புதன், 21 அக்டோபர், 2026

கந்தர் கலிவெண்பா

 

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த

கந்தர் கலிவெண்பா

 

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய

பாமேவு தெய்வப் பழமறையுந் - தேமேவு 

(1)

நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த 

போதமும் காணாத போதமாய் – ஆதிநடு

(2)

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்

பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த 

(3)

குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்

செறியும் பரம சிவமாய் – அறிவுக்கு

(4)

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே

மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் 

(5)

பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்

தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் – எஞ்சாத

(6)

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்

காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல் 

(7)

இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்

தந்திரத்தில் சாராது சார்வதுபோல – முந்தும்

(8)

கருவின்றி நின்ற கருவாய் அருளே

உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் 

(9)

ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்

போகஅதி காரப் பொருளாகி – ஏகத்து

(10)

உருவும் அருவும் உருவருவு மாகிப்

பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள் 

(11)

மோகமுறும் பல்லுயிர்க்கு முத்தியளித் தற்குமல

பாகமுறவே கடைக்கண் பாலித்துத் – தேகமுறத்

(12)

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்

பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் 

(13)

ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தத்து வாக்களும்முற்

கூறத்தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து – மாறிவரும்

(14)

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான்

ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் – தீர்வரிய

(15) 

கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்

சென்மித்து உழலத் திரோதித்து – வெந்நிரய

(16)

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்

நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் 

(17)

தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே

நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து – முன்னுால்

(18)

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்

சரியைகிரி யாபோகம் சார்வித்து – அருள்பெருகு

(19) 

சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து

ஆலோகம் தன்னை அகற்றுவித்து – நால்வகையாம்

(20)

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்

ஒத்துவரும் காலம் உளவாகிப் – பெத்த

(21) 

மலபரி பாகம் வருமளவில் பன்னாள்

அலமருதல் கண்ணுற்று அருளி – உலவா

(22)

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா

நெறியில் செறிந்தநிலை நீங்கிப் – பிறியாக்

(23) 

கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்

குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால்

(24)

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்

ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் – பாழாக

(25) 

ஆணவமான படலம் கிழித்து அறிவில்

காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் – பூணும்

(26)

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்

கடியார் புவனமுற்றும் காட்டி – முடியாது

(27) 

தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும்

நீக்கமற நின்ற நிலைகாட்டிப் – போக்கும்

(28)

வரவு நினைப்பு மறப்பும் பகலும்

இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக்

(29) 

கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்

வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் – மின்னிடத்துப்

(30)

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்

வாய்த்தனைய தெய்வ வடிவாகி – மூத்த

(31) 

கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று

ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் – பெருகியெழு

(32)

முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி

ஆன்றபர முத்தி அடைவித்துத் – தோன்றவரும்

(33) 

யானெனதென்று அற்ற இடமே திருவடியா

மோனபரா னந்த முடியாக – ஞானம்

(34)

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா

அருளதுவே செங்கை அலரா – இருநிலமே

(35) 

சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்

பின்னமற நின்ற பெருமானே – மின்னுருவம்

(36)

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்

வாய்ந்த கிரண மணிமுடியும் – தேய்ந்தபிறைத்

(37) 

துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய

புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் – விண்ட

(38)

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு

அருள்பொழியும் கண்மலர் ஈராறும் – பருதி

(39) 

பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்

குலவு மகரக் குழையும் – நிலவுமிழும்

(40)

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்

சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் – வின்மலிதோள்

(41) 

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து

தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் – எவ்வுயிர்க்கும்

(42)

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப

வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் – சூழ்வோர்

(43) 

வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்

முடிக்கும் கமல முகமும் – விடுத்தகலாப்

(44) 

பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்

வாச மலர்வதன மண்டலமும் – நேசமுடன்

(45) 

போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்

மோகம் அளிக்கும் முகமதியும் – தாகமுடன்

(46)

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்

தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் – கொந்தவிழ்ந்த

(47) 

வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த

பாரப் புயசயிலம் பன்னிரண்டும் – ஆரமுதம்

(48)

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்

வேமக் குழைந்தணைந்த மென்கரமும் – ஓவாது

(49) 

மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்

சேர அணிந்த திருக்கரமும் – மார்பகத்தில்

(50)

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்

உய்த்த குறங்கில் ஒருகரமும் – மொய்த்த

(51)

சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்

கறுவுசமர் அங்குசம்சேர் கையும் – தெறுபோர்

(52)

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்

கதிர்வாள் விதிர்க்கும் கரமும் – முதிராத

(53)

கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த

அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் – பைம்பொன்

(54)

புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்

அரைஞாணும் கச்சை அழகும் – திருவரையும்

(55) 

நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்

பாதத்து அணிந்த பரிபுரமும் – சோதி

(56)

இளம்பருதி நுாறா யிரங்கொடி போல

வளந்தரு தெய்வீக வடிவும் – உளந்தனில்கண்டு

(57)

ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்

மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே – ஓதியஐந்து

(58)

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்

நீங்காத பேருருவாய் நின்றோனே – தாங்கரிய

(59)

மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்

தொந்தமுறும் வன்னமே தொக்காகப் – பந்தனையால்

(60)

ஒத்த புவனத் துருவே உரோமமாத்

தத்துவங்க ளேசத்த தாதுவா – வைத்த

(61)

கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்

நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி

(62)

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்

கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும்

(63)

ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்

ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ

(64)

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்

தரும்அட்ட யோகத் தவமே – பருவத்து

(65) 

அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்

புகலாகும் இன்பப் பொருப்பும் – சுகலளிதப்

(66)

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்

தேரின்ப நல்கும் திருநாடும் – பாரின்பம்

(67)

எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு

அல்லாது உயர்ந்த அணிநகரும் – தொல்லுலகில்

(68)

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்

கூறி நடாத்தும் குரகதமும் – ஏறுமதம்

(69)

தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்

காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் – வாய்ந்தசிவ

(70)

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா

நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் – காரணத்துள்

(71) 

ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்

வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும்

(72)

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்

ஆக்கி அசைந்தருளும் ஆணையும் – தேக்கமழ்ந்து

(73)

வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே

பேசும் தசாங்கமெனப் பெற்றோனே – தேசுதிகழ்

(74)

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்

பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி – ஆங்கொருநாள்

(75) 

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி

ஐந்து முகத்தோடு அதோமுகமும் – தந்து

(76)

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்

ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப – விரிபுவனம்

(77)

எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்

பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் – அங்கண்

(78)

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்

கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் – அடுத்ததொரு

(79)

பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்

சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் – போதொருசற்று

(80)

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்

சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் – முன்னர்

(81)

அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி

நறுநீர் முடிக்கணிந்த நாதன் – குறுமுறுவல்

(82)

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்

அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் – தன்னிரண்டு

(83)

கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து

மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய

(84)

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்

அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் – சகத்தளந்த

(85) 

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து

உள்ளம் உவப்ப உயர்ந்தோனே – கிள்ளைமொழி

(86)

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்

துங்க மடவார் துயர்தீர்ந்து – தங்கள்

(87)

விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்

மருப்பாயும் தார்வீர வாகு – நெருப்பிலுதித்து

(88)

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்

செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து – எங்கோன்

(89)

விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்

நடத்தி விளையாடும் நாதா – படைப்போன்

(90)

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று

உகந்த பிரணவத்தின் உண்மை – புகன்றிலையால்

(91)

சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்

குட்டிச் சிறையிருத்தும் கோமானே – மட்டவிழும்

(92)

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப

முன்னம் பிரமம் மொழிந்தோனே – கொன்னெடுவேல்

(93)

தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக

வீரவடி வேல் விடுத்தோனே – சீரலைவாய்த்

(94)

தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை

வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் 

(95)

கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்

மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் – சயேந்திரனாம்

(96)

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய

வீரனைத் துாதாக விடுத்தோனே – காரவுணன்

(97)

வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய

தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் – பானு

(98)

பகைவன் முதலாய பாலருடன் சிங்க

முகனைவென்று வாகை முடித்தோய் – சகமுடுத்த

(99)

வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்

சூருடலம் கீண்ட சுடர் வேலோய் – போரவுணன்

(100)

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்

துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் – அங்கவற்றுள்

(101)

சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா 

ஏறி நடாத்தும் இளையோனே – மாறிவரு

(102)

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன

மேவத் தனித்துயர்த்த மோலோனே – மூவர்

(103)

குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்

சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே – மறைமுடிவாம்

(104)

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்

தெய்வக் களிற்றை மணம்செய்தோனே – பொய்விரவு

(105) 

காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்

வாமமட மானின் வயிற்றுதித்தப் – பூமருவு

(106)

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்

ஏனற் புனங்காத்து இனிதிருந்து – மேன்மைபெறத்

(107)

தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த

வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து

(108)

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்

கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே – நாறுமலர்க்

(109)

கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்

செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே – சந்ததமும்

(110)

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்

பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி

(111)

பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்

பூதமுந் தீநீரும் பொருபடையும் - தீது அகலா

(112)

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்

எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் – அவ்விடத்தில்

(113)

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்

அச்சம் அகற்றும் மயில்வேலும் – கச்சைத்

(114)

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு

அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரகிரணம்

(115) 

சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்

எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண்

(116)

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து

உல்லாசமாக உளத்திருந்து – பல்விதமாம்

(117)

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்

பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் – ஓசை

(118)

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து

பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து – ஒழுக்கமுடன்

(119)

இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி

மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்து

(120)

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்

தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய

(121)

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு

அடியேற்கு முன்னின்று அருள்.

(122)

 

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக