வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
கௌமார
நூல் உரையுடன்
பாயிரம்
(கலி விருத்தம்)
சமைய
கோடியின் றாய்கவு
மாரமென்
றமைய
நாடி யறிந்தமெய் யன்பரே!
சிமைய
வேட்கைத் திருத்தண்ட பாணியா
நமைய
றிந்தவர் நம்மொழி கொள்வரே.
என்பது, குறிஞ்சிக்
கிழவனாகிய, தனக்குள் இருந்து, தன்னை இயக்கிக் கருத்துக்களைச் செய்யுள் வடிவில் வெளிப்படுத்துபவர்
முருகப்பெருமானே. ஆதாலால் சுவாமிகளைப் பற்றி
அறிந்தவர்கள் அவர் வார்த்தைகளை முருகப் பெருமானின் வாக்காகவே ஏற்றுக் கொள்வார்கள் என்றவாறு.
குறிப்புரை :
அமைய நாடி – முழுவதுமாக
ஆராய்ந்து. சிமைய வேட்கை – மலைச் சிகரங்களை விரும்புகின்ற.
நூல்
(எண்சீர்
விருத்தம்)
மெய்யடியார் பதத்துகளைச் சிரசிற் றாங்கி
மேனியெங்கு முத்துளமா நீறு
பூசிச்
செய்யநிறக் கல்லாடை யொன்றுந் தண்டுந்
திருக்கரத்திற் கொண்டுகண்டி
திகழப் பூண்டு
துய்யநிறக் கோவணமுங் கீளுஞ் சாத்திச்
சொந்தமெனக் கொருவனவன் சுதனா
னென்று
பொய்யனொரு கூத்தில்வந்து தோற்றி னாலும்
புகழுமவர் கௌமார பொருந்தி
னோரே.
என்பது, நடிகன் ஒருவன்
நாடகத்தில் கதைக்காகத் தன்னைத் தண்டாயுதபாணியின் மைந்தன் எனச் சொல்லிக் கொண்டாலும்
உண்மையான கௌமாரர்கள் அவனையும் போற்றிப் புகழ்வர் என்றவாறு. முருக பக்தர்களுக்குப் பெருமானின் திருமேனியின்
மீது குறையாத ஆர்வம் உண்டாக வேண்டும் என்பது கருத்து.
குறிப்புரை :
உத்துளமாய் –
திருநீற்றைத் தண்ணீரில் நனைக்காமல் பொடியாகப் பூசுதல். கண்டி – உருத்திராக்க மாலை. எனக்கு - ஒருவன். சுதன்
– மகன்.
(1)
பொருந்தியெங்கு நின்றதொரு கடவு ளார்க்குப்
புகலவல்லார் புகல்வவெல்லாம்
புகழே யென்னுந்
திருந்துமறி வுடையகவு மாரத் தோரைத்
திருட்டுமதக் குருடருடன் சேர்க்கப்
போமோ?
பருந்தெனவூன் பருகாமை கொலைசெய் யாமை
பதைப்பவுயிர் வருத்தாமை பதிந்த
நெஞ்சார்
முருந்தனைய நகையாரே தெய்வ மென்று
மொழிந்தாலு மவரிடத்தின் முனியா
தாரே.
பா.வே.
: 1. னுண்ணாமை.
என்பது, கடவுள் ஒருவரே.
எந்தப் பெயர் வடிவத்தில் வழிபட்டாலும் அது முருகப் பெருமானையே சேரும் என்னும் தெளிவான
ஞானம் உடையவர்களே கவுமாரர் ஆவர் என்பது கருத்து.
கொலைபுலை இல்லாதவர்கள் இல்லறத்தில் இருந்தாலும், அறத்தொடுபட்ட காமம் துய்ப்பவர் ஆயினும், முருக பக்தர்கள்
ஏற்றுக் கொள்வார்கள் என்றவாறு.
குறிப்புரை :
கடவுளார் – மரியாதைப்
பன்மை. புகலவல்லார் – புகழ்ந்து பேசும் வலிமை
உடையவர்கள்.
(2)
முனியாதிக் கணங்களெல்லா 1மழிந்து
போச்சு
மூர்த்திகளெல் லாமிறந்தார்
முதன்மை யாகித்
தனியான கடவுளையு;ங கோடா கோடி
சமையத்தோர் பலவிதமாச் சாற்றக்
கேட்டே
மினியார்வந் தனைவருக்குந் தெய்வ மொன்றென்
றியம்பவல்லா ரிதனிமித்த மியார்வந்
தாலுங்
குனியாதோ னானபொதுக் கடவுள் சொந்தக்
குமாரனென்போர்
கௌமாரங் கொண்டோ ராமே.
பா.வே.
: 1. மிறந்து.
என்பது, கலியின்
கொடுமையால் சமய பேதங்கள் பல்கிப் பலமாக வளர்ந்து
விட்டன. இதனை மாற்றிச் சமரச நிலையைப் போதிப்பவர்
யார் என்றாலும் அவர் இறைவனின் குமாரரே. அவரைப்
பின்பற்றுபவர்கள் எல்லாம் கௌமாரரே என்றவாறு.
பேதவாதமற்ற சமரசமே கௌமாரத்தின் தலைமைப் பண்பு என்பது கருத்து.
குறிப்புரை :
முனி ஆதிக் கணங்கள்
– முனிவர்கள் முதலிய நல்லவர் கூட்டங்கள். மூர்த்திகள்
– திருக்கோவில் விக்கிரகங்கள். தனியான – ஈடிணையற்ற.
குனியாதோன் – தன் நிலையிலிருந்து தாழாதவன்.
(3)
கொண்டலைக்கொண் டுலகளிக்குங் கடவு ளீன்ற
குமாரனுக்குத் திருக்கைவேல்
கொடுக்க வேண்டும்
வெண்டகைய யவன்சேவற் றுவசத் தோடு
வெள்ளானை, செய்யதகர், விளங்குந்
தோகை,
கண்டனைய தமிழ்பாடுங் கிள்ளை, மற்றுங்
கருதுவன யாவுநல்கிக் காக்க
வேண்டுந்
தொண்டருக்கு நலமுண்டா மென்று நாளுஞ்
சொல்கின்றோர் கவுமாரத் துறவி
னோரே.
என்பது, முருகப்
பெருமானாகத் திருஉருவத் தியானம் செய்பவர்கள் கௌமாரர்கள் ஆவர். குமாரனுக்கு நல்கி, காக்க வேண்டும். தன்னைப் பாதுகாக்க
விழைகின்ற தொண்டருக்கு நலம் உண்டாம் என்போரும் கௌமாரர்களே என்றவாறு.
குறிப்புரை :
கொண்டலைக் கொண்டு
– நீலமேக மேனியராகிய திருமாலைக் கொண்டு. உலகு
அளிக்கும் – உலகத்தைக் காப்பாற்றுகின்ற. கடவுள்
– பரம்பொருள். இவரே மூவரைக் கொண்டு முத்தொழிலையும்
இயற்றுகிறார். வெண்தகைய – வெண்மையான. சேவல்த்துவசம்
– கோழிக்கொடி. செய்யதகர் – சிவந்த ஆட்டுக் கடா. கண்டு அனைய – கற்கண்டைப் போல இனிக்கின்ற. தமிழ்பாடும் கிள்ளை – திருப்புகழைப் பாடுகின்ற அருணகிரிநாதர்.
(4)
துறவுகொண்டுஞ் சமையத்துத் தலைவ ரெல்லாஞ்
சுயம்பிரகா சக்கடவுண் மைந்த
ரென்னுந்
திறலுணரா தந்தந்தச் சமையத் தோர்கள்
செப்பிவைத்த பொய்கேட்டுத்
தியங்கு மூடர்க்
கறமில்லை பொருளில்லை யின்ப மில்லை
யானந்த மயமான முத்தி யில்லை பிறவிநிலை யறியார்பா லதட்டிப் பேசும்
பேச்சில்லை யென்றுணர்ந்தோர்
பெரியோர் தாமே.
என்பது, சமய வாதிகள்
பிரச்சாரத்திற்காகப் பல உருவகக் கதைகளையும், மிகைப்படுத்தப்பெற்ற வரலாறுகளையும் கூறுவது
இயல்பு. இதையே பொய் என்கிறார். சமயத்துத் தலைவர்கள் ஆகிய கடவுளர்கள் எல்லாம் ஒரே
பரம்பொருளின் அம்சம் என உணர்வதே நால்வகை உறுதிப் பயன்களையும் அளிக்கும் மெய்ஞானம் என்றவாறு.
குறிப்பு : பிறவிநிலை – பிறப்பிற்குக் காரணமாகிய
அறியாமைப் பண்பு.
(5)
பெரியோரே வழிபடுமோர் கடவு ளன்றிப்
பின்னுமுண்டு பலதெய்வ மென்று
நாடிப்
பரிதாபப் பட்டவர்க்கே யிந்த ஞாயம்
பதியுமன்றி மற்றவருட் பதிந்திட்
டாலுங்
கரிகாணுங் குருட்டுமக்க ளாறு பேருங்
கண்டேமென் றொப்பியதோர் 1கதையே
போலாம்
மரியாமற் புகழ்த்தேக மன்றித் தூலம்
வைத்திருப்போ ருண்டென்று மயங்கு
வாரே.
பா.வே.
: 1. கதையைப் போலாம்
என்பது, பல தெய்வங்கள்
இல்லை; இருப்பது ஒரே பரம்பொருள்தான் என அநுபவ பூர்வமாக உணர்ந்தவர்களே முன் சொன்ன கருத்தை
அறிந்து கொள்வர். ஏனையோர் முழுமையாக அறிந்துகொள்ள
மாட்டாமல் யானையைக் கண்ட குருடரைப் போல அலமருவர். பிறந்த உயிர்கள் அத்தனையும் உடலை விட்டுப் பிரியும்-இறக்கும். இறக்காதவர்கள் யாருமே இல்லை. பெரியோர்களின் புகழ் மட்டுமே நிலைத்திருக்கும் என்றவாறு.
(6)
மயங்கலற்ற கவுமாரத் துறவோர் தெய்வ
மதந்தோறு மொருவதனம் வைத்த
தாகுஞ்
செயங்கருது மொருமதத்தோன் மற்றோர் தம்மைச்
செகுத்தாலுங் களிப்பன்றித்
தியக்க மில்லை
யியங்கும்வெண் ணீறாதியவைக் குரிய தெய்வ
மெங்களபி மானமன்றி யில்லை
யென்பார்
பயங்கரரென் றருளில்லார் நடுங்க வேண்டிப்
பகலிரவாக் குருபரனைப் பணிகு
வாரே.
என்பது, கௌமாரர்களால்
போற்றப்பெறும் முருகப்பெருமான் வைதிக சமயங்கள் ஆறினையும் தம் ஆறு திருமுகங்களாகக் கொண்டவர். ஒரு சமயத்தைச் சார்ந்தவன் தன் வெற்றியை நாடிப் போராடி
வென்றாலும், ஒரு முகம் மற்றொன்றை வென்றது என்ற அளவில் மகிழ்ச்சியே தவிரக் கவலை இல்லை. சமயச் சின்னங்களுக்குச் சிறப்புரிமை வாய்ந்தவர்களாகிய
அறு சமயக் கடவுளர்களின் நாம ரூபங்களும் அடியார்களின் விருப்பத்தால் விளைந்த கற்பனைகளே. சீவகாருணியம் இல்லாதவர்களை அச்சுறுத்த எப்போதும்
முருகப்பெருமானை வணங்கிக் கொண்டே இருப்பர்.
குருபரன் என்பதற்குத் தத்தம் ஞான தேசிகன் எனினும் அமையும் என்றவாறு.
(7)
பணியவல்லார் விருப்பம்போ லுருவங் கொள்ளும்
பரனொருவன் றானிருக்கப் பாவ
மாந்தர்
துணிவுகொண்டித் தகையோனே முதல்வ னென்று
சொல்லுகின்ற 1பயித்தியந்தான்
சொல்லாற் போமோ?
தணிவரும்சீர்ச் சித்துமிகச் செய்திட் டாலுந்
தவிராதார் தாமுமுண்டத் தகைமை
யோர்பாற்
றிணிபெறுதோள் வலிகாட்ட லியல்பென் றோதாச்
சிலமதத்தோ ரழிவதொன்றுந் திண்ணந்
தானே.
பா.வே.
: 1. வைத்தியந்தான்
என்பது, பரம்பொருளுக்கென்று
தனியான வடிவமோ பெயரோ இல்லை. அடியார்களின் பாவனையே
அதன் நாம ரூபம். உண்மை இப்படியிருக்க இதுதான்
கடவுளின் வடிவம் எனச் சமய வாதிகள் போரிடுவது பொருளற்றதாகும். இறையருள் பெற்றுச் சித்து வல்லமை பெற்ற சிலரும்
இறைவன் ஒருவனே என்னும் உணர்ச்சி இல்லாமல் இருக்கலாம். அத்தகையவர்களுக்கும் எப்படியாவது ஒருவனே தேவன் என்னும்
உண்மையை உணர்த்த வேண்டும் என்கிறார் என்றவாறு.
(8)
தானென்ற பொருளைவிட்டு நானென் றோதுந்
தகைமையோ ராதியராஞ் சண்டி மாந்த
ரேனென்று கேட்கறியாப் புன்மை யோரா
மிரப்பாளிச் சமையத்தோர்க்
கேது மஞ்சார்
வானென்ற வழிகாட்டுஞ் சீவ சாட்சி
வடிவுகண்ட கவுமார மதத்தோர்
வந்தாற்
றேனென்ற மொழிகூறிப் பணிந்து தாங்கள்
செப்புமொழி யேயெமக்கோர் திடமென்
பாரே.
என்பது, உண்மையான
ஆத்மாநுபவம் இல்லாமல் வறட்டு வாய் வேதாந்தமாக நானே பரம் எனப் பேசுகிறவர்கள், அழுத்தமான
தத்துவ அடிப்படை இல்லாத உலகியல்ச் சமய வாதிகளுக்குப் பயன்பட மாட்டார்கள். உயர்ந்த இறையனுபவம் பெற்றுள்ள கவுமாரர்களுக்கே அவர்கள்
பணிவு காட்டுவார்கள் என்றவாறு.
(9)
பாராதி யைம்பூதத் துள்ளு நின்ற
பரனுக்கு மைந்தருண்மைப் பத்தர்
தாமே
சூராதி யவுணர்களைக் கொன்று மீண்ட
சுப்பிரமண் ணியனொருவ னுண்டென்
றெண்ணி
யாராதித் துண்மைகண்டு வயிரம் தீர்ந்தே
னனைவருக்கும் பொதுத்தேவொன்
றாமென் றோர்ந்தேன்
வேராதி நுனியளவும் பொருளொன் றென்னும்
வித்தகரே கவுமார மெய்ய ராமே.
என்பது, பரம்பொருளுக்குக்
குமாரர்கள் உண்மையான இறையன்பர்களே. முருகப்
பெருமான் என ஒரு கடவுள் தனியாக இருப்பதாகக் கருதி, வழிபட்டு, மெய்ஞானம் பெற்று, பிற
சமயங்களின்மேல் இருந்த பகைமை உணர்ச்சியை நீங்கப் பெற்றேன். முருகப் பெருமான் அண்ட சராசரங்களுக் கெல்லாம் உரிய
பரம்பொருளின் பாவனா வடிவ பேதங்களுள் ஒன்றுதான் என ஐயமின்றி அறிந்தேன். பிரபஞ்சத்தின் அடிவேர் முதல் உச்சி வரையான பரம்பொருள்
ஒன்றே ஒன்றுதான் என உணரும் அறிஞர்கள்தான் உண்மையான
கௌமாரர்கள் ஆவர் என்றவாறு.
(10)
நூற்பயன்
(கலிவிருத்தம்)
தண்ட பாணி தமிழ்க்கவி பத்துமே
தொண்டர் நாடுநற் றொன்னெறி யென்பவ
ரண்ட மாதி யனைத்துமுள் ளானருள்
கண்ட தன்மைக் கவுமார முத்தரே.
என்பது, தண்டபாணி
சுவாமியாகிய என்னால் இயற்றப்பெற்ற கௌமார நூல் என்னும் பெயரிய பத்துச் செய்யுள்களும்
இறையடியார்களால் விரும்பப்பெறும் பழமையான கருத்தை உணர்த்துகின்றன எனக் கொண்டு, அதன்வழி
ஒழுகுபவர்கள் பரம்பொருளின் உண்மைத் தன்மையை அறிந்த கௌமாரர்கள் ஆவர். அத்தகைய ஞானிகள் வீட்டுப் பேற்றை அடைவார்கள் என்றவாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக