புதன், 30 செப்டம்பர், 2026

பரிதாப மாலை

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

பரிதாப மாலை

காப்பு

அரிதாவுஞ் சோலைமலி யாமாத்தூர் தன்னிற்

பரிதாப மாலையன்பிற் பாடப் – பெரிதாய

சித்திமுத்தி வேட்டுத் திருவருளே தஞ்சமென்று

பத்திசெய்வோர் தாட்டுகள்காப் பாம்.

நூல்

குருவாகி யடியவர்க்கின் னருள்செயுநின்

            றன்மைமுற்றுங் குடிபோ யிற்றோ

பொருவாத சத்தியமுந் தருமமும்பா

            ழாய்ப்புவிமின் புலர லாமோ

மருவார்மென் மலர்ப்பூசை செய்தபய

            னத்தனையும் வம்பு தானோ

திருவாத வூரானுந் திருக்குருகூ

                                      ரானுநன்கு தெளிந்த வொன்றே.

(1)

ஆவதைத்துத் தின்னுமவ ரரசாட்சி

            செயுங்கொடுமை யழிந்தி டாதோ

பாவலரி லெவனேனு மொருவனுக்குச்

            சொற்பலிதப் பாங்கெய் தாதோ

நாவலந்தீ வினிலொருமெய்ச் சித்தன்வந்து

            விளையாடு நாள்வ ராதோ

தேவருக்கு முனிவருக்கு மாதார

            மாநிலவு தெய்வக் கோவே.

(2)

செங்கரும்புச் சிலையுடையான் றவசிகண்மேற்

            பொருங்கொடுமை தீர்ந்தி டாதோ

சங்கலம்பு கைம்மடவார் விபசாரஞ்

            செயுந்தீமை தவிர்ந்தி டாதோ

புங்கவர்மேற் பழிசுமத்தி யந்தணர்செய்

            திடும்வேள்விப் புலைய றாதோ

பங்கயத்தோன் றிருமால்சங் கரனெனத்தொன்

            னூல்பகர்முப் படிவத் தானே.

(3)

அன்னைபிதாக் கண்காணச் சிசுக்கண்மடிந்

            திடுங்கொடுமை யதுகெ டாதோ

பொன்னையுரத் தணிந்தநெடு மாலனைய

            மன்னன்வந்திப் புவியா ளானோ

தன்னையறிந் துலகமுய்யத் தவம்புரிவான்

            றிருக்கூட்டந் தழைத்தி டாதோ

முன்னைமறை யாகமங்கண் முழுமையும்போற்

            றிடக்குலவு முதன்மைத் தேவே.

(4)

வடலூரான் முதற்பலர்தம் வுடலொடுமீண்

            டிவ்வுலகில் வயங்கி டாரோ

கடலாறு குளமுதனீ ரொடுகனலுங்

            கவர்கவிகள் கவின்ற ராவோ

வடல்வீரர் பலர்கூடிக் கொலைபுலைவே

            ரறக்களைந்திட் டளிகூ ராரோ

மடலூர்கா மியையனைய மெய்யடியார்

            மனமலரில் வாழுந் தேவே.

(5)

தெய்வவா லயப்பணிகண் முழுதியற்றத்

            தேவதச்சன் றிகழ்ந்தி டானோ

சைவமா தியவாமுட் சமயங்க

            ளாறுநன்கு தழைத்தி டாவோ

வைவரா லலைப்புண்ணா தருந்தவத்தோர்

            மனங்கனிலைத் தவிர்ந்தி டாவோ

மெய்வரோ தயக்கருணா கரக்குருவாச்

            சிலர்விழிமுன் விளங்கு வானே.

(6)

கொற்றவர்க்காக் குதிரைகொளச் சென்றாற்றான்

            னடுவழியிற் குலவு வாயோ

மற்றவரைக் கொன்றுபொருள் கவர்ந்தாற்றான்

            கண்களெதிர் வந்தாள் வாயோ

குற்றமன்பர் செய்தாலுங் குணமாகக்

            கொளுந்தகைமை குலைந்த தேயோ

நற்றவர்க்குங் கற்றவர்க்கு நால்வகையோ

            னியினுயிர்க்கு நடுநின் றோனே.

(7)

என்னுதா ரத்தினுக்கோர் பயனுமின்றிக்

            கெடுத்தானிற் கிளப்ப மின்றோ

பொன்னுமேம் படுபொருளா மெனக்காட்டுந்

            தன்மைநிற்கோர் புன்மை யன்றோ

முன்னுளார் பலர்க்கருள்செய் திட்டகதை

            யத்தனையு முழுப்பொய் தானோ

மன்னுநான் மறைப்பயனு மாகமத்தின்

            பொருள்களுமா வயங்கு வானே.

(8)

எவனேனு மொருதவசி மெய்யருட்பேற்

            றினனாகி யிலங்கி டானோ

வவமான முற்றசைவ வயிணவரா

            தியருவகை யடைந்தி டாரோ

நவநாத சித்தர்முத லோர்களிளப்

            பங்களெலா நசித்தி டாவோ

சிவனாகி மாலாகித் தெய்வமுழு

            தாகியெங்குந் திகழ்பி ரானே.

(9)

மாருதியா தியருள்ளத் திவ்வுலகி

            னிகழ்நியாயம் வயங்கி டாதோ

சாருவென வெனைப்பலகாற் சொன்னகுகன்

            மறதிமுற்றுந் தவிர்ந்தி டானோ

வாருறுமென் முலைமடவார்க் குருகென்மனம்

            வயிரம்போல் வலுத்தி டாதோ

பாருலகும் வானுலகு மற்றுளவா

            மெவ்வுலகும் பரவுங் கோவே.

(10)

அற்பநா வலர்செய்பெரும் போராட்டத்

            தாற்றளரா தளிகூ ரேனோ

கற்பமா யிரங்கோடி கண்டவரு

            மெதிர்தோன்றக் களித்தி டேனோ

பற்பமா தியவிகழ்புன் சமயமுற்றும்

            பாழாகப் பார்த்தி டேனோ

சிற்பரா லயத்தினுமுன் னாளனந்தம்

            விளையாடல் செய்த தேவே.

(11)

கனவினிற்பல் வடிவாநீ கழறியசொற்

            பயன்முழுதுங் கைக்கொள் ளேனோ

மனநிலைத்த மாதவத்தாற் சித்திமுத்தி

            பிறர்பெறவும் வழங்கி டேனோ

தனதன்முத லினர்நாணித் தலைகவிழத்

            தகுஞ்செயல்கள் சாதி யேனோ

வனவரத நினைவார்தம் மகமலர்விட்

            டகலாம லமர்கோ மானே.

(12)

நூற்பயன்

இன்னம் பரிதாப மெத்தனையோ வுள்ளனவா

மன்னவையெல் லாஞ்சொற் கடங்காவே – யுன்ன

லனைத்துமென்கை முற்றா மளித்தருளச் சோம்பே

லெனைத்தொடர்ந்தாட் கொண்டதெய்வ மே.

(13)

 

முற்றிற்று. தெய்வமே துணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக