வெள்ளி, 25 செப்டம்பர், 2026

கௌமார விநோதம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

கௌமார விநோதம்

பாயிரம்

நேரிசை வெண்பா

பிறவாத வீடு பெறப்பிறந்த மேலோ

ரிறவாத முணர்த்து மிந்நூன் – மறவாமற்

பொங்கு மதுரம் பொழிதமிழ்பா மூவாறு

தங்குகவு மார வினோதம்.

(1)

கட்டளைக் கலித்துறை

வண்கவு மார வினோதத்தி லாறு வகையுணர்ந்து

வெண்கவி வாணருங் கொண்டாடும் பாடல் விளம்பியப்பா

லொண்கதிர் போல்லொளிர் கீர்த்தி மேவி யுவகைமிஞ்சுந்

திண்கருத் தாளாதந் தாட்பொடி யாவுமென் சென்னியவே.

(2)

கொச்சகக் கலிப்பா

மெய்த்துறவோர் கவுமார வினோதத்தை வெறுத்தறியார்

பொய்த்துறவோ ரிகழ்வதனாற் புகழ்ச்சியன்றி யிகழ்ச்சியில்லை

யெத்துறவோ ராயினுமென் னினமேயென் றியம்பிநிற்கு

மத்துறவோன் கொன்றருந்தா ளவனேயெனக் குருவாமே.

(3)

கலி விருத்தம்

வழுவில் சீர்கவு மாரவி னோதநூன்

முழுது ணர்ந்தமு னிவரைச் சந்ததந்

தொழுது நாடித் துதிக்குமெய்த் தொண்டரே

பழுதி லாநலம் பாரினுங் கொள்வரே.

(4)

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பலகோடி சமையத்துண் ஞானமிலார்

            பிறந்திறக்கும் பான்மை கூறுஞ்

சிலகோடி சமையங்க ளுயர்வாகு

            மத்தனைக்குந் தெய்வ மொன்றே

வலதோர்வி னைநீக்குங் குருவடிவே

            யதுவென்னும் வாய்மையோ ரந்தோ

ருலகோர்ச்சொல் வதிந்தக்க வுமாரவி

            னோதத்தா லுதிக்கு மன்றே.

(5)

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கொன்றுணர் மனத்தாற் குறிக்கு நற்றமே

            குறியலாற் கொன்றுணூங் கொடியேன்

பொன்றுநா ளளவும னிதரால் வாதம்

            புகழ்ச்சியு மிகழ்ச்சியும் பொய்யே

யென்றுமெவ் விடத்துமி ருக்குமெம் பெருமா

            னெழிற்றிரு வுருவுணர்ந் திருப்போர்

நன்றுகௌ மாரவி னோதநூ லுரைத்த

            நாவெனல் விழைந்தன னானே.

(6)

நூல்

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

குருவருள்விட் டுலகிலொரு சமைய மில்லை

            கூறரிய கடவுண்மகன் குருவென் றெண்ணித்

திருவருள்வேண் டுவதேவர்க்கு மியல்பென் றாலுந்

            தெளிந்தோருக் கவன்றானே தெய்வ மாகு

மருவருல ரலுருவர னால தற்குமப்

பொன்றியொரு பேரிகூடா லழகர் காதாற்

கருவருளா தாண்டுகொள்ளுங் குமார னான

            கடவுளன்றி யவனானை கடவு ளின்றே.

(7)

கடவுளுக்கே சமையமெலா மென்றிட் டாலுங்

            கதியளிக்குஞ் சமையமொன்றே கண்டு தேறித்

திடமிகுத்தா லதுதானே யெல்லா மாகுந்

            தீயோரைக் கன்னறுவெல்லுந் திறமை யுண்டா

மடமகற்றி யுணர்வுதவுங் குருவாந் தெய்வம்

            வையகத்துள் வானகத்தும் வலிதே யாகும்

படபடத்துத் திரிவோருள் ளிந்த ஞாயம்

            பதியாதென் றறிந்திருந்தும் பகர்கின் றேனே.

(8)

பகலிரவு தோற்றவைக்குந் தெய்வந் தெண்ணீர்ப்

            பாவையையும் பூமியையும் படைத்த தெய்வ

மிகபாசா தனங்கொடுக்கு ஞானத் தெய்வ

            மெய்வகைத்தெய் வமுந்தானென் றிசையு தெய்வ

முகப்பேதங் குணபேத மமைத்த தெய்வ

            மூன்றுகால முங்கடந்த முதன்மைத் தெய்வங்

குகமாகு மிதயத்தே நடிக்குந் தெய்வங்

            குமாரனாங் குருவென்றே கூறு வோமே.

(9)

கூறரிய மெஞ்ஞானச் சுகநிதந் தாளுங்

            கூட்டமுற்றுந் தானான்கு றிப்பைக் காட்டுந்

தேறரிய வல்லபத்தை யுணர்ந்ததிக் காகுந்

            திருநீற்றை யுடன்முழுதுஞ் சிறக்கப் பூசி

மாறரிய பேரன்பிற் றோய்தகுந் தெய்வ

            வடிவமே நானென்று மார்பிற் றட்டு

மாறரிதா மாவேசந் தனையுண் டாக்கும்

            வனமகனா னெனுமூன்று மான வொன்றே.

(10)

ஒன்றென்று மிரண்டென்று நின்ற கூத்தை

            யுணர்ந்தவர்க்கே கவுமார வுண்மை தோன்று

நன்றென்று பலகோடி சமையந் தம்மை

            நவில்கின்ற குறிப்புணர்ந்து நலந்தீ தோதிக்

கன்றென்று தமைக்கருதிக் கற்றா வென்று

            கடவுளார்த மைவிளம்புங் காட்சிப் பேறே

வென்றென்றும் புகழ்நிறுத்த வல்ல தென்று

            விளம்பவைக்கும் பொதுநோக்க மேவு வாறே.

(11)

மேவுவார் மேவுகின்ற சமைய மெல்லா

            மெய்யென்றே விளம்புகின்ற வீர வேலை

யேவுலா ரான்கவு மாரத் தோரை

            யிகழ்கின்ற பெரியோர்க ளெங்கு மில்லைச்

சீவுவார் குழற்குரிய மனத்தால் வாடுஞ்

            சிறியோர்க ளிகழ்ந்தாலுந் திடத்தோ ரானாற்

கூவுவார் வைராகந் தாண்டி யப்பாற்

            குமாரனைக்கண் டவன்பதத்திற் கூடு வாரே.

(12)

வார்புவி லந்தந்தச் சமையந் தோறும்

            வளமைதேர்ந் தோரிருக்கு வயனங் கண்டோர்

பார்புகழ வாழ்வதொரு பெரிதோ வென்று

            பகர்கின்ற கவுமாரப் பத்தர் சொல்லின்

கூர்புடையார் கொன்றருந்தாச் சமையத் தோரே

            சம்புசிக்கு நாயனைய சண்டி மாந்த

ரோர்புனித னானபொதுக் கடவு ளாருக்

குசிதமா கியநலத் தையுணர்ந் தாரே.

(13)

உணர்வுடனே விதிகூடி நடக்கப் பெற்றோ

            ரொருகுலமே யென்றுணரு முண்மை யாலே

புணர்சமைய மத்தனையு முறுப்பாக் கொண்ட

            பொருளொன்றுங் கவுமார புனிதர்க் கெல்லாந்

துணர்கொண்ட மலர்வேண்டுஞ் சமைய மெல்லாஞ்

            சொந்தரமா மூன்வேண்டுந் தொடக்க ரெல்லா

மிணரொஞ்சு மேனிநல்லார்க் குருகா ரேனு

            மிகலாவா ரென்றுணர்ந்தோ றேற்றந் தானே.

(14)

ஏற்றமுண்டு தாழ்வுமுண்டு சமையக் கூட்டத்

            தெனவுணர்ந்த கவுமாரத் திருப்போர் தம்மைக்

கூற்றனண்டர் வாறுகண்ட முனிவர் சொல்லுங்

            குமாரனைத்தா சூரறிரா கூற்ற பாற்றோ

நீற்றணியார் சமரசத்துக் கிடையூ றில்லா

            நிசந்தெரிவத் தரிதென்றோ நிறைநீர் வைப்பிற்

சாற்றறிய பழிகொள்ளுஞ் சமையத் தோருள்

            தங்களையே புகழுவது தருமந் தானே.

(15)

தருமத்தி னளவிலுயர் சமையந் தன்னிற்

            றனுவெடுக்குஞ் சீவனெனுந் தன்மை கண்டால்

வருமத்தி னின்றுவிடு படுவா னுண்மை

            வைராகங் கடந்துநின்ற வாய்மைக் காளாம்

பருவத்தி லுயர்ச்சியுள்ளா னெனும்பேர் கொள்ளும்

            பதைப்பவுயில் வகுத்தானூன் பருகா னென்போ

ருருமொத்த மொழிப்பயனெச் சமைய மேனு

            மொப்புகின்றோர் கவுமாரத் துள்ளார் தாமே.

(16)

உள்ளபடி சொல்லுகின்றே னாறு பேத

            முடையகவு மாரத்தி லுலக மொன்று

தள்ளரிய மகாவிரதந் துவித மப்பாற்

            றாங்கரிய வத்துவிதஞ் சகலர் தம்பால்

விள்ளரிய சமரசம்பின் னனைத்து மொன்றா

            விளங்குகின்ற வதீதமென்ப தாறு முகம்பார்

மெள்ளரிய நிலையுணர்ந்த பெரியோர்க் காகு

            மித்தலத்திற் பிறந்திறப்போ ரேற்றி டாரே.

(17)

இடலிரங்கல் கொல்லாமை யூனுண் ணாமை

            பெயன்பதருந் நன்மையெல்லா மெதற்கும் வேணும்

புடவியிற்பற் பலகோவி லிருக்கக் கண்டும்

            பொருப்பிடத்துக் கோவில்கட்கே போய்வந் தெந்தக்

கடவுளர்தம் மடியார்க்கு மினிய தெய்வங்

            கதிர்வேற்கைக் குமரனெனக் கண்டு தேறி

யுடல்வருந்த விரதமுற்றுத் தொண்டு செய்வ

            துலகத்தோர் கவுமார முரைசெய் தேனே.

(18)

செய்யநிறத் தலைபூண்டு சடையோ ராகித்

            திருநீற்றைக் குழைத்தணிந்து சிவனார் நெற்றி

மையமுறும் விழிப்பொறியா வந்தான் சூரமர்

            மடியவென்றான் றேவர்பிரான் வாழச் செய்தான்

கையணிமுந் நான்குடையான் முகமா றுள்ளான்

            கார்த்திகைப்பெண் ணார்வளர்த்த கந்த னென்போர்

வையமயங் கடந்துநின்றுங் கடவா தாரர்

            மகாவிரதக் கவுமார மார்க்கத் தோரே.

(19)

ஓர்முகத்தா னாலுலகையான் சருவ சத்தி

            யுருவமாம் வடிவேலொன் றுடையா னன்றி

யார்முதற்றே விவனுடைய சந்தி தானத்

            தெண்ணிறந்த சிவன்தோன்றி யிறந்தா ரென்பார்

சீர்முழுக்கத் தன்னுடைமை யாமென் றோதுஞ்

            சிவகுருவே தஞ்சமென்பார் செந்நீ ரோடும்

போர்முகத்திற் சேவலொப்போ மென்பா ரஞ்சார்

            புகழ்த்துவிதக் கவுமாரம் பொருந்தி னோரே.

(20)

பொருந்தரிதா மத்துவித கவுமா ரத்தோர்

            பொருளொன்றே வேலெடுத்துப் பொருவோ ரெல்லாந்

திருந்துமறி வுடையவர்க்கு முருகோ னென்பார்

            திருநீற்றை நனைப்போரே தீயோ ரென்பார்

முருந்தனைய நகைமடவார் விரும்புஞ் சித்தர்

            முழுமையு மற்றவனென்று மொழிவார் யாவுந்

தருந்திறமை யுறுமவன்றன் பகையாஞ் சூரனற்

            விரக்கரிய வானவநோய் தானென் பாரே.

(21)

பாருலகிற் சமரசமாங் கவுமா ரத்தோர்

            பழுதறுஞ்சீர்ப் புலமைநலம் பற்று மேலோர்

சீருடைய முழுநீறுந் தண்டுங் கொண்டு

            திருத்தண்ட பாணியெனத் திகழ்வா ரப்பாற்

கூருலவாத் திருக்கைவேற் காசை கொள்வார்

            குவலத்தோர்க் கதைசிறிதுங் குறியாக் கொள்ளா

ராருமுயிர் கொன்றிருந்தா நலஞ்செய் தோனே

            யழகியகு மாரனென்றே யறைவார் தாமே.

(22)

தாமநறுங் குழன்மடவார் தமக்கு மஞ்சாச்

            சமரசமாங் கவுமாரந் தானே முற்றிற்

காமனென்றும் பிறிக்கறியா தொளிர தீதக்

            கவுமாரந் தோன்றுமதைக் கண்டா லன்றி

யேமமன்றிப் பணியில்லா வாறு போலே

            யெவ்வகைத்தெய் வமுமொன்றா மியம்பு தோன்றா

மாமகிமைச் சித்திசெய்வோன் குமார னென்று

            மயங்காமற் பேசுதற்கு வாய்வ ராதே.

(23)

வாய்வலியார் பேசுகின்ற சமையத் தெல்லா

            மருவுகின்ற கடவுளுக்கு மைந்த ராவோர்

தேயவனைய சித்தியுள்ளார் பலரு மாகுந்

            தெளிந்தோர்க்கே யிதுமெய்யாஞ் சிறியோர்க் கெல்லா

மாயவளிக்குங் கொடுஞ்சொல்லா மிந்த ஞாய

            மறிந்தவர்க்கே விகற்பங்க ளனைத்து நீங்கு

கூயவருந்திச் சிந்திப்போர் மனம்போற் றோன்றுங்

            குமாரனே யாவருக்குங் குருவா னானே.

(24)

நூற்பயன்

கலி விருத்தம்

மெய்த்தவர் கற்றுணருங் கவுமார வினோதத்தே

பத்துடனெட் டெனநின்ற கவிப்பொரு பழுதென்னார்

சித்துரு வானகுமார னருட்பெறு திறலாலே

யெத்தவரும் புகழப் பொதுவாகி யிருப்பாரே.

(25)

 

முற்றிற்று. குருபாதமே கதி.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக