மனைமா தரங்கத் தினைவா னிழலினை மானவகன்

மனைமா தரங்கத் திருவைத் துணையா மதித்தனெஞ்சே

மனைமா தரங்கத் தினில்வாழ் தடமரு தத்தளியின்

மனைமா தரங்கத் திருத்தா டுணையுன் மலங்கெடவே.

(48)

மலங்கப் புரிமை யமைத்தேயெண் ணற்றசென் மங்கடந்து

மலங்கப் புரிந்தெனை யோர்மாத் திரையும் வழாப்பிணிப்பார்

மலங்கப் புரியட்ட கங்கெடுத் துன்றாண் மருவவைப்பாய்

மலங்கப் புரிமைத் தடமரு தாசல வானவனே.

(49)

வான வரம்பன் றகச்செய் பழநி மலைக்குநகீள்

வான வரம்பன் றதினீ டருச்சுன மால்வரையில்

வான வரம்பன் றளியினிற் போற்றென்முன் வந்திலகாய்

வான வரம்பன் றழித்தான் வடிவ மயிலிவர்ந்தே.

(50)

மயிலை மகத்து வருமையை யூர்மரு தக்கிரியாய்

மயிலை மகத்துவப் பாவை யெழச்செய் மறையவகான்

மயிலை மகத்து வயமார்பில் வேய்ந்தருள் வள்ளலெற்றா

மயிலை மகத்துவஞ் செய்யா தருடுணை மற்றிலனே.

(51)

மற்றில்லை யின்றுணை யென்றே மதித்து மருண்டவமே

மற்றில்லை யின்றுணை வார்சீர்ப் பினுமவர் வாழ்க்கையல

மற்றில்லை யின்றுணை தேர்நாட கர்க்கு வகுத்தசொல்லாய்

மற்றில்லை யின்றுணை தீர்மரு தாசல வல்லவனே.

(52)

வல்லாள மன்னன் சிகரியி னுங்குதி மாதவனை

வல்லாள மன்னன் றெதிர்ந்தாய் முருகநா மம்வழுத்தும்

வல்லாள மன்னன் கரமீந் தனைமரு தாசலந்தோய்

வல்லாள மன்னன் படியேற் கருள வருவதென்றே.

(53)

வருமந் தணந்தடி யேற்குமுன் றான வரொடுபண்ண

வருமந் தணந்தரத் தோன்றமு தத்தினு மாண்டுளங்க

வருமந் தணந்தந் தருள்செய்ய வேண்டும் வனசமிசை

வருமந் தணந்தவிர் வாவித் தடமரு தாசலனே.

(54)

தாசத் துவம்பொலிந் துன்மெய்த் திருப்புகழ் சாற்றிடச்ச

தாசத் துவம்பொருந் தக்கணி யாய்மரு தாசலசித்

தாசத் துவம்பொழி யாநீப கூதளத் தாரமெய்க்கந்

தாசத் துவம்பொளிர் கொங்கைப் பிடிவள்ளித் தாரத்தனே.

(55)

தாரகன் மாரண மெய்தச்செய் சத்தி தயங்குவெட்சித்

தாரகன் மாரண வீரப் புயமரு தாசலவு

தாரகன் மாரண வேடக் கொடிசுரர் தம்பிடியாந்

தாரகன் மாரண நெஞ்சுடன் மாய்த்தெனைத் தாங்கிக்கொள்ளே.

(56)

தாங்கற் கரிய துயர்கோடி நல்கித் தரணிவிண்ணந்

தாங்கற் கரிய மனத்தினொந் தேன்மரு தாசலநீ

தாங்கற் கரியவ னன்னக் கொடியன்முற் சாற்றமரர்

தாங்கற் கரியமெஞ் ஞானோப தேசத்தைத் தந்தெமையே.

(57)

தந்தத் தனத்தன வென்றுன் றிருப்புகழ் சாற்றுபுவி

தந்தத் தனத்தரு ளோமொழி வேட்குந் தரத்தனிவி

தந்தத் தனத்தமெய் தப்பார்க்கு நீர்மை தகுதிகொல்து

தந்தத் தனத்தமை வேலையிற் போழ்மரு தாசலனே.

(58)

தாக்கா திருக்க வியன்முடி யாய்கவி தப்பினர்ச்ச

தாக்கா திருக்கவி டாதரிந் தோனகஞ் சஞ்சலிக்கத்

தாக்கா திருக்கவிக் கிள்ளைகொ டோண்மரு தாசலத்தோய்

தாக்கா திருக்கவி ஞானத்தை நின்பதஞ் சாரச்செய்தே.

(59)

சாரத் திருப்புகழ் பல்லா யிரநின் றடம்புயத்தா

சாரத் திறப்புற வோதிடு மிச்சை தழைப்பனிவி

சாரத் திருப்புறழ் வாழ்க்கையுள் வாடிய சாலுமுண்மை

சாரத் திருப்புகண் டாய்மரு தேச தயைசெய்தின்றே.

(60)

தயங்க மலத்தியங் கூடலிற் கூம்புபு சாம்புமென்னி

தயங்க மலத்தி யலர்ப்பாணம் பாயத் தளர்ந்ததென்று

தயங்க மலத்தியங் கற்குன் றெரிசனந் தந்தருளாய்

தயங்க மலத்தி யனவாவி யர்ச்சுன சைலத்தனே.

(61)

சயிலங் கமலை யெனக்கான்றன் மாந்துதுத் தத்தவரிச்

சயிலங் கமலை மடவா ருறவு தணந்திசையிற்

சயிலங் கமலை கமழ்மரு தாசலஞ் சார்ந்தருள்வாஞ்

சயிலங் கமலை வறநின் றிருப்புகழ் சாற்றவையே.

(62)

சாற்றுந் தமிழ்க்கவி ரைக்கலை வாரைத் தணந்துளன்பிற்

சாற்றுந் தமிழ்க்கவி மெய்யடி யாரிடை சார்த்தணியார்

சாற்றுந் தமிழ்க்கவி னோக்கியின் பெய்திடத் தந்தருள்வீர்

சாற்றுந் தமிழ்க்கவி தண்டலை யார்மரு தாசலரே.

(63)

தாக்கணங் காற்ற வருளா மையினிச் சகத்தினிடை

தாக்கணங் காற்றளர் வுற்றேன் குககதிர் தாங்குசவி

தாக்கணங் காற்றளிக் கும்பொழி லார்மரு தாசலந்தோய்

தாக்கணங் காற்ற லருளித் திதிசெய் ததியுகந்தே.

(64)

ததிதித்தித் திட்டதென் றுண்டான் புகழ்மரு தாசலகந்

ததிதித்தித் திட்ட மளித்தரு ளாலெனைத் தாங்கியிது

ததிதித்தித் திட்ட ருடன் கூட்டி யாண்மெய்த் தகையருளு

ததிதித்தித் திட்ட ருறவினிச் சற்றுஞ் சகிக்கிலனே.

(65)

சகித்தற் கரிய துயர்கோடி கொண்டு தவநெறிபி

சகித்தற் கரிய வழிப்பட் டுழன்றேன் றவறனைத்துஞ்

சகித்தற் கரியவ னொத்தியல் பேறரு டந்தியைய

சகித்தற் கரிய குறமாதைந் தோய்மரு தாசலனே.

(66)

தாசல சத்த விருங்கட லொத்தெதிர் தானவர

தாசல சத்த விருகமொப் பேனுமெய் தங்குமரு

தாசல சத்த விருகண்ணி னிற்றரி சித்தனன்கந்

தாசல சத்தி விரும்பிர மன்விதி தானறவே.

(67)

தான வரத வடிவேற் கரவிசா காகுககந்

தான வரத வடிவா ரெழின்மரு தாசலவந்

தான வரத வடித்தமி ழாலுனைச் சாற்றமலைத்

தான வரத வடியேற் கருணின் சரண்சரணே.

(68)

சரணம் பரவியன் மாமுக டார்மரு தாசலவா

சரணம் பரவியன் மாமிச பிண்டந் தணந்துநின்பொற்

சரணம் பரவியன் மாதவ மேனிலை தாங்கிடுதா

சரணம் பரவியன் மாட்சிப் பெருவெளி தங்கவையே.

(69)

தங்கத் திருப்பது மைக்கிணை மாதர்ச் சதமெனம

தங்கத் திருப்பது போலுநெஞ் சீர்மெய்த் தகையினர்மூர்த்

தங்கத் திருப்பது போவது மெய்யெனச் சாற்றலுன்னித்

தங்கத் திருப்பது மந்தாவென் றர்ச்சுனற் றாமுமினே.

(70)

தாழ்த்துங் கடியமா யாமல யாக்கைத் தளையமைந்து

தாழ்த்துங் கடிபட டிருத்தனன் றன்றுநுந் தம்மனத்தே

தாழ்த்துங்க பத்தி கொடுமரு தாசலஞ் சார்ந்திரைக்குள்

தாழ்த்துங் கடிப்பிய மெய்ச்சுக மென்று ததைகுவிரே.

(71)

தத்தைக் களிக்குந்து மாரன் றுறையிடை தாழ்பிரமா

தத்தைக் களிக்குந் தகையாக்க வேண்டுவிர் சந்தவிசைத்

தத்தைக் களிக்கும் புயத்தான்மெய் யன்பருட் சாருமினோ

தத்தைக் களிக்குந் தினிமைத் தடப்பு தவக்கலுற்றே.

(72)

தவத்திருக் கோவறச் செய்மாய வாழ்வுட் சலித்துமனந்

தவத்திருக் கோத மெனநீர் வடித்துத் தயங்குவிர்மெய்த்

தவத்திருக் கோசிக னன்னார் புகழ்மரு தாசலனு

தவத்திருக் கோயில்கொண் டுள்ளான றிந்ததைற் சாருமினே.

(73)

சாரத் தியம்ப ரடளவென் றுட்படர் தானைசுற்றச்

சாரத் தியம்பவ னன்செலுத் தச்சென்று சற்றுமுள்ளஞ்

சாரத் தியம்படி வந்தொலைத் தாண்மரு தாசலமெய்ச்

சாரத் தியம்பன் சயந்தனுக் கோதுந் தகைமையொத்தே.

(74)

தகைக்கும் படிற்று மலத்தான் மிகவுட் டயங்குவன்சீ

தகைக்கும் படியில் புனற்சுனை மாமரு தாசலகந்

தகைக்கும் படிசெய் பிழையெண் ணாதுநின் றாடொழுமே

தகைக்கும் படியருட் சேர்ந்துய்யு மாறு தயவுசெய்யே.

(75)

தயவாழி யென்று மருதா சலத்துத் தவருளத்து

தயவாழி யென்று நிகர்மேனி கொண்டு தயங்குமென்னி

தயவாழி யென்று தினநின் புகழ்மிகச் சாற்றுவன்க

தயவாழி யென்று திருவருட் பேறு தருகவையே.

(76)

தருக்கவி யாக ரணமாதி கற்றுச் சமர்செய்வர்தீர்த்

தருக்கவி யாக ரணமீ குநரைத் தவிர்த்துவிண்ணத்

தருக்கவி யாக ரணம்புரி சீர்மரு தாசலவெந்

தருக்கவி யாக ரணப்புனி தத்தவர்ச் சாரவையே.

(77)

சாரங்க மங்கையர் தோய்மரு தாசல சற்குருவே

சாரங்க மங்கை யணையாமுன் மன்றற் சரோசதவி

சாரங்க மங்கை யமைவார் செவியிடஞ் சாற்றுமறைச்

சாரங்க மங்கை யருளிய கற்றென்புன் சம்பவமே.

(78)

சம்பந்தத் தெய்வ வினைத்தடிப் பைத்திர சாடையர்தஞ்

சம்பந்தத் தெய்வசந் தன்கோற் கிலக்கைமெய் தானெனவே

சம்பந்தத் தெய்வமெந் தெய்த்தேன் மருதா சலக்கொழுந்தே

சம்பந்தத் தெய்வமென் றெண்ணிலர்க் கின்பமுன் றந்தனையே.

(79)

தந்திக் கனதனத் தங்களை யார்நலந் தன்னையுள்வி

தந்திக் கனத னவைநெறிச் சென்றிச் சகத்திடைநி

தந்திக் கனதனந் தோடாம னின்புகழ் சாற்றும்வண்ணந்

தந்திக் கனதனம் போருகஞ் சேர்மரு தாசலனே.

(80)

சலசத்த மாத ரருளுமில் லேன்பார் தனைவிடுநிச்

சலசத்த மாதவ மேலோர் நிலைமையுந் தாங்கிலன்றண்

சலசத்த மாதரங் கம்பொலி வாவித் தனிமருதா

சலசத்த மாதர் மருவுந் தடந்தோட் சரவணனே.

(81)

சரதத் திருப்புனி தக்கிள்ளை யன்பினிற் சாற்றருட்புஞ்

சரதத் திருப்புக ழோதி யருச்சுனஞ் சார்ந்துதைப்பூ

சரதத் திருப்புறு நின்சே வடிதரி சித்தலில்வஞ்

சரதத் திருப்பு மனத்தேனெவ் வாறரு டாங்குவதே.

(82)

தாங்கற்ற கைய ரியம்பமெய் யென்று சகநடையில்

தாங்கற்ற கைய மையுமனத் தான்மிகத் தட்டழிந்தேன்

தாங்கற்ற கையரு ளாழி யருச்சுன சைலவெனைத்

தாங்கற்ற கைய ரிவைபெற முன்றழைப் பித்ததொத்தே.

(83)

தழையம யங்கை யமணர் குலமறத் தண்டுவரி

தழையம யங்கை பெறுமானி தன்னி தயத்துவகை

தழையம யங்கை முகன்றன் சமயந்தா பித்தருளுந்

தழையம யங்கை யமைபொழி லர்ச்சன சையத்தனே.

(84)

சையத் தனந்தந் திடைதாங் கரிதெனுந் தையலரி

சையத் தனந்தந் திடைதரு வேன்பொன் சயிலவில்லி

சையத் தனந்தந் திடையளி லென்றமை தன்மருத

சையத் தனந்தந் திடையோர் வரியமெய்த் தத்துவனே.

(85)

தத்தைத் திருத்தடந் தோண்மரு தாசல சாமிநின்ப

தத்தைத் திருத்தவன் பாலென் மனமுட் டவாதுகரு

தத்தைத் திருத்த நினையாய்க தாயுதந் தாங்குநன்செய்

தத்தைத் திருத்த னையர்செய் விபத்துடன் றாண்டிடவே.

(86)

தாண்டவ நாதற் கருணைச் சிகரிதன் னின்றுகுப்பால்

தாண்டவ னாதற் கரும்பே றருடலிற் றாரணிமால்

தாண்டவ நாதற் கருளின் மருதா சலத்தவிர்மார்த்

தாண்டவ னாதற் கருளாழி நாமந் தயங்கிடுமே.

(87)

தயங்குன் றிருவுரு வண்ட முகட்டைத் தடவுமரு

தயங்குன் றிடத்தி லமைவது கண்டுந் தரணியிலி

தயங்குன் றிவஞ்ச மனமாயை யின்வன் றலையிடைசந்

தயங்குன் றிடார்கெடு வார்பாவர் தோய்நர சன்மமென்னே.

(88)

சனன விலங்கை யறுமரு தேசநிற் சார்ந்திடவஞ்

சனன விலங்கை யமரா மலசத் தகையில்விரோ

சனன விலங்கைய தாவந்துன் வாய்கொடஞ் சன்மொழிதுர்ச்

சனன விலங்கை யநுசற் களித்தவன் றன்மருகே.

(89)

தனம்புத் திரமித் திரரான மாயையிற் றாழ்ந்திடவந்

தனம்புத் திரமித் திதக்காட்டு மாதரின் சார்வருண்ம

தனம்புத் திரமித் தினையாம லர்ச்சனச் சைலநிற்சார்ந்

தனம்புத் திரமித் திரத்தகை பெற்றிடத் தந்தருளே.

(90)

தந்தனங் காட்டி மயக்குகை வார்க்குகை தாங்குதனந்

தந்தனங் காட்டி லுழல்வீரப் பொன்சற் சனர்க்கிடிலோர்

தந்தனங் காட்டில் வரக்கூ விடுமரு தாசலனந்

தந்தனங் காட்டில் பதமீந் தொழிப்பன் சரமத்தையே.

(91)

சரவணங் கோவி லெனவளர்ந் தும்பரைத் தானவவஞ்

சரவணங் கோவித் திடும்பணி நீத்தவர் தந்தவக்குஞ்

சரவணங் கோவியச் சூசுகந் தோய்மரு தாசலவெஞ்

சரவணங் கோவி யருளாய்நின் றாட்டுணைத் தாவளமே.

(92)

தாவிக் குணமனைத் துங்கைவிட் டேங்கென் றனதுநெஞ்சே

தாவிக் குணமனை யொத்துறும் போதிற் சகத்துறவார்

தாவிக் குணமனை பாற்புகு மர்ச்சுனன் றாட்டுணையந்

தாவிக் குணமனை நாடாய்நந் துன்பறச் சாம்பவின்றே.

(93)

சாம்பவி யந்திரி பால வெனத்தினஞ் சாருமிடர்

சாம்பவி யந்தரி யாதியர் தாழ்மரு தாசலனே

சாம்பவி யந்தரி யாத்துயர்ப் போதுமுற் சார்ந்தருளாற்

சாம்பவி யந்தரி நெல்லுத வாரிற் றணந்திடலே.

(94)

தணப்பத்தி திருவுளஞ் செய்யேலுன் னாணைநின் றாட்டுணைமந்

தணப்பத்தி நல்கிமெய்த் தொண்டர்கொ ளின்பந் தனையளியாய்

தணப்பத்தி மாமுகன் றானத்திற் றோன்றுந் தடம்பொலிப

தணப்பத்தி மாட மருதா சலப்பர தாபத்தனே.

(95)

தாப தரிச்சித்த வாதா மருதா சலசகத்தோர்

தாப தரிச்சித் தசதுறை யோயெனச் சாற்றிடச்ச

தாப தரிச்சித்த மெய்யா தசலந் தயங்குபிர

தாப தரிச்சித் தமைந்திட நல்கிடுன் றாட்டுணையே.

(96)

தாளத் தனதத்ததை நேர்மொழி யார்நசை தாங்குபுபா

தாளத் தனதத்தை யேய்ந்தழி வீர்மலை தந்தருளாத்

தாளத் தனத்தத்தை போற்று மருதா சலன்கமலத்

தாளத் தனத்தத்தை யெய்திடி லின்பந் தருங்கணத்தே.

(97)

தருக்கந் தரங்கப் பிணியொப்பன் றீது தவவெணிலந்

தருக்கந் தரங்க மறியாத வேதற் றளைப்படுத்தத்

தருக்கந் தரங்கந் தகப்போதித் தான்பிர சாதங்கொள்ளீர்

தருக்கந் தரங்கஞ் சுமக்கு மருச்சுனச் சைலமுற்றே.

(98)

சயிலத் தலைவியர் பாலின் குளதெனத் தாங்கொடுந

சயிலத் தலைவியர்த் தத்தலை வீர்வினை சாருடற்ற

சயிலத் தலைவியர்த் தொப்பின்மெய்ச் சீலந் தழைமருத

சயிலத் தலைவிய னாடகத் தாளுட் டழுவுமினே.

(99)

தழுக்குப் பவக்கட லாரிடங் கர்க்கிணை தையலரி

தழுக்குப் பவளமொப் பென்றுழ னெஞ்சே தருமலர

தழுக்குப் பவணுர மார்மலர்க் காமரு தாசலன்றாள்

தழுக்குப் பவவினை வேரறு மெய்ச்சுகஞ் சாருமன்றே.

(100)

சாரத் திருத்தமிழ் கொண்டுனைப் போற்றெனைத் தாங்கரும்வி

சாரத் திருத்த நினையேல் கிருபை தழைத்துனடி

சாரத் திருத்தக் கருதுன் சரணஞ் சரணமொப்பில்

சாரத் திருத்த மருதா சலது சவாரணனே.

(101)

முற்றிற்று.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக