செவ்வாய், 20 அக்டோபர், 2026

மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா

 

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் அருளிய

மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா

காப்பு

அங்கயற்கும் மாற்கு மரியபெரு மானிடஞ்சே

ரங்கயற்க ணம்மைக் கணியவே - வங்கயத்தின்

மாமுகங்கொள் கோமானை வாழ்த்திக் கலிவெண்பா

நாமுகந்து பாடுவோம் நன்கு.

நூல்

சீராரு பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே

காராரும் மேனிக் கருங்குயிலே - ஆராயும்                     

(1)

வேத முதலாகி நின்றமெய்ப்பொருளே மின்னொளியே

ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே                  

(2)

அண்டரெல்லாம் போற்று மரும்பொருளே வாரணங்கே

எண்திசைக்கும் தாயான யீசுவரியே – தெண்திரையில்

(3)

வந்தமுதே என்று மாறாமலே நினைப்பார்

சிந்தைதனிலே உறையும் செல்வியே - அந்தமிலா        

(4)

மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்

தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி                 

(5)

மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனு

பொன்னங் கிரியுடைய பூங்கொடியே - அன்னமே       

(6)

அட்டகுல வெற்பா யமர்ந்தவளே யாதியந்த

மெட்டெட்டுந் தானா யிருந்தவளே - முட்டவெங்கும்   

(7)

அவ்வெழுத்தாய் நின்ற  வரும்பொருளே வாரணங்கே

உவ்வெழுத்தாய் நின்றதோர் உண்மையே - எவ்வெழுத்தும் 

(8)

தானாகி நின்றதொரு தற்பரையே எவ்வுயிர்க்கும்

ஊனாகி நின்றதோர் உத்தமியே - கோனாய்ப்              

(9)

படிஅளக்க மால்பார் பதினான்கும் ஒக்க

அடியவரை ஈடேற்றும் அன்னாய் - முடிவிலா               

(10)

ஓங்காரத்து உட்பொருளே உற்ற நவகோணத்தில்

ரீங்காரம் தன்னில் இருப்பவளே - பாங்கான                 

(11)

முக்கோணத்துள் இருக்கும் மூர்த்தியே மூவிரண்டாம்

சட்கோணத்துள் இருக்கும் சத்தியே - மிக்கபுகழ்           

(12)

எண்ணிரண்டாம் கோட்டில் இருப்பவளே எவ்வுயிர்க்கும்

பண்ணிசைந்த பாட்டின்பழம்பொருளே - விண்ணுலகின்  

(13)

மேற்பட்டு அங்கு ஊடுருவி மேலாகி நின்றதொரு

நாற்பத்து முக்கோண நாயகியே - சீர்ப்பெற்ற               

(14)

பஞ்சகோணத்து இருந்த பைங்கிளியே பார்முழுதும்

தஞ்சம் அதுவாகி நின்ற தையலே - செஞ்சொல் மறைச்     

(15)

சொல்லே பொருளே சுவையே அறுசுவையே

எல்லாப் புவிக்கும் இறைவியே - தொல்லை                  

(16)

எறும்புகடை யானைதலை எண்ணில் உயிர்க்கும்

உறும்பொருளாய் அங்கங்கு உணர்வாய்ப் – பெரும்பயனாய்

(17)

ஆறாறு தத்துவமாய் ஐயிரண்டு வாயுவாய்க்

கூறாய்த் திசைபத்தின் கூட்டமாய்ப் - பேறான             

(18)

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அக்கரமாய்ப்

பஞ்சவர்ணமாய்ப் பஞ்ச தேவதையாய் - வஞ்சமற்ற     

(19)

ஆறாதா ரப்பொருளாய் ஐயைந்தாய் ஐம்மூன்றாய்

வீறான சக்கரத்தின் மின்னொளியாய்க் - கூறாங்         

(20)

கருவிகர ணாதிகளாய்க் கைகலந்து நின்ற

பெரியதொரு மாயைப் பிரிவாய் - உரியதொரு             

(21)

சோத்திரத்தில் சத்தமாய்த் தொக்கில் பரிசமாய்

நேத்திரத்தில் பேருருவாய் நீக்கமிலா - நாத்தலனின்    

(22)

மெத்திரதமாய் மூக்கின் மேவுகந்த மாய்ப் பிறவாய்

மத்த பிரமத்த வயிரவியாய்ச் - சுத்த                                 

(23)

துரியமதாய்ப் பின்னும் துரியா தீதத்தின்

அரிய சிலம்பொலியும் ஆர்ப்பத் - தெரிவரிதாய்            

(24)

நாடுதனில் சென்றிரந்து நற்பவுரி கொண்டுதொந்தம்

ஆடுகின்ற பார்ப்பதியே அம்பிகையே - நாடிக்              

(25)

களங்கமறவே தான் கரும்புருவம் தன்னில்

பளிங்கொளியாய் நின்ற பரமே - வளம்பெறவே           

(26)

கண்ணிரண்டின் உள்ளே கருணைத் திருவடிவாய்ப்

புண்ணியமாய் நின்றருளும் பூவையே - பண்ணமைந்த

(27)

நாசி நுனிமேல் நடுவெழுந்த தீபமாய்

ஓசைவிந்து நாதாந்தத்து உட்பொருளாய் - நேசமுடன் 

(28)

அஞ்சு முகமாய் அகண்டபரி பூரணமாய்ப்

பஞ்சபூதம் ஆன பைங்கிளியே - கஞ்சமலர்ப்                 

(29)

பாதம் இரண்டாகிப் பச்சைநிறம் தானாகி

ஆதிமுதலாகி நின்ற அம்பரமே - தீதிலா                         

(30)

நெற்றிதனில் கண்ணாகி நிட்கள ரூபப் பொருளாய்

உற்ற வெளியாகி நின்ற உத்தமியே - பத்திநிரை          

(31)

ஆகாயத்தின் ஒளியாய் அந்தரத்தின் ரூபமாய்

மேகாதிக்குள்ளே விளைபொருளாய் - வாகாம்              

(32)

இடைபிங் கலையாய் இரண்டுக்கும் எட்டாக்

கடையும் சுழுமுனையாய்க் காலாய் - மடலவிழ்ந்த       

(33)

மூலாதாரத்து ஒளியாய் மும்மண்டலம் கடந்து

மேலாதாரத்து இருந்த வெண்மதியாய்ப் - பாலூறல்     

(34)

உண்ணும் சிவயோக உத்தமியே மெய்த்தவமே

பண்ணுமறைவேதப் பழம் பொருளே - எண்ணரிய       

(35)

மெய்ஞ்ஞான வித்தே விளக்கொளியே மெய்ச்சுடரே

அஞ்ஞானமே அகற்றும் அம்மையே - பைந்நாகம்        

(36)

பூண்ட சிவனாரிடத்துப் பூங்கொடியே பாங்குடனே     

தாண்டவமாடப் பவுரி தாளமொத்தி - ஆண்டியுடன்     

(37)

ஆடுங்கூத்தாடிச்சி அம்மனை பந்தாடிச்சி

தேடியும் மால் காணாச் சிவசக்தி - நாடியுனைப்            

(38)

போற்றும் அடியார்கள் வினை போக்கியே அஞ்சல் என்று

தோற்றுகின்ற அம்மை துடியிடைச்சி - ஏத்தரிய            

(39)

பச்சை நிறத்தி பவளக் கொடியிடைச்சி

கச்சைப் பொருமுலைச்சி கைவளைச்சி - கொச்சை       

(40)

மலையரையன் பெற்ற மலைச்சி கலைச்சி

நிலையறி வேதாந்த நிலைச்சி - அலையாத                   

(41)

அன்ன நடைச்சி அருமறைச்சி ஆண்டிச்சி

கன்னல் மொழிச்சி கருணைச்சி - பன்னுதமிழ்               

(42)

வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சி

பேய்ச்சி இளமுலைச்சி பேதைச்சி - காய்ச்சியபால்       

(43)

வெண்ணெய் மொழிச்சி வெளிச்சி வெளியிடைச்சி

அண்ணுபுரம் தீயிட்ட அம்படைச்சி - நண்ணல் அரும்

(44)

கொப்புக் குழைச்சி குவளைப் பெருவிழிச்சி

அப்புச் சடைச்சி சிவகாமச்சி - மெய்ப்பாம்                     

(45)

கருப்புச் சிலைச்சி கலைச்சி வலைச்சி

மருப்புத் தனத்தி மவுனத்தி - பொருப்பிடத்தி                 

(46)

தாமப் புயத்தி சமர்த்தி தருமத்தி

நாமச் சிவபுரத்தி நாரணத்தி - தேமருவும்                        

(47)

காரணத்தி பூத கணத்தி தனபார

வாரணத்தி அட்டத்திக்கும் ஆரணத்தி - பூரணத்தி         

(48)

பாதப் பரிபுரத்தி பங்கயத்தி செங்கரத்தி

சோதி மணிநிறத்தி சொப்பனத்தி - பாதிமதி                  

(49)

சூடுகின்ற சொக்கருடன் துய்யபுலித் தோலுடுத்திக்

காடுதனில் வீற்றிருக்கும் காரணியே - நாடறியும்         

(50)

சேணிச்சி நல்ல சிறுத்தொண்டன் பிள்ளையறுத்

தூணிச்சி நஞ்சமுதாம் ஊணிச்சி - பாணிச்சி                   

(51)

பாசாங்கு சத்தி பரத்தி பருப்பதத்தி

காசாம்பூ மேனிக் கனதனத்தி - மாசிலா                          

(52)

அம்பரத்தி ஐம்புலத்தி ஆனதொரு வேதாந்த

உம்பருக்கும் எட்டாத உத்தமத்தி – செம்பொன்வளைச்

(53)

செட்டிச்சி வையைதனில் சென்றுவெட்டி மண்சுமந்த

ஒட்டச்சி பூதியணி உத்தளத்தி - அட்டதிக்கு                  

(54)

மின்னே விளக்கே விலையில்லாச் சீவரத்னப்

பொன்னே நவமணியே பூங்கிளியே - இன்னமுதே       

(55)

மாணிக்க வல்லியே மாமரக தப்பணியே

ஆணிக் கனகத் தரும்பொருளே - மாணுற்ற                   

(56)

சிங்கார வல்லியே! செம்பொன் சிலை வளைத்த

கங்காளற்கு அன்பான கண்மணியே - மங்காத             

(57)

தெய்வக் குலக்கொழுந்தே செம்பட்டுடைத் திருவே

ஐவருக்கும் தாயாய் அமர்ந்தவளே - மெய்யருக்குச்       

(58)

சித்தி கொடுக்கும் சிவானந்தி அன்பருக்கு

முத்திகொடுக்கும் ஞான மூர்த்தியே - எத்திசைக்கும்     

(59)

தாயகமாய்ச் சூழ்தாவர சங்கமம் விளக்கும்

தூயசுடர் மூன்றான சூக்குமமே - வேய் ஈன்ற                

(60)

நித்திலமே கற்பகமே நின்மலமே நன்மணியே

சுத்த பரிபூரணியே சுந்தரியே - அத்தருடன்                    

(61)

வாதாடு மங்கையே மாமந்த்ர ரூபியே

வேதாந்தியே கமல மெல்லியலே - நாதாந்த                   

(62)

மாயே சுவரியே மங்கையே மாமறைக்கும்

தாயாகி நின்ற சரசுவதியே - காயாய்ப்                           

(63)

பழுத்த பழமாய்ப் பழத்திரதம் தானாய்

முழுத்த பரானந்த முதலாய் - எழுத்துமுதல்                     

(64)

ஆறுசம யங்களுக்குள் அவ்வவர்க்கும் வெவ்வேறாய்

வேறுபல ரூப விகற்பமதாய்க் - கூறரிதாய்                    

(65)

அங்கங்கும் தானாய் அமர்ந்தவளே ஆதிஅந்தம்

எங்கெங்கும் தானாய் இருந்தவளே - திங்கள்நுதல்       

(66)

அஞ்சுகமே தேனே அணங்கே அமுதமொழிக்

கிஞ்சுகமே பிஞ்சுமதிக் கிள்ளையே - கொஞ்சுகுயில்    

(67)

கன்னி திரிசூலி காபாலி சிவகாமி

மன்னு கவுரி மகமாயி - பொன்னின்மலர்த்                    

(68)

தாளி சதுரி சவுந்தரி முக்கண்ணுடைய

காளி பகவதி கங்காளி - தூளியாத்                                  

(69)

தக்கன் தலையறுத்த தத்துவத்தி தற்பரத்தி

அக்கினி கை ஈர்ந்த அமர்க்களத்தி - மிக்கபுகழ்              

(70)

வீரசத்தி மேருவினை வில்லா வளைத்தஒரு

பாரசத்தி வேதப் பரதசத்தி - தாரணிகள்                         

(71)

கொண்ட கார் இச்சிக்கும் குந்தளத்தி மாமதனன்

சண்டைகாரிச்சி சகலத்தி - துண்டமதிச்                          

(72)

செஞ்சடைச்சி கஞ்சுளிச்சி செம்படத்தி கங்கணத்தி

பஞ்சசத்தி கொந்தளத்தி பைம்பணத்தி – அஞ்சனத்தி

(73)

முத்துவடக் கொங்கைச்சி முல்லை முகிழ்நகைச்சி

பத்தரவர் நெஞ்சகத்தி பாரிடத்தி - சுத்தவெள்ளை         

(74)

அக்கு வடத்தி அறம்வளர்த்தி அன்புடைச்சி

செக்கர் இளம்பிறைச்சி செண்பகத்தி - தக்கமணி          

(75)

ஓலைக் குழைச்சி உபதேச குண்டலச்சி

மாலைக் கழுத்தி மவுனத்தி - ஞாலமெல்லாம்                 

(76)

அக்கரத்தி பொக்கணத்தி அண்டபகி ரண்டத்தி

முக்கணத்தி நிட்களத்தி மோட்சத்தி - மிக்கபுகழ்            

(77)

ஏகாக் கரத்தி இமயப் பருப்பதத்தி

நாகாதி பூண்டசிங்க நாதத்தி - வாகான                          

(78)

பத்மா சனத்தி பரிமளத்தி பாம்பணைத்தி

கற்பாந் தரத்தி கருநிறத்தி - விற்காம                               

(79)

வேடிச்சி நல்லதொரு மீனவனுக்கு அன்றுமுடி

சூடிச்சி கொக்கு இறகு சூடிச்சி - நாடிச்சீர்                      

(80)

பாதம் தனைத்தேடும் பங்கயத்தில் வீற்றிருக்கும்

வேதன் தலையறுத்த வித்தகத்தி - நீதிபுனை                 

(81)

பாடகத்தி கீதப்ர பந்தத்தி வெள்ளிமன்றுள்

ஆடகத்தி கூடலுக்குள் ஆதியே - ஏடெதிரே                  

(82)

ஏற்றுவித்து முன்சமணர் எண்ணாயிரர் கழுவில்

வீற்றிருக்க வைத்தமறை வித்தகியே – நாற்றிசையும்

(83)

கொண்டாடப் பெற்றதொரு கோமளமே யாமளையே

தண்டாமரைத் திருவே தையலே - மண்டலங்கள்          

(84)

எங்குமொத்து நின்றருளும் ஈசுவரியே மாமதுரை

அங்கயற்கண் நாயகியே அம்மையே - துங்க                 

(85)

ஒளியே பெருந்திருவே ஓதிமமே உண்மை

வெளியே பரப்பிரம வித்தே - அளிசேரும்                       

(86)

கொந்தளக பந்திக் குயிலே சிவயோகத்து

ஐந்தருவே மூவருக்கும் அன்னையே - எந்தம்இடர்       

(87)

அல்லல் வினை எல்லாம் அகற்றியே அஞ்சல் என்று

நல்ல சவுபாக்கியத்தை நல்கியே - வல்லபத்தின்           

(88)

ஆசு மதுரம் சித்ர வித்தாரம் என்று அறிஞர்

பேசுகின்ற உண்மைப் பெருவாக்கும் - நேசமுடன்       

(89)

தந்து என்னை ஆட்கொண்டு சற்குருவாய் என்னகத்தில்

வந்திருந்து புத்தி மதிகொடுத்துச் - சந்ததமும்                 

(90)

நீயே துணையாகி நின்று இரட்சி அங்கயற்கண்

தாயே சரணம் சரண்.                                                               

(91)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக